தலைப்பு

வெள்ளி, 7 ஜூன், 2019

இறைவன் ஒருவனே குரு. அவனே சத்குரு!


1993இல் திருப்பதியை சேர்ந்த ராமாராவ் என்ற ஒருவர் பாபாவை பார்ப்பதற்காக புட்டபர்த்திக்கு வந்திருந்தார். அவர் ஏதோ ஒரு மூலையில் தர்மசங்கடத்தோடு தரிசனத்தில் அமர்ந்திருந்தார். பின்னர் தரிசனத்துக்கு வந்த பாபா பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி விட்டு பின்னர் உள்ளே சென்றார். பாபாவின் உதவியாளர் ஒருவர் உள்ளே இருந்து நேராக ராமராவிடம் வந்து நீங்கள்தான் ராமாராவா என்று கேட்டார். அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். உங்களை பாபா நேர்காணலுக்கு அழைக்கிறார் என்று நேர்காணல் அறைக்கு அவரை அழைத்து சென்றார்.

அவர் உள்ளே சென்றவுடன், பாபா 'என்ன ராமாராவ் நீ தானாக இங்கு வரவில்லை, நான் தான் உன்னை இங்கு வரவழைத்தேன்' என்று சொன்னார். உன்னுடைய புத்தியை ஒரு சிலர் குரு என்ற போர்வையில் சலவை செய்து உள்ளார்கள். அதன் காரணமாகவே நீ இன்னும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெறாமலே இருக்கிறாய் என்றார். அவர் அதற்கு என்ன சொல்கிறீர்கள் பாபா என்று கேட்டார். அதற்கு பாபா நான் உனக்கு ஒரு காட்சியைக் காண்பிக்கிறேன் பின்னர் நீயே புரிந்துகொள்வாய் என்று பாபா தன்னுடைய வலது உள்ளங்கையை காண்பித்தார். அதில் ஒருவர் ஒய்யாரமாக நாற்காலியில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சியில் சினிமா பாடலை பார்த்துக் கொண்டே பக்தர்கள் கொடுத்த பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார்.

ஒரு 15 வினாடிகள் ஓடிய அந்த காட்சி முடிந்த பின்னர் பாபா அவரைப் பார்த்துக் கேட்டார் இவர் யாரென்று அடையாளம் தெரிகிறதா என்றார். அதற்கு அவர் இவர்தான் என்னுடைய குருநாதர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி அடைந்துவிட்டார் என்று கூறினார். அதற்கு பாபா, குரு என்பதற்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? என்று கேட்டார். 'குரு என்பவர் ஒரு துளி கூட சுயநலம் இல்லாமல் அவரை நோக்கி வரும் அன்பர்களை இறைவனை நோக்கி சரியான பாதையில் வழி அனுப்பி வைப்பவரே குரு. ஆனால் நீ குரு என்று வணங்கிவரும் அவனோ, தான்தான் சர்வமும் என்று உன்னை ஏமாற்றி இருக்கிறான். இது செய்யக் கூடாது, அது செய்யக் கூடாது என்று உனக்கு ஒரு சில கோட்பாடுகளை வகுத்து உன்னை போன்றவர்களை கட்டுப்படுத்தி இறைவனிடம் செல்லாமல் தடுத்து இருக்கிறான். ஏனென்றால் அவனுக்கு உன்னைப் போன்ற கும்பல்கள் அவனை சுற்றி இருந்து, அவனின் புகழ் பாட வேண்டும் என்பதே அவனுடைய நோக்கம். இதன் காரணமாகவே அவன் இந்த பிறவியில் ஒரு ஊனமுற்றவனாய், அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்' என்றார் பாபா.

வெறும் மந்திர உபன்யாசகளையும், பூஜை புனஸ்காரங்களை செய்தால் மட்டும் கடவுளிடம் செல்ல முடியாது. கடவுளிடம் செல்ல வேண்டுமென்றால் உன்னை அவரிடம் ஒப்படைத்து முழு சரணாகதி அடைய வேண்டும். சரணாகதி என்றால் இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதே. அப்படிப்பட்ட அந்த இறைவனின் சரணத்தைக் கெட்டியாகப் பற்ற வேண்டியது உன் கடமை. இப்படி சிலரை குரு எனக் கொண்டு வழிபடுவதன் மூலம் நேரத்தை வீணாக்குகிறாய். இருப்பது ஒரு குருவே அது இறைவன் மட்டுமே. ஆனால் நீயோ யாரோ ஒருவனின் பேச்சை கேட்டு நடந்துகொண்டு ஆன்மீகத்தில் முன்னேற முடியவில்லை என்று வருத்தப்படுகிறாயே இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். உன்னுடைய முட்டாள்தனத்தை போக்கவே உன்னை நான் இங்கு வரவழைத்தேன் என்று சொல்லி அவருக்கு விபூதி சிருஷ்டித்து கொடுத்து அனுப்பி வைத்தார். அவரும் தெளிவுடன் மகிழ்ச்சியாய் அறையை விட்டு வெளியேறினார்.


ஆதாரம்: 'Sai Mahima' புத்தகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக