தலைப்பு

புதன், 5 ஜூன், 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 14 | அன்பே பாபாவின் மொழி


அது அநேகமாக 1966ஆம் ஆண்டு என்று எனக்கு ஞாபகம். பகவான் கொடைக்கானலுக்கு விஜயம் செய்வதாய் அறிந்த நானும் எனது நண்பனும், சுவாமி அங்கு செல்லும் முன்பே கொடைக்கானல் சென்றோம். வாடகை அறை ஒன்று ஏற்பாடு செய்துகொண்டு, அதில் தங்கி, சுவாமியின் வருகைக்காகக் காத்திருந்தோம்.
சுவாமி விஜயம் செய்து விட்டது அறிந்தவுடனேயே, அவர் தங்கியிருந்த இடம் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். அப்போது மோகன் என்பவரது வீட்டில் சுவாமி தங்கியிருந்தார். நானும் எனது நண்பனும், காலைப்பொழுதில் சுவாமி தங்கியிருந்த வீட்டுப் பக்கம் சென்று பார்க்கையில், எங்களுடைய பாக்கியம், சுவாமி அந்த வீட்டினுள்ளிருந்து எங்களைப் பார்த்து, அறையின் ஜன்னலருகே எங்களை அழைத்தார்!கைகளைக் கூப்பியவாறு ஜன்னல் அருகே சென்ற என்னிடம், எப்போது வந்தீர்கள் என்று கேட்டார். இரண்டு தினங்கள் முன்பே வந்துவிட்டதைச் சொன்னோம்.

உடனே சுவாமி “இன்று மாலை இங்கு வாருங்கள்; சுவாமி பேசப்போகிறேன். தமிழில் பேசுவதாகவுமுள்ளேன்! ஆதலால், சுவாமி பேசும்போது, சில சமயங்களில், சரியான தமிழ் வார்த்தைகள் பற்றி அறிய உன்னைப் பார்ப்பேன் .நீ உடனே சரியான வார்த்தையை எடுத்துச் சொல்லவேண்டும். இன்று மாலை ஐந்து மணிக்கு முன்பே, இங்கு வந்து எனக்குப் போடப்பட்டிருக்கும் மேஜை அருகே உட்கார்ந்து விடு” என்று என்னிடம் சொல்லி, அங்கு வீட்டினுள் இருந்த அந்த வீட்டுக்காரரிடமும் என்னை அவ்விதமே உட்கார அனுமதிக்குமாறு சொல்லி அருள்கூர்ந்தார்.

ஆச்சரியமும் உற்சாகமுமான உணர்வுகள் என்னை ஆட்கொண்டன! மாலை 5 மணிக்கு அரைமணி முன்னதாகவே, சுவாமி பேசவிருக்கும் இடத்திற்கு, நானும் எனது நண்பனும் சென்றுவிட்டோம். சுவாமி பேசவிருக்கும் மேஜை அருகே உட்கார்ந்து கொண்டோம். கூட்டம் துவங்க இன்னும் 15 நிமிடங்கள் இருக்கையில், சுமார் 200 பேர் அங்கு வந்து அமர்ந்தனர். அந்த இடம் சரியான புல்வெளி! சில்'லென்று காற்று வீசுகிற மலைப்பகுதியின் மாலைப்போது!

சரியாக ஐந்து மணிக்கு சுவாமி அங்கு வந்து யாவருக்கும் தரிசனம் அளித்து, தமது அருளுரையைத் தமிழில் துவக்கினார். அங்கிருந்த எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்! சுவாமி தொடர்ந்து தமிழில் பேசுகையில் ,அவர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தது போலவே, இடையிடையே அவர் பேச்சுக்குத் தேவைப்படும் சில தமிழ்ச் சொற்களுக்காக என்னைப் பார்ப்பார்; நானும் தேவைப்படும் தகுதியான சொல்லை எடுத்துச் சொல்வேன். சுவாமி முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டியபடியே ,அந்தச் சொல்லைத் தமது சொற்பொழிவில் சேர்த்து பேசுவார்! இப்படியாக மூன்று நான்கு முறை நான், தேவைப்படும் சரியான சொற்களைச் சொல்வதும், சுவாமி அவற்றை சேர்த்துக் கொள்வதுமாக நிகழ்ந்தது!

கடைசியாக, ஒரு சொல்லை நான் சொல்ல நேர்ந்தபோது, சுவாமி 'ஒத்து' என்று தெலுங்கில் சொன்னார். திடுக்கிட்ட நான், சற்றுத் தயங்கியவாறு, வேறொரு சொல்லை எடுத்துச் சொன்னவுடன், “அதுவே சரி” என்று பாராட்டிய சுவாமி, அந்தச் சொல்லைப் பயன்படுத்தி, தொடர்ந்து பேசி, தமது 15 நிமிட அருளுரையை நிறைவு செய்தார்! சுவாமியின் தமிழ்ப் பேச்சை அன்று கேட்ட கூட்டத்தினர் மிகவும் மகிழ்ந்தனர்! சுவாமிக்கு அவ்வளவாகத் தமிழ் தெரியாது, அதனால்தான் நம்மிடம் கேட்கிறார் என்று துவக்கத்தில் அறியாமையால் கர்வ எண்ணம் என்னிடம் துளிர்த்தது! சரியான வார்த்தைகளை நான் சொன்னபோதெல்லாம் ஏற்றுக்கொண்டு, அந்தப் பேச்சுக்குப் பொருந்தாத ஒரு சொல்லை நான்  எடுத்துக் கொடுத்ததை, “சரியல்ல” என்று சுவாமி சொன்னது, ‘உனது அந்த கர்வ பாவம்  சரியல்ல’ என்று அறிவுறுத்துவதாக எனக்குத் தோன்றியது! அப்போதே எனது அறியாமை அடிப்படையிளான, கர்வ பாவம் ( ஈகோ) தகர்ந்ததையும், உணர்ந்தேன். திரும்பவும் சரியான சொல்லை நான் எடுத்துச் சொன்ன போது,  “அதுவே சரி” என்று சுவாமி பாராட்டியது, 'அந்த உனது கர்வ பாவமற்ற நிலையே சரி' என்று பாராட்டுவதாகப் புரிந்தது! ஒரு சிறிய சம்பவம் மூலம், எவ்வளவு உயர்ந்த பண்பினை நமக்குச் சுவாமி கற்றுத் தருகிறார் என்பதை நான் உணர்ந்தேன்!

அந்த எனது பக்குவ நிலையில், சுவாமி மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்; 'அன்புதான் அவரது மொழி' என்பது எனக்கு தெள்ளென விளங்கிற்று! எல்லாமே அவரது மறைமுகமான திருவிளையாடல்கள் அன்றோ?  ஜெய் சாய்ராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக