தலைப்பு

புதன், 15 மார்ச், 2023

1000 அடி யமுனோத்ரி பள்ளத்தாக்கில் விழப்போன யோகி ஓம்குரு!

ஆன்மீக சாதகராக இமாலயத்தில் தெய்வீக யாத்திரை புரிந்த ஒருவரை இறைவன் பாபா எவ்வாறு காப்பாற்றினார் எனும் ஓர் ஆச்சர்ய மகிமா சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...


யோகி கோபால கிருஷ்ணாஜி'யே ஓம்குரு என்று அழைக்கப்படுகிறார்! இறைவன் பாபாவின் தீவிர பக்தராக தனது ஆன்மீக வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்! பழுத்த நாத்திகரில் இருந்து பழுத்த பக்தர்... பழுத்த பக்தரில் இருந்து பழுத்த ஆன்மீக சாதகராக உயர்கிறார்.. அதற்கும் பாபாவே காரணம் என இதயம் திறக்கிறார்! 

யோகி ராமய்யாவே
"இவரே உன் குரு" என பாபா அடையாளம் காட்டி கிரியா பாபாஜியின் யோக பரம்பரையில் ஒருவரான யோகி ராமய்யாவே இவரது யோக குருவாகிறார்! முழுக்க முழுக்க அது பாபாவின் வழிகாட்டுதலே!

அப்போதிலிருந்தே ஓம்குருவுக்கு இமய யாத்திரை செல்ல வேண்டும் என்ற தாகம் முந்துகிறது!

"அவசரப் படாதே! அதற்குரிய நேரம் வரும்!" என்று கனவில் ஆற்றுப்படுத்துகிறார் பாபா! அதன் படி காத்திருந்து.. காலமும் கனிகிறது... அது சாதாரண கனி அல்ல இமயம் எனும் பனியில் தோய்ந்த கனி! 


கங்கோத்ரிக்கே முதலில் பயணிக்க வேண்டும் என்ற விருப்பம் ஓம்குருவுக்கு... அங்கே பல அற்புத மகான்களை தரிசிக்கிறார்... பறவை போல் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் மகான்கள், நீண்ட கூர் கொம்புகளுடைய மான்கள் வடிவில் மகான்கள் என நிறைய மகிமை சம்பவங்களை தரிசிக்கிறார்!


பிறகு யமுனோத்ரி யாத்திரை மேற்கொள்கிறார்! 11 மணிக்கு யமுனோத்ரியை அடைகிறார்!

அங்கே யோகேஷ்வர் ஆசிரமத்தில் தங்குகிறார்.. நெருக்கடியான நிலப்பரப்பான புண்ணிய தலம் யமுனோத்ரி! யமுனா மாதா தோன்றிய இடம் என்பதால் ஓம்குரு நடந்தே செல்கிறார்! நடந்து வருகிற எதிர்வழியில் ஒரு குதிரை ஓட்டி வந்து "வாருங்கள்! குதிரையில் போகலாம்!" என்று அவரை அழைக்க ஒரு சிறு தொகையை பயணப்படியாகக் கொடுத்து குதிரைப் பயணம் மேற்கொள்கிறார் ஓம்குரு! 


அப்போது தான் அந்த அதிர்ச்சி மிகுந்த சம்பவம் நேர்கிறது! அவர் குதிரையில் பயணிக்கிற எதிர்வழியில் வேறு ஒரு குதிரை வேகமாக அவர் பயணிக்கிற திசை நோக்கி வர.. அதைப் பார்த்து அவரது குதிரை மிரள... மிரண்டு நிலை தடுமாறி வழுக்கி விழ...‌அதன் மீதிருந்த ஓம்குரு திடும் என விழுகையில்.. லகானை பிடித்தவாறு தொங்கிய வண்ணமே இருக்கிறார்! சற்று கீழே பார்க்கிறார் "மரணப்பள்ளத்தாக்கு" அதன் முடிவு எது? என்றே கூட கண்களுக்கு தெரியவில்லை... அதோ கதி தான்... 1000 அடி பள்ளத்தாக்கு அது.. வழுக்கி விழுந்து கொண்டிருக்கும் அந்தக் குதிரையை யாரோ பிடித்துக் கொண்டிருப்பதை ஓம்குரு உணர்கிறார்! அந்த சரிவில் யாரும் இறங்கிப் பிடிக்க இயலாது! 


அப்போது அவரின் நினைவுக்கு வந்த ஒரே ஒரு பெயர் "சாயிராம் சாயிராம்" என்பது மட்டுமே! அவரது யோக குருவின் பெயரையோ குருவின் குரு பெயரையோ அவர் அழைக்கவில்லை! அவர் அழைத்த பெயர் இறைவன் பாபாவின் பெயரே!

அழைத்த அடுத்த நொடி ஆபத்பாந்தவனாகிய பாபா ஓடோடி வருகிறார்!

என்னானது?! ஏதானது!? என்று அவருக்கு நினைவே இல்லை! 

தொங்கிக் கொண்டிருந்த ஓம்குரு திடீரென குதிரையின் மேல் ஏற்றப்படுகிறார்!

மனிதனால் அது சாத்தியமே இல்லை என ஓம்குரு உணர்ந்த அபாய நொடி அது! 

மனிதன் எவரேனும் காப்பாற்ற முனைந்திருந்தால் அவனும் சேர்ந்து அவரையும் சேர்த்து விழவேண்டிய சறுக்குப் பள்ளத்தாக்கு அது! இன்னும் இரண்டடி தான்.. பள்ளத்தாக்கு ஓம்குருவின் உடலை விழுங்க இருண்ட வாய் திறந்து காத்துக் கொண்டிருந்த கொடும் நிகழ்நொடி அது!

ஆக இறைவன் பாபாவால் தான் காப்பாற்றப்பட்டதை அவர் கண்கலங்கி உணர்கிறார்!

யமுனை அவர் கண்வழி யமுனோத்ரியில் கரை புரண்டு வெளியே திரண்டு இறைவன் பாபாவை மானசீகமாக கும்பிடுகிறது!


(ஆதாரம் : இமாலய ரகசியங்கள் | பக்கம் : 71,72 | ஆசிரியர் : கோகுல சந்தான கிருஷ்ணன்) 


ஆயிரம் உண்மையான குருமார்கள் இமயம் முதல் குமரி வரை இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கும் குருவாக... மகாகுருவாக ஜெகத் குருவாக அனைத்து குருமகான்களுக்கும் இன்றுவரை திகழ்வது இறைவன் பாபா ஒருவரே! சத்குரு என்ற பெயர் பாபாவுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது! காரணம் : விளம்பரமற்று வியாபாரமற்று முழுக்க முழுக்க வினயத்தோடு நம்மை வழிநடத்துவது பாபா மட்டுமே!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து:

  1. ஶ்ரீசத்யசாயி சத்குருவே போற்றி! மன சஞ்சலங்களையும்..எதிர்பார்ப்புகளையும்கூட....ஸ்வாமியால் மட்டுமே தீர்க்கமுடியும்! அருளுக்கு காத்திருப்போம்!

    பதிலளிநீக்கு