தலைப்பு

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

சிறு குழந்தையின் முனகல் குரலைக் கேட்டு சிருஷ்டி கல்கண்டு கொடுத்த தெய்வத்தாய் சாய்!

பெரியோர் முதல் குழந்தைகள் முதல் பறவைகள் முதல் எறும்புகள் வரை பாபா காட்டும் பரிவு சரிசமமானது...‌ அதற்கான உதாரணங்களோடும் ஊடாடும் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

அது 1988... நூலாசிரியரின் நேரடி அனுபவம்... இறைவன் பாபா தரிசன வரவிற்காக அனைவரும் காத்திருக்கிற பிரசாந்திப் பொழுது! ஊசி விழுந்தாலும் சப்தம் கேட்கும் ஆழ் மௌனம்... மனதை தாழ்த்தி உணர்வை ஆழ்த்தி இறைவன் பாபா தியானத்தில் வருவது போல் அந்த ஆழ்ந்த அமைதியில் இறைவன் பாபா தரிசன அறையில் அனைவருக்கும் ஆன்மீகப் பரவசம் தர வருகிறார்...

சிலரிடம் கடிதம் பெற்றுக் கொள்கிறார்... சிலரிடம் மிருதுவாக புன்னகையோடு பேசுகிறார்...சிலரை தனியறையின் நேர்காணலுக்கு அழைக்கிறார்... அதற்காகச் சென்றவர்களில் 3 வயது குழந்தை ஒன்றும் இருந்தது! நேர்காணல் அறையை நோக்கி பாபா கை காட்டிய உடன் வேடந்தாங்கலை நெருங்கும் பறவைகளாய் மகிழ்ச்சி அடைந்தனர்.. எழுந்து வராண்டாவில் அமர்ந்தனர்... அப்போது மீண்டும் பாபா நேர்காணல் அறைக்குள் நுழையும்படி அந்த வராண்டா வரை நகர்ந்து அமர்ந்தவர்களை அழைக்கிறார்!


 அப்போது அந்த 3 வயதுக் குழந்தை "பாபா என்னை மட்டும் பார்க்கவே இல்லை!" என வருத்தப்பட்டு முணுமுணுக்கும் அடுத்த நொடி முன்னால் நடந்த பாபா சடாரென நிற்கிறார்... நின்று, திரும்பி அந்தக் குழந்தையின் அருகே வந்து புன்னகையோடு மின்னிடும் ஒரு சிருஷ்டி கல்கண்டு கட்டியை அந்தக் குழந்தையின் கைகளில் வீச... அது மிகச் சரியாகப் பிடித்துக் கொள்கிறது... "So sweet so sweet" என பாபா முகம் மலர... அந்தக் குழந்தையை ஆனந்தம் அடையச் செய்கிறார்!


சாயிதிரு ராகவன் எனும் பக்தர் நூலாசிரியர் இல்லம்‌ வருகிறார்.. அவரிடம் பாபா அனுபவங்களை அவர் கேட்கிற போது... ராகவன் சொல்ல ஆரம்பிக்கிறார்... அப்போது ஆனந்தம் எனும் பொக்கிஷ மூட்டையின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன...

அவர் பகிர்ந்ததாவது-: ஜாம்ஷட்பூரில் ராகவன் பணியாற்றிக் கொண்டிருந்த போது சமிதி வழி பாபா சேவைக்கு புட்டபர்த்தி வருகிறார்! அப்போது பூர்ண சந்திர அரங்கில் வேலை நடந்து கொண்டிந்ததால் அவரும் அதில் ஒரு பாக்கிய சேவாதளராக இணைகிறார்... பாபாவும் அதைப் பார்வையிட அவ்வப்போது வருகிறார்... தேடி வந்த தெய்வத்தால் அந்தச் சேவையே புத்துயிர் பெறுகிறது... அவ்வப்போது அந்த இடமும் சுத்தமாக்குப்படுகிறது.. காரணம்-: பாபா அவ்வப்போது பார்வையிட வருகிறார் என்பதால்... ராமராய் பாலத்தின் கட்டுமானத்தை பார்வை இட்ட அதே பாபா கலியில் பார்வை இடுகிறார்...

வெறும் பார்வை இல்லை அது இனிப்புப் பார்வை... கை நிறைய தின்பண்டங்களோடு சேவாதளர்களை உபசரிக்கிறார்...

கரும்புத் தின்னக் கூலி போல் சேவையும் தரிசனமும் பிரசாதமும் என மும்முனை ஆன்மீகப் பரவசங்களை அள்ளிக் குடித்தபடி ஆனந்த சேவையாற்றுகிறார்கள் அந்த சேவாதளர்கள்!


ஒருமுறை ஆப்பிள் கொண்டு வந்து கொடுத்து.. ராகவன் முதுகைத் தட்டுகிறார்... ராகவனாய் வந்த பாபா அணிலை தடவிக் கொடுத்தது போல் பாபா ராகவனை தட்டிக் கொடுத்தது புல்லரிக்கச் செய்கிறது! எதுவும்  தெரியாதவர் போல் பெயர் ஊர் கேட்டு உரையாடல் பாக்கியமும் பாபா அவருக்கு வழங்குகிறார்... அனைவரும் கேண்டீனில் உணவருந்தச் செல்கையில்... ராகவனை கூப்பிட்டு தட்டில் வகைவகையாக பதார்த்தங்களை வைத்து "சாப்பிடக் கொடு! சாப்பிடக் கொடு!" என பரிவு மழை பொழிகிறார்... 

சிறிது நேரம் கடந்து ராகவனுக்கு அழைப்பு விடுக்கிறார்... "சுவாமி கூப்பிடுகிறார்!" என ஒருவர் கூப்பிட... கேண்டீனில் இருந்து ஓடுகிறார்...

"பாத நமஸ்காரம் எடுத்துக் கொள்!" என பாபா உரைக்க... ஆன்மா நிறைக்க நிறைக்க ஆனந்தம் நுரைக்க நுரைக்க அந்த பாத சேவிதா பாக்கியம் பெறுகிறார்! அப்போது "சௌக்கியமாக இருப்பாய்!" என பாபா ராகவன் தலையைத் தொட்டு ஆசீர்வதிக்கிறார்! அது ஆயிரம் ஆனந்த அருவி ஒன்றாய் அவரின் உச்சந்தலையைத் தொட்டது போல்.. யோகியர்க்கு தியான நிலையில் உச்சந்தலைத் தாமரை திறந்து கொண்டது போல் அமைகிறது!


(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 76 - 81 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


குழந்தைக்கு கற்கண்டு ராகவனுக்கு பாத நமஸ்காரம்... ஆனால் பாபா இருவருக்கும் அளித்த ஆனந்தம் சமமானது! வகை வேறு அணுகுமுறை வேறு ஆனால் பாபா அளிக்கிற ஆனந்தம் ஒன்றே! பாபா எவ்வாறு தனது சேவாதளர்களை நடத்தினாரோ அவ்வாறே நாம் அனைவரும் சேவாதளர்களை ஒரு சேவாதளராக திகழ்ந்து பேரன்போடு நடத்த வேண்டும்... பாபா இறைவனே ஆனாலும் அவரும் இந்த பூமியில் இறங்கிய ஒரு யுக சேவாதளராகவே தனது அணுகுமுறையை கைகொண்டிருக்கிறார்! இப்படி ஒரு பரிவை காட்டுகிற பேரிறைவன் பாபாவுக்காக உயிர்த்தியாகமே சேவையின் பொருட்டு நாம் செய்வதும் மிகச் சாதாரணமானதே!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக