தலைப்பு

ஞாயிறு, 12 மார்ச், 2023

முன்பின் தெரியாத இருவரை தம்பதியாக்கிய தெய்வ சாயி!


சுவாமி தன் சந்நதியில் தன் தெய்வீக சாந்நியத்தில் அவரவர் திருமண முறைப்படி தன் கையால் சிருஷ்டி செய்து திருமாங்கல்யம் வரவழைத்து நிறைய திருமணங்களை நடத்தி வைத்து இருக்கிறார் என்ற மகிழ்வான விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றே.  ஆனால்  பெற்றோருக்கே தெரியாமல் முன்பின் தெரியாத  இருவரை தம்பதியாக இணைத்த விசித்திரமே வியக்கும் விசித்திர தெய்வீக நிகழ்வு இதோ...

அடியேனின் தந்தை முத்துக்குமார் அவர்களின் வாழ்க்கையில் பின் பாதியில் இணைந்த அவரின் நண்பர் ஒருவர் மிகவும் திருப்புமுனை வாய்ந்தவராக அமைந்தார்.

முன்பாதியில் பல இன்னல்களைச் சந்தித்தும் இதயம் நொறுங்காதவராய் இந்த ஜென்மத்து என் தந்தை திகழ்ந்தது இன்னலைச் சந்திக்கும் அனைவருக்கும் ஓர் படிப்பினையே!

மின்னலைச் சந்திக்கும் வானம் தன் மேகத்தைக் கலைக்காதது போல்..
இன்னலைச் சந்திக்கும் உறுதியான இதயம் வாழ்க்கையைக் கலைக்க எண்ணாது..

இறைவன் சத்ய சாயியின் அருட் பார்வை  அடியேனின் பால்ய காலத்திலேயே தொடங்கி இருந்தாலும்..
என் தந்தையாருக்குத் தொடங்கியது அவரின் நண்பர் மூலமாகத் தான்.
உயிர் நண்பர் என்று சொல்ல முடியாது ஆனால் தந்தையின் உயிரில் விந்தையான சாயி விளக்கேற்றியவர் அவர்.

என் தந்தை வேலை நிமித்தமாக எங்கு சென்றாலும்.. அங்கே இறைவன் சத்ய சாயி புகைப்படமாய்ச் சிரித்துக் கொண்டிருப்பார்.


இரவில் அவரை யாரேனும் தொலைபேசியில் எழுப்பி எந்த ஒரு உதவி கேட்டாலும்.. ஓடோடிச் சென்று உதவக் கூடியவர்.
அவரின் மதிய தூக்கத்தைக் கூட பல தொலைபேசிகள் உதவிக்காக அலறும்.
இப்படிப்பட்டவரை இறைவன் சத்ய சாயி ஆட்கொள்ளாமல் இருப்பாரா!?


இப்படி இருக்கையில் அவரின் இரக்க சுபாவம் எண்ணி இறங்கி வந்தார் ஒரே இறைவனான சத்ய சாயி... ஆம்!
அவர் நண்பரின் வடிவில் வந்திறங்கினார் சுவாமி.
அந்த நண்பர் பெயர் வக்கீல் வாமதேவன்.
அது 1996 ஆண்டு என்று என் தந்தை என்னிடம் பதிவு செய்தார்.
இவர் அப்போது ஓம் சக்தி இன்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த சமயம் ...
அந்த வக்கீல் இவர் பழகும் பாங்கினைப் பார்த்து நட்புறவானார்.

தந்தையுடன் அடியேன்... (Year: 2003)

இல்லம் அழைத்துப் பேசும் அளவிற்குப் பழகினார்.
அவரின் இல்லம் முழுதும் இறைவன் சத்ய சாயி புகைப்படங்கள்.
அந்த நேரம் அவர் பம்மலில் வசித்து வந்தார்.

சுவாமியைப் பார்த்த உடனே என் நினைவு வந்திருக்கிறது.
அவன் சிறுவயதிலிருந்து வணங்குகிறானே என சுவாமியைப் பற்றி அவரிடம் கேட்டிருக்கிறார் என் தந்தை.

அந்த வக்கீல் வாமதேவன் சொன்ன முதல் வார்த்தை அவர் நாராயணன் சார்.. மஹா விஷ்ணு... கிருஷ்ண அவதாரம்.
அவரின் அருகில் சென்றாலே அது அவர் சொல்லாமலே நம்மால் உணர முடியும் என்று என் தந்தைக்கான பக்தி விளக்கை இப்படியே ஏற்றி வைத்தார்.

எவ்வளவு பரம சத்தியம் அந்த வார்த்தை.
எவ்வளவு ஆழமாக அவர் தரிசித்திருந்தால் அதை அவர் பகிர்ந்திருப்பார்.
நான் அப்போது கன்னியாகுமரியில் தாயின் தந்தை இல்லத்தில் படித்துக் கொண்டிருந்தேன்.

அங்கே கொஞ்ச காலம் பிறகு சென்னை என என் கல்விப் பயணம் தொடர்ந்தது...


சுவாமி அவதரித்த இல்லத்தில் தனது நண்பரோடு என் தந்தை

வக்கீல் வாமதேவனின் சாயி அனுபவம் ஆச்சர்யகரமானவை ...
அவர் சொல்லச் சொல்ல என் தந்தைக்கு சுவாமி மேல் பக்தி ஆழமாகிக் கொண்டே போனது...

வாமதேவன் அவர்களின் தந்தை இலங்கையில் வாழ்ந்தவர்.
அவர் சுவாமியின் ஆத்மார்த்த பக்தர்.
நிறைய பயணங்கள்.. நிறைய தரிசனங்கள்... என அவர் பெற்று வந்தவர்.

ஒருமுறை வக்கீல் வாமதேவன் அவர்கள் புட்டபர்த்தி தரிசனத்தில் அமர்ந்திருந்த சமயம்..
சுவாமி அழகு ஜோதியாய் அசைந்து வருகிறார்..
இவர் அருகில் வந்து..


உன் தந்தை என் பக்தர் ஆயிற்றே எனக் கேட்டிருக்கிறார்..
ஆம் சுவாமி இது வாமதேவன்.
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
இது இறைவன் சத்ய சாயி..
வக்கீல் சுவாமி... என்கிறார் வாமதேவன்...
சரி.. நான் ஒன்று சொன்னால் கேட்பாயா?
எனக் கேட்டிருக்கிறார் கடவுள் சத்ய சாயி.

"சொன்னால் கேட்பாயா" இந்தக் கேள்வியில் பக்தனின் பக்தி கடவுட் தராசில் எடை போடப்படுகிறது..
நாம் சொல்வதை எல்லாம் செய்யும் இறைவனின் சொல்லை நாம் கேட்க வேண்டாமா என்ற ஒரு தார்மீக நியாயமும் இதில் அடங்கி இருக்கிறது..
பக்தி என்பது இறைவனுக்கும் பக்தனுக்குமானது..
அவர் எதை விதிக்கிறாரோ அதை சிரம் மேல் வைத்துப் போற்றிச் செய்ய வேண்டும்..
அப்போதும் நாம் வெறும் கருவி என்றே உணர வேண்டும்.

வாமதேவனோ சரி சுவாமி என்றிருக்கிறார்..
என்ன சொல்லப் போகிறார் என ஏதும் தெரியாமல்..
என்றாவது மேன்மை இல்லாதவற்றை யாருக்கேனும் சுவாமி செய்யச் சொல்லி இருக்கிறாரா?

மகிளா வரிசையில் ஒரு பெண்ணை தன் விரல் நீட்டி  அழைக்கிறார் ...
இதைக் கண்டு வரும் தரிசன பக்தர்களுக்கு ஏதும் புரியவில்லை..

அந்தப் பெண்மணியும் எழுந்து கை கூப்பி நடந்து வந்திருக்கிறார்...
இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வாயா ? என சுவாமி கேட்டிருக்கிறார்.
அவர் கொஞ்சமும் யோசிக்கவில்லை..
அந்தப் பெண்மணியின் பெயரும் தெரியாது..

வாமதேவன் அவர்களுக்கு என்ன ஒரு பக்தி!
இலங்கையில் இருக்கும் என் தந்தையிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிடுகிறேன் என்று கூடச் சொல்லவில்லை..
மகனுக்கு திருமணம் நடத்த வேண்டும் என்ற அவருக்கிருந்த எண்ணம் இறைவன் சத்ய சாயிக்கு தெரியாதா?
தரிசனத்துக்காக கேரளாவில் இருந்து வந்திருந்த பெண்மணி எந்தப் பிரார்த்தனையை முன்னிட்டு வந்திருக்கிறார் என்பதும் அவருக்கு தெரியாதா?

இறைவன் சத்ய சாயிக்கு தெரியாதது இந்த அண்ட சராசரத்தில் ஏதேனும் இருக்கிறதா?
அவருக்கு தெரியாததும் இருக்கிறது.
ஆம் சுவாமிக்கு பக்தர்களை ஏமாற்றத் தெரியாது.. வஞ்சிக்கத் தெரியாது..
பொறாமைப்பட தெரியாது..
தன்னைத் தானே புகழத் தெரியாது.. இதைத் தவிர சுவாமிக்கு தெரியாததேதும் இல்லை...


ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாமலும்.. எங்கிருந்து வந்திருக்கின்றனர் என அந்த இருவருக்கும் தெரியாத போதிலும் ...அந்த இருவரும் சரி என்று சொன்ன உடனே.. அதே இடத்தில் தாலியை சிருஷ்டித்து வாமதேவனிடம் சுவாமி தர திருமணம் இறைவனின் முன்னிலையிலேயே நிகழ்ந்திருக்கிறது.

சில திருமணங்கள் இங்கே எங்கள் அந்தஸ்தைப் பார்.. எங்கள் கௌரவத்தைப் பார்.. எங்கள் வசதியைப் பார் என மார் தட்டி.. மேளம் தட்டி ஊரை அழைத்துச் சொல்லும்.
ஆனால் இதைப் போன்ற இறைவன் சாந்நியத்தில் நிகழ்கின்ற திருமணமே எந்த விதமான ஆர்ப்பாட்டமின்றி .. இரைச்சலின்றி ... அமைதியாய் சரணாகதி உணர்வோடு ஆத்ம பந்தமாய் அமையும்.

இதை விவரித்துச் சொன்னபோது என் தந்தைக்கு மெய் சிலிர்த்தது.

அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு சுவாமி அளித்தப் பரிசாகப்  பிறந்த பெண் குழந்தைக்கு பிரசாந்தி எனப் பெயரிட்டனர்.
இப்போது வாமதேவன் குடும்பம் பெங்களூரில் வசிக்கிறது.

பழைய தொடர்புகள் என் தந்தைக்கும் அவருக்கும் இப்போது இல்லை என்றாலும் .. அந்த அனுபவத்தை என் தந்தையால் மறக்கவே முடியவில்லை..
அவரே முதன் முதலாக என் தந்தைக்கு இறைவன் சத்ய சாயி புகைப்படம் அளித்தது..
அதை இன்றளவும் போற்றி பாதுகாக்கிறார்.

வீட்டிற்கும் ஒரு முறை வாமதேவன் வந்திருக்கிறார். அடியேனின் கெட் அப்'பை பார்த்து ... ஆதிசங்கரர் போல் இருக்கிறான் என அவர் சொல்லியதை என் தந்தை நினைவு கூர்ந்தார்.
அதைக் கேட்ட போது "சுவாமி எனக்கு ஞானம் இருக்கிறதோ இல்லையோ.. உன் மேல் தினம் தினம் எந்தவிதமான எதிர்பார்ப்பில்லா பக்தி மட்டுமே வேண்டும்!" என உளமாற நினைந்தேன்..

எங்கே எதிர்பார்ப்பிருக்கிறதோ அங்கே பக்தி இல்லை ..
எங்கே பக்தி இருக்கிறதோ அங்கே இறைவனிடம் எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லை. 

இன்று இல்லம் முழுக்க சுவாமி படங்கள் நிரம்பி வழிந்தாலும்.. வாமதேவன் சாயி ராம் அளித்த அந்தப் புகைப்படம் என் தந்தைக்கு மிகவும் ராசியானது..

வாமதேவன் சாய்ராம் என் தந்தையாருக்கு வழங்கிய முதல் சுவாமி புகைப்படம்

இன்றளவும் என் தந்தை வியாழன்தோறும் சுவாமிக்கு பெரிய பூமாலை சாற்றி வழிபடுகிறார். வியாழன் தவறினாலும் சுவாமிக்கு பூமாலை தவறாது...
ஓம் ஜெய் ஜெகதீச ஹரே சொல்லி தினமும் ஆரத்தி எடுக்கிறார்.
பூண்டி பஜார் சமிதிக்கு சுவாமி நாற்காலி .. ஃபோடியம் .. சுவாமி பட ஃபிரேம் என நிறைய சேவை ஆற்றி வந்திருக்கிறார்...
பக்தியே இல்லாதவர்களிடம் கூட சுவாமியின் தன்னலமில்லா சேவையை எடுத்துச் சொல்வார்...

பிறரிடம் "நீங்க அவரை கடவுளாகக் கூட பார்க்க வேண்டாம்.. இப்படி ஒரு தனிப்பட்ட மனிதர் செய்திருக்கும்  தன்னலமில்லா மிகப்பெரிய சேவையை இதுவரை எந்த மடத்து மகான் செய்தார்.. ஒரே ஒருவரைக் காட்டுங்கள் என சாதாரண நபர்களிடம் அவர்களின் பாணியில் எதார்த்தம் பேசுவார்.

அவர் சொல்வது உண்மை தான். எந்த மடம் நடத்தும் எந்த பள்ளியும் .. கல்லூரியும் இலவசமில்லை.
உணவு உபசரணையில் கூட பேதம் இருக்கத்தான் செய்கிறது.

அடியேனுக்கு அதில் அனுபவம் அதிகம்.

ஆனால் இறைவன் சத்யசாயியிடம் அவை எதுவுமே இல்லை.

ஆஷாடபூதிகள் தான் பேதம் பார்ப்பார்கள்.
இறைவன் சத்ய சாயி அது எதையும் பார்ப்பதே இல்லை!

என் தந்தைக்கு சத்யசாயி  பக்தி உயர்ந்ததெனில் அதற்கு வாமதேவன் அவர்களும் ஒரு காரணமே!

இறைவன் சத்ய சாயி எவரையும் தன் கருவியாக்கி எவரையும் தன் பக்தராக்குவார்.
அப்படிப்பட்ட கருவிகளில் என் தந்தைக்காக சுவாமி தேர்ந்தெடுத்தவர் வாமதேவன் சாயிராம்.. மிகச் சிறந்த சுவாமி கருவி..  ஆத்மார்த்த பக்தர்..

 பக்தியுடன்
வைரபாரதி

1 கருத்து:

  1. உள்ளத்தால் உயர்ந்த தந்தை!
    உண்மையால் உயர்ந்த மகன்!
    தந்தைக்கு என் நமஸ்காரங்கள்!!

    பதிலளிநீக்கு