தலைப்பு

வியாழன், 13 ஜூன், 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 15 | இசைக்காத குரலை இசைக்கச் செய்த இறைமை (PART 2) நிறைவுப் பகுதி


அன்றைய தினம் மாலை எனக்கும் நேர்காணல் கிடைத்தது. மற்ற எனது நண்பர்களுக்கும் சுவாமி அனுக்கிரகம் செய்தார். ஆதலால் நாங்கள் யாவரும் மறுநாள் அங்கிருந்து புறப்படச் சித்தமானோம். கல்கத்தா பெண்மணியும், அவள் தகப்பனாருடன் எங்களைப் பின்தொடர விரும்பியதால், நாங்கள் யாவரும் பெனுகொண்டா ரயில்நிலையம் சென்றடைந்தோம். அந்த நாட்களில் பெனுகொண்டா ரயில்நிலையத்தில்,  வடக்கே குண்டக்கல் பக்கம் மிகச்சில  ரயில்களும், தெற்கே பெங்களூர்
பக்கம் மிகச்சில ரயில்களுமே செல்லும். ஆதலால், ஒரு ரயில் வந்து சென்று மற்றொரு ரயில் வர, மூன்று அல்லது நான்கு மணி நேரம் இடைவெளி இருக்கும். எனவே நாங்கள் புட்டபர்த்திக்குப் போகும்போதும் சரி, புட்டபர்த்தியில் இருந்து திரும்பும் போதும் சரி, பெனுகொண்டா  ரயில் நிலையத்தில், பயணிகள் தங்கும் அறையில், ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் சாயி பஜனை செய்வோம். அந்த ரயில்நிலைய அதிகாரிகள் மற்றும் சிப்பந்திகள்கூட எங்களுடன் பஜனை வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் நாங்கள் யாவரும் பெனுகொண்டா வந்து அடைந்ததும், எனக்கு மற்றும் எனது நண்பர்களுக்கு பெங்களூர் பக்கம் செல்லவும் சரி, கல்கத்தா நபர்களுக்கு குண்டக்கல் பக்கம் செல்லவும் சரி, அவரவர் மார்க்க ரயில்கள் வர இன்னும் சுமார் இரண்டு மணிநேர இடைவெளி இருந்ததை அறிந்து கொண்டோம். எங்கள் வழக்கப்படி நானும் நண்பர்களும், ரயில் நிலையத் தங்கும் அறையில் பஜனை வழிபாடு நிகழ்த்த முடிவு செய்தோம்.

நான் முக்கியப் பாடகன். பஜனைகளில் நான் அதிகப் பாடல்களை பாடுவது வழக்கமும்கூட! பஜனை துவக்கி, சுமார் பத்துப் பாடல்கள் பாடிய பிறகு மங்கள ஆரத்தியும் செய்து முடித்தோம். யாவற்றையும் கவனமாகவும் மௌனமாகவும் பார்த்துக்கொண்டிருந்த கல்கத்தா பெண்மணி என்னிடம் “நீங்கள் பாடுவதைக் கேட்டு நான் பிரமித்ததோடல்லாமல், மயங்கிவிட்டேன். மிகவும் இனிமையான குரல் உங்களுக்கு, சங்கீதம் கற்றுக் கொண்டவர்களால்தான் இவ்வளவு சாஸ்திரீயமாகப் பாடமுடியும், நீங்கள் சங்கீதம் கற்று உள்ளீர்களா?” என்று கேட்டாள்.

நான் “உங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி; நான் சங்கீதம் கற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல; சங்கீத விவரங்கள்பற்றி கூட ஏதும் அறியாதவன்” என்று சொன்னதும், ஆச்சரியப் பட்டவளாய், "நீங்கள் பொய் சொல்கிறீர்கள், சங்கீதம்பற்றி அறியாமல், இவ்வளவு சாஸ்திரீயமாகப் பாடமுடியாது, நான் ஒரு எம்.ஏ. மியூசிக் தேர்வு பெற்றவள் என்பதால் அதுபற்றி நன்கு அறிவேன். வரும் வெள்ளிக்கிழமை இரவு பத்தரை மணிக்கு கல்கத்தா வானொலி நிலையத்தில் இருந்து ஒலிபரப்பாகும் எனது ஹிந்துஸ்தானி இசையைத் தயவு செய்து திருச்சி சென்றதும் கேளுங்கள்" என்றாள்.

மறுபடியும் நான் சாஸ்திரீய சங்கீதம் பற்றி ஏதும் அறியாதவன் என்பதை அவளிடம் சொல்லி, அவளது ஹிந்துஸ்தானி இசையைக் கண்டிப்பாகக் கேட்பதாகச் சொன்னேன். உடனே அவள் என்னிடம் தனக்கு சில பஜனை பாடல்களை கற்றுத் தருமாறு கோரினாள். அவளை  உட்காரச் சொல்லி, விநாயகர் பாட்டு ஒன்றும் மற்ற நாமாவளிப் பாடல்கள் சிலவற்றையும் கற்றுக்கொடுத்தேன். நான் கற்றுக்கொடுத்த படியே மிக அழகாக ஸ்ருதி பிடித்து, தாளத்துடன் திரும்ப அவள் அந்தப் பாடல்களைப் பாடியது, அவள் எம்.ஏ. மியூசிக் என்பதைப் பறைசாற்றியது. நான் கற்றுக்கொடுத்த பாடல்கள் பூராவும் சமஸ்கிருதச் சொற்களில் அமைந்திருந்ததால், அவற்றிற்கு அவள் அர்த்தமும் கேட்டுத் தெரிந்துகொண்டு எல்லாவற்றையும் குறித்துக் கொண்டாள்.

குண்டக்கல் பக்கம் போகும் ரயில் வந்து சேர்ந்ததால், பெண், தகப்பனார் இருவரும் ரயிலில் ஏற உதவினோம். கல்கத்தா வந்து அவர்கள் வீட்டில் தங்கி, பஜனை வழிபாடு நிகழ்த்தி, அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று அந்தப் பெண்மணி என்னிடம் கேட்டுக்கொண்டு, விலாசமும் தந்து, பெண்ணும் தகப்பனாரும் விடைபெற்றுச் சென்றனர். பிறகு நாங்கள் செல்லவேண்டிய ரயில் வந்துவிடவே, நாங்களும் திருச்சிக்குப் பயணித்தோம். மறுநாள் விடிகாலை திருச்சி அடைந்தோம். நானும் எனது நண்பர்களும் அவரவர் வீடுகளுக்குச் சென்றோம்.

நான் எனது தங்குமிடத்திற்குச் சென்றதும் ,எனது காலை பணிகளை முடித்து, இறை ஸ்மரணையில் ஈடுபட்டபோது, ஒரு பஜனை பாடலைப் பாட நான் முயற்சிக்கையில் எனது குரல் எழும்பவில்லை. குரல் தொனிக்கவில்லை என்பது எனக்கு தெரிந்தது. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஏன் குரல் வரவில்லை? சளி உபாதைகூட இல்லையே, வேறு உடலில் எந்தக் கோளாறும் கிடையாது, பிறகு ஏன் குரல் பாட வரவில்லை? என்று எனக்கு நானே வேதனையுடன் கேட்டுக் கொண்டேன். மறுபடியும் மறுபடியும் முயற்சித்துப் பார்த்தேன். குரல் எழும்பவில்லை.

ஒன்றும் புரியாத நிலையில் அலுவலகம் சென்றேன். அலுவலக அலுவல்களுக்கு மத்தியிலும், அவ்வப்போது பாட முயன்று பார்த்தேன். தொனி எழும்பவில்லை. பேசும்போது சாதாரணமாய்க் குரல் சத்தம் கேட்கிறது .ஆனால் பாட முயற்சித்தால் சத்தம் வருவதில்லை. எனக்கு மிகுந்த வேதனையாய்ப் போனது. நெருங்கிய அலுவலக நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் குரல் நாண்களில் (vocal cords) ஏதாவது கோளாறு இருக்கலாம், எதற்கும் ஒரு இ.என்.டி. மருத்துவரை அணுகி கேட்டுப் பார்க்கலாம் என்று, ரயில்வே இ.என்.டி. மருத்துவரிடம் என்னை அழைத்துப் போனார்கள். அந்த மருத்துவர் என்னைப் பரிசோதித்த பிறகு, குரல்நாண் மற்றும் தொண்டை பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லையே, யாவும் சரியாக உள்ளனவே என்று சொல்லிவிட்டார்.

இப்படியே நான்கு, ஐந்து தினங்கள் சென்றுவிட்டன. குரல் தொனி திரும்புவதாக இல்லை. திருச்சி தில்லைநகர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பஜனை மண்டலியில் வியாழக்கிழமை தோறும் பஜனை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அதில் நான் முக்கியப் பாடகன். அக்காலத்தில் தற்போது உள்ளதுபோல் சாயி பஜன் கேசட்ஸ்  ஏதும் கிடையாது. மற்றவர்களுக்கு பஜன் பாடல்கள் கற்றுக்கொடுக்கும் நல்ல பணியையும் நான் செய்துவந்தேன் .ஆதலால் என் குரல் கோளாறு என்பது சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியது. பஜனைகளில் நான் பாடுவது நின்று போயிற்று. வியாழக்கிழமை பஜனை வழிபாடு சோபிக்கவில்லை என்ற பரவலான அபிப்பிராயமும் பக்தர்களிடையே எழுந்தது. ஆதலால், நண்பர்கள் யாவரும் நான் புட்டபர்த்தி சென்று பகவானிடம் நிலைமையைச் சொல்லி, எனது குரல் உபாதை நீங்க வழி தேடவேண்டும், அவர்தான் சரியான வைத்தியர், சென்று வா என்று என்னை வற்புறுத்தி, உடனே புட்டபர்த்தி சென்று வர நிர்ப்பந்தித்தனர். என்னைப் பொறுத்தவரை என் குரல் ஒலி பாதிப்பு என்பது எனக்கு ஒரு பேரிழப்பு என்பதே எனது பெருத்த வேதனை. அந்தச் சில நாட்கள் நான் உற்சாகமே அற்றிருந்தேன்.

ஆகவே என் குரல்வளம் எனக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதில் யார், எது சொன்னாலும் கேட்டு உடனே அந்த முயற்சியை மேற்கொள்ள சித்தமாக இருந்தேன். என் நண்பர்கள் நான் புட்டபர்த்தி சென்று வரவேண்டும் என்று சொன்ன உடனேயே பயணப்பட்டு விட்டேன். புட்டபர்த்தியில் சுவாமி நேர்காணலுக்கு என்னை உள்ளே அழைத்தார். எனது பலதரப்பட்ட குடும்ப மற்றும் சொந்த வாழ்க்கை விஷயங்களாக பலவற்றைப் பற்றி சுவாமி என்னிடம் பேசினார். ஓரிரு ஆன்மீகக் கருத்துக்களையும், அதன் விளக்கங்களையும் கூடச் சொன்னார். அந்த தெய்வீக சம்பாஷணைகளை கேட்டலிலும், அந்த தெய்வீக உருவை பார்த்த படியேயும், நான் கண்ணீர் சிந்தி, என்னை மறந்து துவள நேர்ந்த எனக்கு, அவர் ஆறுதல் சொல்லியும், என்னைத் தன்மேல் அரவணைத்துக் கொண்டும், என் கண்ணீரைத் துடைத்தும், என்னை ஆட்கொண்ட சுவாமியின் திருமுன் என்னை மறந்தேன், மறந்தேன் என்பதல்ல, என்னையே இழந்தேன்!

இந்தச் சூழலில், சுவாமி கதவைத் திறந்து வெளியே செல்ல அனுமதித்ததும், நடந்து வெளியே செல்வது போன்ற நமது எந்தச் சாதாரண செயலும், அனிச்சைச் செயல்களாகவே நிகழும். சில நிமிடங்கள் நமது உணர்வுகள் நம்மிடம் இல்லாது போயிருக்கும். வெளியே வந்த பிறகு பல மாற்றுச் சூழல்களின் அதிர்வுகள் நம்மைப் பாதிக்க ஆரம்பித்ததும்தான், வழக்கமான நமது உணர்வினைத் திரும்பப் பெறுவதை அறிவோம். பகவானுடன் ஒவ்வொரு சந்திப்பிற்குப் பிறகும், எனக்கு ஏற்பட்ட இம்மாதிரியான அனுபவம், பகவானைத் தனியே சந்திக்க நேரிட்ட எல்லோருக்கும் அனேகமாக ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். “எனக்கு முன்னால் நீ இருக்கும்போது நான் சங்கல்பித்துக் கொண்டால் எனது தெய்வ அதிர்வலைகள் உன்னை சார்ஜ் செய்யும்”' என்று சுவாமி சொல்லுகிறாரே அதன் அனுபவ நிலைதான் நான் மேலே குறிப்பிட்டது!

ஆதலால் நான் எதற்காக அங்கு சென்றேனோ, அதுபற்றிய நிகழ்வு ஏதும் அந்த முதல் சந்திப்பில் ஏற்படவில்லை. எனது நிலைபற்றி புட்டபர்த்தியில் அப்போது இருந்த எனது நண்பர்கள் சிலரிடம் சொன்னபோது, அவர்கள் நாளையும் நேர்காணலுக்கு உட்காருங்கள், சுவாமி உங்களிடம் கருணை காட்டுவார் என்றார்கள். மறுநாளும் அவ்வாறே உட்கார்ந்தேன். சுவாமி கருணை காட்டுவார் என்று அவர்கள் சொன்னதையே எண்ணிக்கொண்டு, சுவாமி நேர்காணலில் நமது குரல் இழப்புபற்றி கண்டிப்பாகக் கேட்டு, ஆவன செய்வார் ,அவர் எல்லாம் அறிந்தவர்தானே என்று சிந்தித்தவாறு உட்கார்ந்திருந்தேன். ஆனால் சுவாமி நேர்காணலுக்கு என்னை அழைக்கவே இல்லை. எனக்கு ஒரே ஏமாற்றம்!!

அன்று மாலை மறுபடியும் நேர்காணலுக்கு உட்கார்ந்தேன். "நமது குறைபாடு பற்றி சுவாமியே கேட்கட்டும்" என்று எண்ணியபடியே இருக்கையில் சுவாமியும் என்னை உள்ளே அழைத்தார். எனது அண்ணனைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் ரொம்பவும் நல்லவர் பங்காரு என்று சொல்லிய வண்ணம், அவர் அக்காலத்திய கலைமகள் என்ற மாதாந்திரப் பத்திரிகை அலுவலகத்தில் இருந்தவராதலால், அதுபற்றிக் கேட்டு சுவாமியின் தெய்வீக மாத இதழான சனாதன சாரதிக்கு அட்டைப்படம் போட நல்லதான ஒரு வரைபடம் எனது அண்ணன் மூலம் தயாரித்துக் கொணரும்படி என்னிடம் சொல்லி, மற்ற விஷயங்கள் சிலவற்றையும் சொல்லி, என்னை வெளியே அனுப்பிவிட்டார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘எல்லாம் அறிந்தவர்’ நாம் வந்திருக்கும் விஷயம்பற்றிக் கேட்காமல், வேறு என்னவெல்லாமோ பேசுகிறாரே, கேட்கிறாரே! இனி அவரே கேட்டால்தான் நாம் சொல்ல வேண்டும். "தாய்க்குத் தெரியாதா சேயின் அவலம்” என்று எண்ணியவாறே, வெளியே வந்து மறுதினம் திருச்சிக்குத் திரும்பி விட்டேன்.

அங்கு சென்றதும் மறுபடியும் நண்பர்களின் அங்கலாய்ப்புகளும், அனுதாபங்களும் தொடர்ந்தன. அவ்வளவு தூரம் சென்றுவிட்டு சுவாமியின் தரிசனமும், நேர்காணலும் பாக்கியமாகக் கிடைத்த பிறகும்,  சுவாமி கேட்காவிட்டாலும், நானே சுவாமியிடம், விவரமாக எடுத்துச் சொல்லி, தீர்வு கண்டு திரும்பி இருக்க வேண்டாமா என்றவாறு சொல்லி, சிலர் நிந்திக்கவும் செய்தார்கள். மறுபடியும் சில வாரங்கள் சென்றன. என் குரல் பாட வரவில்லை. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். மறுபடியும் நண்பர்களின் வற்புறுத்தல்கள், நான் புட்டபர்த்தி சென்றேன். சுவாமி நேர்காணலுக்கு அழைத்தார். சென்ற தடவை என்ன நடந்ததோ, அதுவே நடந்தது. சுவாமி என் குரல் கோளாறு பற்றி எதுவும் கேட்கவில்லை. சுவாமியே கேட்கட்டும் என்ற மனோபாவம் என்னிடம் வலுத்திருந்தது. அது ஏன் என்று மட்டும் எனக்குத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது பற்றியும் என்னால் தெளிவாக எடுத்துக் கூற முடியவில்லை. திருச்சி திரும்பிய நான் பழைய சூழலிலேயே என் பணிகளை தொடர்ந்தேன்.

நாட்கள் சென்றன. நண்பர்கள் மறுபடியும் புட்டபர்த்தி செல்ல என்னைத் தூண்டினார். அந்தச் சமயம் எனக்கு என் குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்ததால், சுவாமியை பார்க்க எனக்கும் அப்போது மிகுந்த அவசியம் இருந்தது. சுவாமி எது செய்தாலும் சரி என்று எண்ணியபடியே பர்த்தி யாத்திரையை மேற் கொண்டேன். சுவாமி என்னை நேர்காணலுக்கு உள்ளே அழைத்தார். வழக்கமான முறையில் என்னைப் பற்றியும், என் சகோதரிகளின் திருமண விஷயங்களைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொன்ன சுவாமி, அப்போதிருந்த எனது குடும்பப் பிரச்சினை சம்பந்தமாகவும் சிலவற்றைச் சொல்லி, சுவாமிக்கு யாவும் தெரியும், கவலை வேண்டாம் என்று அன்பு ததும்ப, நிம்மதிதரும் வார்த்தைகளைச் சொல்லி என்னை வெளியே அனுப்பும் நேரத்தில், என் முதுகுப்புற அடிபாகத்தில் வேகமாக ஒரு 'அடி' கொடுத்தார். "சுவாமி" என்று கூவிய என்னைக் கடுமையாகப் பார்த்தவண்ணம் சுவாமி, "எதிலெல்லாம் ஈகோ என்ற கணக்கில்லையா? பாடமுடியாத உனது நிலையைப் பற்றிச் சுவாமியிடம் நீயே கேட்கக்கூடாதா? சுவாமியே கேட்கட்டும் என்று, இதற்காக மூன்று முறை வந்து போனாய் அல்லவா? தப்பு. எதுபற்றியும் சுவாமியிடம்தான் கேட்க வேண்டும். எல்லாம் சுவாமி அறிவார், உனக்குப் பாட முடியாமல் போனதற்கு காரணம் திருஷ்டி" என்று சொல்லியபடி, சுவாமி கையை அசைத்து ஒரு மாத்திரையை எடுத்தார்.

"இதைச் சாப்பிடு உனக்கு எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்லி, விபூதியும் வரவழைத்து வாயில் போட்டு, கழுத்தின் மேல்பாகத்தில் தடவியும் விட்டார். மாத்திரையைப் பெற்றுக்கொண்ட நான் சுவாமியைப் பார்த்து கைகூப்பிய வண்ணம் வெளியே வந்தேன். மனதிற்கு அளவற்ற நிம்மதி கிடைத்தது. குதூகலம் என்னை ஆட்கொண்டது. உலகையே வெற்றி கொண்டு விட்டதான உள்மனத் துள்ளுதலை நான் உணர்ந்தேன். வெளியே வந்து தண்ணீர் பெற்று, மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டேன். முன்பெல்லாம் சுவாமியின்  மந்திரை எல்லோரும் வலம் வருவது வழக்கம். அவ்வாறு வலம்வரச் சவுகரியமான அமைப்பு அப்போதெல்லாம் இருந்தது. அதனால் மந்திரை வலம் வருகையில், பாதி சுற்று வந்த எனக்குச் சாயி பஜனை பாடல் ஒன்று கேட்டது. அந்தப் பாடலை நான் இசைக்க முயற்சித்தேன். என்ன ஆச்சரியம்! என் குரல் எனக்குத் திரும்பக் கிடைத்து விட்டதை நான் உணர்ந்தேன். சுவாமி எனக்கு என் குரலைத் திரும்ப அளித்து விட்டார். 'Paradise lost, Regained' என்பார்களே, எனது விலைமதிப்பற்ற என் சொத்து, நான் இழக்க நேரிட்டு சுவாமியால், அவர் கருணையால், அவர் திருவருளால், நான் திரும்பப் பெற்றேன். இதுபோன்ற அவரது ஆயிரமாயிரம் ,திரும்ப எதையும் எதிர்பாராத அன்பு சொரிதல்களுக்கு, அவர் யாரிடமாவது பாராட்டுதல்களைப் பெற விழைந்து இருக்கிறாரா? அல்லது அம்மாதிரியான பாராட்டுதல் களுக்காகக் காத்திருக்கிறாரா? அதுவே இறைவனின் பிரேமை பாவம்.... நான் பலமுறை மந்திரைச் சுற்றிச் சுற்றி வந்தேன். மனத்தகத்தே கோடி கோடி நன்றிகளை கூறிக்கொண்டே சுற்றினேன். சோர்வு என்னை ஆட்கொள்ளும் வரை சுற்றினேன்.

மறுநாள் திருச்சி திரும்பினேன். எனது நண்பர்கள் பலர் நான் வழக்கம்போல் தான் திரும்பி உள்ளேன் என்று எதிர்பார்ப்போடு விவரங்கள் கேட்டபோது, நான் ஒரு பஜன் பாடலைப் பாடிக் காட்டினேன். எல்லோரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். மறுபடியும் திருச்சி தில்லைநகர் பஜனா மண்டலியில் எனது குரல் இசை எழுப்பியது. முன்பைவிட அதிக தெய்வ சக்தியுடன் நான் பாடுவது எனக்குத் தெரிந்தது. அதன்பிறகு என் பாட்டைக் கேட்டு பாராட்டுபவர்களுக்கெல்லாம், பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்கள் எனக்குத் திருப்பித் தந்த குரல் இது என்று பெருமையாகச் சொல்ல தவறுவதில்லை! சுவாமியிடம் கிடைத்த நேர்காணலில் சுவாமி "திருஷ்டி" என்று குறிப்பிட்டார். அதுவரை என் வீட்டில் என் தாயார் மற்றுமுள்ளவர்கள், திருஷ்டி சுற்றுகிறேன்  இரு, என்று சொல்லிச் செய்த சடங்குகளைக் கொஞ்சமும் நம்பாதவனாய்க் கிண்டல் செய்வது எனது வழக்கம். அந்த பெரியவர்களைச் சிலவேளைகளில் வேதனைக்கு உள்ளாக்கிப் பேசி இருக்கிறேன். சுவாமியே திருஷ்டி என்று சொன்னதைப் பற்றி நேர்வழியில் சிந்திக்கலானேன். சுவாமி அவ்வாறு சொல்லி சுவாமியின் அருள் கருணை பிரவாகத்தால் எனது பாடும் குரலை நான் திரும்பப் பெற நேரிட்ட வகையில், திருஷ்டி என்பது உண்டு என்பதைப் பரிபூரணமாகப் புரிந்துகொண்டேன்.

சுவாமி குறிப்பிட்ட திருஷ்டி என்பது எது என்று உங்களுக்குப் புரிகிறதா? அது ஒரு பெண் உருவில் கல்கத்தாவிலிருந்து வந்து என்னைக் கொஞ்சநாள் ஆட்கொண்ட ஒன்றுதான். அந்நாட்களில் சுவாமி பலமுறை எனக்கு நேர்காணல் அளித்துள்ளார் .அவரை கட்டித்தழுவ எனக்குப் பலமுறை வாய்ப்புகள் அளித்து, ஒருமுறை இந்த வாய்ப்பு உனக்கு ஏன் அளிக்கிறேன் தெரியுமா? திரேதாயுகத்தில் இருந்து உனக்கும் எனக்கும் தொடர்பு உண்டு என்று அருள்கூர்ந்தார். அப்போது எனக்கு அதுபற்றி ஏதும் தெளிவாக விளங்கவில்லை. வள்ளலாரின் தெய்வீக வாழ்க்கையைப் பற்றி நான் படிக்க நேர்ந்தது. சிவபெருமான் வள்ளலாரைத் தழுவியதாகவும், வள்ளலாரது உடல் பொன்னுடல் ஆயிற்று என்றும் நாம் அறியும் செய்தியை வள்ளலாரும் “பொன்னுடலீந்தாயே” என்று பாடுவதில் இருந்து தெரிந்து கொள்கிறோம். வள்ளலாரை சிவபெருமான் தழுவியதை, வள்ளலார் அவர் இயற்றியுள்ள அருட்பெருஞ்ஜோதி அகவல் என்னும் நூலில், "தன்னை தழுவுறு தரந் சிறிதறியா  வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே" என்று குறிப்பிடுகிறார்.

அன்று என்னை சுவாமி தழுவினார். நான் அவரைத் தழுவிக்கொள்ளவும் செய்தார். அன்று அதன் "தரம்" தெரியாதவனாய் நான் அலைந்தேன். ஆனால் இன்று அந்த "தழுவுறு தரம்" பற்றிப் புரிவதுபோல் தோன்றும்போது, அந்த பரவஸ்து எங்கோ எட்டி உள்ளதை நான் உணர்கிறேன். எனது ஊனக்கண்ணாலே அதனை பார்த்து தரிசிப்பதுகூட இப்போது துர்லபமாகிவிட்ட நிலைமையை உணர்ந்து, உணர்ச்சி வசப்படுகிறேன். இந்த தற்போதைய சூழலைப்பற்றி நான் அடிக்கடி எண்ணிப் பரிதவிக்கும் அதே நேரத்தில், முன்பு கிடைத்தற்கரிய ஒப்பிலா வாய்ப்புகள் கிடைத்ததையும் எண்ணுகிறேன். வேறு வழி காண முடியாமல், பேரருள் படைத்த ஒருவரின் பாடலை நான் அடிக்கடி முணுமுணுத்தவாறு என்னைத் தேற்றிக் கொள்கிறேன்.

ஈனஸ்வரத்தில் எழும் அந்த எனது முணுமுணுப்பை நீங்களும் கேளுங்கள்!

"தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை, சங்கரா! யார்கொலோ சதுரர்? அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன், யாது நீ பெற்றதொன்று என்பால்!"

மேலே குறிப்பிட்டுள்ள பாடலின் கருத்தை அறிந்திட, உங்களில் பலருக்கு ஆர்வம் இருக்கும். மணிவாசகப் பெருமான் பக்தியிலே நெக்குருகிய நிலையில் சிவபெருமானை கேட்கிறார்...

"உன்னை எனக்குத் தந்து, என்னை நீ எடுத்துக் கொண்டாய். நான் பெற்றது முடிவில்லா ஆனந்தம்... என்னை ஏற்றுக்கொண்ட நீ, என்னிடமிருந்து எதனைப் பெற்றாய்? சங்கரா! இதில் வெற்றி கண்டவர் நீயா? நானா? ஜெய் சாய்ராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக