தோற்றம் பார்த்து யாரையும் எடைபோடக் கூடாது என்பதற்கான உதாரண சம்பவம் இது... அதிலும் இறைவன் பாபா தோற்றம் வைத்தல்ல உள்ளம் வைத்தே மனிதரிடம் நெருங்கி வருகிறார் எனும் சத்தியம் உணர்த்தும் சுவாரஸ்யப் பதிவு இதோ....
அது 1985. அது பஹ்ரைன். வளைகுடா வான்வெளி விமான போக்குவரத்து நிறுவன நிதிக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி கோஷ் அவர்களின் இல்லம் அது. அன்று நவராத்திரி ஸ்பெஷல் பஜன். பரமபக்தர் ஹரிஹரகிருஷ்ணன் என்கிற ஹரியும் கலந்து கொள்கிறார்!
பஜனை சூடு பிடிக்கிறது. பாபா படத்தில் விபூதி தோன்ற ஆரம்பித்து சந்தனம் குங்குமம் என வளரத் தொடங்குகிறது! எப்போதுமே பாபாவுக்கான நாற்காலி ஆண்கள் வரிசையிலேயே போடப்படும்! சாயி பஜனையில் ஆண் வரிசை பெண் வரிசை என் இரண்டு பிரிவு! நடுவே பாபா நடப்பதற்கான தரை விரிப்பு! இதுவே திவ்ய பஜன் அறைக்கான தெய்வீக சூழல்!
ஆரத்தியோடு பஜனை நிறைகிறது!
கலந்து கொண்ட ஒவ்வொருவரும் பாபாவின் நாற்காலிக்கு அருகே நமஸ்கரித்து சிருஷ்டி விபூதி / சந்தன/ குங்குமத்தை இட்டுக் கொள்ள வரிசையாக நிற்கின்றனர்!பக்தர் ஹரியின் பின்புறம் லால் எனும் ஒருநபர்! கோஷ் அவர்களின் அலுவலக அதிகாரி ஒருவர் வீட்டு சமையற்காரர்! பாக்கிஸ்தானிய கிறிஸ்துவர்! தனது எஜமானர் எங்கெல்லாம் தெய்வீக நிகழ்விற்குச் செல்கிறாரோ... அவர் வீட்டுத் தோட்டத்தில் பூக்களைப் பறித்து அங்கே எடுத்து வருபவர்! அப்படி அன்றும் 20 கி.மீ கடந்து வந்து மல்லிகை மலர்களை அர்ப்பணிக்க வரிசையில் நிற்கிறார்!
இதில் விசேஷம் என்னவெனில் பாபாவின் பேர் கூட லாலுக்கு தெரியாது!
ஆகவே தன் முன்னால் நிற்கும் ஹரியிடம்...
"புகைப்படத்தில் இருக்கும் இந்த மனிதர் யார்?" என லால் கேட்க...
"இவர் தான் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா" என்கிறார் ஹரி!
பஜனை முடியும் வரை இருக்கச் செய்தது அவரது எஜமானனின் நண்பரான கோஷ்... ஆகவே லாலும் பஜன் நிறைவடைய பிரசாதம் உண்ண வைக்கப்படுகிறார்!
கேள்வி தொடர்கிறது...
"இவர் எங்கே இருக்கிறார்?" என லால் அந்தப் புகைப்படம் பார்த்து கேட்கிறார்!
"இவர் இந்தியாவில் புட்டபர்த்தியில் இருக்கிறார்!" என்கிறார் ஹரி!
அதற்கு லால் ஆச்சர்யத்துடன்
"இல்லை இல்லை..இவரை சற்று நேரத்திற்கு முன்பு இங்கு நான் பஜனையில் பார்த்தேன்!". என்ற உடன்... அதனை கேட்ட பிற பக்தர்களுக்கு மூச்சு பேச்சு இல்லை...
அவரின் மெய் சிலிர்க்கும் அனுபவம் கேட்க உடனே அவரை சூழ்ந்து கொள்கின்றனர்...
லால் தொடர்கிறார்...
"இந்த மனிதர்... பஜன் கூடத்திற்கு வந்து ஆண்கள் இருக்கும் பகுதியிலிருந்து பெண்கள் இருக்கும் பகுதி வரை தனது வலது உள்ளங்கையை தூக்கியபடி சென்றார்!" லால் பாபா செய்வது போலவே செய்து காட்டுகிறார்! "அவர் நடந்து வந்து நீங்கள் அங்கே போட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்தார்! நீங்கள் பாடிக் கொண்டிருந்தீர்கள்... பிறகு அந்த மனிதர் தனது வலது கையை அவரது புகைப்படத்தின் முன் நீட்டினார்... உடனே அதிலிருந்து பல பொருட்கள் உருவாயின... அந்தப் பொருள் எல்லாம் என்ன? என்று ஆர்வமாய் பார்ப்பதற்கு கடைசி வரிசையில் இருக்கும் நான் எழ எத்தனித்தேன்... அப்படியே உட்காரும்படி என்னைப் பார்த்து செய்கை காட்டினார்!
அவர் நிச்சயம் ஏதோ முக்கியமான மனிதர் என்று நினைத்து நானும் அமர்ந்து விட்டேன்.. பிறகு நீங்கள் நெருப்பில் ஏதோ காட்டினீர்கள் (ஆரத்தியை சொல்கிறார் லால்)... நாற்காலியை விட்டு அந்த மனிதர் எழுந்து... இரண்டு கையை உயர்த்தி இப்படி செய்தார் ( பாபா அபயஹஸ்தம் காட்டுவதை லால் செய்து காட்டுகிறார்)
அதைக் கேட்ட அனைவரும் மிரண்டு போயினர்... "வெளியே செல்கிற போது பாபா புன்னகை செய்தவாறே என் முதுகில் தட்டினார்... சுவற்றில் சாய்ந்திருந்த என் முதுகில் எப்படி அவர் தட்டியிருக்க முடியும் என யோசித்துக் கொண்டிருந்தேன்!" என ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம் பேசுகிறார் லால்!
அந்த அனுபவம் கேட்ட சுற்றி இருந்தவர்களால் என்ன பேசுவதென்றே தெரியவில்லை... மிகவும் எளிய வாழ்க்கை வாழும் கல்வி அறிவே இல்லாத லால் அவர்களுக்கு பாபா அருள் புரிந்த விதத்தை எண்ணி தோற்றத்தை அல்ல பாபா ஆன்மாவையே உற்று நோக்க கிறார் என்பதை உணர்ந்ததாக பக்தர் ஹரி பதிவு செய்கிறார்!
அரசு பேருந்து மூலமாக வந்திருந்த லால் அவர்களை பிரசாதம் உண்ட பின் தங்களது வாகனங்களில் தாங்களே வழி அனுப்ப ஒருவர் பின் ஒருவராக முண்டி அடித்தனர்... அந்த பாக்கியம் சிவராமன் அவர்களுக்கு கிடைத்தது...
அடுத்த வாரம் இன்னொரு அதிகாரி சுரேஷ் தேஷ்பாண்டே அவர்கள் வீட்டு பஜன்... லால் அவர்களது மலர் வரவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்... அவரும் வருகிறார்...
சிவராமன் அவர்கள் வழி அனுப்பிய கடந்த வாரம்... அதே இரவு... தொடர் அதிசயமாக என்ன நிகழ்ந்தது என்பது லால் விவரிக்கிறார்! லால் தனது வீட்டிற்கு சிறிது தூரம் நடந்து செல்கிற போது அடர்ந்த கருப்பு முடி நிழலாக தோன்றி லால் அவர்களை பின் தொடர்கிறது! பிறகு அவர் இல்லம் வந்து கதவை மூடுவதற்கு முன் அந்த இடைவெளியில் பாபா அவருக்கு தரிசனம் அளிக்கிறார்.. லால் ஆச்சர்யப்படுகிறார்! வழக்கம் போல் லால் அணிந்து கொண்டிருந்த ஒரு கல் வைத்த மோதிரம் அந்த தரிசனத்திற்கு பிறகு பாபா உருவம் பதித்த மோதிரமாக உருமாறி இருந்ததை லால் அனைவருக்கும் காட்டுகிறார்!லால் உண்மையில் ஒரு புனிதாத்மா என்பதை அனைவரும் உளமாற உணர்ந்து கொள்கின்றனர்!
(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 64 - 70 | ஆசிரியர் : எஸ்.ஆர். ஹரிஹர கிருஷ்ணன்)
இறைவன் பாபா ஆன்மாவையே பார்க்கிறார்! பாபாவுக்கு பேதமே இல்லை! பேதம் ஒரு பேதமை அது மனிதனிடமிருந்து நீங்க அவன் பாபாவையே சரணடைய வேண்டும்! உள்ளம் தூய்மையடைய பேதம் நீங்குகிறது... பேதம் நீங்க ஞானம் ஆரம்பிக்கிறது!
ஞானத்தின் முடிவே பிறவாமை!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக