தலைப்பு

செவ்வாய், 7 மார்ச், 2023

2013 ஆண்டின் உத்தர்க்காண்ட் பிரளயம் - பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பாபா செய்த தொலைபேசி!

எவ்வாறு மிகப்பெரிய ஒரு சமீபத்திய பேரிடரில் இருந்து தனது பக்தரை பாபா மீட்டார் எனும் ஆச்சர்ய அனுபவம் விறுவிறு என இதோ...


அது ஜுன் மாதம். 2013 ஆம் ஆண்டு! அந்த வெள்ளப் பிரளயம் ஏற்படுவது ஜுன் 16 ஆம் நாள்! ஆயிரக்கணக்கானவர்கள் ஜலசமாதி அடைந்தனர்! ஏராளமான மரங்கள் , மனித வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.. அது நிகழ்வதற்கு முன்... ஏதும் அறியாமல்..


பாபா பக்தர் ஓம்குருவின் பயணக்குழுவினர் அந்த ஜுன் மாதம் இமயப்பயணம் மேற்கொள்கின்றனர்... இரவு நீலகண்ட பர்வதத்தில் (பர்வதம் - மலை) தங்குகின்றனர்! அந்த இரவு ஓம்குரு அந்த நீலகண்ட பர்வதத்தில் ஒரு சிம்மாசனம் இட்டு இறைவன் பாபா அமர்ந்திருப்பதை தரிசிக்கிறார்! வியக்கிறார்... அவர் மட்டுமல்லாது.. அவரின் பயணக்குழுவினர் அனைவரும் கண்டு பரவசம் அடைகின்றனர்!


ஓம்குரு ஜி 

வரவிருக்கும் பிரளயம் ஆபத்தை மறைமுகமாக ஒரு

நிகழ்வு ஓம்குருவுக்கு சுட்டிக்காட்டுகிறது! 

மௌனி பாபா எனும் இமய சாதுவுக்கு மகாவதார் பாபாஜியின் சிலையை ஓம்குருவின் நண்பர் செய்து தர அவரோடு ஓம்குருவும் அவரை சந்திக்கிறார்! அதற்கு முன் சிலையோடு ரிஷிகேஷ் செல்வதற்கு அனுமதி சீட்டு பெற வேண்டும்! உடனடியாக கிடைக்க வேண்டியது மிகத் தாமதமாக மாலையே கிடைக்கிறது.. நீண்ட காத்திருப்பு அது! ஒரு வழியாக புறப்பட்டு இமயப் பகுதியை கடக்கையிலே தொடர் நிலச்சரிவுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன... இவை எல்லாம் அபாயத்திற்கான பல்லவியை எழுதிக் கொண்டிருக்கிறது! ஆக 50 கி.மீ கடப்பதற்கு 2 நாட்கள் ஆகிறது! ஓம்குரு மற்றும் குழுவினர் ரிஷிகேஷ் செல்ல வேண்டும்.. அதற்கு முன் பத்ரிநாத்தில் 10 நாட்கள் தங்கியிருந்தனர்...

நீலகண்ட பர்வதத்திலேயே ஒரு சன்யாச கோலத்தில் இருந்த ஒரு யோகியை தரிசிக்கிறார் ஓம்குரு... அந்த உடல்உறை குளிரிலும் ஆடையின்றி திகம்பரமாய் அவர் திரிய ஆச்சர்யப்படுகிறார்!

500 மீட்டர் தூரத்தில் இருந்த அவரை ஓம்குரு அழைக்க.. அந்த சாதுவோ அப்படியே ஓடி அவர் கண்முன்னே மறைந்து போகிறார்!

ஓம்குரு பயணக் குழுவில்  இருந்த ஒரு அமெரிக்க பெண்மணி ஆழ்நிலைதியானத்தில் அப்படியே உருவம் மறைந்து கொஞ்ச நேரம் வெற்றிடமாகிறார்!  இவற்றை எல்லாம் கடந்து அந்த ஆச்சர்ய பயணம் அபாயக்கட்டத்திற்கு நெருங்க இன்னும் 2 நாட்களே இருந்தன...


அது ஜுன் 14 ஆம் தேதி.. வெள்ளப் பிரளயத்தை வரவேற்க பன்னீர் தெளித்தது போல் மழைத்துளி தெறிக்க ஆரம்பிப்பதற்கு முன் தெளிக்க ஆரம்பிக்கிறது! நீலகண்ட பர்வதத்தில் தரிசித்த அதே சாது சன்யாசி அந்த பத்ரிநாத்திலும் இருப்பதை வியந்து மீண்டும் தரிசிக்கிறார்!  ஒருவகை மிருகமும் அவரோடு இருக்கிறது! 


ஒரு குகையில் அந்த சாதுவின் அரவணைப்பில் அவரோடு ஆன்மீகம் பேசி பல சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுகின்றனர் ஓம்குரு குழுவினர்...! அப்படியே இரவு 8.30 ஆகிவிடுகிறது.. அது மலை மேட்டில்  இருக்கும் குகை... கீழே இறங்குவதற்கு முன் அந்த சாது "எப்போது கீழே இறங்கப் போகிறீர்கள்?" என்று கேட்கிற போது..

"16 ஆம் தேதி!" என ஓம்குரு பதில் அளிக்க... "உங்களால் செல்ல இயலாது! பிரளயம் ஏற்படப் போகிறது!" என்று இமய சாது எச்சரிக்கிறார்! ஆயினும் அவர் சொல்லை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஓம்குரு குழுவினர் செல்கின்றனர்! 


அந்த சாது யார் என அவர் பேச்சினூடே சொல்லியும் ஓம்குருவுக்கு பிடிபடவில்லை... "பைரவா!" என அழைக்க... அங்கே மாடு ஒன்று வர... அது இறங்குகையில் அதைப் பின்தொடருமாறு அந்த இமய சாது அறிவுறுத்த அவ்வாறே செல்கின்றனர் ஓம்குரு குழுவினர்! 


அந்த அமெரிக்க தியானப் பெண்மணி பல ஆன்மீக முன்னேற்றம் பெற வேண்டி அந்த சாது குகையிலேயே தங்கிவிடுகிறார்! 15 ஆம் தேதியே குழுவோடு இணைகிறார்! நேற்று நாம் தரிசித்த அந்த இமய சாது வேறு யாருமில்லை மகாவதார் பாபாஜியே என அந்த அமெரிக்க தியான யோகினி தெரிவிக்க ஓம்குரு குழுவினர் ஆச்சர்ய உச்சிக்கே செல்கின்றனர்!

அப்போது ஆச்சர்யம் கடந்து அபாயம் மேகத்திலிருந்து மழையாய் தொப் தொப் என விழுந்து கொண்டிருந்தது! 


பத்ரிநாத்தில் 16 ஆம் தேதியும் தொடர்ந்து மழை... ரிஷிகேஷ் செல்லும் கனவு கனவாகவே தங்கி விடுகிறது! மழையின் ஊழித்தாண்டவம் அது! கங்கையின் பிரவாகம் அதிகரிக்கிறது! கேதார்நாத் பகுதி சேதம் எனும் செய்தி காதுகளில் இடி போல் இறங்குகிறது! அவர்கள் குழுவே உலகத்திலிருந்து ஒதுக்கப்பட்டது போல் ஆனது!

குரு கோவிந்த் சிங் தவம் இயற்றிய குருகோவிந்த் காட் எனப்படும் ஹேமகுண்டத்தில்‌ மட்டும் 4000 வாகனங்கள் மூழ்கின! 

ஓம்குரு குழுவினர் கண்முன்னே 2000 பேர் குடியிருந்த ஒரு பெரிய கட்டிடமே மழைப்பசிக்கு இரையாகிறது! அத்தனை உயிர்களையும் ஒரு நிமிடத்தில் வெள்ளம் குடிப்பதை கண்டு உறைந்து போயினர் குழுவினர்! 10 நாட்கள் உலகத் தொடர்பு துண்டிக்கப்படுகிறது!


பேரிடர் மேலாண்மையில் கைதேர்ந்த இராணுவம் உணவுப் பொட்டலங்களை வீசிப் போட்டதில் இவர்கள் கையிலும் கிடைத்தது.. பாதி வெள்ளத்தில் கரைத்த பிண்ட தர்ப்பணமாய் பொட்டலங்கள் சிதறின!

பெரிய பணக்கார குடும்பம் எத்தனை கோடியும் தருகிறோம் இதய வலி வந்த அவர்களது குடும்பத்தலைவரை காப்பாற்றும் படி ஹெலிகாப்டரை அழைக்க .. கை அசைத்து அலறி மன்றாடியது... ஆனாலும் தரை இறங்க முடியாத ஹெலிகாப்டர் மேலே பறக்க... வலியால் துடிதுடிக்க அந்த கோடீஸ்வர பெரியவர் இறந்து போகிறார்! பணமோ அந்தஸ்தோ நிரந்தரமில்லை என ஓம்குரு நேரடியாகக் கண்டு உணர்ந்த நொடிகள் அவை!


கேதார்நாத்தில் 2000 கிராமங்கள் அழிகின்றன... எங்கும் வெள்ளம்... உடைகிறது உள்ளம்! ஸ்ரீஆதிசங்கரரின் சமாதியும் ஜலசமாதி ஆகிறது...! 

கேதார்நாத் மூழ்கியும்... அதன் கோவிலுக்கும் சந்நதிக்கும் ஒன்றுமே ஆகாத நிலை அறிந்து ஆச்சர்யப்படுகின்றனர் குழுவினர்!

மரணம் திரவ வடிவில் குதிக்க... பயம் அரூபமாய் பீடிக்கிறது! இப்படி 21 நாட்கள்.. பிஸ்கட் கடித்து தண்ணீர் குடித்து உயிர் உடம்பில் ஓட்டிக் கொண்டிருக்கிற அபாய நாட்கள் அவை! மீட்புப் பணி பட்டியல் படி இவர்கள் வரிசை எண் 700. அப்படிப் பார்த்தால் அந்த சூழலில் இருந்து வெளியே வர 2 மாதம் ஆகலாம்! "ஏன் இந்த சோதனை?" என குழுவினர் உடைந்து போகின்றனர்!


"யாமிருக்க பயமேன்?" எனும் சூளுரைக்கும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை உருக்கமாய் வேண்டுகிறார் ஓம்குரு! அப்போது பாபா பேசுவது தெள்ளத் தெளிவாய்க் கேட்கிறது! 

"சுவாமி நீங்கள் வழிகாட்டியபடி தானே பயணம் மேற்கொள்கிறோம்! ஏன் இந்த சோதனை?" என ஓம்குரு உருக...

"நீ இவ்வளவு நாள் இங்கே அடைபட்டுக் கிடந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது! புறப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்! இன்னும் 2 நாட்கள் அங்கேயே இரு!" என்கிறார் பாபா! 

ஆனால் ஓம்குரு குழந்தைப் பிடிவாதத்தோடு உடனே கிளம்ப அருள் செய்யுங்கள் என பாபாவிடம் வேண்ட.. "சரி! நாளையே நீ செல்ல நான் ஏற்பாடு செய்கிறேன்! நாளை நீ டெல்லிக்கு மதியம் 12 மணிக்கு சென்றுவிடுவாய்!" என பாபா அனுகிரக அனுமதி அளிக்க...


அப்போது பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு தொலைபேசி வருகிறது! அதே சமயத்தில் ஓம்குருவின் நண்பர் சகதேவும் ஓம்குரு அங்கே மாட்டிக் கொண்டிருப்பதை அறிந்து இராணுவ முகாமிற்கே செல்கிறார்! மள‌மள என ஆச்சர்ய நகர்வு நிகழ... இரத்தினக் கம்பள வரவேற்பாய் துரித கதியில் ஓம்குரு குழுவினர் புறப்படுவதற்கு ஏற்பாடாகிறது!

கலைந்த தலை... பய பீடிப்பு, சோர்வு என ஓம்குரு இராணுவத்தினர் முன் நிற்க... 

"ஒரு அழைப்பு வந்தது... உங்களைப் பற்றித்தான் அவர் சொன்னது... நீங்கள் தான் ஓம்குருவா?!" என அவர்கள் கேட்க... 

அப்படி ஒரு சம்பவம் இறைவன் பாபா நிகழ்த்த போவதே அறியாமல் ஆச்சர்யப்பட்டும் ... அது சாயி லீலை என உணர்ந்தும் "ஆம் ஆம்.. நான் தான் ஓம்குரு!" என்று அவர் முழித்தபடி மொழிய... இறைவன் பாபா ஓம்குருவிடம் சொன்னபடியே அவர் தனது குழுவினரோடு டெல்லிக்குப் போய் சேர்கிற போது அவரது கடிகாரத்தின் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் பாபாவுக்கு நன்றி கூறியபடி மிகச் சரியாக 12 மணியில் ஒன்றை ஒன்றை முத்தமிட்டுக் கொண்டிருந்தது!


(ஆதாரம் : இமாலய ரகசியங்கள் | பக்கம் : 133 - 158 | ஆசிரியர் : கோகுல சந்தான கிருஷ்ணன்) 


இறைவன் பாபா ஓம்குருவை அங்கே தங்க வைத்ததன் காரணமே நிலையாமையை அவர் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் எனும் ஞான அனுபவத்திற்காகவே! *நம் வாழ்வில் எதனை பாபா நிகழ்த்தினாலும் அது நம் நன்மைக்கே... பாபா நம் வாழ்வில் நிகழ்த்தும் எந்த சம்பவமாயினும்... அதன் உள்ளிருக்கும் ஆன்ம நன்மையே நமக்கு ஆன்மீக முன்னேற்றம் அளிக்கிறது!*


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: