தலைப்பு

சனி, 18 மார்ச், 2023

ஜாதி பேதங்களை வென்ற ஒரு சாயி பக்தரின் பிராமண தந்தை!

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலேயே! அது நல்லவராவது தந்தையிடம் கற்கையிலே என்றவாறு எவ்வாறு ஒரு சாயி பக்தருக்கு அவரது தந்தை ஞானப்பாதை காட்டினார்... ? ஆச்சர்ய அனுபவங்கள் ஆரமாய் இதோ...! 


அவர் பெயர் எஸ்.ஆர் ஹரிஹர கிருஷ்ணன்! பழுத்த சாயி பக்தர்... குவைத் - ஈராக் யுத்த சூழலில் இருந்து அவர் மீண்ட சாயி அற்புதம் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே! அவர் எவ்வாறு ஒரு பண்பட்ட மனிதராகி பிறகு இறைவன் பாபாவின் பக்தரும் ஆனார் என்பதை வேர்காணல் புரிகிற போது.. அவரது தந்தையே அதற்கு அஸ்திவாரம் இட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது!


அவரின் தந்தை செங்கோட்டை இலஞ்சியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்! ஊருக்கோ பெயருக்கோ அல்ல உண்மையில் அவர் ஆசிரியர்! தான் கடைபிடிப்பதையே கற்றுக் கொடுப்பவர்! 

"மனதாலும் யாரையும் நீங்கள் கோபிக்கக் கூடாது!"

"உங்களை யாராவது கஷ்டப்படுத்தினாலும் கூட பதிலுக்கு நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது!" என தன் பிள்ளைகளுக்கு பாலபாடம் எடுக்கிறார்! 

கணிதம், ஆங்கிலம், தமிழ், ஓவியம் இவற்றில் திறமை மிகுந்தவர்! கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் உள்ளவர்!

ஊரே இவரிடம் வந்து தான் பல சிக்கல்களுக்கு தெளிவு கேட்கும்! அவற்றை எல்லாம் மிக எளிதாய் தர்மமாய் தீர்த்து வைக்கிறார்!


ஒருமுறை அவரது நிலத்தை பண்படுத்தி உழும் விவசாயி அவர் வீடு தேடி வாசலில் நிற்கிறார்..   அது 1960'களின் இந்திய கிராமம்! தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்து 13 வருடங்கள் கடந்து விட்ட போதும் மனித மனதிலிருந்து ஜாதி பேதமைக்கு சுதந்திரம் கிடைக்காத இருண்ட ஆரம்ப ஆதி காலம்! அந்த விவசாயி தயங்கி தயங்கி நிற்கிறார்! 

முதலில் கோவில் தரிசனம் செய்து வாருங்கள் என்கிறார் ஹரிஹர கிருஷ்ணனின் தந்தை! 


தயங்கியபடியே அந்த விவசாயியும் அவ்வாறு செய்யவே... மீண்டும் வருகிறார்... தந்தையோ முன்வாசலுக்குள் நுழையச் சொல்கிறார்..‌ சில கிராமங்களில் நாவிதர் கூட வீட்டு பின்புறத்தில் வந்து முடி திருத்தம் செய்து அப்படியே தலை குனிந்து சென்றுவிடுவர்! ஆகையால் அதிர்ச்சி அடைகிறார் விவசாயி! இன்ப அதிர்ச்சி அது!  அந்த காலத்தின் பல வீடுகளில் விவசாயி ஒருவர் அவர்கள் வீட்டு முன்வாசல் வழியே நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டே இருந்தது என்பதால் ஏற்பட்ட அதிர்ச்சி அது! விவசாயியும் ஏர் நுழையும் ஈரநிலமாய் முன்பக்கம் வழியே நுழைகிறார்! 

அப்போது விவசாயியும் ஹரிஹரகிருஷ்ணன் தந்தையும் பேசிக் கொண்டிருந்த போது... விவசாயிக்கு திடீரென  விக்கல் ஏற்படுகிறது...

அருகே 8 ஆம் வகுப்பு சிறுவன் ஹரிஹரகிருஷ்ணன் அந்த பேச்சை கேட்டுக் கொண்டிருப்பதால் அங்கே நின்று கொண்டிருக்க... உடனே தந்தையார் ஒரு குவளை தண்ணீர் எடுத்துவரச் சொல்கிறார் மகன் ஹரியிடம் (ஹரிஹர கிருஷ்ணன்)! விவசாயிக்கு பதட்டத்தில்  வேர்வை கொப்பளிக்கிறது... இன்ப அதிர்ச்சிக்கு மேல் இன்ப அதிர்ச்சி! சிறுவன் ஹரி எடுக்கச் செல்கிறார்! 

தாகம் விவசாயியின் தொண்டையை கவ்விக் கொண்டிருந்த போதும் அவர் வீட்டில் தண்ணீர் குடிக்க மறுக்கிறார்! 


அது ஒரு ஆச்சாரமான  அந்தணர் குடும்பம்! வைதீகமானவர் ஹரிஹர கிருஷ்ணனின் தந்தை! இதை நன்கு தெரிந்தே அந்த விவசாயி மறுத்து "இந்தச் சொம்பு உங்கள் வீட்டு புழக்கத்தில் இருப்பது! நான் அதைத் தொட்டு அதன் புனிதத்தைக் கெடுக்க விரும்பவில்லை!" என்கிறார்! சொம்பில் கூடுகட்டியிருந்த தண்ணீரை விட விவசாயியின் கண்களில் கூடு கட்டி இருந்த கண்ணீர் எம்பிக் குதித்து எந்த நொடியும் வழிந்துவிடலாம் என்ற நிலையில் ரெடியாக இருந்தது!


அதற்கு ஹரியின் தந்தை மனம் வருந்தி, அவரை தெளிவுப்படுத்த விரும்புகிறார்! அவர் அளித்த சம்பவ உதாரணம் ஆச்சர்யமானது!

"கவனியுங்கள் என் அன்புக்குரியவரே! நான் வயல் வரப்புகளில் நடந்து செல்லும் போது திடீர் என தடுக்கி விழ நேர்ந்தால்... என்னை தொட்டு காப்பாற்றுவீர்களா? இல்லையா?" இது அந்த அறம் தோய்ந்த விந்தையான ஹரியின் தந்தையின் கேள்வி!

அதற்கு பதட்டத்துடன் பதில் அளிக்கிறார் விவசாயி "நீங்கள் கீழே விழுவதை எப்படி என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்! ஓடோடி வந்து காப்பாற்றுவேன்! உங்களை தாங்கிப் பிடிப்பேன்!" என்கிறார்! 

"அப்படி என்றால் உங்கள் நியாயம் எனக்கு புரியவில்லை... ஒரு பக்கம் என்னை கீழே விழாமல் தொட்டுக் காப்பாற்றுவீர்கள்! இன்னொரு பக்கம் என் வீட்டின் பயன்பாட்டு பொருட்களை தொட மாட்டீர்கள்? ஆக உங்களுக்கு என்னை விட நான் என்  வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் தான் மதிப்பானவையா? உண்மையில் நீங்கள் என்னை மதிப்பதாக இருந்தால் இந்த குவளைத் தண்ணீரை நீங்கள் தொட்டுக் குடிக்க வேண்டும்!" என்று பரிவோடு கூறுகிறார்!


கண்கலங்கிய விவசாயி உண்மையை உணர்ந்து மிகவும் பரவசப்பட்டு... கன்னத்தில் வழிந்த தன் கண்ணீரோடு சேர்த்து அந்த தண்ணீரையும் ஒரே மடக்கில் குடிக்கிறார்! அவர் குடித்தது வெறும் தண்ணீர் மட்டுமல்ல "சமத்துவம் - சமதர்மம் - ஒருமைப்பாடு - தெய்வத்துவம்!"


(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | ஆசிரியர் : எஸ்.ஆர். ஹரிஹர கிருஷ்ணன்| பக்கம்  : 4,5,6) 


"There is only one caste - the caste of humanity" என்று நாம் வெறும் வாயால் இறைவன் பாபாவின் இந்த ஞான மொழியை பிறரிடம் சொல்வதால் எந்த வித பயனுமில்லை! நாம் முதலில் அந்த ஞானத்தை நம் சொந்த வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும்! ஜாதி பேதம் என்கிற கசப்பு உணர்வு பெரிய பாவம்! அது இம்மி அளவிலும் கூட நம் இதயத்தில் நஞ்சு கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! ஆக...ஞானம் என்பது வாழ்வதே தவிர வாய் நிறைய பேசுவதல்ல...! நூலாசிரியரின் அந்த விந்தையான தந்தையோ சாயி ரூபத்தை வழிபாடு செய்தவர் கூட இல்லை... ஆனால் அவரே அவரின் மகன் ஹரிக்கு (நூலாசிரியர்) ராமநாமம் உச்சரிக்க பிள்ளையார் சுழி இட்டவர்! அந்த ராம நாமமே சாயி ராமனை பிற்காலத்தில் அருகழைத்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது! 


"ஜாதி மதங்களை பாரோம் - உயர்

ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின்

வேதியராயினும் ஒன்றே- அன்றி

வேறு குலத்தினராயினும் ஒன்றே!"

                     ----மகாகவி பாரதி


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக