தலைப்பு

வியாழன், 20 ஜூன், 2019

பிழைத்த குழந்தையை குழைத்த அருமை!


கோலாலம்பூரில் வசித்த ஆறரை வயது தேவேந்திரனின் மெய்சிலிர்க்கும் அனுபவம். 

1976இல் கோலாலம்பூரில் இருந்த டாக்டர் கே.வி. சேகராவின் ஆறரை வயது பிள்ளை தேவேந்திரனுக்கு தொண்டையில் உபாதை ஏற்பட்டது. டான்ஸிலிடிஸ் என கருதி, டாக்டர் தந்தை ட்ரீட் செய்தார். உபாதை அதிகமாயிற்று. ஈ.என். டி.ஸ்பெஷலிட்டிடம் காட்டினார். தொண்டையிலிருந்து இரத்தமாக பெருக்கிய குழந்தையை அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொண்டார்.

வியாதி புரிபடவில்லை. அந்த ஸ்பெஷலிஸ்ட் இன்னும் பல ஸ்பெஷலிஸ்டுகளிடம் கலந்து ஆலோசித்தும் முடிவு செய்ய முடியாமல் கலக்கமாகவே இருந்தது. குருதி கொட்டுவதோ நிற்கவில்லை.  ப்ராணாபத்தான நிலை ஏற்பட்டது. மறுதினம் ரத்தம் கொடுத்தார்கள். அது புது விபரீதத்தை உண்டாக்கிற்று. குழந்தையின் உடலெல்லாம் சொறி போல் வாரிக் கொட்டி விட்டது.

வைத்தியத்தால் மகனை காப்பதற்கில்லை என்று வைத்திய தந்தைக்கு நன்றாக தெரிந்து விட்டது. இம்மாதிரி சமயங்களில் செய்யக் கூடிய ஒன்றே ஒன்றை அவர் செய்யலானார். பெர்ட்ரன்ட் ரஸ்ஸலை சேர்ந்த நிரீச்வரவாதியாயிருந்த அவர் இப்போது ஈஸ்வரனுக்கு பிரார்த்திக்கலானார்.

ஈசன் அவரது சகோதரரின் மனைவியார் மூலம் அதற்கு விடை கொடுத்தான்! வழக்குரைஞரான அச்சகோதரர் சிவசேகராவையோ அவரது குடும்பத்தினரையோ குறிப்பாக சாய் பக்தர்கள் என்பதற்கில்லை. ஆயினும் அவர் வீட்டு வாயில்கதவுக்கு மேல் பாபா படம் ஒன்று மாட்டி வைத்திருந்தார். அவருடைய மனைவியார் உறவினர் ஒருவரிடம் இருந்து பாபாவின் விபூதி பொட்டலம் பெற்றிருந்தார். தேவேந்திரனை பார்த்து வர புறப்பட்ட கணவர் கையில் அம்மாள் அதை போட்டார்.

வாலியம் ஊசி போட்டதில் உறங்கிக் கிடந்த குழந்தையை - மீளா உறக்கத்திற்கு நழுவி கொண்டிருப்பவனாகவே டாக்டர்கள் கருதி விட்ட குழந்தையை, சிவசேகரா பார்த்தார். பாபாவை மனமார பிரார்த்தித்தார். விபூதியை குழந்தை மேல் பூசினார். மௌனமாக திரும்பிவிட்டார். அப்போது அங்கு வேறு ஒருவரும் இல்லை.

பிள்ளை கண் திறப்பானா  என்ற கேள்வியுடன் மறுநாள் காலை தகப்பனார் கட்டில் அருகே அமர, பிள்ளை பலபலவென்று கண்ணை திறந்தான். அவனிடம் ஒரு அதிசய புது தளிர்ப்பு காணப்பட்டது. அதிசய கதை சொன்னான். "அங்கிள்  வீட்டு வாசலுக்கு மேலே ஒரு ஆள் படம் மாட்டி இருக்குமே! சேப்பா டிரஸ் பண்ணிகிட்டு, பும்முனு முடி வச்சுக்கிட்டு இருப்பாரே, அந்த ஆள் நேத்து நைட் என் கிட்டே வந்தாரப்பா! கனா இல்லை, நிஜமா வந்தார். அப்புறம் அந்த ஆள் என் தலையிலே கையை வைத்தார். 'செத்தவன் பொழச்சிட்டே' என்னார். அப்புறம் எங்கேயோ எப்படியோ போயிட்டார்" என்றான்.

கதையை வளர்த்துவானேன்? குருதி கொட்டுவது நின்று அன்றே குழந்தை நார்மலானான். வாலியம் மருந்து ஸ்ட்ராங்க் டோஸ் ஏற்றி இருந்தும் அன்றைக்கே ஏக சுறுசுறுப்பாக செயல்படவும் செய்தான். வைத்தியர்கள் மூக்கில் விரலை வைத்தனர். தன் தலையில் கை வைத்த 'பும் தலை ஆளை' பற்றி அவர்களிடமும் தேவேந்திரன் சொன்னான்.

'ஆளி'ன் கைவிசேஷம் நோவைத் தீர்த்ததோடு நின்றதா? குழந்தை உள்ளத்தில் பக்தியை வயது முதிர்ந்தோருக்கும் அபூர்வமாகவே வாய்க்கும் உண்மையான இறை அன்பை ஊட்டி விட்டது. அம்மாவிடம் ஆறு வயசு பிள்ளை சொன்னான்; "அந்த ஆளை நான் போய் பார்த்து 'தாங்க்' பண்ணனும்".

"அது சரி, அவர் உன்னை பார்த்து தேங்க்ஸ் வாங்கிக் கொள்வாரென்று உனக்கு அவ்வளவு நிச்சயமாக தோன்றுகிறதா? என்று தாய் கேட்க, உண்மை பக்தி உரையாயிற்று சின்ன உதடுகளில்! என்னைப் பார்ப்பார்னு  தான் தோணறது. அவர் பாக்காட்டாலும் பரவாயில்லை. எனக்கு அவரை "தேங்க் பண்ணியாகணும்" என்றான் குழந்தை!

ஆதாரம்:  அற்புதம் அறுபது, ரா. கணபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக