தலைப்பு

செவ்வாய், 21 மார்ச், 2023

சுவாமி! உங்கள் மேல் உள்ள பக்தியில் எங்களை விட வெளிநாட்டவர்களே அதிகமாக ஈடுபடுவதாக உணர்கிறோம்! காரணம் என்ன?

பக்தரகளின் அனுபவம் அவர்களது தீவிரத்தை பொறுத்தே அமைகிறது! அனைத்தும் உங்களது விஸ்வாசத்தின் மீதுதான் நிலை கொண்டுள்ளது! அருகாமையில் இருப்பதால் ஒன்றின் மதிப்பு உடனே தெரிவதில்லை! 

தீபத்தின் ஒளி எண்திசையில் விரிந்தாலும் கூட அதன் அடியில் இருட்டு இருக்கத்தானே செய்கிறது! இதுவும் அப்படித்தான்! 

அவதார மூர்த்தியின் திவ்ய பிரகாசம் எல்லா இடங்களிலும் வியாபித்திருந்தாலும் அருகாமையில் வெளிச்சமற்றுத்தான் இருக்கும்! 


தடாகத் தாமரையில் எங்கிருந்தோ வண்டுகளே பறந்து வந்து தேனைப் பருகுகின்றன... ஆனால் அந்தத் தடாகத்திலேயே மிக அருகாமையில் இருக்கும் தவளைகளுக்கும், மீன்களுக்கும் தாமரையின் பெருமை தெரிவதில்லை!

இப்போது பாருங்கள்: மாம்பழம் என்று சொன்ன உடனேயே உங்கள் நாவில் நீர் ஊறுகியது! ஆனால் மார்க்கெட் சென்று வாங்குகிற போது எடுத்து முகர்ந்து சோதித்துப் பார்க்கிறீர்கள்! ஏன்? அருகாமையில் இருக்கும் போது உங்களுக்கு சந்தேகம் உண்டாகிறது!


"சுவாமி கனவில் வந்தார், தியானத்தில் வந்தார்!" என்று கூறிக் கொண்டிருப்பார்கள்... ஆனால் நான் நேரில் வந்தால் சிலருக்கு அவ்வளவு வியப்பு இருப்பதில்லை! 

 உங்களுக்கே கூட எப்படிப்பட்ட அக மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றோ... எப்படிப்பட்ட திவ்ய, பவ்ய , புதுப்புதிதான அனுபவங்களின் ஆனந்தத்தைப் பருகிக் கொண்டிருக்கிறீர்கள் என்றோ தெரிவதில்லை! 

கிணற்றுத்தவளைக்கு வெளி உலகம் பற்றி தெரிவதில்லை அல்லவா! இங்கு, எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்? என்பதல்ல முக்கியம்! 

பேருந்து ஓட்டுநர்கள் கூட இங்கே தினந்தோறும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்... அவர்களால் எவ்வளவு தூரம் சுவாமியை புரிந்து கொள்ள இயலும்?! 


இரும்புக்குண்டு நீரில் எவ்வளவு காலம் இருந்தும் என்ன பயன்?

எப்படி ஒளி வருகிற போது இருள் மறைகிறதோ அப்படி ஒருமுறை ஞானோதயம் வந்துவிட்டால் அஞ்ஞானம் (அறியாமை) மறைந்துவிட வேண்டும்! 

சுவாமியிடம் விஸ்வாசம், பிரேமை முழுமையாக இருக்குமானால் நீங்கள் அனைவரும் தவறாமல் சுவாமியின் கட்டளைப்படி நடப்பீர்கள்!

எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வில் அக மாற்றத்தை கொண்டு வருகிறார்கள் என்று சொன்னால் அதற்கு அவர்களின் சுவாமி நம்பிக்கையே முக்கிய காரணம்! 

பிரசாந்தி நிலையத்திலிருந்து எவருக்கும் அழைப்பிதழ் கிடையாது, பிரிவு உபச்சாரம் கிடையாது, விளம்பரப் பலகை கிடையாது! ஆனால் எத்தனை பேர் இங்கே வருகிறார்கள்! அதுவே தெய்வத்துவம்! சுவாமியின் பேரன்புத்துவம்!


இறைவனை மட்டுமே வழிபடுகிறீர்கள், கௌரவிக்கிறீர்கள்,  மதிக்கிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்... அதாவது பேரன்பு, கௌரவம், வழிபாடு இவற்றை பெற்றுக் கொள்ளத் தக்கவர் இறைவன்! 

பெரியவர்கள், அதிகாரிகள், குறிப்பாக பிரதமர் இவர்களை கௌரவிக்கிறீர்கள் ஆனால் அன்பு செலுத்துவதில்லை! 

பெற்றோர்களை அன்பு செலுத்துகிறீர்கள் ஆனால் அது கௌரவத்தில் அடங்காது! 

இறைவனுக்கே கௌரவம், பேரன்பு, வழிபாடு ஆகிய மூன்றும் கிடைக்கிறது!


(ஆதாரம்: சத்ய உபநிஷதம் | பக்கம் : 189)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக