தலைப்பு

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

🐜 கடிக்கும் எறும்பும் கருகுமணியாகும்!


திருவோண நேரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருமணமான பெண்கள், கௌரி பூஜை செய்வார்கள். அப்படி பார்வதி தேவியை வழிபடுவது, கணவனுக்கும் குடும்பத்துக்கும் நல்லது என்று சொல்கின்றன ஹிந்து புராணங்கள். அப்படிப்பட்ட திருவோண நேரத்தில், அதுவும் வெள்ளிக்கிழமையன்று ஒரு தம்பதி புட்டபர்த்தி வந்திருந்தார்கள். அவர்கள் கௌரி பூஜையை முடித்தபிறகு, பகவான் பாபாவுக்கு பாத பூஜை செய்ய விரும்பினார்கள். ஸ்வாமியிடம் அனுமதி கோரினார்கள். பாபாவும் ஆமோதித்தார்.

மகிழ்ச்சியடைந்த தம்பிதி, பூஜைக்கான பொருட்களைத் தேடித் தேடி சேகரித்தார்கள். எல்லாப் பொருட்களும் கிடைத்துவிட்டன. ஆனால் முக்கியமான ஒன்றான கருகமணி மட்டும் புட்டபர்த்தியில் எல்லாக் கடையிலும் தேடியும் கிடைக்கவில்லை.
கருகமணிகளை மங்களச் சின்னமாக மங்கையர் கருதுகிறார்கள். பெண்கள் கருகமணி மாலையைக் கழுத்தில் அணிந்து கொள்வதும் அதனால்தான்.
அப்படிப்பட்ட கருகமணி கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அந்தப் பெண்மணிக்கு இருந்தது. என்ன செய்வது? பாபா வேறு குறிப்பிட்ட நேரத்தில் தன் இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டார்.
பாத பூஜை ஆரம்பித்தது.

அந்தப் பெண்மணி, கை நிறைய ரோஜாப்பூக்களை அள்ளி, பகவானை மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டு, பாபாவின் பாதங்களில் அவற்றை சமர்ப்பித்தார்.

அந்த மலர்களில் சில கறுப்பு எறும்புகள் இருந்தன. அவை வெளிவந்து பாபாவின் கால்களில் நடந்து, குறுகுறத்தன.
பாபா புன்னகைத்தார். “என்னம்மா, கறுப்பு எறும்புகளைக் கொண்டும் என்னை பூஜிக்கிறாயா?’ என்று கிண்டலாகச் சொல்லியபடி, அந்த எறும்புகளைப் பிடித்து, அந்தப் பெண்ணின் கைகளில் இட்டார்.
அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்தப் பெண்ணின் கைகளில் மெல்ல நகர்ந்த அந்த எறும்புகள், சட்டென கருகமணியாக மாறின. அந்தத் தம்பதிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.
பாத பூஜைக்கு கருக மணி கிடைக்கவில்லை என்ற ரகசியம், பாபாவுக்கு தெரிந்து, குறை வரக்கூடாதே என்று எறும்புகளை, கருக மணிகளாக மாற்றித் தந்து அருள் புரிந்திருக்கிறார் என்ற உண்மை அவர்களுக்குப் புரிந்தது. மெய் சிலிர்த்துப் போனார்கள்.

பூஜை முடிந்ததும் அந்தக் கருக மணிகள் மீண்டும் உயிர் பெற்று, பாபாவைப் பெருமையாக நிமிர்ந்து பார்த்து எறும்பாக மாறி ஊர்ந்து போனதை யாரும் கவனிக்கவில்லை.

உயிர் உள்ளதை உயிர் அகற்றதாக மாற்றிப் பின்னர் உயிர் கொடுத்த அதிசயத்தை இவ்விதம் பாபா நிகழ்த்தினார்.

ஆதாரம் : மார் 22,2013 அன்று வெளிவந்த தினமலரின் ஆன்மீகமலர் புத்தகத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக