தலைப்பு

ஞாயிறு, 16 ஜூன், 2019

அமுது பெருகும் சிரத்தில் ஆவி நோய் நஞ்சு!


ஆவி சேஷ்டை என்பது மனோ பலவீனமுள்ளவர்களையே தாக்கும். இதே மனோ பலவீனம்தான் மூளைக்கோளாறு, அபஸ்மாரம் (காக்காய் வலிப்பு) முதலிய நோய்களுக்கும் காரணம். இவை யாவற்றையுமே சுவாமி குணம் செய்ததுண்டு. பிட்டிதேவ மன்னனின் மகளை பிடித்திருந்த பேயை ராமானுஜர் ஓட்டினார். கொல்லி மழவனுடைய பெண்ணின் முயலக நோயை (அபஸ்மார வியாதியை) ஞானசம்பந்தர் குணமாக்கினார். உன்மத்த ஊமையான சிங்கள இளவரசியை மாணிக்கவாசகர் சரி செய்தார் என்றிப்படி பெண்களை பொறுத்ததாகவே பூர்வகால பெருந்தகையர் அருள் மருத்துவம் புரிந்தது போலவே நமது சுவாமியும் தாய்க்குலத்தினருக்கே இவ்வினத்தில் விசேஷ கிருபை புரிவதாக தெரிகிறது.

இதுபோன்ற மனநோய் நிவாரணத்தில் சுவாமி முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 'கையாண்ட' ஒரு விசித்திர சிகிச்சை முறையை ஸ்ரீ கஸ்தூரி "அன்பு செய்யும் ஆண்டவன்" ( loving god) எனும் நூலில் கூறி, மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறார். 'கையாண்ட' என்றால் 'கையாண்டவே' தான்! மேலே படியுங்கள், புரியும்!

பாகிஸ்தான் பிரிவினை ஆனவுடன் சிந்த் மாநிலத்திலிருந்து ஓடி வந்த அகதியருல் ஒருவர், அவர் மூளைக்கோளாறுற்ற தமது மகளோடு பிரசாந்தி நிலையத்துக்கு வந்தார். அந்தப் பெண் காரணமின்றி அழுவாள், சிரிப்பாள், பிதற்றுவாள், ஒன்றையே திரும்பத் திரும்ப சொல்லுவாள். ஓரிடமாய்  இருக்க முடியாமல் பரக்க பரக்க சுற்றுவாள்.

சில வாரங்கள் அவள் இப்படி பிராந்தியிலேயே பிரசாந்தி நிலையத்தில் அமளி செய்தும் பிரசாந்த் ஒரு அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார். பெண்ணின் தகப்பனாரிடம் மட்டும், "நீங்கள் புறப்படுவதற்குள் குணப்படுத்துகிறேன்" என்று அபய வாக்கு கூறினார்.

சில வாரம் சென்ற பின் ஓரு நாள் காலை.சிந்தியர் தங்கியிருந்த அறைக்கு கருணாஸிந்து சென்றார். பெண்ணின் நெற்றியிலே நீறு பூசினார். உடனே அவர் முன்னர் அவள் தரையில் சாய்ந்தாள்.

இனி ஆண்டை அவள் நோயை 'கையாண்ட' விசித்திரம்!பாபா  தமது இரு உள்ளங்கைகளையும் அவளது சிரத்தின் இரு புறமும் வைத்து அழுத்தலானார்.அவர் அப்படி அழுத்திக் கொண்டேயிருக்க, அப்பெண்ணின் மயிர் கால்களிலிருந்து கரும்பழுப்பான ஒரு திரவம் கசிந்து சொட்டத் தொடங்கியது.

திரவத்தை ஒரு தட்டில் பிடித்தார்கள்.
பாபா அவள் தலையை விடாமல் அழுத்தி ,ஒரே துர்நாற்றம் வீசும் திரவத்தை முழுக்க வடித்தார். தட்டிலே சுமார் 10 அவுன்ஸ் திரவம் சேர்ந்திருந்தது. 'வடிகட்டிய' பைத்தியம் தான்! திரவக் கசிவு அடியோடு நின்ற பிறகே இதய கசிவாளர் கையை எடுத்தார். துர்நாற்ற திரவத்தை வடித்த தெய்வக்கரத்தை சோப் போட்டு கழுவிக்கொண்டார்.

பெண்ணும் மூளைக்கோளாற்றுக்கு கைகழுவி விட்டாள்! திரவம் போனதும் நோயின் உபத்திரவம், நோயாளியால் யாவருக்கும் ஏற்பட்ட உபத்திரவம், ஆகியனவும் மலையேறி விட்டன!

மூன்றாண்டுகளுக்குப் பின் பம்பாய் சென்ற பாபா, மறவாமல் அங்கு உள்ள சிந்தி அகதியரின் காலனியில் உள்ள இந்த அடியார்களது இல்லத்திற்கு விஜயம் செய்தார்.

அப்போது அப்பெண் கண்டிருந்த மலர்ச்சியை கண்டு கஸ்தூரி அதிசயித்தார். துருதுருவென்று வேலை செய்தபடி, வீடு முழுவதும் வளைய வந்து பகவானுக்கும் பக்தர்களுக்கும் பாங்காய் உபசாரம் செய்தாள்! உணர்ச்சிப் பொங்க பஜனை பாடி தன்னை வாழ்வித்த வேந்தனுக்கு வந்தனை செய்தாள். 
                                                    ************

ஆதிநாளில் கஸ்தூரியின் பிரசாந்தி நிலைய அண்டை வாசியான இல்லத்தரசி முயலக நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். இந்த முயலகனை சாயி நடராஜன் எப்படி அழுத்தி அடக்கி போட்டான்? அவனது திருக்கரங்கள் அவளது தலையின் பக்கங்களை அழுத்தி உள்ளிருந்த துர்நீரை வடித்தெடுத்ததன் மூலமே தான்!

பெங்களூர் அடியார் ஒருவரின் மகள் ஹிஸ்டீரியா நோயுற்றிருந்தாள். நோயை பழைய ஹிஸ்டரியாக ஆக்க  பாபா அளித்த சிகிச்சை மிஸ்டரி என்னவெனில் - - நம் வாசகர்களுக்கு அது மிஸ்டரியாகவே இராது - -

ஆம், திரவத்தை வடித்து 'மண்டைக்கனம்' குறைத்துதான் குணப்படுத்தினார் குணாலயர்!

ஆதாரம்: அற்புதம் அறுபது, ரா. கணபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக