தலைப்பு

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

காப்பான் சாயி! - சத்ய சாயி லீலைகள்


சத்ய சாயி பகவான் கருணையே வடிவானவர். அவருக்கு நம்மைப் போன்று மனதளவில் இருந்து கோபப்பட தெரியாது. அவரின் பொய்க்கோபம்  ஒருவரை திருத்துவதற்காகவே மட்டுமே பயன்படுத்துவார். அதை புரியாத ஒரு அன்பர் ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்ய முயற்சித்தார். அவருக்கு நேர்ந்த கதையை பார்ப்போம்.

பீமய்யா என்பது அவன் பெயர். பாபாவின் பக்தன், அவனுக்கு ஓர் அண்ணன். சொத்துக்காக அடித்துக் கொண்டார்கள்.

அதிகம் சண்டை போட்டது பீமய்யாதான். வாய் வார்த்தை, கைகலப்பில் போய் முடிந்தது. கடைசியில் பீமய்யா, “சொத்தும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்’ என்று சொல்லி அண்ணனை அடி பின்னிவிட்டு புட்டபர்த்திக்கு பஸ் ஏறிவிட்டான்.

கையில் பத்து காசு கூட இல்லை. சோற்றுக்கு என்ன செய்வது? புட்டபர்த்தியில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான் பீமய்யா.

அவனைப் பார்த்த பாபா, செமை வாங்கு வாங்கிவிட்டார். “ஏண்டா! நீ என் பக்தன் என்கிறாய். தடியன் மாதிரி உடம்பை வளர்த்துவிட்டு இங்கே வந்து பிச்சையெடுக்கிறாய். வெட்கமாயில்லையா உனக்கு? இங்கே இத்தனை பேரிடம் பிச்சையெடுப்பவன் அங்கே உன் கூடப் பிறந்தவனிடம் கொஞ்சம் தாழ்ந்து போனால் என்ன குறைந்து விடுவாய்? ஒரு நிமிடம் கூட நீ இங்கே இருக்கக்கூடாது. என் கண்ணில் படாமல் எங்காவது போய் ஒழி. தொலைந்து போ’ என கோபத்துடன் பேசிவிடடார் பாபா.
“ஒழி, தொலைந்துபோ’ என்று பாபா சொல்லிவிட்டாரே என்று நொந்து போனான் பீமய்யா. அதனால் உயிர் வாழக் கூட அவன் விரும்பவில்லை. நேராய் விடுவிடுவென்று பெனுகொண்டோ ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றான். தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான்.

கூட்டம் இல்லாத நேரம் அது. ரயில் தொலைவில் வந்து கொண்டிருந்தது. அவனை யாரும் கவனிக்கவில்லை. தண்டவாளம் அதிர ஆரம்பித்தது. பீமய்யா கவலைபடவில்லை. கண்களை மூடியபடி சாவதற்குத் தயாரானான். வண்டி நெருங்கிற்று.

அடுத்த விநாடியில் அவன் சட்னி என்ற நிலையில், அதிவேகத்துடன் ஒரு கை அப்படியே அவனை தண்டவாளத்திலிருந்து அலேக்காகத் தூக்கி நடைபாதையில் உருட்டி விட்டது.
திடுக்கிட்டு கண் விழித்தான். யாருமில்லை ரயில் பெரும் ஓசையுடன் கடந்து கொண்டிருந்தது. சிலிர்த்துப் போனான். நெகிழ்ந்து போனான். தன்னைக் காத்தது யார் என்பது புரியாமல் இருக்குமா?

பாபா, நீ இருக்கிறாய், என்னைக் காப்பாற்ற, நிச்சயமாக இருக்கிறாய் அப்பா. மரண எல்லையில் என்னைக் காப்பவன் குடும்பத் தொல்லையில் மட்டும் என்னைக் காப்பாற்ற மாட்டாயா என்ன? நெகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே, வீட்டுக் கிளம்பினான்.
தன் அண்ணனுடன் ராசியாகி, சொத்துகளைப் பகிர்ந்து கொண்டு பின்னர் சந்தோஷமாக வாழ்ந்தான்.

ஆதாரம்:   மார் 09,2013 அன்று வெளிவந்த தினமலரின் ஆன்மீகமலர் புத்தகத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக