கனடா நாட்டு ஆஸ்பத்திரியில் ICU வில் இருந்த அன்பரின் கணவனை நேரில் வந்து காப்பாற்றிய சுவாமி.
1977 இல் கனடாவில் ஒன்டாரியோவில் உயர்பதவி டைரக்டராக இருந்தார் கே.சி கோசலா. அவர் சாயி பக்தர் அல்ல. அவருடைய மனைவியும் மக்களுமே சாயி பக்தர்கள். கோசலாவுக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டு சீரியசாக முற்றிற்று. எதுவும் உண்ண முடியவில்லை. வயிற்றில் நீர் கூட தங்காமல் வாந்தி செய்தது.
அவ்வாண்டு அக்டோபர் மாதம். பிழைப்போம் என்ற நம்பிக்கை அடியோடிழந்து டொரன்டோ ஆஸ்பத்திரியின் 'இன்டென்சிவ் கேர் யுனிட்'(ICU) டில் கிடந்தார் கோசலா. இதே 1977 இல் மே மாத கடைசியில் பகவான் தாஸுக்கு சுவாமி அருளிய அற்புதம் முன்பு கண்டோமே, அதுபோலவே இங்கும் செய்து காட்டினார் சர்வ வியாபகர். ஆனாலும் ஒரே அச்சாக இன்றி 'வெரைட்டி' காட்டும் லீலாலோலராச்சே! எனவே, இப்போது இரவு 12.30 க்கு டொரன்டோ வைத்தியசாலையில் பிரவேசித்தபோது சுவர் வழி வரவில்லை.
கதவு மளாரென திறந்தது. இந்த வேளையில் யார் இப்படி வருவது என்று கோசலா பார்த்தால்.... பாபா!
இப்போதுதான் வெரைட்டியில் இன்னொரு அம்சமாக வெள்ளை ஆடை தரித்திருந்தார். வெள்ளை உடை அவரது வழக்கமான அங்கி அல்ல. வெகு பொருத்தமாக டாக்டர்கள் அணியும் ஒயிட் கவுனாக்கும்!
அனைவரையும் கூப்பிட வேண்டும் என்று கோசலாவுக்கு எண்ணம் எழும்பிய போதிலும், வாய் எழும்பவில்லை. பாபா திரும்பிச் சென்ற பின்தான் அவருக்கு பேச்சு வந்தது. உள்ளே வந்த பாபா, குப்புறப்படுக்க போட்டிருந்த கோசலாவை அனாயசமாக திருப்பிப் போட்டார்.(ஹாங்காங்கில் நோயாளியை இன்னொரு கட்டிலுக்கே தூக்கி போட்டவரல்லவா?) இங்கே விபூதி எதுவும் தூவாமல் தமது கரத்தாலேயே பணியாளரின் உடல் முழுவதும் தேய்த்து விட்டு ஆசி வழங்கினார். வந்தது போலவே கதவு வழியாக வெளியேறினார்.
அவர் போனவுடன் இவருக்கு குரல் வர, நர்சுகளை எல்லாம் அழைத்தார். பகவான்தாஸை போலன்றி நடந்த அதிசயத்தை அவர்களுக்குச் சொன்னார். "இனி நான் சர்வநிச்சயமாக பிழைத்து விடுவேன்" என்றார் தீர்மானமாக.
அப்படியே சாயி ஸ்பீடில் வெகு விரைவே பூரண குணமடைந்தார். அடுத்த ஆண்டு ஆகஸ்டில் கோசலா குடும்பத்தோடு தரிசனத்துக்காக வந்தார். தேக்கடியில் தேவ தேவனை கண்டு அடிபணிந்தார். தேவர் தமது டொரன்டோ விஜயத்தை ஊர்ஜிதம் செய்தார்.
ஆதாரம்: அற்புதம் அறுபது, ரா. கணபதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக