தலைப்பு

செவ்வாய், 14 மார்ச், 2023

விபூதி மறுத்த வைஷ்ணவ பெண்மணி - வீடு தேடிவந்து பூசிவிட்ட பாபா- பஹ்ரன் பரவச அனுபவம்!

தீரமாக இறைவன் பாபா மற்றும் அவரது பஜனை - விபூதி பிரசாதம் இவற்றை நம்ப மறுத்த ஒரு முதிர் பெண்மணிக்கு பாபாவே நேரடியாக அவர் வீட்டிற்கு சென்று செய்த அற்புதம் பரவசமாக இதோ‌...


அது 1983 மார்ச் 17! புனித வியாழன் தினம்! ஒவ்வொரு வியாழனும் பஹ்ரனில் சாயி பஜன் நடைபெறும்! சாயி திரு ஹரிஹர கிருஷ்ணனின் நண்பரான துவாரகாநாத்தின் மாமியார் அவர் இல்லம் வந்திருந்த சமயம் அது! அந்த மூதாட்டி ஒரு தீவிர வைஷ்ணவர்! ஸ்ரீ விஷ்ணு ரூபத்தை மட்டுமே வழிபாடு செய்து விஷ்ணு ஒருவரே உலகின் ஒரே இறைவன் என தீவிர நம்பிக்கை கொண்டவர்! அன்று ஒரு வியாழன்... துவாரகாநாத் வீட்டிலேயே சாயி பஜன் ஏற்பாடாகி இருந்தது! 

பஜன் செய்கிற அறைக்கே வரமாட்டேன் என்று மறுக்கிறார்! வேண்டவே வேண்டாம் என்று  பஜன் நடக்கையில் வேறு அறையில் அமர்ந்து கொள்கிறார்! பஜன் முடிந்து தரப்படும் பிரசாதமோ - விபூதியோ ஹும் ஹும் ஏற்றுக் கொள்வதல்ல அதன் வாசனை கூட ஏற்காதவர் அந்த வைஷ்ணவ பெண்மணி! 


"நாம் எத்தனையோ அவதாரங்களைப் பற்றி அறிந்திருக்கிறோம்! புதிதாக சாயிபாபா போன்ற இன்னொரு அவதாரம் நமக்கு அவசியமே இல்லை!" என்பார் அந்தப் பெண்மணி தனது மகளிடம் (துவாரகாநாத் மனைவி)...! 

அந்த நாள்...அந்த வியாழனோ வேறொரு பக்தர் வீட்டில் பஜனை... முதலில் வேண்டா வெறுப்பாக சரி என்று பிறகு வரவில்லை என ஒதுங்கிக் கொள்கிறார் அந்தப் பெண்மணி! 

அவர்களும் அந்தப் பெண்மணியின் பிடிவாதம் அறிந்து சரி என்றபடி காரில் கிளம்புகிறார்கள்! 

வீட்டில் அப்போது அந்தப் பெண்மணி மட்டுமே தனியாக இருக்கிறார்! 


பஜன் - பிரசாதம் எல்லாம் முடிந்து பயணித்து வர அவர்களுக்கு இரவு 9.30 ஆகிறது! வீட்டை திறக்கையில் திகில் அடைந்தபடி "பாபா எங்கே? பாபா எங்கே?" என அலறுகிறார்! பஜன் முடிந்து வந்த துவாரகாநாத் குடும்பத்திற்கும், ஹரிஹர கிருஷ்ணன் குடும்பத்திற்கும் ஒன்றும் விளங்கவில்லை...!

அந்தப் பெண்மணிக்கோ ஆச்சர்யமும் திகிலும் அடங்கவில்லை.. அவரது நெற்றி முழுக்க விபூதி அப்பி இருந்தது! விபூதி வாசனையே அறியாதவர் நெற்றியில் விபூதியா ? கனவு ஏதாவது கண்டார்களா? என்றவாறு பார்த்த அவர்கள் குழம்புகிறார்கள்! 


"நிச்சயமாக பாபா கடவுள் தான் கடவுள் தான்! அதில் சந்தேகமே இல்லை!" என்கிறார் அந்தப் பெண்மணி!

அப்படி ஒரு பெண்மணியிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையா? என அனைவரும் மேலும் அதிர்ச்சி அடைகிறார்கள்! 


"நீங்கள் அனைவரும் பஜன் சென்றபிறகு நான் தனியாக இருந்தேன்! திடீரென வாசல் கதவு தட்டப்பட்டது! யாரது என திறக்கப்போனேன்.. ஆனாலும் தடுப்புச்சங்கிலியை எடுக்காமல் வெளியே தலையை எட்டிப் பார்த்தேன்... நீங்கள் வழிபடும் சாயிபாபா வெளியே நின்று கொண்டிருந்தார்! துவாரகாநாத்திற்கு ஆப்பிள் பழம் கொண்டு வந்திருக்கிறேன் என ஒரு கை மாற்றி ஒரு கையில் ஆப்பிளை போட்டுவிட்டு.. தனது வலது கையால் தடுப்புச் சங்கிலிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த என் நெற்றியில் விபூதி விட்டு புன்னகைத்தார்... அடுத்த நொடி என் கண் முன்னே மறைந்துவிட்டார்! " என மூச்சறைந்து பேசுகிறார்!


கேட்டவர்களின் இதயம் வியப்பின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது! நிசப்த நொடிகள்... உறைந்த காற்றலை... உள்ளுணர்வில் பாபாவின் மேல் பக்தி உலவியபடி அந்தப் பெண்மணியின் தெளிதலுக்கு தீபாராதனை காட்டப்பட்ட கடவுட் பொழுதாக அமைந்த அற்புதம் இது!


(சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 26,27 | ஆசிரியர் : எஸ்.ஆர்.ஹரிஹர கிருஷ்ணன்) 


இறைவன் பாபாவுக்கு தோன்றி மறைவது என்பது பெரிய காரியம் இல்லை! காரணம்: அவர் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவர்! நமக்கான அவரது தரிசனம் நமது அகமாற்றத்திலேயே அடங்கி இருக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக