தலைப்பு

சனி, 24 ஆகஸ்ட், 2019

தெய்வீக அருட் பரிசு!


பாபா சீரடியில் இருந்த போது தமது வாழ்நாட்களைக் கழித்த மசூதியில் அணையாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் 'துனி'யிலிருந்து தன் கையாலேயே தெய்வீக அருட் பிரசாதமாக பக்தர்களுக்கு விபூதியை எடுத்துத் தருவார். இப்பொழுது அந்தத் 'துனி' அவருடைய அங்கையிலேயே இருக்கிறது. அது விலைமதிப்பற்ற பரிசை (விபூதி) அருள எப்போதும் தயாராக இருக்கிறது. மனதால் நினைத்து கையை அசைத்த மாத்திரத்திலேயே விபூதி தோன்றிவிடுகிறது. கையை அசைத்து தான் பெற வேண்டும் என்பதில்லை. அவர் நினைத்தாலே அருவியாக கொட்ட தொடங்குகிறது. இறையருள் பிரசாதமாகிய விபூதி மழையே  பாபாவின் மகிமைகளிலெல்லாம் சிறந்த மகிமை... 

விடியற்காலையில் வயல்களில் மொட்ட விழும் மலர்களில் உறங்கும் பனித்துளியை போல் அமைதியாக, சந்தடியின்றி அந்த விபூதி பொழிய தொடங்கும். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வீட்டில் பாபா படத்தில் விபூதி தோன்றியது. அந்த வீட்டுக்கு உடையவர் சில நாட்களுக்கு முன் காணாமல் போன தன் மகனைப் பற்றி விசாரிக்க பாபாவை போய் பார்த்து வந்திருந்தார். இப்பொழுது பாபாவின் படத்தில் விபூதி தோன்றியதும், அது பையனின் மரணத்தையும், தகனத்தையும் குறிக்கிறதோ என்ற ஐயப்பாடு அவருக்கு தோன்றியது. இது குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டி, பாபாவுக்கே ஒரு கடிதம் எழுதினார். 'பாபாவின் படத்தில் மட்டுமல்ல, வேறு எந்த கடவுள் படங்களினின்றும் விபூதி தோன்றினாலும், அது நன்மை பயக்குமே அல்லாது, தீமை செய்யாது. கெடுதலுக்கான அறிகுறியும் அல்ல' என்று அவருக்கு எழுதும்படி என்னைப் பணித்தார்.


சேலம் மாவட்டத்தில் பர்மதி என்ற ஊரில் இருந்து ஒருவர் ஒருமுறை பிரசாந்தி நிலையத்திற்கு வந்திருந்தார். அவருக்கு பாபாவின் தரிசனம் கிட்டவில்லை. அவருடைய வீட்டில் வழிபாட்டு அறையில் இருந்த பாபாவின் படத்தில் விபூதியும், அமிர்தமும் தோன்ற ஆரம்பித்தன. "கடந்த மாதம் 2-ம் தேதியிலிருந்து என் வீட்டில் பாபாவின் படத்திலிருந்து விபூதியும் அமிர்தமும் வருகின்றன. இங்கு வருபவர்களுக்கெல்லாம் அவைகளை பிரசாதமாக அளித்து வருகிறேன். ஆனாலும் அவை ஏராளமாக சேர்ந்துவிட்டன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கள் ஊருக்கு அருகே புண்ணிய நதியான காவிரி ஓடுகிறது. அந்நதியில்  அவைகளை கரைத்து விடட்டுமா? என்று எழுதுகிறார் அவர். இதே சமயத்தில் கொச்சியில் இருந்து ஒருவர் சனாதன சாரதி ஆசிரியருக்கு கீழ்கண்டவாறு கடிதம் எழுதினார். பகவானின் படத்தில் கண்ணாடி சட்டத்திற்கு மேலே ஒரு புறத்தில் இருந்து எண்ணெய் போன்ற ஒரு பொருளும், மற்றொரு புறத்தில் விபூதியும் குங்குமமும் வருகின்றன. இவைகள் எதை குறிக்கின்றன என்று தெரியாததால், நான் வெளியார்  யாருக்கும் தெரிவிக்கவில்லை. தயவுசெய்து எனக்கு இவைகளை பற்றிய உண்மையை புரிய வையுங்கள்." 

பகவானின் மகிமைகளை பற்றி ஆசிரியருக்கு, அதாவது எனக்கு என்ன தெரியும்? பாபாவின் போற்றத்தக்க அருளை கண்ணால் காணக்கூடிய நல்வாய்ப்பு கிட்டியதற்காக அவரை வாழ்த்துவதை தவிர, நான் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது?

ஆதாரம்: N.கஸ்தூரி எழுதிய சத்யம்_சிவம்_சுந்தரம் - பாகம்-2 புத்தகத்திலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக