தலைப்பு

திங்கள், 15 மே, 2023

நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைய வந்த கருப்பு நிழல்! - சிம்லா பஜனையில் காட்சி கொடுத்த பாபா!

சிலிர்க்க வைக்கும் ஆச்சர்ய சம்பவங்களை ஆரமாய்க் கோர்த்து இல்லறத் துறவிகளுக்கு நடந்த சாயி அனுபவ நினைவுகளை மாலையாக... வாசிக்கும் பக்தர்களின் இதயத்தில் சூட்டுவதற்காக அரிதான பக்திப் பூமாலை சுவாரஸ்யமாக இதோ...


அப்போது இல்லறத்துறவிகள் சஞ்ஜெய் மீரா லூதியானாவில் டி.என்.தல்வார் வீட்டில் இருந்த சமயம்! அவர் வீட்டின் கீழே ஸ்வெட்டர்கள் பின்னும் தொழிற்சாலை.. மாடியில் அவர் வீடு... கீழே எப்போதும் சத்தம் கேட்கும்.. இரண்டு நாயும் வளர்ப்பதால் அதுவும் குரைக்கும்‌..‌.  இருவரும் தங்கி இருந்த ஒருநாள் "யார் இவரை உள்ளே விட்டது... வாசலில் அந்த இரண்டு நாய்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்று தல்வார் கத்துகிறார்! அது பெரிய பங்களா! அந்த இரண்டு நாய்களை மீறி யாரும் உள்ளே அடி எடுத்துக் கூட வைக்க முடியாது! 


அவரின் சப்தக் குரல் ஒலிக்க... ஏன்? யார்? எதற்காக அவர் அப்படிப் பேசுகிறார்? என்று  சாப்பாட்டு அறையிலிருந்து இல்லறத் துறவிகள் எழுந்து வர... வீட்டின் முகப்பு அறையில் காத்திருந்தது ஆச்சர்யம்! ஒரே ஆச்சர்யம்... தண்டம் மற்றும் கமண்டலத்தோடு ஒரு சாது பாபா அமர்ந்திருக்கிறார்! இருவரும் அவரை எதிர் நோக்கி அவர்களை சுட்டிக் காட்டியபடி "ராத்திரி எல்லாம் ஆவோ பாபா (வா பாபா) ஆவோ பாபா என்று அழைத்துக் கொண்டே இருந்தீர்கள்... அதற்காக வந்தால் இந்த ஆள் என்னை விரட்டுகிறான்!" என்று பாபா கைநீட்டி சொல்லியதும் சஞ்ஜெய் அவரை உடனே கண்டுணர்ந்து... "மன்னிக்க வேண்டும் பாபா.. நீங்கள் யார் என்பதை அவர் உணர்ந்து கொள்ளவில்லை!" என்கிறார்! தல்வாரும் உடனே மன்னிப்பு கேட்டு பாபாவின் பாதம் அருகே அமர்ந்துவிடுகிறார் ! கொஞ்ச நேரத்திற்குப் பிறகு தனக்கு சாப்பாடு வேண்டும் என்கிறார் பாபா! சமையல் அறையிலிருந்து அல்ல பூஜை அறையிலிருந்து என்று அழுத்தமாகச் சொல்கிறார் பாபா! பிரசாத உணவை சாப்பிட்டுவிட்டு சஞ்ஜெயிடம் 11 ரூபாய் தட்சணை கேட்டு பெற்றுக் கொண்டு.. பிறர் தட்சணை கொடுத்தும் பாபா அதனை வாங்க மறுத்து தனது தண்ட-கமண்டலங்களை எடுத்துக் கொண்டு  கிளம்புகிறார்... வழி அனுப்ப தல்வார் மகன் அவரோடு நடக்க.. மாடிப் படிகளை இறங்கிக் கொண்டிருக்கும் போதே பாபா திடீரென்று மறைந்துவிடுகிறார்! தல்வார் மகன் அவரை எங்கு தேடியும் பாபா தென்படவே இல்லை! 

பிறகு அனைவரும் பூஜையறைக்குச் செல்கிற போது அங்கே ஷிர்டி மற்றும் புட்டபர்த்தி பாபா படங்களில் இருந்து அமிர்தம் வழிந்து கொண்டிருக்கிறது...! பாபா தரிசனத்தோடு கூடிய இரட்டிப்பு ஆனந்தம் அவர்களுக்கு...!


அந்த மாலையே சஞ்ஜெய்க்கு திடீரென உடல் நலமே சரியில்லாமல் போய்விடுகிறது.. அப்படியே பாபா நாற்காலி அருகேயே படுத்துவிடுகிறார்! காரணமே புரியவில்லை... குழப்பமே நீடிக்கிறது! தல்வார் திடுக்கிடுகிறார்... மருத்துவமனைக்கு அழைக்கிறார்.. ஆனால் சஞ்ஜெயோ விடாப்பிடியாக "பாபா சரி செய்து விடுவார்‌... கவலைப்பட வேண்டாம்!" என்கிறார்... தேகமோ கொதிக்கிறது... கண்களோ அயர்ச்சியில்... ஆனாலும் சஞ்ஜெய் பயப்படவே இல்லை! 

அந்த காய்ச்சல் பொழுதில் திடீரென சஞ்ஜெய் அணிந்த பாபா மோதிரத்தில் துளித் துளியாக ஏதோ வழிகிறது.. என்னவென்று மீரா பார்க்க.. ஆச்சர்யப்படுகிறார்! அது அமிர்தத் துளிகள்! அது பாபா சஞ்ஜெய்க்கு கொடுத்த சிருஷ்டி மோதிரம்... ஒழுகிடும் அந்த அமிர்த துளிகளை சேகரித்து பாபா விபூதியில் மீரா கலந்து கொடுக்க... அதை குடித்த சஞ்ஜெய் 5 நிமிடங்களிலேயே நன்றாகத் தூங்கிவிடுகிறார்! பிற சாயி பக்தர்கள் அவரவர் வீட்டுக்குச் செல்ல... மீராவும் தரையிலேயே படுத்துத் தூங்கி விட.. சரியாக மணி பின்னிரவு 2. ஏதோ ஓர் குரல் மீராவை எழுப்புகிறது...அது எந்த குரல்? யார் அது? தெரியவில்லை... "விளக்கு அணையப் போகிறது அதை கவனி!" என்கிறது அந்தக் குரல்... அது சஞ்ஜெய்யா? இல்லை - அப்போதும் சஞ்ஜெய் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்! உடனே விளக்கிற்கு எண்ணெய் விடுகிறார் மீரா... பிறகு பாபா பேசுவது கேட்கிறது... "என் தடியை வைத்துக் கொண்டு வாசலில் சென்று உட்கார்.. யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்காதே!" என்கிறார் பாபா! 

இந்த 2 மணிக்கு யார் வருவார்? என்று நினைத்தவாரே பாபா சொன்னதைப் போலவே வாசலில் பாபாவின் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு உட்காருகிறார் மீரா!

நேரம் செல்லச் செல்ல .. ஒரு கருப்பு நிழல் உள்ளே வரப் பார்க்கிறது.. மீராவோ பாபாவின் அந்தத் தடி எடுத்து அசைத்து மிரட்ட..அதனால் உள்ளே நுழையவே முடியவில்லை... பிறகு அதிகாலை தனது குதிகாலை நீட்டத் தொடங்கும் நேரம்... 4 மணிக்கெல்லாம் சிறிய வெளிச்சம்.. அந்த இருட்டோ தப்பித்து ஓடிவிடுகிறது... மீராவும் உள்ளே வருகிறார்... "இனி ஒன்றும் பிரச்சனை இல்லை.. சஞ்ஜெயை எழுப்பு!" என்கிறது பாபாவின் குரல்!

உடனே சஞ்ஜெயை எழுப்ப "எனக்கொரு திடுக்கிடும் பயங்கரமான கனவு வந்தது! யாரோ என்னை மேலே கொண்டு செல்வதற்கு வந்தார்கள்!" என்று சஞ்ஜெய் மிரட்சியோடு மீராவிடம் பகிர... அப்போதே எதையும் சொல்லாமல்.. ஓம்கார சுப்ரபாதம் முடித்துவிட்டு.. நடந்த விஷயம் ஒன்றையும் விடாமல் சொல்கிறார் மீரா! அனைவரும் ஆச்சர்யப்பட... தல்வாரோ சாஷ்டாங்கமாக பாபாவின் புகைப்படம் முன் வணங்கி "என்ன கருணை... என்ன தயை சுவாமி உங்களுக்கு!" என்று உருகுகிறார்! 


அது 1995 - 1996 க்குள் நிகழ்ந்த அனுபவம்... அது சிம்லா ... சிம்லா பல்கலைக்கழக பதிவாளர் சௌஹான் ஜி இல்லம்! இரவு முழுக்க நடந்த பஜனைக்கு பின் பக்தர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல... பிறகு ஒருமணி நேரத்திற்குள் மீரா அவரது பூஜையறைக்குச் செல்ல... அங்கே வெறுமையாக இருந்த ஹார்மோனியத்தை பார்த்து மீராவுக்கு அதை இசைக்க வேண்டும் போல் தோன்றுகிறது.. அதன் விசிறியைப் பிடித்து அசைத்து அசைத்து மால்கோஸ் ராகத்தில் "மேரே அரஜ சுனோ பகவான் ! ஆவோ ஆவோ!" என்று நாபியிலிருந்து உச்ச குரலில் பாடிக் கொண்டிருந்த போது "ஆவோ ஆவோ சாயி பகவான்!" என்று ஒரே வரியையே பாடிக் கொண்டே இருக்கிறார் மீரா...மீராவுக்கு பகவான் பாபா வந்ததைப் போன்ற ஓர் உணர்வு! அருகே சௌஹான் அழுது கொண்டிருக்க.. என்னவோ ஏதோ என பஜனையை நிப்பாட்ட "ஏன்னம்மா பஜனையை நிறுத்திவிட்டாய்?" என்று சௌஹான் கேட்க... "நீங்கள் அழுதீர்கள்!" என்று மீரா புதிராகக் கேட்க...

"அம்மா என் முன்னே பாபா தோன்றி காட்சி கொடுத்தார்... ஆகவே அழுகை வந்துவிட்டது அம்மா! நீ பாட்டை நிறுத்திய உடன் பாபா அப்படியே மறைந்துவிட்டார்!" என்கிறார் மிகவும் உணர்ச்சிவசத்தோடு...! பிறர் கண்களை மூடிக் கொண்டே பஜனையை பின்தொடர்ந்ததால் அவர்களால் பாபா தரிசனத்தை பெற முடியவில்லை... 

பாபாவின் தரிசனத்தை பெற வேண்டுமானால் மால்கோஸ் ராகத்தைத் தான் பாடுவேன்...! அதை பாடும்போதெல்லாம் பாபா தனக்கு தரிசனம் தருவார்‌ என்று மனம் திறந்து அந்த தரிசன ரகசியத்தைப் பகிர்கிறார் மீரா!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 215 - 218 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


மனம் கடந்த அனுபவமே ஆன்மீக அனுபவம்! மனம் கடக்க வேண்டுமெனில் முதலில் மனம் திறக்க வேண்டும்! எண்ணங்களில் சேகரிக்கும் சாயி அனுபவம் நிறையாது போக நமக்கு திருப்தியை தருவதில்லை! இறைவன் பாபாவின் அனுபவங்களை நாம் சேகரிப்பதற்காக ஒரே சிறந்த இடம் இதயமே! பாபா அனுபவம் உணர்வுமயமானதே தவிர எண்ணமயமானது அல்ல! எண்ணங்களுக்கு அங்கே வேலையே இல்லை! எந்த அனுபவங்களையும் நாம் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை... மனம் திறந்து இதயம் சாயி அனுபவங்களை வாங்கிக் கொள்ள நாமே அப்போது அதற்கான நித்திய நிரூபணமாக மாறிவிடுகிறோம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து:

  1. பெயரில்லா16 மே, 2023 அன்று AM 7:23

    இறைவன் தந்த அனுபவங்களை..இதயத்தில் சேகரிப்போம்!தியானம் மூலம் மீண்டும் மீண்டும் அதையே அனுபவிப்போம்!!

    பதிலளிநீக்கு