தலைப்பு

செவ்வாய், 28 மார்ச், 2023

பனிமூடிய பத்ரிநாத் இரவு - பாபாவிடம் பிரார்த்தனை - வழிகாட்டிய மர்ம நபர்!

இமய யாத்திரை என்பது தியானம் எனும் இதய யாத்திரை போல் புனித விசேஷமானது! அந்த கடின குளிர்பனி யாத்திரையில் பிரார்த்தனை செய்த உடனேயே எவ்வாறு பாபா தன் பக்தருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் எனும் அற்புத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...


ஓம்குரு எனும் யோகி கோபால கிருஷ்ணாஜி... கங்கோத்ரி - யமுனோத்ரி - கேதார்நாத் பயணித்து அங்கே பல அற்புத மகான்களை தரிசித்து பத்ரிநாத் வருகிறார்!

பத்ரிநாத் 6 மாதம் பனி மூடி படியே இருக்கும்... ஆகவே யாரும் பயணிக்க இயலாது! கடைசியாக சந்நதியில் பத்ரிநாராயணனுக்கு விளக்கேற்றி விட்டு நடை சாற்றுவார்கள்... 6 மாதம் கடந்தபிறகு நடை திறப்பார்கள்.. திறந்து பார்த்தால் ஏற்றிய விளக்கு அப்படியே ஒளிர்ந்த வண்ணம் பிரகாசிக்கும்... பத்ரிநாராயணரின் சிலா விக்ரஹ பாதத்தில் புதுப்புது மலர்கள் சிதறிய வண்ணம் இருக்கும்... மனித வழிபாடு நிகழாத அந்த 6 மாதங்களில் தேவதைகள் மற்றும் தேவர்கள் வழிபாடு செய்கிறார்கள்! அங்கே ஸ்ரீ நாரதர் உலாவுகிறார்... மனிதன் புகாத வண்ணம் அவருக்கு ஒரு தனி குகையே இருக்கிறது! பல மகான்கள் பல குகையில் வசிக்கிறார்கள்... இந்த உண்மை சம்பவங்களை எல்லாம் ஓம்குரு கேட்க கேட்க உறைபனி பாதி அவரின் உடலை உறைக்க... ஆச்சர்யம் எனும் தெய்வீகப் பனி அவரின் உள்ளத்தை உறையச் செய்கிறது! 


ஓம்குரு பத்ரிநாத்தில் கடை பாபா என்கிற மகானின் குகையை நோக்கிச் செல்கிறார்! அது மதியம் 12 மணி! அவர் குகையை நெருங்குகிற போது மாலை ஆகிவிடுகிறது! 

கடைபாபா என்கிற மகானின் கடைக்கண் பார்வை பட பயண களைப்பும் உடலில் ஊடுறுவும் பனிப் பிசைவும் ஓய்வெடுக்கிறது! 

ஓம்குருவுக்கு ஒரே பசி! உள்ளே வருமாறு கடைபாபா அழைக்கிறார்! வடநாட்டு சாதுக்கள் மற்றும் மகான்களை பொதுமக்கள் தந்தையே என்கிற அர்த்தத்தில் பாபா என்று தான் அழைப்பர்! அவரவர்களின் அடையாளப்படி ஒரு அடைமொழியோடு பாபா என்ற பெயர் தங்கிவிடும்! 

பல மகான்களின் ரிஷிமூலம் அறியப்படாமலேயே இருக்கிறது!


உள்ளே செல்கிற ஓம்குரு அவரின் தவக்கோலத்தை தரிசிக்கிறார்! அத்தனை மகான்களின் தரிசனமும் , இமயப்புனித யாத்திரையும் ஓம்குருவுக்கு இறைவன் பாபாவின் அனுமதியோடே நிகழ்கிறது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது! நின்ற கோலத்திலேயே நாராயண மந்திரம் உச்சரிப்பது கடைபாபாவின் தவபாணி! இப்போது மசாலா வேர்க்கடலை கிடைத்தால் பசியை ஆற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் வருகிறது ஓம்குருவுக்கு... அந்த எண்ணத்தை துல்லியமாய் படித்த கடைபாபா.. கண்களை மூடுங்கள் என்கிறார்... அவர் கைகளில் அடுத்த நொடி.. வெந்த வேர்க்கடலை மசாலா தூவப்பட்டு... கொத்தமல்லி தக்காளியோடு ஆவிபறக்க சுடச்சுட வருகிறது.. கடைபாபா அதனை தர.. ஓம்குரு மற்றும் அவரோடு வந்திருந்தவர்கள் பசி ஆறுகிறார்கள்! 

கடைபாபா கடலை பாபா என்பதாக கடலை கொடுத்ததால் அந்தக் கருணைக் கடலை வணங்கிய போது... தேநீர் குடித்தால் இந்த குளிருக்கு எவ்வளவு இதமாக இருக்கும் என ஓம்குரு நினைக்க... இதனை உடனே உணர்ந்து கண்களை மூடுங்கள் என்கிறார் கடைபாபா! அடுத்த நொடி அவர் கைகளில் சுடச்சுட தேநீர்.. குடித்து முடித்து அதே சூட்டில் அனைவரும் கடைபாபா இருப்பிட சந்நதியில் கண்மூடி தியானத்தில் தனை மறந்து லயித்துப் போகிறார்கள்! 4 மணிநேரம் 4 நொடியாய் கடந்துவிடுகிறது!

ஓம்குரு கண் திறந்து பார்த்தால் ஒரே கும் இருட்டு! வழியே தெரியவில்லை... இந்த கும் இருட்டில் கோவில் நோக்கி நகர வாய்ப்பே இல்லை... நகர்ந்தால் அந்த இருட்டில் சுற்றி சுற்றி ஒரே இடத்திற்கு வருவதற்குள் உடலே பனியால் மூடப்படும் அளவிற்கு பனி! 

அங்கே சனிக்கிழமைகளே இல்லை.. இமயப்பகுதிகளில் எல்லாமே பனிக்கிழமைகள் தான்! என்ன செய்வது? 


ஓம்குரு இறைவன் பாபாவிடம் தீவிரமாக பிரார்த்தனை செய்கிறார்! "சுவாமி நீங்கள் அனுமதி அளித்தே வந்திருக்கிறோம்! தாங்களே எங்களை வழிநடத்த வேண்டும்!" என்பதே ஓம்குருவின் ஸ்ரீ சத்ய சாயி பிரார்த்தனை... 

அப்போது கடைபாபா *"நீங்கள் புனித ஆன்மாக்கள்... இல்லை என்றால் பத்ரிநாத் வந்திருக்க முடியாது.. அனுமதி இல்லாமல் எவரையும் என் இருப்பிடத்திற்கு அழைக்கமாட்டேன்! உங்கள் ஆன்ம சாதனையை தொய்வின்றி தொடருங்கள்!"* என்று கூறியபடி தான் ஒரு குச்சியை எடுத்து பனியை குத்துகிறார்.. அது விலகி வழிகாட்டுகிறது... "இப்படியே 100 அடி செல்லுங்கள்... 2 நபர்கள் வருவார்கள்... அவர்களிடம் நீங்கள் எதுவும் பேசக்கூடாது.. அவர்களின் பின்னாலேயே செல்லுங்கள்! இருப்பிடம் வரும்!" என்று அவர் அறிவிக்க...


அதுபோலவே 2 மர்ம நபர்கள் வர... "வாருங்கள்! பின்னால் தொடருங்கள்!" என்று சொல்ல... எவ்வளவு வேகமாக நடப்பினும் அதை விட வேகமாக அவர்கள் இருவரும் முன்செல்ல.. அபாயமின்றி சர்வ பாதுகாப்போடு கோவிலை வந்தடைகிறார்கள்!

வந்தடைந்த போது... அந்த இருவர் மறைந்துவிடுகின்றனர்... உடனே ஓம்குரு நன்றி தெரிவித்தது "இறைவன் சத்யசாயிக்கே!" தன் பிரார்த்தனையை நொடிப்பொழுதில் ஏற்று அதனை மகான் கடைபாபாவை கருவியாகக் கொண்டு 2 மர்ம நபராக உருவெடுத்து வந்தது இறைவன் பாபாவே என்பதை தெள்ளத்தெளிவாக ஓம்குரு உணர்ந்து கொள்கிறார்!


(ஆதாரம் : இமாலய ரகசியங்கள் | பக்கம் : 97 - 100 | ஆசிரியர் : கோகுல சந்தான கிருஷ்ணன்) 


சம்பாதிப்பது இமய யாத்திரை புரிவதற்கே! உடலை நன்றாகப் பேணுவது இமய யாத்திரை புரிவதற்கே! சாகிற உறவுகளிடம் நாம் காலத்தை வீணடிக்காமல் சாகாத இறைவனோடு சங்கமிக்க இமய யாத்திரை நம் இதய யாத்திரைக்கு வழிவகை செய்யும்! இதனை மனப்பக்குவம் அடைந்தவரே உணர்ந்து கொள்ள முடிகிறது! அந்த இமாலய உள்ளுணர்வு மேலெழும் போது அதற்கான வழிகாட்டுதல்களை இறைவன் பாபாவே நமக்கு நிகழ்த்துகிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக