தலைப்பு

புதன், 12 ஜூன், 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 15 | இசைக்காத குரலை இசைக்கச் செய்த இறைமை (PART 1)


புட்டபர்த்தியில் பகவான், அன்றாட நிகழ்ச்சியாக நிகழ்த்திக் கொண்டிருந்த பல லீலா வினோதங்களில், சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன் நான் நேரில் பார்த்து பிரமித்த ஓர் அற்புத லீலையைப் பற்றியும், அதற்கும் எனக்கும் தொடர்புடைய, என் அனுபவமாகவே பகவான் நிகழ்த்திக் காட்டிய அற்புதத்தோடு கூடிய அருள் பொழிவையும், இனிவரும் வரிகளில் உங்களுக்கு விவரிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

இதுபோன்ற தெய்வாம்சம் நிறைந்த சம்பவங்களை நீங்கள் படித்து பரவசப்படுவது என்ற பரமபாகவதச் செயலுக்கு ‘நான் காரணமாகிறேன்’ என்ற கர்வ சிந்தனை துளியும் எனக்கில்லை என்பதனை நிச்சயமாகச் சொல்கிறேன். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற பேரருள் சிந்தனைப்படி, இதுபோன்ற எனது அனுபவங்களை எழுதக் கட்டளை பிறப்பித்து எழுத வைத்திருப்பவரே பகவான்தான் என்ற ஆணித்தரமான சிந்தனையை நிலைநிறுத்திய வண்ணம், இத்தொகுப்பு எழுதப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை விளக்கம். வேறு விதமான ஆன்மீகக் கருத்துடன் கூடிய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ‘நானாகிய நான் தான்’ இதனை எழுதி வெளிப்படுத்துகிறது என்பதே முடிவான அத்வைத  பாவநிலை!

முன்பெல்லாம் நானும் எனது நண்பர்களில் ஓரிருவரும் அடிக்கடி புட்டபர்த்தி செல்வது வழக்கம். பலமுறை நான் தனித்தும் சென்றிருக்கிறேன். அவ்வாறாக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு தடவை நானும் என் நண்பர்களும் புட்டபர்த்திக்குப் பயணம் மேற்கொண்டு பெனுகொண்டா ரயில்நிலையப் பயணிகள் தங்கும் அறையில் குளியல் முதலியவற்றை முடித்துக்கொள்வதில் முனைந்திருந்த போது, குண்டக்கல்லிலிருந்து ஒரு ரயில்வண்டி பெனுகொண்டா ரயில்நிலையம் வந்து நின்றது. அப்போது ரயில் நிலையத்தில் ஏற்படும் பரபரப்பை வேடிக்கை பார்ப்பதில், ரயில்வேயில் பணிபுரியும் எங்களுக்கும் ஆர்வம் உண்டு என்பதை நிரூபிக்கும் வண்ணம், நானும் எனது நண்பர்களும் தங்கும் அறையில் இருந்து வெளியே வந்து வேடிக்கை பார்த்தோம். ஒரு  உயரமான நல்ல உடல் அமைப்புடன் கூடிய சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, நடக்கச் செயலற்ற ஒரு வயதான கிழவரை அணைத்தபடித் தன்மேல் தாங்கிய வண்ணம், மிகவும் சிரமத்துடன் ரயில்வண்டியின் ஒரு பெட்டியில் இருந்து இறங்குவதை நாங்கள் பார்த்தோம். அடுத்த கணமே அந்தப் பெண்மணி படும் கஷ்டத்தைப் பார்த்து நாங்கள் ஓடிச்சென்று, அந்தக் கிழவரைத் தாங்கிப்பிடித்து மெதுவாக பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றோம். அந்தக் கிழவர் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடலில் ஒரு பாகம் செயலற்று இருந்தது. மற்றவர் உதவியுடன் பாதிக்கப்படாத கால் பாதத்தைத் தரையில் ஊன்றியபடி, அவரால் மெதுவாக நகரமுடிவதைப் பார்த்தோம். அவரால் எதுவும் பேச முடியவில்லை. பயணிகள் தங்கும் அறை வந்து சேர்ந்ததும், அந்தப் பெண்மணி எங்களைப் பார்த்து ஆங்கிலத்தில், "நீங்கள் எல்லோரும் அந்தப் பரந்த தலை உடையவரைக் காண புட்டபர்த்தி செல்ல உள்ளீர்களா?" என்று கேட்டாள்.

நாங்கள் 'ஆம் 'என்று சொல்லிவிட்டு "அவ்வாறு நீங்கள் சாமியைப் பற்றி பேசக்கூடாது "என்று சொன்னோம்.

அந்தப் பெண்மணி கோபாவேசத்துடன் "தற்காலத்தில் இது போன்றவர்கள் நிறையப் பேர் எங்கு பார்த்தாலும் மலிந்துவிட்டார்கள்; தற்கால விஞ்ஞான உலகத்தில், பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட எனது இந்தத் தந்தையார் போன்ற பித்துப்பிடித்தவர்கள், இவ்வித சாமியார்களால் இந்தவகை நோயினை நிவர்த்திக்க முடியும் என்று நம்புகிறார்கள்! நான் இவருக்கு ஒரே பெண் என்பதால், எனது கடமையை எண்ணி அவரது ஆசைக்காக, ஒருமுறை அந்தச் சாமியாரிடம் அழைத்துச் செல்லலாம் என்று கல்கத்தாவில் இருந்து வருகிறேன். எனக்கு சீரடி பாபாமேல் நம்பிக்கை உண்டு. இந்தச் சாமியார் அவருடைய மறுபிறவி என்று சொல்லிக் கொள்வதெல்லாம் வெறும் பகல்வேஷம்" என்று மிகவும் வெகுண்டபடி படபடப்போடு பேசினாள்.

அந்தப் பெண்மணியை உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று சொல்லி, பாபாவிடம் இது போன்றோர் பலர் வந்து பயனடைந்துள்ளார்கள், உங்கள் தகப்பனாருக்கு பிராப்தம் இருந்தால் சுவாமி அவரை குணப்படுத்துவார்; நம்பிக்கை மலையையே  நகர்த்தும் என்று நான் சொன்னேன். அந்தப் பெண் "சவால் விடுகிறீர்களா?" என்று திருப்பிக் கேட்டபோது, “ஆம்! சவாலாகவே சொல்கிறேன்” என்றேன். "நானும் உங்கள் சவாலை ஏற்கிறேன், நிச்சயம் அந்தப் பாபாவினால் எனது தகப்பனாருக்குள்ள பாரிசவாயு நோயைக் குணப்படுத்த முடியாது" என்றாள் அந்தப் பெண். எனக்கும் என் நண்பர்களுக்கும், சுவாமியைப் பற்றி அவள் வாய்க்கு வந்தபடி பேசுகிறாளே  என்று மனக்கசப்பு ஏற்பட்டது.

நாங்கள் சிறிது நேரத்தில் புட்டபர்த்தி செல்ல ஆயத்தமானோம். அவளும் உடன் அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று விரும்பியதால், நாங்கள் எல்லோரும் பிரசாந்தி நிலையம் அடைந்தோம். மறுநாள் விடியற்காலை, அந்த கிழவரை சுவாமியின் நேர்காணல் அறைக்கு அருகில், முன்வரிசையில் உட்கார வைக்க நாங்கள் முயற்சி எடுத்துக் கொண்டோம். அவ்வாறே அவரும் அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண், பெண்கள் குழாத்தில், வெளியே மணலில் உட்கார்ந்து கொண்டாள். நாங்கள் சுவாமியின் நேர்காணலுக்கு வந்திருந்த மற்றவர்களுடன் பின்வரிசையில் உட்கார்ந்தோம் .சுவாமி கதவைத் திறந்ததும், ஒருமுறை எல்லோரையும் பார்ப்பது வழக்கம். கிழவரையே பார்த்த சுவாமி, அங்கிருந்து சேவாதளத் தொண்டர் இருவரை அழைத்து, அந்தக் கிழவரை நேர்காணல் அறைக்கு அழைத்துவரப் பணித்தார். அவ்வாறு அந்த வியாதியஸ்தர் உள்ளே அழைத்து செல்லப்பட்டதும், பெண்கள் குழாத்தில் உட்கார்ந்திருந்த, அந்த 'வாயாடி' பெண்ணை, பகவான் தனது விரலால் சுட்டிக் காட்டி அழைத்தார். ‘தான்தான் உள்ளே அழைத்து செல்லப்பட்டிருப்பவருடைய உறவினர் என்பது இவர் எவ்வாறு அறிவார்? சரியாக சுட்டிக் காட்டி நம்மை கூப்பிடுகிறாரே!’ என்று அந்தப் பெண் எண்ணுவதான அதிர்ச்சி பாவம் அவள் முகத்தில் காணப்பட்டதை, நாங்கள் அறிந்துகொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நான் அவளுக்கு விட்ட சவாலில் 50 சதவீத வெற்றி எனக்குக் கிட்டிவிட்டதை எனக்குள்ளே உணர்ந்து, பெருமிதம் கொண்டேன். பகவானை, பகவானது லீலா வினோதத்தை எண்ணி எண்ணி, என்னுள்ளே துதித்து வழிபட்டேன்.

உள்ளே சென்ற தகப்பனும் பெண்ணும், வெகுநேரமாக வெளியே வரக் காணோம். சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. அதிசயங்களில் அதிசயம்! இரண்டு சேவாதளத்தினர் இருபுறமும் தாங்கிப் பிடித்து, உள்ளே அழைத்துச்செல்லப்பட்ட பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டிருந்த 72 வயதுக் கிழவர், உடம்பெல்லாம் விபூதி தடவப்பட்ட காட்சியோடு, யார் உதவியும் இன்றி, தாமாகவே நடந்து வெளியே வந்த காட்சியை நாங்கள் எல்லோரும் பார்த்து "சாய்ராம் சாய்ராம்" என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தோம். அந்தக் கிழவர் பகவானால் பரிபூரணமாக குணமாக்கப் பட்டுவிட்டார். எப்பேர்பட்ட தெய்வீகப் புரட்சி! என்னிடம் சவால் விட்ட அந்தப் பெண்மணி, நேர்காணல் அறையிலிருந்து வெளியே வருகையில், இரு கரங்களையும் கூப்பியவாறு, "ஹே நாராயணா, ஹே கோவிந்தா" என்று உரக்கக் கூறியவண்ணம், கண்ணீர் வடித்து வருவதைப் பார்த்தோம். அந்தப் பெண்ணின் அறியாமையும்,அகம்பாவமும் அழிந்தொழிந்ததைப் பார்த்த நான், மீதி 50 சதவீதமும்  சவாலில்   வெற்றி கண்டது உணர்ந்து மெய்சிலிர்த்தேன். மேற்கொண்டு  நடந்துவந்து, தகப்பனார் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போக முயன்ற அந்தப் பெண்மணி என்னை பார்த்ததும் “சாய் மோகன், நீங்கள் சவாலில் ஜெயித்து விட்டீர்கள்" என்று சிறிது உரத்த குரலில் பேச ஆரம்பித்தவளை, வாயமர்த்திய நான், இங்கு சத்தம் போடக்கூடாது, பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி வெளியே சென்று அமரும்படி கூறினேன்.

அன்று காலை, வேறு எவருக்கும் பகவான் நேர்காணல் அளிக்காததால் நாங்கள் யாவரும் பஜனை வழிபாட்டில் கலந்துகொண்டு சுவாமியையும் தரிசித்த பிறகு, மதிய உணவுக்காக கேண்டீன் சென்றோம். கல்கத்தா பெண்மணி தனது தகப்பனாருடன் வந்து எங்களுடன் சாப்பிட உட்கார்ந்து கொண்டாள். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், தான் பகவானது அருள் மகிமையைப் புரிந்து கொள்ளாமல், மனப்பக்குவமற்ற நிலையில், ஏதேதோ பகவானைப் பற்றிப் பேசிவிட்டதாகக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்த அந்தப் பெண்மணி, "பரம்பொருளின் அவதாரமே நமது பாபா! இல்லாவிட்டால் ,எனது தகப்பனாரின் பாரிசவாயு நோயை, தொட்ட மாத்திரத்திலேயே ஒருவரால் குணப்படுத்த முடியுமா? இந்தக் கலியுகத்தில் பிரத்யட்ச தெய்வமாக  பாபா காட்சி தருகிறார்” என்று சொல்லிக் கண்ணீர் வடித்தாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக