எவ்வாறு ஒரு ஆத்மார்த்த பக்தருக்கு அரிதிலும் அரிதான விந்தையான ஒரு அற்புதத்தை இறைவன் பாபா வழங்குகிறார் என்பதைக் குறித்த சுவாரஸ்ய பதிவு இதோ...
ஆத்மார்த்த பக்தர் சாயி திரு ஹரிஹரகிருஷ்ணன் பெற்ற சாயி அனுபவங்கள் அசாத்தியமாவை! முழுக்க முழுக்க இறைவன் பாபாவின் கருணையின்றி நிகழ்பவை அல்ல அவை!
ஏராளமான கனவு அனுபவங்கள் அவருக்கு... ஒவ்வொன்றும் விடிகாலை பிரம்மமுகூர்த்தத்திலேயே அரங்கேறுபவை! ஒவ்வொரு சாயி கனவும் பாத நமஸ்காரங்களோடே தொடங்கி ஆச்சர்யங்களாய் விரிந்து ஆன்மாவில் திவ்ய அனுபவங்களாய் அடங்குபவை!
அப்படி ஒருமுறை அதிகாலையில் பாபா கனவில் காட்சி அளிக்கிறார்! ஒரு சிம்மாசன இருக்கையில் பாபா அமர்ந்திருக்கிறார்... பாதநமஸ்காரம் எடுக்க பக்தர் ஹரிக்கு(ஹரி ஹர கிருஷ்ணன்) அனுமதி அளிக்கிறார்!
பிறகு முக்கியமான ஒன்றை தரவிருப்பதாகக் கூறி ஹரியை அவரது செங்கோட்டை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் பாபா!
வீட்டிற்குள் நுழைந்து மத்தியில் இருந்த திறந்த வெளி முற்றத்தில் ஒருபடியில் அமர்ந்து கொள்கிறார் பாபா!
அமர்ந்தபடி தனது ஆரஞ்சு நிற அங்கியை மெதுவாக தூக்கி பக்தர் ஹரியை பாத நமஸ்காரம் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்! ஹரியும் இதயம் உருகி தனது கர விரல்களால் வரமான அந்த
தாமரைப்பாதத்தைப் பற்றியபடி கண்களை மூடி அதன் தெய்வீகத்தை அனுபவிக்கிறார்!
அப்போது பாபா அவரிடம் சொல்கிற வார்த்தை அரிதிலும் அரிதானது! அபூர்வமானது! இதுவரை அரங்கேறாத ஆச்சர்ய அதிசயம் அது!
"இந்த நமஸ்காரமானது விசேஷமான ஒன்று!" என பாபா ஆரம்பிக்க... வியக்கிறார் பக்தர் ஹரி!
தனது பாதங்களை காட்டி...
"இவை என்னுடைய அடுத்த அவதாரமான பிரேம சாயியின் பாதங்கள்! பிரேம சாயி அவதாரத்தின் பாதங்களைத் தொட்டு வணங்கும் பாக்கியத்தை உனக்கு இப்போதே அளித்துவிட்டேன்!" என்று கூறி பாபா ஆசீர்வதிக்கிறார்!
(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 38,39 | ஆசிரியர் : எஸ்.ஆர்.ஹரிஹர கிருஷ்ணன்)
ஸ்ரீ சத்ய சாயியும் ஸ்ரீ பிரேம சாயியும் ஒருவரே! இந்த சத்தியத்தை ஸ்ரீ பிரேம சாயி அவதார பிரகடனத்திற்கு பிறகு நாமே நேரடியாய் அனுபவித்து உணர்ந்து கொள்வோம்! அதை முன்பே ஒரு பாத நமஸ்காரத்தில் உணர்த்தி விடுகிறார் பாபா! ஒட்டுமொத்த உலகத்தையே தனது காலடியில் கொண்டு வரவேண்டுமானால் பாபாவின் அடுத்த அவதாரமான ஸ்ரீ பிரேம சுவாமி எத்தகைய பிரம்மாண்ட அவதாரம் என்பதை நாம் உள்ளூற உணர்ந்து அவரின் உதய வரவிற்காக தூய பக்தியோடு ச(ப)ரியாய் காத்திருப்போம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக