தலைப்பு

வியாழன், 16 மார்ச், 2023

சுவாமி! பக்தி வருவதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியமானதல்லவா...? அந்த நம்பிக்கை வருவதற்கு என்ன வழி?

நம்பிக்கை என்பது வருவதாவது!? இதென்ன கடையிலா கிடைக்கும்? யாரோ கொடுத்து நீங்கள் எடுத்துக் கொள்வது அல்ல...நம்பிக்கை உங்கள் அடிப்படை குணம்! "விசுவாசமே உங்கள் சுவாசம்"! தெய்வ நம்பிக்கையே உங்கள் உயிர்நாடி! அது இல்லை என்றால் உங்களுக்கு மூச்சே இல்லை என்று கூறலாம்! ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் ! 

உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று உங்களுக்கே சுலபமாகப் புரியும்! 


உங்கள் துணிகளை வெளுப்பதற்காக சலவைத் தொழிலாளரிடம் தருகிறீர்கள்... அவற்றை துவைத்து இஸ்திரி செய்து அவர் திருப்பிக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் கொடுக்கிறீர்களா? இல்லை அவர் அதை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவார் என்றே நினைத்துக் கொண்டு கொடுக்கிறீர்களா? 

தங்கத்தை நகை செய்பவரிடம் தருகிறீர்கள் ... அவர் உங்கள் தங்கத்தோடு தப்பி ஓடிவிடுவார் என்ற எண்ணத்தோடு தருகிறீர்களா?

முடி திருத்தும் தொழிலாளியிடம் முடி திருத்தம் செய்ய தலையை குனிகிறீர்கள்... அவர் உங்கள் கழுத்தில் கத்தி வைப்பார் என்ற எண்ணத்திலா அப்படி செய்கிறீர்கள்?

மருத்துவரிடம் செல்கிறீர்கள்! அவரோ அறுவை சிகிச்சை உங்களுக்கு தேவை என்கிறார்! சிகிச்சை முடிந்து மீண்டும் இல்லம் வருவோம் என்ற நம்பிக்கையிலா? அல்லது மருத்துவமனையிலேயே செத்துவிடுவோம் என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொள்கிறீர்களா? 


ஆக... சலவைத் தொழிலாளி, நகை செய்பவர், முடி திருத்துபவர், மருத்துவர் இப்படி இவர்கள் எல்லோர் மீதும் நம்பிக்கை இருக்கிறது ஆனால் இறைவன் மீது மட்டும் நம்பிக்கை இல்லையா? இது மிகவும் துரதிருஷ்டவசமானது! எனவே நம்பிக்கை உணர்வு இயற்கையானது! அது இல்லாமல் இருப்பது செயற்கையானது! 


பக்தியும் நம்பிக்கையும் மனிதனுக்கு இரண்டு கண்கள்! தேருக்கு இரண்டு கண்களைப் போல்... பறவையின் இரண்டு இறகுகளைப் போல்... நம்பிக்கை இல்லாமல் ஒரு எறும்பு கூட நகர முடியாது! கிளையின் உச்சியில் இருக்கும் பறவைக்கு பயமே இருக்காது! ஏன்? அதன் நம்பிக்கை அந்த கிளையின் மீதல்ல... தனது சிறகுகளின் மீதே!

அதுபோல் எல்லாம் உங்கள் நம்பிக்கையை பொறுத்தே இருக்கிறது! 


இவர் தான் உங்கள் தந்தை என்று யார் சொல்லியது? உங்கள் தாய் சொல்லியே நம்புகிறீர்கள்! Calenderரில் இன்று வியாழக்கிழமை என்று பதிவாகி இருக்கிறது.. நீங்கள் அதைப் பார்த்து நம்புகிறீர்கள்! ஒவ்வொரு கிழமையும் தங்கள் கழுத்தில் ஒரு பலகை அணிந்து கொண்டு "நான் தான் வியாழக்கிழமை" என உங்கள் முன் வருகிறதா? 

பஞ்சாங்கம் கணித்து எழுதியவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்... ஆக அதை வாசித்து இன்று வியாழக்கிழமை என நம்பிக்கை பெறுகிறீர்கள்!

செய்தித்தாளில் ரேடியோவில் செய்தி அறிவிக்கிறார்கள்... அதைக் கேட்டு நம்பிக்கை பெறுகிறீர்கள்! 

இவைகள் அனைத்தின் மீதும் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை ரிஷிகளின் வாக்கின் மீதும்... அவர்களையே இயக்கும் இறைவனின் வாக்கின் மீதும் நம்பிக்கை இல்லை எனில் உங்களுக்கு எவ்வளவு துரதிர்ஷ்டம்...!? சிந்தித்துப் பாருங்கள்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 51)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக