தலைப்பு

ஞாயிறு, 9 ஜூன், 2019

சமீபத்தில் பாபா சிங்கப்பூரில் ஒரு அன்பர் வீட்டில் நிகழ்த்திய அற்புதம்!


சாய்ராம் நான் ஓசூரிலிருந்து K. P. கிருஷ்ணமூர்த்தி(கிச்சு வாத்தியார்) எழுதுகின்றேன். சமீபத்தில் சுவாமி ஒரு அற்புதத்தை சிங்கப்பூரில் உள்ள ஒரு சாயி அன்பர் வீட்டில் நிகழ்த்தியுள்ளார். என் மகள் குடும்பம் கடந்த 13 வருடங்களாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் மூலமாக இந்த அற்புதம் என் காதுகளுக்கு எட்டியது. அதை நம் ஓசூர் சாயி அன்பர்களுக்கு பகிரலாம் என்று இதை எழுதுகின்றேன்.

கடந்த 2019 மார்ச் 5 ஆம் தேதி அன்று என் மகள் லதாவிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. அந்த தொலைபேசியை அட்டென்ட் செய்த போது 'அப்பா சுவாமி மெய்சிலிர்க்கும் ஒரு அற்புதத்தை என்னுடைய தோழியின் வீட்டில் நிகழ்த்தியுள்ளார்' என்று நடந்த சம்பவத்தை விவரித்தாள். என் மகள் குடும்பம் சிங்கப்பூரில் உள்ள சிங்ளப் அவென்யூவில் வசித்து வருகின்றார்கள். அவர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்க்கு 6 கட்டிடங்கள் தள்ளிதான் ஒரு ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அனூப் ஸ்ரீவஸ்தவா தம்பதிகள் வசித்து வந்திருக்கிறார்கள். அந்த கணவன் மனைவி இருவருக்கும் சுவாமியின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை ஆனால்  மனைவியோ தீவிர சீரடி சாயி பக்தை. அந்தப் பெண்மணியும் என் மகளும் அவ்வப்போது சேர்ந்து சிங்கப்பூர் செராங்கூன் ரோட்டில் உள்ள சீரடி சாயி கோவிலுக்கு செல்வது வழக்கம். 

அந்த ஆந்திரா அன்பர் சிங்கப்பூரில் உள்ள பிரபல ஓவர்சீ சைனீஸ் பேங்கிங் கார்ப்பரேஷனில் பணியாற்றி வந்திருக்கிறார். அந்த பேங்கிங் கம்பெனியில் யாருக்கோ உதவ போய் கம்பெனியில் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். கம்பெனியோ அவரை 70 ஆயிரம் டாலர் பணத்தை ஒரு வாரத்தில் கட்டும்படி உத்தரவு போட்டு இருக்கின்றது. மீறினால் கடுமையான தண்டனையை சந்திக்க நேரிடும் என்று பயமுறுத்தி இருக்கின்றார்கள். அவரும் தன்னுடைய சேவிங்ஸ் இருந்து 21 ஆயிரம் டாலர்களை கட்டியுள்ளார். மீதமுள்ள 49 ஆயிரம் டாலர்களை கொடுக்க முடியாமல் குழம்பிப்போய் வேறு வழி இல்லாமல் நடந்த பிரச்சனையை தன் மனைவிக்கு கூட தெரிவிக்காமல் தன்னுடைய வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் கரப்பான் பூச்சிகளைக் கொல்லும் ஸ்ப்ரே மருந்தை தண்ணீரில் கலந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அந்த நேரம் பார்த்து வெள்ளை  உடை அணிந்த ஒரு இளைஞன் அவர்களின் வீட்டிற்குள் உள்ளே நுழைந்திருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட இருபத்தைந்து முப்பது வயது இருக்கும். அவர் பார்ப்பதற்கு மாநிறத்தில் இருந்ததாகவும், நெற்றியில் ஒரு சின்ன திருநீரும் மூக்குக் கண்ணாடியும் இருந்ததாக சொல்கின்றனர். அந்த புது நபரை பார்த்த அந்த அன்பரின் மனைவி சத்தம் போட்டு இருக்கின்றார். 'யார் நீங்கள் எப்படி கேட்காமல் வீட்டிற்குள் வரலாம்' என்று. அதற்கு அந்த நபர், 'சாய்ராம் நான் யார் என்று பிறகு சொல்கின்றேன் இப்போது உங்களுடைய கணவர் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் முதலில் அவரை காப்பாற்ற வேண்டும்' என்று மாடிக்கு வேகமாக ஓடி இருக்கின்றார். அந்த அன்பரின் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை அவரும் அந்த நபரின் பின்னால் மாடிக்கு சென்று உள்ளார்.  போன பிறகுதான் அந்த அன்பரின் மனைவிக்கு எல்லாம் புரிந்திருக்கின்றது ஒரு ஐந்து வினாடிகள் கழித்து போயிருந்தால் கணவர் அதைக் குடித்திருப்பார் என்று.

சரியான நேரத்தில் உள்ளே நுழைந்த அந்த இளைஞன் அவரிடம் 'சாய்ராம் இதற்கு அவசியமே இல்லை நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் செய்ய துணிந்து இருக்கும் இந்த செயல் ஒரு கீழ்த்தரமான செயல். உயிரை கொடுத்தவன் இறைவன் எடுப்பதற்கு அவனுக்கு மட்டுமே உரிமை இருக்கின்றது என்றெல்லாம் ஆறுதல் சொல்லி இருக்கின்றார். அந்த அன்பருக்கு ஒன்றும் புரியவில்லை  நீங்கள் யார்? எப்படி இங்கு வந்தீர்கள்? நான் தற்கொலை செய்து கொள்வது உங்களுக்கு எப்படி தெரியும் என்று ஆங்கிலத்தில் வினவியுள்ளார். அதற்கு அந்த நபர் தன்னுடைய பெயர் பிரேம் என்றும், நான் சத்ய சாய்பாபாவின் சேவகன் என்றும். உங்களுக்காக சுவாமி 49 ஆயிரம் டாலர் கொண்ட இந்த செக்கை கொடுத்து அனுப்பி இருக்கின்றார். இதை கொண்டு உங்கள் கடனை அடைத்து சந்தோஷமாக வாழுங்கள். மேலும் உங்களுக்குத் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகின்றது என்று சுவாமி சொன்னார். கவலைப்படாதீர்கள் சுவாமி விரைவில் உங்களுக்கு பெண் குழந்தையை அருள்வதாக சொல்லி இருக்கிறார் என்றும், பகவான் சத்ய சாய்பாபாவை ஒருபோதும் மறவாதீர்கள். நீங்கள் கும்பிடும் சீரடி அவதாரமும் அவரே,  உங்கள் கணவர் கும்பிடும் திருப்பதி பெருமாளும் அவரே என்று பேசிக்கொண்டு இருந்த போதே, பகவான் என்னை அழைக்கிறார் என்று வீட்டுக்கு வெளியே வேகமாக நடந்து சென்று இருக்கின்றார். என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை  யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டு  இருப்பது போல் தானாக பேசிக் கொண்டே மீண்டும் வீட்டுக்குள் வந்து இருக்கிறார். அந்த வீட்டின் உரிமையாளரிடம் 'சாய்ராம் இந்த அறை வழியே சுவாமி என்னை செல்ல உத்தரவிட்டிருக்கிறார். தயவு செய்து பயப்படாதீர்கள் என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள். நான் சென்று வருகிறேன் என்று கதவை சாத்திக் கொண்டார்.

அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஒரு மணி நேரமாக அவர் வெளியே வருவார் என்று காத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்துதான் என்னுடைய மகள் லதா அந்த வீட்டிற்குள் சென்று இருக்கிறாள். அந்த ஆந்திரா பெண்மணியிடம் படிக்க வாங்கிய ஒரு புத்தகத்தை படித்துவிட்டு  ரிட்டன் செய்வதற்காக என் மகள் அவர்களின் வீட்டிற்கு சென்றிருக்கிறாள். 

என் மகள் சத்யசாயிபாபாவின் தீவிர பக்தை என்ற காரணத்தினால் அவர்களும் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள் இதை கேட்டறிந்த என் மகள் 'இதுபோன்று  எங்கள் சுவாமி எத்தனையோ அற்புதங்களை பக்தர்களுக்கு செய்துள்ளார். அதனால் கண்டிப்பாக அது சத்ய சாயி பாபா ஆகத்தான் இருக்கும். வாருங்கள் கதவை திறந்து பார்க்கலாம்' என்று போய் கதவை திறந்து பார்த்து இருக்கிறார்கள் உள்ளே யாரும் இல்லை. அந்த அறையில் வேறு எந்த கதவும் இல்லை. இருப்பது ஒரே கதவு அந்த கதவுக்கு வெளியில் தான் கணவன் மனைவி இருவரும் உட்கார்ந்து கதவையே பார்த்துக் கொண்டு அவருக்காக காத்திருருந்திருக்கின்றார்கள்.  

இதனை என்னவென்று சொல்வது 49 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் என்றால் நம்முடைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட இருபத்தைந்து லட்சம் வருகின்றது.  யாரோ ஒரு இளைஞன் சாக இருக்கும் நபரை காப்பாற்ற திடீரென்று வருவாராம், பணத்தை கொடுப்பாராம், மறைவாராம். இதெல்லாம் நம் சுவாமியைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும். கண்டிப்பாக சுவாமி தான் அந்த நபரின் ரூபத்தில் வந்து இருக்கிறார். மேலும் ஒரு செய்தி என்னவென்றால் அந்தப் பெண்மணி ஒரு வாரம் கழித்து அவர் சொன்னதுபோலவே கர்ப்பம் தரித்துள்ளார். அதுவும் திருமணமாகி பத்து வருடம் வருடத்திற்கு பிறகு. ஆனால் அவர்கள் முன்று வாரத்திலேயே வீட்டை காலி செய்து ஆஸ்திரேலியா செல்வதாக என் மகளுக்கு தெரிவித்திருக்கிறார்கள். என்ன நடந்தது ஏது நடந்தது என்று சில விஷயங்களை அவர்கள் சொல்ல தயங்குவதாகவும், அவர்கள் அதை சொல்ல விருப்பப்படவில்லை ஆனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அப்பா என்று என் மகள் லதா தெரிவித்தாள். ஏதோ ஒரு ரூபத்தில் சுவாமி கடல்கடந்து எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என்பதை எத்தனையோ புத்தகங்களில் படித்து இருக்கின்றோம் பிற சாயி பக்தர்கள் சொல்லியும் நாம் கேட்டிருக்கிறோம். ஆகவே சுவாமி எங்கேயும் செல்லவில்லை நம்மோடு இருந்து கொண்டு தான் இருக்கின்றார். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நம்முடைய ஹிருதய வாசி.நம் பாபா பரந்துவிரிந்த நீல வானத்தை போன்று எங்கும் வியாபித்து இருப்பவர்.அவர் குறிப்பிட்ட சூட்சும ரூபத்தில் அங்கு இருக்கிறார் இங்கு இருக்கிறார் என்று யாரும் அவரை ஒரு இடத்தில் அடைக்க முடியாது. எவர் ஒருவர் தூய்மையான மனதுடன் சுவாமியை மனதார வேண்டிகிறாரோ அவர்களுக்கு கண்டிப்பாக ஓடிப்போய் ஏதேனும் ஒரு ரூபத்தில் உதவி செய்வார் என்பதற்கு இந்த சிங்கப்பூர் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. ஜெய் சாய்ராம்.

-K. P. கிருஷ்ணமூர்த்தி
ஓசூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக