தலைப்பு

வியாழன், 4 மே, 2023

இறந்த டாக்டர் உயிர்த்தெழுகிறார்! - பூகம்பம் போல ஒரு மாளிகையே ஆடிய ஆச்சர்யம்!

எவ்வாறு சாயி பக்தரான ஒரு இறந்த மருத்துவர் உயிர்த்தெழுந்தார், மற்றும் ஒரு மாளிகையே ஆடியதன் ரகசியம்.. இவற்றுக்கும் இல்லறத் துறவிகள்  சஞ்ஜெய் - மீராவுக்குமான தொடர்பு : சுவாரஸ்யமாக இதோ...


ஒருமுறை மஹாராஷ்டிரா நந்தூர்பார் கிராமத்தில் டாக்டர் சோன்டக்கே வீட்டுக்கு வருகிறார்கள் இல்லறத் துறவிகள் மீரா - சஞ்ஜெய்!


அவர்கள் வந்திருந்த சமயம் டாக்டரோ படுத்த படுக்கையாக கிடக்கிறார்! அவரை கவனித்துக் கொள்ள இரண்டு டாக்டர்கள் இருக்கிறார்கள்! வீடே துக்க வீடாக இருக்கிறது.. அந்த இரண்டு டாக்டர்களோ அவர் பிழைக்க வழியே இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்... அல்சர் கட்டி வெடித்து உடலுக்குள் அது பரவிவிட்டிருக்கிறது! ஒன்றுக்கு இரண்டு டாக்டர்கள் ஆயினும் கையைப் பிசைகிறார்கள்... குடும்பத்தினரோ கண்ணை கசக்குகிறார்கள்! இந்த இக்கட்டான சூழ்நிலையில் சஞ்ஜெய் மீரா விஜயம் பாபாவே வந்தது போல ஒரு தெம்பு தருகிறது சோன்டக்கே மனைவிக்கு...

"பாபி! எதுவும் கவலைப்படாதீர்கள் , நாம் டாக்டரை தூக்கத்திலிருந்து எழுப்புவோம்!" என்று தைரிய வார்த்தை பேசுகிறார் சஞ்ஜெய்! சோன்டக்கேவோ சுயநினைவற்று படுக்கையில் காற்றிழந்த பலூனாய் கிடக்கிறார்!  போதா குறைக்கு அந்த இரண்டு டாக்டர்களும் பல்ஸ் வீக் , செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கண்ணாடியை கழட்டுகிறார்கள்! சோன்டக்கே தந்தையோ "இனி பாபாவின் இஷ்டம் எதுவோ.. அது தான் !" என்று உதடு சுழிக்கிறார்! சோன்டக்கே வீடே நிராசையில் இருட்டடைந்து மூழ்குகிறது! ஆனாலும் சஞ்ஜெய் நம்பிக்கை இழக்கவில்லை... சோன்டக்கே மனைவி அழைத்துக் கொண்டு பூஜையறைக்குச் செல்கிறார்.. புதிய தாலி வாங்கி இருப்பதாக அவர்கள் சொல்ல.. அதை பாபா அருகே வைத்து.. முன்பு பாபாவே சோன்டக்கே குடும்பத்திற்கு "எந்த ஆபத்து என்றாலும் என்னுடைய இந்தப் படத்தை வைத்து பூஜை செய்!  உங்களுக்கு அது உதவி செய்யும்!" என்று சொல்லிக் கொடுத்த படத்தையும் வைக்கிறார்! சஞ்ஜெய் உடனே சில பாடல்களைப் பாடுகிறார்... "ஆவோ ஷிர்டி கே துலாரே, துஜே தேரே பக்த புலாதே ஹை!", அவர் பாடப் பாட ஏற்றி வைக்காத நறுமணம் சூழ ஆரம்பிக்கிறது... பாபா விஜயம் புரிவதற்கான மணம் அது... பருப்பு, இரண்டு வகை சமைத்த காய்கறிகள், சாதம்,ரொட்டி, சட்னி, ஊறுகாய் போன்ற உணவு வகைகளை பாபா படத்திற்கு முன் வைத்து பிறகு பூஜையறையை மூடி விடுகிறார் சோன்டக்கே மனைவி...!  சிறிது நேரம் கழித்து... அவரே "சுவாமிஜி ! பாபா பிரசாதத்தை சாப்பிடுவோம் !" என்கிறார்..பூட்டிய பூஜையறையை திறந்து உள்ளே செல்ல.. ஒரே அதிர்ச்சி.. ஒரே ஆச்சர்யம்... பாபாவுக்கு வைத்த சாப்பாட்டில் படைக்கப்ப்பட்ட உணவு வகைகள் யாரோ கையை விட்டு எடுத்தது போல் குறைந்திருக்கிறது... பருப்பு வைத்த கிண்ணத்தையே காணவில்லை...  சோன்டக்கே மனைவி வந்து உள்ளே பார்த்து... தான் வைத்த தாலி எங்கே? பாபா கொடுத்த அந்த பாபா படம் எங்கே? என்று தேடித் தேடி கலங்குகிறார்! மீரா உடனே குங்குமம் கொட்டியிருப்பதைக் கவனிக்கிறார்... அந்த குங்குமக் குவியலை கிளறிப் பார்த்தால் அங்கே தாலி இருக்கிறது.. அந்த குங்குமம் பாபா அளித்த பாபா படத்திலிருந்து பெருகி வருவதை கண்கூடாகக் கண்டு பரவசப்படுகிறார்கள்! ஆனால் படுக்கையில் டாக்டரோ பொட்டு அசைவின்றி கிடக்கிறார்! 


இரவு வருகிறது... டாக்டர் கட்டிலை சுற்றி எல்லோரும் அமர்ந்திருக்க... 12 மணி பிறகு 2 மணி... பிறகு பிரம்ம முகூர்த்தம் 3 மணி. நாடித் துடிப்பு நின்று விடுகிறது! அந்த இரண்டு டாக்டர்களும் டாக்டர் சோன்டக்கே இறந்து விட்டார் என்று உறுதி செய்கிறார்கள்!

அவர் ஆன்மா காற்றில் கலந்துவிட்டது என்றபடியால் அனைவரும் சொல்வதற்கு வார்த்தையற்று மௌனம் சாதிக்கிறார்கள்! சஞ்ஜெய் - மீராவோ "சாயிராம் சாயிராம்!" என்று நாம ஜபம் செய்கிறார்! 


கிட்டத்தட்ட அதிகாலை 4 மணி.. திடீரென்று மறுபடியும் டாக்டர் சோன்டக்கே நாடி துடிக்கிறது... ஆச்சர்யப்படுகிறார்கள் இரண்டு டாக்டர்களுமே! சோன்டக்கே கண்களை திறக்கிறார்... ஏதோ தூக்கத்திலிருந்து எழுவதைப் போல்... உடனே அவர் மனைவி  "நன்றாக இருக்கிறீர்களா?" என்று கேட்கிறார்.. அதற்கு பதிலே அளிக்காமல் "சஞ்ஜெய் மீரா வந்திருக்கிறார்களா?" என்று கேட்கிறார் உயிர்த்தெழுந்து வந்த டாக்டர்.. உடனே இருவரும் அவர்கள் அருகே வர... "சஞ்ஜெய் எனக்கு விபூதி கொடு! 3 மணி அளவில் பாபா வந்தார்... பயப்படாதே உனக்கு ஒன்றும் இல்லை! உனக்கு ஒன்றும் நேராது! மரணம் வந்து உன்னை தொட்டுவிட்டுப் போய்விடும்! சஞ்ஜெய் மீராவையும் நான் தான் இங்கே அனுப்பினேன்!" என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் என்கிறார் டாக்டர் சோன்டக்கே! 

எப்படி ஷிர்டி பாபா ராமச்சந்திர தாதா கோத்தே பாட்டிலிடம் "உன் உயிரை உனக்கு திருப்பி கொடுத்துவிட்டேன்!" என்று சொன்னாரோ அது போலவே புட்டபர்த்தி பாபாவும் செய்த இந்த விசித்திர அருஞ்செயலை நினைத்து உருகிப் போகிறார் மீரா!


அது 1973. நவம்பர் மாதம்! அலஹாபாத் ... ஒரு சாயி பக்தர் வீடு! லக்நவ் மாநிலம் சுசீல் வர்மாவின் தங்கை மகள் மதுவின் வீடு.. அவர் அழைத்தபடியால் செல்கிறார்கள் இருவரும்... மதுவின் கணவர் கேசவ் சஹாய் வக்கீலாக இருக்கிறார்! மது இருவரையும் சமிதிக்கு அழைக்கிறார்! சமிதியினர் பிரசாந்தி பஜனை பாட... சஞ்ஜெய் ஷிர்டி பாபாவின் கவ்வாலி பாட...  மோகன் டன்டன் என்பவர் சமிதியில் கலந்து கொண்டு சஞ்ஜெயிடம் பாபாவின் பிறந்தநாளான நவம்பர் 23 முடியும் வரை அங்கேயே தங்கச் சொல்கிறார்! அனைவரும் கலந்து பேசி சஞ்ஜெய்யை தங்க வைக்க.. சஞ்ஜெயும் மீராவும் சமிதியின்  ஒரு அறையில் தங்க... பாபா சஹஸ்ரநாமம் பிறகு  அகண்ட பஜனையோடு பிரசாதம்.. இதுவே சமிதியினரின் பாபா அவதார நிகழ்ச்சி நிரல்...

அன்று பாபாவின் அவதார தினம் வருகிறது!  சமிதியில் பஜனை ஆரம்பிக்க... இருவர் தங்கிய அறைக்கு வெளியே இருந்த குளியலறை ஜன்னலில் நல்ல பாம்பு எட்டிப் பார்க்க... அது தெரியாமல் அவர்கள் 1008 நாமாவளி மற்றும் இரவெல்லாம் பஜனை... அமர்க்களப்படுகிறது... அடுத்த நாள் காலை 4 மணிக்கு முடிவடைய...குளிக்க அவரவர் வீடு தேடி செல்ல... 1008 நாமாவளிகளில் சேமித்த அரிசியை சாதமாக்கிட மது வீட்டில் சஞ்ஜெய் ஆரம்பிக்க... எடுத்து அந்த சாதப் பாத்திரத்தை ஜன்னல் அருகே வைத்துவிட்டு... அதன்பிறகு திரிவேணி சங்கமம் சென்று அங்குள்ள நாராயணர்களுக்கு (தவசிகள்) பிரசாத அர்ப்பணம் செய்தார்‌... மதுவோ சாயி பிரசாதத்தை சாயி பக்தர்கள் வாங்கிக் கொண்டு போவதற்கு அழைக்க...சிலர் நகர்ந்துவிடுகிறார்கள்... சஞ்ஜெய், மோகன் டன்டன் , அசோக் சர்மா ஆகியோர் இருக்க... 

மது வீட்டில் பூஜையறையில் உட்கார்ந்து பேசுகிறார்கள் இல்லறத் துறவிகள்... மது சமையல் அறைக்குச் செல்ல... மது வீட்டில் வேலை செய்யும் பேலாவோ ஓடி வந்து "சஞ்ஜெய் பாபு, குளியலறைக் கதவு தானாக அசைகிறது!" என்று திடுக்கிடுறார்! ஒரு வேளை பூகம்பமாக இருக்கலாம் என்று சஞ்ஜெய் நினைக்க... அதற்குள் ஒட்டு மொத்த மாளிகையே ஆட ஆரம்பிக்கிறது... வழக்கத்திற்கு மாறான சம்பவம்.. "யாராவது பாம்பை அடித்தீர்களா?" என்று சஞ்ஜெய் கேட்க.. அது ஆரத்தி சமயத்திலேயே மறைந்துவிட்டதென்று தெரிவிக்க... "என்ன கோபமாக இருக்கும் பாபாவுக்கு? ... யாருக்குமே விளங்கவில்லை..‌பூகம்பமா? ஒன்று வெளியே சென்று பார்த்தால்.. ஒரு பொட்டு அசைவின்றி இயல்பாக இருக்கிறது தெருக்களும் வீடுகளும்... ஆனால் உள்ளே ஒரே ஆட்டம்... சுவர் அசைகிறது... மேஜை அசைகிறது... கிலி பிடிக்கிறது, புளி கரைகிறது அனைவர் வயிற்றிலும்... 


பிறகு சஞ்ஜெய் பூஜையறையில் அமர்ந்து பாட ஆரம்பிக்க.. தான் ரெடி செய்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு வரச் சொல்ல... அதை அவர் பாபா படத்தின் முன் வைத்த அடுத்த நொடியே ஆட்டம் அப்படியே நின்று போகிறது... சமைத்த பிரசாதத்தை பாபாவுக்கு படைக்க மறந்து போக.. சஞ்ஜெய் அதற்குள் திரிவேணி சங்கமம் சென்றதால் பாபாவின் செயலே இது என்று பிறகே தனது மறதியை எண்ணி வருந்தி பாபாவின் பேரிருப்பை உணர்ந்து நிறைந்து போகிறார்! மீராவுக்கு அந்த சமயத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை‌.‌. பரம ஆச்சர்யத்தில் அவர் உயிர் உறைந்து போகிறது!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 160 - 166 | ஆசிரியர் : சன்யாசினி சஞ்ஜெயானந்த்) 


உயிர் உடலாய் எடுப்பதும், உயிர் உடலில் இயங்குவதும் , உயிர் உடலை விட்டு வெளியே

செல்வதும் பாபாவின் கட்டுப்பாட்டிலேயே அடங்கி இருக்கிறது! கட்டிடத்தை மட்டுமல்ல எண்சாண் நரம்பு சதை கொண்டு கட்டிய இந்த உடலையும் பாபாவே ஆட்டி வைக்கிறார்! அதன் உள்ளே இருக்கும் ஆன்மாவில் அவர் மேல் உள்ள பக்தியை ஒன்பது துளைகள் இருந்தும் நழுவவிடாமல் பூட்டி வைக்கிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக