"நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.கே.கோகாக், ஆன்மீகப் பின்னணியுடன் மதச்சார்பற்ற கல்வியை வழங்கக்கூடிய ஒரு சிறந்த ஆசான் ஆவார். கோகாக்கின் இதயம் மிகவும் தூய்மையானது. அவர் எப்போதும் சுவாமியின் திருநாமத்தை உச்சரித்து வந்தார். அவர் எனது கட்டளையை எழுத்திலும் செயலிலும் கடைப்பிடித்தார். ஒரு சிறு சந்தேகத்தைக் கூட என்னை அணுகித் தெளிவுபடுத்திக் கொள்வது அவர் வழக்கம். அவர் உன்னதமானவர் ஆகையால் நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரானார். அவருடைய கடின உழைப்பின் பலனை இன்று மாணவர்கள் அனுபவித்து வருகின்றனர்." என்று 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் நாள், தனது தெய்வீகப் பேருரையில் சுவாமி குறிப்பிட்டார்.
🌷கல்வியும் வளர்ச்சியும்:
திரு.விநாயக கிருஷ்ண கோகாக் (V K கோகாக் ), கர்நாடகத்தின் சவனூரில் 1909ம் ஆண்டு பிறந்தார். உள்ளூரின் மஜித் உயர்நிலைப் பள்ளிமுடித்து, தார்வாட் கல்லூரியில் இலக்கியம் பயின்றார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு மேற்கொண்டார். 1938ம் ஆண்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் 340 ஆண்டுகால வரலாற்றில் முதலிடம் (first class honours) பிடித்த முதல் வெள்ளையர்-அல்லாத மாணவர் ஆனார். ஆக்ஸ்போர்டில் இருந்து திரும்பிய அவர், சாங்லியில் உள்ள விலிங்டன் கல்லூரியின் முதல்வரானார். 1950 முதல் 1952 வரை மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியின் முதல்வராக இருந்தார். 1987 வரை நான்கு ஆண்டுகள் சாகித்ய அகாடமியின் தலைவராகப் பணியாற்றினார். சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மத்திய ஆங்கிலக் கழகத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். அவர் தனது காவியமான 'பாரத சிந்து ரஷ்மி'க்காக 1990ம் ஆண்டு ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர். பின்னர் 1961ம் ஆண்டு 'த்யாவ பிருத்வி'க்காக இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் படைப்பிலக்கியங்களை உருவாக்கிய சில நவீன இந்திய கல்வியாளர்களில் அவரும் ஒருவர். ஆங்கிலம் மற்றும் கன்னட இலக்கியம், கல்வி மற்றும் சமகால சிந்தனை ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான படைப்புகளை உள்ளடக்கிய 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது மராத்தி, குஜராத்தி மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களிலும் சரளமாகப் பேசினார். எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக, இந்திய கலாச்சாரத்தையும் கௌரவத்தையும் குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார். உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளை இந்தியக் கல்வி நிறுவனங்களின் செயல்படுத்தினார். அத்தகு உயர்ந்த கல்வியும், பரந்த அனுபவமும், சிறந்த பாண்டித்யமும் பெற்றுவிளங்கிய திரு கோகாக்... இறுதியில் சுவாமியின் அனுகிரகத்தையும் சம்பாதித்து ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தரும் ஆனார்.
🌷கடவுள் சாயியுடனான பரீட்சயம்:
முனைவர் கோகாக் 1965ம் ஆண்டு ஹைதராபாத்தில் சுவாமியை முதன்முதலில் தரிசனம் செய்தார். பிரஷாந்தி வித்வன் மஹாசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் பூர்குல ராமகிருஷ்ண ராவ் அவர்களால் அழைக்கப்பட்டிருந்தார்.
மேலும் அந்த சமயத்தில் கோகாக்கின் மகள் மாலாவிற்கு உடல்நலம் குன்றியிருந்ததால், அது தொடர்பாக பகவானின் ஆசியையும் பெறுகின்ற நோக்கத்தோடும் வந்திருந்தார். மஹாசபையில் தனது உரையைத் தொடங்கிய அவரின் பிரக்ஞையுணர்வு மெல்ல மெல்ல விரிவடையத் துவங்கியதை தனக்குள் உணர்ந்தார். அவரின் உரை நிறைவடையும் சமயத்திற்கெல்லாம் வெகுநாட்களாக அவருள் இருந்துவந்த வெறுமை தெய்வீகத்தால் நிரப்பப்பட்டதை உணர்ந்தார். முன்னதாக ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையைப் பின்பற்றி வந்த கோகாக், அரவிந்தரின் மறைவுக்குப் பின் ஒரு வெறுமையை வெகுநாட்களாக உணர்ந்து வந்தார். அன்றோடு அது மாறி தனக்குள் ஆனந்தம் நிரம்பியதை உணர்ந்தார். உற்சாகமான அனுபவம் ஏற்பட்டது. அவர் தனது நனவின் படிப்படியான விரிவாக்கத்தை உணர்ந்தார், அவர் தனது உரையை முடித்த நேரத்தில், பாபா ஏற்கனவே அவருடைய இதயத்தில் நுழைந்துவிட்டார். இந்த முதல் தரிசனத்தின் தாக்கம் அவரது 'தர்ஷன்' கவிதையில் அனந்தப் பரவசமாக வெளிப்பட்டது. அக்கவிதை பல்லவி பின்வரும் அர்த்தத்தைக் கொண்டது.
பாபாவைப் கண்டீர்களா? காணும் ஏக்கத்தால்
நகரங்களே பல எரிந்துபோகும் - காண்பதான
மகிழ்ச்சி மழையே அத்தாகத்தைத் தீர்க்கும்
அவரை நீங்கள் காணாதவரானால்
உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தையே
தவறவிட்டவர் நீங்கள்!
சில நாட்களுக்குப் பிறகு.. பகவான் பாபா, முனைவர் கோகாக் மற்றும் அவரது மனைவியை நேர்காணலுக்கு அழைத்தார். அவர்களின் ஆன்மீகப் பயணத்தில் அந்த நேர்காணல் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது. அறிவுசார் நோக்கங்களுக்கு பக்தி ஒரு தடையல்ல! என்ற முக்கியமான உண்மையை விளக்கினார் பகவான். அன்றிலிருந்து அன்புக்கும் பக்திக்கும் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினார் கோகாக்..
🌷அரவிந்தரும் அன்னையும் ரிஷிகளும் சுவாமியுள் அடக்கமே:
ஒரு வருடத்திற்குள், கோகாக்கும் அவரது மனைவியும் பல தெய்வீக அனுபவங்களைப் பெற்றனர். சில கனவுகள், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை இருவரையும் சுவாமி தன்னில் கொண்டிருப்பதாக அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியது. பாபாவை சந்தித்தபோது, தங்கள் வீட்டிற்கு வரும்படி வேண்டினர். சுவாமியும் அவர்களின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து, அதை நிறைவேற்றும் வண்ணம் சுவாமி அவர்களின் இல்லத்திற்கு வருகை புரிந்தார்.
பாபா அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது நேராக பூஜை அறைக்குச் சென்றார். அப்போது பூஜையறையின் நடுநாயகமாக ஸ்ரீ அரவிந்தரின் புகைப்படம் இருப்பதும், பாபாவின் புகைப்படமோ பக்கவாட்டுச் சுவரில் மாட்டப்பட்டு இருப்பதும் கோகாக்கின் கவனத்திற்கு வந்தது. அவர்களின் பூசியரையில் பாபாவின் படம் முக்கியத்துவம் பெறாமல் காணப்பட்டதாக உணர்ந்து கோகாக் வெட்கப்பட்டார். உள்ளே நுழைந்த பகவான் அப்போது அங்குள்ள படம் ஒன்றில் இருந்து நழுவிய ரோஜாவை எடுத்து ஸ்ரீ அரவிந்தரின் புகைப்படத்தில் வைத்தார்! அந்த நிகழ்வைக் கண்டபின் , கோகாக்கின் மனம் அமைதி கண்டது.
மேலும் அங்கே துறவி ஸ்ரீ பாண்டா மகாராஜாவின் உருவப்படம் இருப்பதையும் சுவாமி பார்த்தார். அத்துறவி தனது தந்தையின் குருவாக இருந்ததாகவும், அதனால் பூஜையறையில் இடம்பிடித்தார் என்றும் பாபாவிடம் விளக்கினார். அதை செவிமடுத்த சுவாமி, "நீங்கள் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்ல அவரின் சிறிய படம் உள்ளதா?" என்றில்லை கேட்டார். கோகாக் "இல்லை சுவாமி!" எனத் தெரிவித்ததும், "வேண்டுமென விரும்புகிறீர்களா?" என்றவாறு சுவாமி (வழக்கத்தை விட சிறிது நேரம் கூடுதலாக) தனது கையை அசைத்து, “அவர் வருகிறார்” என்று குறிப்பிட்டார். உள்ளங்கையை மேலே திருப்பி, ஒரு சிறிய பதக்கத்தை கோகாக்கிடம் கொடுத்தார். அது அந்தத் துறவியினுடைய உருவப்படத்தின் ஒரு சிறிய பிரதியைத் தாங்கிய பதக்கமாகும்.
🌷சத்யசாயியே குடும்பத் தலைவர்:
வெகுசீக்கிரமே கோகாக்கின் குடும்பத்தின் பிரியத்திற்குரிய தலைவரானார் சுவாமி. பாபாவுடைய அன்பின் உன்னத சக்தி அவர்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தது. கோகாக்கின் மகன் ஸ்ரீ அனில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தார். 1966ம் ஆண்டு தனது பெற்றோரைச் சந்திக்க வந்தபோது, தனது சகோதரி மாலாவின் உடல் மற்றும் மன நிலையில் எதிர்பாராத முன்னேற்றத்தைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். பகவான் பாபாவின் ஆசீர்வாதமே இதற்குக் காரணம் என்று அவரது பெற்றோர்கள் கூறினர். அதுவே அவருக்கு பாபாவின் முதல் அறிமுகம். பின்னாளில் சுவாமியை சரியாகப் புரிந்துகொண்டு பக்தியும் பெருகி , ஸ்ரீ சத்ய சாயி பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரும் ஆனார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பூரணாவதாரமே பூமிக்கு இறங்கிவந்து மனித உருவில் செயல்பட்டாலும், மனிதர்களின் குறுகிய வரம்புகளுக்குள் செயல்பட்டு அவர்களுள் தெய்வீக உயர்மாற்றம் செய்வதென்பது சிக்கலான காரியமே!. அத்தகு காரியங்களுக்கு மனிதர்களுள் மாணிக்கங்களாக விளங்கும் புண்ணியாத்மாக்களைத் தேர்வு செய்து அவர்களுக்கென சில சேவைப்பணிகளை இறைவன் வழங்குகிறார். பெரும்பாலும் அத்தகு புண்ணியாத்மாக்கள் இயல்பாகவே உலகநலனில் அக்கறை கொண்டவர்களாகவும் சாதனை படைத்து வெகுஜனங்களின் உயர்மதிப்பைப் பெற்றவர்களாகவும் உள்ளனர். அத்தகு சிறப்புமிகு வாழ்வை வரமாகப் பெற்ற புண்ணியாத்மா முனைவர் V.K.கோகாக், சாயி அவதாரத்தைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டிருந்தார். அந்தப் புரிதலை எல்லோருக்கும் புரியும்படி எடுத்துக் கூறவும் செய்தார்.
🌷அவதாரத்தைக் குறித்த ஆழமான புரிதல்:
"பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா, மனிதனும் அவதாரமும், ஒரு விளக்கம்” என்ற தனது புத்தகத்தில் முனைவர் V.K.கோகாக் பின்வரும் பொருள்படுமாறு குறிப்பிடுகிறார். "ஒரு அவதாரம் மனிதனாக காணப்பட்டாலும் அவர் தெய்வீகமானவர்; தெய்வீகமானவராக இருந்தாலும் மனிதர் போல செயல்படுபவர். ஸ்ரீ சத்ய சாயி எனும் அவதாரம் தனது குழந்தைகளின் மீது அன்பைப் பொழியும் அன்பான தாயாக செயல்படுகிறார். அவரே சில நேரங்களில் ஒரு எளிய அப்பாவி குழந்தை போல் பேசுகிறார். ஆனால் தேவைப்படும்போது ஒரு தலைசிறந்த இராஜதந்திரியாகவும் அவரால் இருக்க முடியும். அவர் ஒரு நிஜமான பணி-மேலாளரும் கூட! அவரை ஒரு நண்பராக அணுகும்போது, அவர் உங்களிடமிருந்து மிகவும் தொலைவில் இருப்பதாக காணப்படுவார். ஆனால் அவரை ஒரு பிரபஞ்ச மனிதராக எண்ணி பிரமிப்புடன் பேசத்துவங்கினால், அவர் அருகில் வந்து ஒரு அந்தரங்க நண்பராக உங்களுடன் பேசுவதைக் காண்பீர்கள். சில சமயங்களில் ஒரு பக்தன் தவறு செய்தால், அவர்களுக்கு உறுதியான முறையிலும் பாடம் கற்பிக்கிறார். அவரே ஒரு கவிஞர் மற்றும் மயக்கும் பாடகராக உள்ளார்; தத்துவவாதி மற்றும் சமூக சேவகராகவும் செயல்படுகிறார். நாடுகளின் தலைவிதியையே கூட உயர்மாற்றம் செய்யக்கூடிய கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்திகளை தன்னகத்தே கொண்டு செயல்படுகிறார். ஒரு அவதாரம் என்பவர் தெய்வீக உருவத்தில் செதுக்கப்பட்ட ஒரு முரண்பாடு! மனித மற்றும் தெய்வீகத்தின் தனித்துவமான கலவையே ஒரு அவதாரம் என்றே கருதத் தோன்றுகிறது!"
🌷அபயப் பிரதாயகராக அற்புத சாயி:
பகவான் பாபாவுடைய தெய்வீக சக்தியின் அற்புதமான வெளிப்பாடுகள் பலவற்றைக் காணும் பாக்கியத்தை கோகாக்கும் அவரது மனைவி ஸ்ரீமதி. சாரதாவும் பெற்றனர். அதோடு தனிப்பட்ட முறையில் அவர்களின் நலனுக்கான நல்லாசியையும் சுவாமி முழுமையாக வழங்கினார். 1976ம் ஆண்டு ஸ்ரீமதி. சாரதா கோகாக் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு கடுமையான நுரையீரல் சவ்வழற்சி ஏற்பட்டதால் , மூன்று மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது என்று கருத்து தெரிவித்தனர் மருத்துவர்கள். இருப்பினும், அறுவை சிகிச்சை ஓரளவு மேம்படுத்தலாம் என்று அறிவுறுத்தினர். முழு குடும்பமும் அப்போது பிருந்தாவனத்தில் இருந்த பாபாவிடம் சென்று, அவருடைய அருளுக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
பகவான் பாபா விபூதி வரவழைத்து சாரதாவிடம் கொடுத்தார். மேலும் "அவள் நன்றாக இருப்பாள்; அறுவை சிகிச்சையெல்லாம் தேவையில்லை!" என்றும் கூறினார். நன்றியுடன் கண்ணீர்மல்க சுவாமிக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றனர். மறுநாள் அவளது மார்பின் எக்ஸ்ரே எடுக்கப்பட்டபோது, அவள் எந்த விதமான நோய்த்தொற்றின் அறிகுறியும் இல்லாதிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் வியந்தனர்! அதன்பின் பதினெட்டு வருடங்கள் ஆரோக்யமாக வாழ்ந்தாள் என்பது குறிப்பிடத் தகுந்தது. முனைவர். கோகாக் தனது மனைவியின் மீட்கப்பட்ட ஆரோக்கியத்திற்காகவும் அதன் மூலம் அவரது மகன் அனில் கோகாக்கின் நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப் பட்டதற்காகவும் பகவானுக்குப் பலமுறை நன்றி தெரிவித்தார்.
🌷எங்கள் இயேசுநாதரே சத்யசாயி:
ஒருமுறை 40 இத்தாலியர்கள் கொண்ட பக்தர்கள் குழுவொன்று சுவாமியை தரிசனம் செய்ய பெங்களூரு பிரிந்தாவனத்திற்கு வந்திருந்தது. அவர்களுக்கு ஆங்கிலம் பேசவோ புரியவோ செய்யவில்லை.சுவாமி அவர்களுக்கு அந்தரங்கப் பேட்டியளித்தார். அன்றைக்கு பேட்டியறையின் மூலையில் கோகாக்கும் இருந்தார். அந்த இத்தாலியர்கள் அனைவரும் சுவாமியைச் சுற்றி மிக அருகில் அமர்ந்தனர். சுவாமி தனது அன்பான புன்னகையுடன் அவர்களை ஆசீர்வதித்து, கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த ஓரிருவர்களிடம் சில வார்த்தைகள் பேசினார். பிறகு, பகவான் அவர்களில் ஒரு ஊனமுற்ற நபரிடம் தனது ஊன்றுகோலை தரும்படி கூறினார். அதைப் பெற்றுக்கொண்டு பாபா அவரைப் பார்த்து புன்னகைத்து, "நீங்கள் இப்போது வெளியில் உள்ள பஜனை ஹாலை நோக்கி நடக்கலாம்" என்று கூறினார். அந்த மனிதர் மிகவும் தயக்கத்துடன், கால்களை அசைக்க முயன்றார். கொஞ்சம் நகர முடியவே; நடக்கக் கற்றுக் கொள்ளும் குழந்தையைப் போல, மெதுவாக பஜன் ஹாலை நோக்கி நடக்காத் துவங்கினார்.
அந்தக் காட்சியைக் அவரது சக நாட்டு மக்கள் மிகவும் உற்சாகமடைந்தனர், அவர்கள் அனைவரும் "இயேசு வந்திருக்கிறார்! இயேசு வந்திருக்கிறார்!" என்பதாக தங்களைச் சுற்றியிருந்த இந்திய பக்தர்களிடம் தங்கள் உணர்வுகளை சைகைகள் மூலம் தெரிவிக்க முயன்றனர். பாபா கடவுளின் அவதாரம் என்பது இந்த சம்பவத்திலிருந்து அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. வாதமோ வற்புறுத்தலோ தேவையில்லாத இதைப் போன்றதான நேரடி அனுபவம் பலவற்றை கோகாக் பெற்றார்.
🌷சுவாமியின் பாதையில் தடைசெய்யாமல் இருப்பதே நற்சேவை:
பகவானின் அன்பு, ஞானம் மற்றும் சக்தியின் வெளிப்பாடு திரு. கோகாக் அவர்களை சுவாமியிடம் பூரணமாக சரணடைய வழிசெய்தது. முனைவர் கோகாக் அவர்கள் ஸ்ரீ சத்ய சாயி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது... அப்போதைய வார்டன், ‘மாணவர்களின் குணங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தி நீங்களே நேரடியாக ஈடுபட வேண்டும்!’ என்றார். அதற்கு பதிலளித்த கோகாக், "நீங்கள் இந்தக் கருத்தை என்னிடத்தில் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி. மாணவர்களின் ஆளுமைக்கான சிறந்த சிற்பி சுவாமியே! அவருக்கு உதவ மட்டுமே நாம் இங்கு வந்துள்ளோம். சுவாமியின் செயல்பாட்டிற்கு நாம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்வதொன்றே நமது நிலையான முயற்சியாக இருக்க வேண்டும். இந்த உண்மையை நீங்களும் விரைவில் உணர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். எவ்வளவு சீக்கிரம் உணர்கிறீர்களா, அது மாணவர்களுக்கும் உங்களுக்கும் அவ்வளவு நல்லது!" என்றார். பகவானின் அருகாமையில் பணிபுரியும் வரம் பெற்ற அனைவருக்கும் இந்த அறிவுரை பொருந்தும்!
🌷பேரின்ப அனுபவமும் இறைவனுடன் இணைதலும்:
ஒரு குரு பூர்ணிமா சமயம் கோகாக், ஸ்ரீ அரவிந்தர் எழுதிய சாவித்திரி காவியத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.அவரின் எண்ணங்கள் அனைத்தும் சாவித்திரியின் மீது ஆழமாகக் குவிந்தன. சுவாமியிடம் வந்து, "சுவாமி, என் பாதையில் ஒளிதோன்றி அது என்னை நெருங்குவதை நான் காண்கிறேன்" என்றார். சொல்லிவிட்டு வேறெந்த வார்த்தையும் பேசாமல் கண்களை மூடினார் . சுவாமி அவர் அருகில் சென்று தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். தன்னுள் நிலைத்த சாவித்திரியிடம் இருந்து எல்லா பதில்களும் கிடைத்ததாக உணர்ந்தார். அன்றிலிருந்து இடைவிடாது சாவித்திரியை தியானிக்கலானார். ஒருநாள் சுவாமி கோகாக்கிடம், "நீங்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பதாகத் தெரிகிறது, காரணம் என்ன?" என்றார். ‘சுவாமி! இந்த பேரின்பம் உங்கள் ஆசி. இது என்னிடமிருந்து வரவில்லை’, என்று பதிலளித்தார் கோகாக். அதே அகநிலையில் நிலைத்திருக்கும்படி சுவாமி அறிவுறுத்தினார்.
பின்னர் ஒரு நாள் அவர் கண்களை மூடி தியானத்தில் இருந்தபோது, சுவாமி அவரது தலையில் இரண்டு முறை பலமாக தட்டினார். உடனே கோகாக் தனக்குள் ஒரு ஜோதியை அனுபவிக்கத் தொடங்கினார். உலக விஷயங்களில் ஆர்வத்தை இழந்த அவர் அந்த நிலையிலேயே இருந்தார். மற்றுமொரு நாள் சுவாமி அவரது கண்களை மூடச்சொல்லி ப்ருமத்யாவை (புருவங்களின் நடுவில்) கட்டைவிரலால் அழுத்தினார். உடனே கோகாக்கின் உள்ளிருந்த கேள்விகள் அனைத்தும் மறைந்தன. "சுவாமி, நானும் கடவுளும் அன்பும் ஒன்றே! எனக்கு வேறு எதுவும் தேவையில்லை" என்று பரவசநிலையை கூறினார் கோகாக் .
பின்னொருநாள் சுவாமி கொடைக்கானலில் இருந்தபோது, கோகாக் ஒரு நீண்ட தந்தி அனுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக சுவாமி பின்வரும் செய்தியுடன் ஒரு தந்தி அனுப்பினார், "எனக்குத் தெரியும், இது சரிதான். உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாதே!" அதன்பின் கோகாக் முழுமையான அமைதி நிலையை அடைந்தார்; எந்த புத்தகத்தையும் தொடவில்லை, எந்த கேள்வியும் கேட்கவில்லை. கடிதமும் எழுதவில்லை. உடல் அளவில் சுவாமிக்கும் கோகாக்கிற்கும் தொடர்பு இல்லாமல் போனது. ஆனால் ஆன்மீக தளத்தில் அவர்களின் உறவு மிகவும் நெருக்கமானதாக மாறியது. கோகாக் தனது உடலை விட்டு வெளியேறுவதற்கு முன், பின்வரும் வார்த்தைகளை எழுதினார், "நான் உங்களை அடைந்தேன்!"
மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்
✍🏻 கவிஞர்.சாய்புஷ்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக