தலைப்பு

ஞாயிறு, 30 ஜூன், 2019

போட்டோவில் பேசிய சாயி பகவான்!


சத்ய சாய்பாபாவின் எத்தனையோ மெய்சிலிர்க்கும் அற்புதங்களை நாம் புத்தகத்தில் படித்திருப்போம், பிறர் சொல்லி கேட்டிருப்போம், ஏன் நமது வாழ்வில் கூட நடந்திருக்கும். ஆனால் இந்த அற்புதமோ சற்றும் வித்தியாசமானது. 

ஒரிசாவைச் சேர்ந்த அசோக் சந்திரா என்ற ஒரு சாயி அன்பர், நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர். அவர் சம்பாதிக்கும் வருமானம் அவர் குடும்பத்திற்கு பத்தாமல் இருந்தது.  இப்படி அவர் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த தருவாயில். 1982இல் ஒருமுறை பகவான் பாபாவை தரிசிக்க புட்டபர்த்திக்கு சென்றார்.

சென்ற இடத்தில் பாபாவின் தரிசனம் மட்டுமல்லாமல் அவருக்கு நேர்காணலும் கிடைத்தது. நேர்காணலில் பாபா 'நீ வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் பின்புறத்தில் வலதுபுறமாக ஒரு காலி இடம் இருக்கிறது அல்லவா. நல்ல இடம், அந்த இடத்தில் வீடு கட்டு' என்று பாபா சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் 'பாபா என்னுடைய வாழ்க்கையை நடத்தவே சிரமமாக இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் நான் எப்படி அந்த இடத்தை விலைக்கு வாங்கி, வீடு கட்ட முடியும்?' என்று பணிவுடன் பாபாவிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு பாபா 'அதே இடத்தை விலைக்கு வாங்கி நீ வீடு கட்டுவாய்' என்று ஆசிர்வாதம் செய்தது மட்டுமல்லாமல் உன்னுடைய வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு நான் கட்டாயம் வருவேன் என்று வாக்கு கொடுத்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அப்படியே முன்று வருடம் சென்றது. அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து, குடும்ப சூழ்நிலையும் மாறியது. அவர் சம்பாதித்த வருமானத்தில் வீடு கட்டலாம் என்ற ஒரு எண்ணமும் வந்தது. அப்படி இருக்கும் நேரத்தில் தான் பாபா முன்பே நேர்காணலில் குறிப்பிட்ட அந்த இடத்தின் உரிமையாளர் அசோக் சந்திராவிடம் வந்து எனக்கு பணம் தேவைப்படுகிறது, அதனால் என்னுடைய இடத்தை வைத்துக் கொண்டு நீங்கள் பணம் தர முடியுமா என்று கேட்டு இருக்கிறார். அவருக்கு அப்போது தான் புட்டபர்த்தியில் பாபா சொன்ன அனைத்து விஷயங்களும் ஞாபகம் வந்திருக்கிறது. இது பகவானின்  அனுக்கிரகம்தான் என்று புரிந்துகொண்டு அவரும் அந்த இடத்தை வாங்கி, வீட்டைக் கட்டி முடித்தார். அவருடைய உள்ளுணர்வில் குரு பூர்ணிமா அன்று கிரகப்பிரவேசம் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணம் உதித்தது. ஆனால் அவரின் குடும்ப உறுப்பினர்களோ அன்று பகவான் புட்டபர்த்தியில் இருப்பார் எப்படி இங்கு வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவரோ பகவான் பரம்பொருள் அவர் கண்டிப்பாக வருவார் என்று சொல்லி குரு பூர்ணிமா அன்றே கிரகப்பிரவேசம் வைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள். புட்டபர்த்திக்கு சென்று பகவானை நேரில் அழைக்க இரண்டு முறை முயற்சி செய்தார் அசோக் சந்திரா. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை தடையாக அமைந்தது. அதனால் புட்டபர்த்திக்கு செல்ல முடியவில்லை. கடைசியில் வீட்டிலிருந்தே பகவானை ஆத்மார்த்தமாக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

கிரகப்பிரவேச நாளும் வந்தது. கிரகப் பிரவேசத்தன்று பாபா வருவார் என்று அவருக்காக பிரத்யோகமாக நாற்காலியை தயார் செய்தது மட்டுமல்லாமல், பாபாவுக்கு பிடித்த  உணவை சமைத்து வைத்து வழி மேல் விழி வைத்து அசோக் சந்திரா குடும்பம் காத்திருந்தது. ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. பாபா கடைசி வரை வரவில்லை. கிரகப்பிரவேசம் சிறப்பாக முடிந்தது. இரவு 7 மணி ஆயிற்று, கிரகப்பிரவேசத்திற்கு வந்த உற்றார் உறவினர்களும் சென்றுவிட்டார்கள். ஆனால் அசோக் சந்திராவின் நம்பிக்கை மட்டும் சிறிதும் குறையவில்லை. பாபா கண்டிப்பாக வருவார் என்று காத்து கொண்டு இருந்தார். சுமார் இரவு 7:20 மணி இருக்கும் அந்த நேரத்தில் ஒரு ஏப்பம் சத்தம் கேட்டது. குடும்ப உறுப்பினர்கள் யார் இப்படி சத்தமாக ஏப்பம் விடுவது என்று மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள். மீண்டும் அதே ஏப்பம் சத்தம், அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை சுத்தி சுத்தி பார்த்தார்கள் யாருமில்லை. அப்போதுதான் பகவானின் தெய்வீகக் குரலில் அம்மா பால்பாயசம் பிரமாதம் என்று சொல்லி இருக்கிறார். அதுவும் அவர்களின் தாய் மொழியான ஒடியாவில் பேசியிருக்கிறார் பாபா. குடும்ப உறுப்பினர்களோ மகிழ்ச்சியுடன் அனைவரும் பாபாவை வீடு முழுவதும் தேடி பார்க்கிறார்கள் எங்கும் பாபா அவர்களுக்கு தென்படவில்லை. இறுதியாக அவர்கள் வீட்டின் நுழைவாயிலில் மூன்று அடியில் சத்ய சாயின் படத்தை மாட்டி வைத்து இருந்தார்கள், பார்த்தால் அந்தப் படத்திலிருந்து பாபா பேசியிருக்கிறார்.  அந்தப்படத்தில் சுவாமியின் வாய் பகுதியில் மட்டும் அசைவு இருந்திருக்கிறது. என்ன ஆச்சரியம் பகவான் பேசும் வார்த்தைகளுக்கு தகுந்தார் போல் புகைப்படத்தில் பகவானின் திருவாயும் அசைந்து இருக்கின்றது.

பகவான் தொடர்ச்சியாக பேசுகிறார். அசோக் சந்திராவின் மனைவியிடம் 'அம்மா இன்று உன்னுடைய உறவினர்கள் எல்லாம் மதியம் சாப்பிட்ட பிறகு மீதம் இருந்த சாப்பாட்டை ஒரு நான்கு பேருக்கு நீ போட்டாய் நினைவிருக்கிறதா? அதில் ஒரு வயதான பெண்மணி ஒருவர் இருந்தார் அல்லவா அந்த பெண்மணி நான்தான்' என்று பாபா சிரித்தவாறு சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. பின்பு பகவான் தொடர்ந்திருக்கிறார். என்னுடைய ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். கூடிய சீக்கிரம் உங்கள் இரண்டு மகள்களுக்கும் நான் திருமணம் செய்து வைக்கிறேன். எதற்கும் கவலைப்படாதீர்கள் என்று சொல்லி  புகைப்படத்தின் வாய்ப்பகுதி பழையபடி மாறி இருக்கிறது.  இந்த கதையில் வரும் அசோக் சந்திரா வேறு யாருமில்லை என்னுடைய தாத்தா தான்.  இந்த சம்பவம் நடந்த அன்று எனது அம்மாவும் பாபா பேசியதை நேரில் பார்த்து இருக்கிறார். என்னுடைய சிறு வயதில் இருந்தே, எங்கள் அம்மா இந்த நடந்த சம்பவத்தை சொல்லி சொல்லியே எனக்கும் எனது தம்பிக்கும் பாபாவின் மீது  அசைக்க முடியாத பக்தியை வளர்த்தார்.

எப்படி பிரகலாதன் தன் தந்தையான இரணியகசிபுவிடம் என்னுடைய நாராயணன் தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று சொன்னது போல, நமது சத்யசாயி எல்லா இடங்களும் இருக்கின்றார்.  பகவானை வணங்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. பகவானுக்கு பிடித்தது போல் நீ நல்லொழுக்கம் கொண்டவனாக இருந்தாலே பகவானே உன்னை தேடி வருவார். 

ஆதாரம்: அசோக் சந்திராவின் பேத்தியான பத்மினி அவர்களின் ஃபேஸ்புக் பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக