தலைப்பு

புதன், 26 ஜூன், 2019

காயரஸமும் சாயிரஸமும்!


பாபாவை போல் பார்த்துப் பார்த்து செய்ய யாரால் முடியும்?

அம்பத்தூரில் மாடி வீட்டில் நாங்கள் குடியிருந்த போது இரவு தோறும் ஒரு குறிப்பிட்ட மூலையில் ஃபிளாஸ்கில் பாலும், வெகு 'லைட்'டான சிற்றுண்டி எதுவேணும் அம்மா வைத்திருப்பாள். தியான முடித்து வந்து அவற்றை அருந்துவேன்.

அன்று பாலோடு அப்பளம் சுட்டு 'இக்ளு'வில் வைத்திருந்தது. ஒரு கப்பும் அப்பெட்டியில் இருந்தது. கப்பில் என்ன இருக்கிறது என்று பார்த்தேன். பஞ்சாமிர்தம்.

 சாயியின் அன்பு பல சோதரரின் அன்பளிப்புகளாக பாய்வதில் எவரோ பழனி பஞ்சாமிர்தம் கொண்டுவந்து கொடுத்திருப்பதாக நினைத்தேன். அப்பளத்தையும் பாலையும் விழுங்கியபின் அப்பன் பிரசாதத்துடன் தலை கட்ட நினைத்தேன்.

அப்படியே கடைசியாக கப்பை வாயில் சாய்த்துக்கொண்டு சற்று விழுங்கியும் விட்டதில்......

அப்பப்பா ,நான் பட்ட அவஸ்தை!பகபகவென்று தொண்டை எரிய, அடிவயிறு வரை பிடுங்கிக் கொள்வது போல உறைப்பு உள்ளே பாய, கண்கள் வர்க்ஷிக்க, விக்கி இருமலெடுக்க நான் பட்ட பாடு!

வீட்டுக்கார மாமி காய ரசம் செய்திருக்கிறார். 'அண்ணா'வுக்கென்று மிளகாய் போடாமல் இஞ்சி மட்டும் போட்டு தனியாக தயாரித்தனுப்பியிருக்கிறார். ஆயினும் காரமே சேர்த்துக் கொள்ள முடியாத ஸாது(!) அண்ணா அந்த காய ரஸத்திலும் கூட ஓரிரு சொட்டு தான் தயிர் சாதத்தோடு 'தொட்டு'க் கொள்ள முடியும். இன்று அதை பஞ்சாமிருதமாக எண்ணி ஓரிரு ஸ்பூனே குடித்து விட்டதால் தான் இந்த பாடு!

"சாய்ராமா அத்தனை நல்ல தியானானந்தம் தந்தவுடன் ஏனப்பா இப்படி அக்னி திராவகத்தை கொடுப்பது போல் செய்கிறாய்?"என்று எண்ணினேன்.

எண்ணியது தான் தாமதம், நான்கு வீடு தள்ளி இருந்த ஸ்ரீமதி தங்கம் சுப்ரமணியனின் வீட்டை சேர்ந்த பையன் கப்பும் கையுமாக உள்ளே நுழைந்தான். வீட்டிலே யாரோ பழனி சென்று வந்ததாகச் சொல்லி, பஞ்சாமிர்தம் நிறைந்த கப்பை கொடுத்தான்! திருப்புகழ் படம் தானே?

...........லீலாவி தர!
மதுர! பநுவல்தரு பழனிதரு கோலாஹ லவ!
அமரர் பெருமாளே!

ஆதாரம்:  *அற்புதம் அறுபது*, ரா. கணபதி

1 கருத்து: