தலைப்பு

புதன், 1 மார்ச், 2023

தற்கால அரசுகளின் நடப்பு நிலை எவ்வாறு இருக்கிறது?

"சத்யம் வத; தர்மம் சர" என்பது வேதத்தின் பிரகடனம்! "சத்தியம் பேச வேண்டும்.. அறத்தை கடைபிடிக்க வேண்டும்!" என்பதே இதன் பொருள்! தற்காலத்தில் என்ன நடக்கிறது? அனைவரும் ஆச்சர்யகரமான வகையில் அறத்தை அள்ளி அள்ளிப் பேசுகிறார்கள்! அதாவது 'தர்மம் வத' என்று ஆக்கிக் கொண்டுள்ளனர்...அதை வாழ்க்கையில் நடத்திக் காட்டுவது பற்றிக் கவலையே காட்டுவதில்லை! 'சத்யம் வத:' என்பதையும் சத்யம் வத(வதை)' என்றாக்கி சத்தியத்தையும் வதைத்து வருகிறார்கள்! 


மரங்களில்லா சாலை, நீரில்லாத பதிப்படுகை, உறவினர் இல்லா வீடு, விக்ரஹம் இல்லா கோவில் முதலியவற்றைக் கொண்ட ஓர் ஊரைப் பற்றி சொன்னால் கைதட்டியா கேட்பீர்கள்? அது போல் விநயமில்லா கல்வி, நாணயமில்லா வியாபாரம், கொள்கையிலா அரசியல், அன்பில்லா வீடு, ஒற்றுமையில்லையா மக்கள் சமூகம், விரிந்த பார்வை இல்லா மதம், அனுபவம் தோயாத உபதேசம், இதயமிலா விஞ்ஞானம் முதலியன இருப்பதாக சொன்னால் கரகோஷமா இடுவீர்கள்? 

நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அந்த நிலையை மாற்ற அயராத முயற்சியை தொடங்குவதே அல்லவா! 


உலகை ஒதுக்கி குடும்பக் கடமைகள் இல்லாமல் துறவியானவர்களை விட இந்த நிலையை மாற்ற முயற்சித்துக் கொண்டே விமோச்சனம் பெற விளைபவர்களின் வாழ்க்கையே கடினமானது! ஆன்ம வளர்ச்சி என்ற கால்களும் முக்கியம் அதுபோல் உலகியல் தேவைக்கான நிறைவு என்கிற கைக்கோலும் முக்கியமே!


துரதிர்ஷ்டவசமாக தற்கால அரசுகள் மக்களின் கால்களான ஆன்ம வளர்ச்சியைப் புறக்கணித்து, ஊன்றுகோலான உலகாயத செழிப்புக்கே முழு கவனமும் செலுத்தி வருகிறது! ஊன்றுகோலாக ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு கால்கள் இல்லாமல் நடந்து போவது? 

வெறும் பௌதீக பொருட்களையே கொண்ட வாழ்க்கைத்தரம் (Standard of Living) என்பதை மட்டும் கருத்தில் கொண்டுள்ள அரசு, வாழ்க்கைப் பொருள் தருவதும் , நல்ல குணப் பண்புகளைக் கொண்டதுமான 'வாழும் முறைக்கு' (way of life) எதுவும் செய்யவில்லை! தற்கால அரசுகளோ வாழ்முறை யின் வெளிப்புற சுத்திகரிப்புக்கு மாத்திரமே முக்கியத்துவம் தந்துள்ளன... உட்புற சுத்திக்கே குறிப்பாக வழிவகுக்கும் பல்வேறு சமய சாஸ்திரங்களையும் அவை புறக்கணித்துவிட்டன... ஆதியிலிருந்து ஆட்சியாளருக்கும் சாஸ்திர பண்டிதர்களுக்கும் இடையே இருந்த இணைப்பு துண்டித்துப் போனதே எல்லாப் பிரச்சினைக்குக் காரணம், அதை மீட்டெடுத்து தருவது ஒன்றே இதற்கான பரிகாரம்! 

யாவற்றுக்கும் மேலாக "அன்பு" ஒன்றே மிகப்பெரிய பரிகாரம்! அன்பை வளர்த்துக் கொண்டால் எல்லா பிரச்சனைங்களும் மறைந்தே போய்விடுகின்றன...! "அன்பு சிந்தனையில் வருகிற போது சத்தியமாகிறது! அன்பு செயல்வடிவமாகிற போது தர்மமாகிறது, அன்பு உள்ளுணர்வாகிற போது சாந்தி ஆகிறது! அன்பு அனுதாப வடிவெடுப்பதே அகிம்சையாகிறது!"


(ஆதாரம் : அறிவு அறுபது / பக்கம் : 159 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக