தலைப்பு

வெள்ளி, 28 ஜூன், 2019

கேக்' எப்படி ஆயினும் துணுக்கு இனியது தான்! - ரா. கணபதி


அப்படிப்பட்ட கீழ்த்தர எண்ணம் எனக்கு ஏன் தான் வந்ததோ? பின்னால் தனது போதனை இனிமையை ஊட்ட அவனே தான் அப்படி எண்ண வைத்தானோ? (சாமர்த்தியமாக பழியை அவனுக்கு தள்ளுகிறேன்)

 எந்த ஒரு மனிதனின் சாதிப்புக்கும் ஆதாரமாக அவனது மனைவியின் தியாகம் இருக்கிறது என்பார்கள். இப்படி என் பணிகளுக்கெல்லாம் ஆதரவாக இருப்பது தம்பி மோகன ராமனின் தொண்டு, தொண்டின் இனிமை,அன்பின் இனிமை, இவற்றோடு இனிப்பு தின்பண்டங்களும் 'அண்ணா'வுக்காக தவறாமல் கொண்டு வருவார். உங்களுக்கென்றா செய்கிறோம்? மாமனார் ஆத்தில், சித்தி ஆத்தில், இன்ன விஷேசம், எனக்கு தரும் போது உங்களுக்கும் கொடுக்கிறார்கள் என்பார். அதுவும் நிஜமே. அக்குடும்பங்கள் இன்று போல் என்றுமே 'நித்திய கல்யாணம்'' பச்சை தோரணமாய்' விளங்க வேண்டுகிறேன்.( எனக்கு பக்ஷணம் கிடைக்கும் என்பதற்காக மட்டும் அல்ல!)

அன்றும் ஸ்வீட்ஸ் கொண்டுவந்திருந்தார். ஆமாம், பன்மையில் ஸ்வீட்ஸ்__ ரவா லட்டு, ஏதோ அல்வா,' பாதாம் கேக் யாவும். 'பாதாம்' என்ற பெயரில் எஸென்ஸிலின்றி, அசல் பாதாம் பருப்பே போட்டு செய்த கேக்.

இரண்டு கேக் இருந்தது. அப்போதே இருவரும் ஒன்றை தின்றோம். மீதமிருந்த ஒன்று ஏனைய பக்ஷணங்களோடு சமையலறை ஷெல்ப்புக்கு சென்றது.

இரவு சீனு வந்தான். எனக்கு சுவாமி தந்துள்ள அனேக சோதரரில், குழந்தைகளில் அதி பிரியமானவன் அவன் தான். (கால் செஞ்சுரியை கடந்து 'அவர்' எனப்படுவதற்கு தகுதி பெற்றிருந்தாலும், ஒருமையிலேயே அருமை தெரிவதால் அவன் என்றே சொல்கிறேன்.) அவனுக்கு கொடுக்காமல் நல்ல தின்பண்டம் எதைத் தின்றாலும் எனக்கு சாப்பிட்ட மாதிரி இராது!

அன்றிரவும் பட்சணங்களை அவனுக்காக பேசினில் எடுத்து வைத்தேன். பாதாம் கேக்கை எடுத்தவுடன் நாவில் சபலம் அப்போதே அதில் பாதியை என் வாய்க்கு அனுப்பிவிட்டது. மீதி பாதியையும் பேசினில் போடாமல் கையைப் பின்னுக்கு இழுத்தது. மனம் படு கீழ்த்தரமாக இறங்கிவிட்டது. தனக்கே உரிய இயல்புபடி அதற்கு மனம் நியாயம் கற்பித்துக் கொண்டது. 'மற்ற பக்ஷணங்கள் தான் இருக்கே! கேக் பாதி தானே இருக்கு? சீனு ஆரோக்கியசாலி. இது மருந்து பண்டமும். டாக்டரே நம்மை பாதாம் பருப்பு சாப்பிட சொல்லி இருக்கிறாரே'!

மற்ற பக்ஷணங்களுடன் மட்டும் ஹாலுக்கு வந்து, அந்த குழந்தைக்கு கொடுத்தேன். மறுநாள் மற்ற பக்ஷணங்களை தின்றுவிட்டு, முடிவாக பாதாம் சுவையும் மணமும் வாயில் நிற்கட்டுமென அந்த பாதி கேக்கை உள்ளே தள்ளி மெள்ள மெல்ல தொடங்கினேன்.

பாதாம் சுவையாவது மணமாவது? எதுவுமே இல்லை. வெறும் தவிட்டை தின்றால் கூட ருசியும் வாசனையும் இருந்திருக்கும். கல்லை  கல்கண்டாக்குபவன், தனது கல்கண்டித்தயதால் எனக்கு பாடம் புகட்டுவதற்காகவே கேக்கின் மதுரம் முழுதையும் சப்பி எடுத்துக்கொண்டு, அதில் சப்பிட்டு போக செய்திருக்கிறான்!

ஆச்சரியம்தான்! அதற்கு சற்று முன்பே நான் திண்ற லாடு ,அல்வாக்களின் ருசி  வாசனைகள் கொஞ்சம் வாயில் தங்கி இருப்பது இயல்புதானே? அந்த இயற்கையையும் தகர்த்து, நாக்கை அடியோடு வழித்து விட்டார் போல் இருந்தது!

"தீராத விளையாட்டு சாயி" நூலில் ஒரு முறை எனக்கு ஒவ்வாத கார சமையலை, சுவாமி எனக்கேற்ற அசட்டு தித்திப்பாக மாற்றியிருப்பதை கூறினேன்.( எனக்கு ஏற்பது அசடாக தானே இருக்கும்?) அப்போதே அதற்கு எதிர் வெட்டாக இப்படி ஒன்றை அவர் எனக்காக செய்ததையும் கூறியிருக்க வேண்டும். ஆயினும் அன்று அதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. இன்று இதை மனம்திறந்து சொல்வதே பாதாம் கேக்காக  இனிக்கிறது.

மேலே, எதிர் வெட்டு' என்று சொல்லி இருக்கேனே, அது சரியில்லை. காரத்தை இனிப்பாக்குவதற்கு எதிர்வெட்டு இனிப்பை காரமாக அல்லது கசப்பாக மாற்றுவதுதான். ஆயினும் தண்டனை தரும் போதுகூட  பாதாம் கேக்கை அப்படி எதுவும் செய்யாமல், வெறுமே சப்பிட்டு போகதானே செய்திருக்கிறது சுவாமியின் மதுரமனம்?

ஆதாரம்:  அற்புதம் அறுபது, ரா. கணபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக