தலைப்பு

புதன், 1 மார்ச், 2023

கேதார்நாத் கௌரி குண்டத்தில் பாபா யார்? எனும் ரகசியம் பகிர்ந்த ஒரு இமய யோகி!

இமய மகான்களுக்கு இறைவன் பாபா எவ்வாறு தனது அருள்மயமான மகிமையை இன்றளவும் பொழிந்து கொண்டே வருகிறார் என்பதற்கான அரியதொரு உன்னத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ... 


யோகி கோபால கிருஷ்ணாஜி என்பவர் தீவிர பாபா பக்தர்... நாத்திகராக இருந்து நாயகன் சாயியை வழிபட ஆரம்பிக்கிற அவரது வாழ்வில் கிரியா யோக மார்க்க குருவை பாபாவே அறிமுகப்படுத்தி அவருக்கு நெடுநாட்களாக இதயதாகம் கொண்டிருந்த இமயப் பயணத்திற்கும் வழிவகை செய்கிறார்! அந்த யோகி கோபால கிருஷ்ணாஜி யை ஓம்குரு என்று அழைப்பர்! 


அந்த ஓம்குரு கங்கோத்ரியை  கடந்து யமுனோத்ரி வருகிறார்! வழிநெடுக இயற்கை ஆச்சர்யங்களையும்.. மகான்களின் மகிமைகளையும் தரிசித்த வண்ணம் அவர் வந்து சேர்கிற இடம் கேதார்நாத்! சிவபெருமான் ஆள்கின்ற குளிர் பூமி அது! போருக்குப் பிறகு பஞ்சபாண்டவர்கள் தவம் செய்த இடமும் கூட...! 


கேதார்நாத்திலிருந்து கௌரி குண்டம் நீர்வீழ்ச்சி செல்லும் வழியின் நடுவில் ஒரு குகை...

ஆச்சர்யமாகப் பார்க்கிறார் ஓம்குரு! அங்கே தயங்கியபடி ஓம்குரு அந்த குகையின் வாசலில் வந்து நிற்கிறார்...

"உள்ளே வா" என்றொரு குரல் சிங்கமாய் கர்ஜிக்கிறது.. அது சிங்கம் இல்லை மனிதக் குரல் தான்! அந்தக்குரல் அழைத்தது ஹிந்தியில்...உள்ளே சென்று பார்த்தால்... தொடர்ந்து டமரம் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு யோகி உள்ளிருந்து பார்க்கிறார் ஓம்குரு! அவர் வேறு யாருமல்ல மகான் டமரம் பாபா! 

அவரையே உற்று உள்ளப் பெருக்கோடு பார்க்கிறார் ஓம்குரு! அப்போது அந்த மகான் டமரம் பாபா கூறியதை கேட்டு ஓம்குரு ஆச்சர்யப்படுகிறார்...

"உன்னை இங்கே அழைத்து வந்ததே பகவான் பாபா தான்!" என்கிறார் டமரம் பாபா!

ஆம் மகான் டமரம் பாபா புட்டபர்த்தியில் இறைவன் ஸ்ரீ சத்யசாயியை தரிசித்திருக்கிறார்! 

டமரம் பாபா இன்னொரு ரகசியத்தை ஓம்குருவிடம் தெரிவித்த போது ஆச்சர்யத்தில் உறைந்தே போகிறார் ஓம்குரு!


'நான் அழைத்தால்... பகவான் பாபா சிவரூபத்தில் வந்து இங்கே எனக்கு காட்சி அளிக்கிறார்!" என்று மகான் டமரம் பாபா தெரிந்தவுடன் சிலிர்க்கிறார் ஓம்குரு...

ஓம்குரு தான் பாபாவின் பக்தர் என்று கூட அந்த மகானிடம் வெளிப்படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது! இன்னும் 5 ஆண்டுகளில் சமாதி ஆகி விடுவேன் என்கிறார் டமரம் பாபா! 


காலையில் ஓம்குரு அங்கிருந்து புறப்படும் போது 500 ஆண்டுகள் பழமையான 116 நாணயங்களை மகான் டமரம் பாபா வழங்குகிறார்! அந்த அபூர்வ நாணயம் தங்கம் மற்றும் பல உலோகங்களினால் உருவானவை! மகான்கள் பலர் மந்தாகினி நதி அருகே இந்த நாணயங்களை வைத்து தவம் செய்திருக்கிற ரகசியம் பேசுகிறார்..‌இதை வைத்திருந்தால் சிறப்பு வந்து சேரும் என்றும் மேலும் அணிபவருக்கு ருத்ர சக்தி வந்து சேரும் என்று கூறி 12 ருட்ராட்ச மாலைகளையும் தருகிறார் ஒரு நிபந்தனையுடன்...

இதை ஓம்குரு தனக்காக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்கிறார்! அதுதான் மகான்களின் இறை குணமே!


ஒருமுறை ஓம்குரு கனவில் தோன்றிய டமரம் பாபா தன்னலமின்றி ருத்ராட்ச மாலைகளை பிறருக்காக பயன்படுத்தியது குறித்து ஓம்குருவை அவர் ஆசீர்வதிக்கிறார்! இன்னும் 6 மாதத்தில் தான் உடலை  உதிர்க்கப் போவதாகவும் அறிவித்து... எப்பொழுது தன்னை பிரார்த்தனை செய்தாலும் ஆன்மீக உதவி அளிப்பேன் என்றும் உறுதி கூறி...ஒன்றை தெரிவிக்கிற போது ஓம்குருவுக்கு கண்ணீரே வழிகிறது...


"நீ உன் பூர்வ புண்ணிய பலனால் தான் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் வந்திருக்கிறாய்! இதை ஒருபோதும் மறவாதே!" என்று கூறி மகான் டமரம் பாபா வாழ்த்தியிருக்கிறார்!

தான் சொல்லியபடியே உத்தர்காண்டில் பெரும் நிலச்சரிவு ஏற்படுகிற போது அங்கேயே மகான் டமரம் பாபா சமாதி ஆகிறார்!


இன்றளவும் கேதார்நாத் வரும் ஆன்மீக சாதகர்களுக்கு சூட்சுமமாய் வழிகாட்டியபடி ஆன்மீக மேன்மை அளிக்கிறார் இமய மகான் டமரம் பாபா!


(ஆதாரம்: இமாலய ரகசியங்கள் | பக்கம் : 86 | ஆசிரியர் : கோகுல சந்தான கிருஷ்ணன்) 


இமய மகான்கள் இன்றளவும் பனியாய் குளிர்ந்தும்... பூமியின் அகலில் நெருப்பாய் எரிந்தும் அருள் பாலிக்கிறார்கள்! மகான்களை ஓரளவுக்கேனும் நாம் உணர்ந்து கொண்டால் இறைவன் பாபாவை நம்மால் உணர முடியும்! மகான்களே இறைவனுக்கான வாசல்!

அவர்கள் வழியே இறைவன் பாபாவை எளிதாக உணர்ந்துவிடலாம்! எப்படி பூமிக்கு தாய் சூரியனோ அது போல் மகான்களுக்கு தாய் இறைவன் பாபாவே! ஆக பாபாவே இறைவன் என்று மகான்கள் தெளிவுப்படுத்துகிற சத்தியம் டமரமாய் நம் இதய குகையில் சப்தமிடட்டும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக