துவாபர யுகத்தின் ஓர் நிகழ்வும் கலியுகத்தின் ஓர் நிகழ்வும் எவ்வாறு ஒன்றாக இருக்கிறது... அந்த இரு அரிய நிகழ்வுகளும் எதனை உணர்த்துகிறது என்பது மிக சுவாரஸ்யமாக இதோ...
அது துவாபர யுகம். அரக்கர்களால் பூமி சிதைக்கப்பட்டிருந்த காலகட்டம்! அதர்மத்திற்கு அளவே இல்லை! பூமித் தாய்க்கு மாரடைப்பே வரும் அளவிற்கு அட்டூழியங்கள்... அப்போது பூமித் தாய் ஒரு பசுவின் வடிவெடுத்து நடந்து வரும் அதர்மங்களைக் குறித்து முறையிட பிரம்ம லோகம் போகிறாள்... அந்தக் காரணத்தினால் பிரம்மா பூமித்தாயின் ஆற்றாமையைச் சுமந்து வைகுண்டத்திற்குச் செல்கிறார்! முனிவர்கள், தேவதைகளோடு ஸ்ரீமன் நாராயணர் சூழ்ந்திருக்க..பாற்கடல் ஹரி ஹரி என ஓசை எழுப்புகிறது... பூமித்தாய்க்கு அது Hurry தான்... எப்படியாவது அதர்மத்திலிருந்து விடுதலை பெற வேண்டிய கோர சூழ்நிலை அவளுக்கு! ஸ்ரீமன் நாராயணர் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க... அவர் அருகே புருஷ சூக்தம் உச்சாடனம் செய்து விட்டு சமாதி நிலையில் ஆழ்ந்து போகிறார் பிரம்மா!
அந்த சமாதி நிலையில் பிரம்மாவுக்கு ஓர் குரல் கேட்கிறது
"சொல்! அவளிடம்... நான் பூமியில்... யதுவின் குலத்தில்... வசுதேவன் மகனாக வெகு விரைவில் இறங்கி அவளின் பூபாரத்தை குறைப்பேன்!" என்கிறது அந்தக் குரல்... அது ஸ்ரீ மன் நாராயணரின் திவ்யமான குரல் என்று உணர்ந்து கொள்கிறார் பிரம்மா! உடனே விழி திறந்து அவரை வணங்கிவிட்டு விடைபெறுகிறார்!
பிறகு பூமித்தாயிடம் வந்து "தாயே! வெகு விரைவில் ஸ்ரீமன் நாராயணர் இந்த பூமியில் இறங்கப் போகிறார்.. யது வம்சத்தில் வசுதேவன் மகனாகப் பிறக்க இருக்கிறேன் என்று என்னிடம் உறுதியாக சொல்லி இருக்கிறார்... அந்த நேரத்தில் உன்னுடைய பாரங்களை குறைப்பேன் என்கிறார்! ஆகவே பொறுமையாகவும் மகிழ்ச்சியாகவும் அந்த தெய்வீக நிகழ்விற்காக காத்திரு!" என்கிறார் பிரம்மா!
அந்த அவதார தருணத்தில் ஸ்ரீஹரியை வழிபட தேவதைகளும் மனித வடிவெடுப்பர் , ஆதிசேஷன் கூட அவருக்கு உதவிட அவரின் அண்ணனாகப் பிறப்பார்! யோக மாயை கூட வடிவெடுக்கப் போகிறாள்! என்று விவரித்துப் பேசுகிறார் பிரம்மா!
(ஆதாரம்: பாகவதம் : 10-14)
இதே போல் ஸ்ரீ சத்ய சாயி அவதரிப்பதற்கு முன்னமே ராஜு வம்சத்து கொண்டம ராஜுவிடம் அவரது குல குருவான அவதூதர் ஸ்ரீ வெங்கய்யா சுவாமிகள் பல்வேறு வகையான ஆன்மீக விஷயங்களை கொண்டமரோடு பேசுவார்... அப்படி அவர் பேசுகிற ஒருநாள் மதியம்... புட்டபர்த்தி வெளியே ஒரு வாழைத்தோப்பில் அவதூதர் பேசிக் கொண்டிருக்கிற போது திடீரென மௌனமாகிறார்!
"சுவாமி ஏன் பேசாமல் மௌனமாக இருக்கிறீர்கள்! என்ன காரணம்?" என்று கொண்டமர் கேட்கிறார்.. அதற்கு யோக நித்திரையில் இருந்த ஸ்ரீஹரி போல் மௌனமாக இருந்த அவதூதர் பரவத்தோடு பேச ஆரம்பிக்கிறார்...
"கொண்டமா! பூமித்தாய் அழுவது உன் காதுகளில் கேட்கவில்லையா? இதோ பார்! பூமித் தாய் அழுகிறாள்!" என்று பூமியை நோக்கி கைகாட்டுகிறார் அவதூதர்! "எதற்காக அழுகிறாள்?" என்று குழம்பிய படி கொண்டமர் கேட்க...
"ஆம் ! கொண்டமா! அதர்மத்தால் அழுகிறாள்! நிச்சயம் ஸ்ரீமன் நாராயணன் பூமியில் இறங்கப் போகிறான்.. அவனின் அவதாரத்தை நீ "சத்தியமாக" தரிசனம் செய்யப் போகிறாய்!" என்று ரகசியம் திறக்கிறார் அவதூதர்! அந்த கொண்டம ராஜுவே இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் பாட்டனாராகும்
பேறு பெறுகிறார்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 14 -16 | Author : Dr.J.Suman Babu )
இரண்டும் ஒரே நிகழ்வு , இரண்டும் ஒரே அழுகை, இரண்டும் ஒரே முறையீடு, அதைக் கேட்டது பிரம்மா , இதைக் கேட்டது அவதூதர்! யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல் அவதாரம் வருவதற்கு முன் தனது கருவிகளான உண்மையான மகான்களை இறைவன் பூமிக்கு அனுப்புகிறான்! இறைவனின் தூதுவர்கள் அவர்களே! மகான்களிடம் இறைவனின் சாயல் மனிதர்களை விட அதிகம்! ஆக இறைவன் கிருஷ்ணராக அவதரிப்பதற்கு முன்பும், ஸ்ரீ சத்ய சாயியாக அவதரிப்பதற்கு முன்பும் ஒரே வண்ணமாகவே நிகழ்ந்திருப்பதில் ஆச்சர்யமில்லை! பாபாவுக்கு ஸ்ரீ சத்ய நாராயணா என்று பெயர் சூட்டியது கூட அவரது தெய்வீக சங்கல்பமே! ஸ்ரீமன் நாராயணணுக்கு நாராயணன் என்று தானே பெயர் சூட்ட முடியும்!! இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக