தலைப்பு

வெள்ளி, 5 மே, 2023

பிசாசுகள் தட்டிய கதவுகள் - அசைவின்றி உறைந்த கட்டில் - காற்றாக தப்பித்த சஞ்ஜெய் மீரா!

பல்வேறு விதமான ஆச்சர்ய அனுபவங்களை மெய்சிலிர்க்கும் வகையில் வாழ்ந்த இல்லறத் துறவிகள் மீரா - சஞ்ஜெய் எனும் இருவரும் தங்களின் தனிப்பட்ட பரவச சாயி அனுபவங்களை சுவாரஸ்யமாக இதோ...


அது 1974 ஃபெப்ரவரி மாதம்...

ரிஷிகேஷில் முநீஷானந்த சுவாமிஜி ஆசிரமத்தில் இல்லறத்துறவிகள் சஞ்ஜெய் மீரா தங்குகிறார்கள்! எப்படி மீனா என்ற பெயரை மீரா என்று சுவாமிஜி மாற்றுகிறாரோ அப்படியே சஞ்ஜெய் என்ற பெயரை சஞ்ஜெயானந்த் என்று அவரே மாற்றி அமைக்கிறார்! பெரும்பாலும் அவர் சஞ்ஜெயை சஞ்ஜெய் ராஜா என்று அழைப்பார்! 

அந்த ஆண்டு 12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா! அதை முடித்துக் கொண்டு மார்ச் மாதம் ஷிர்டிக்கு செல்வதாக இருவரும் தீர்மானிக்கின்றனர்! அதுவரை கும்பமேளா கொண்டாட்டம்... முநீஷானந்தா சுவாமிஜி இருவரையும் மிகவும் நேசிக்கிறார்... தனது ஆசிரம பொறுப்புகளை தனக்குப் பிறகு அவர்களுக்கு கொடுப்பதாக தீர்மானித்திருந்தார்... ஆனால் அங்கேயே தங்கியிருந்த வேறொருவர் தன்னுடையதாக அந்த ஆசிரமத்தை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்... வீட்டுக்கு வீடு வாசற்படி போல் ஆசிரமத்திற்கு ஆசிரமமும் வாசற்படி...


இல்லறத் துறவிகள் அங்கே தங்கியிருந்த சமயம்...  சுவர்க்காஸ்ரமத்தின் குகை வாசிகள், மகாத்மாக்கள் அதிகாலை 2 மணிக்கு கங்கைக்கு குளிக்கச் செல்கிறார்கள்... வந்தபிறகு இந்த இல்லறத்துறவிகளிடமே கேட்டு தேநீர் அருந்துவார்கள்!

அங்கு தங்கியிருந்த ஒருநாள் மாலை 5 மணிக்கு மீரா சமையல் செய்து கொண்டிருந்த போது பாபா வருகைக்கான தெய்வீக வாசனைகள் வர ஆரம்பிக்கின்றன... சஞ்ஜெய் எழுந்து உடனே அறைக்குச் செல்ல...பாபா படத்திலிருந்து விபூதி வந்து கொண்டிருக்கிறது! "ஹா பாபா! அப்படியா பாபா! சரி பாபா!" என்கிற பேச்சு வார்த்தை அறையிலிருந்து கேட்கிறது! உள்ளிருந்து வெளியே வருகிறார் சஞ்ஜெய்! பாபா என்ன சொன்னார்? என்று ஆவலோடு கேட்கிற மீராவிடம்... பாபா இருவரையும் கும்ப மேளா முடியும் வரை அங்கேயே இருக்கச் சொன்னதாகவும், மேலும் பல சாதுக்கள், சன்யாசிகள் , நாக பாபாக்கள் வருவார்கள் என்று பாபா சொன்னதாகவும் தெரிவிக்க... இருவரும் அங்கேயே தங்குகிறார்கள்! முநீஷானந்த சுவாமிஜி நிறைய சேவைப் பணிகளை இருவருக்கும் தர... சாதுக்களின் சத்சங்கங்களையும் கேட்கிற பாக்கியத்தை இருவரும் பெறுகின்றனர்!


அந்த ஒரு நாள் இரவு... பஜனை மற்றும் உணவு முடித்து இருவரும் கட்டிலில் படுத்துக் கொள்ள... திடுக்கிடும் சம்பவம் அரங்கேறத் துவங்குகிறது! "ஓம் பட் சுவாஹா ஓம் பட் சுவாஹா!" என பக்கத்திலிருந்து ஒருவித சப்தம் இருவரின் காதுகளில் விழுகிறது... அது எதிர்மறை அதிர்வலைகளை இருவரின் அறையிலும் பாய்ச்ச வருகிறது... இருவரும் குழம்புகிறார்கள்.. என்ன செய்வதென்று அறியாது இருக்கிறார்கள் ... அப்போது தான் மேலும் ஒரு அதிர்ச்சி கலந்த சம்பவம் அரங்கேறுகிறது.. அதுவோ நள்ளிரவு... தூக்க தேவதை பாகுபாடின்றி அனைவரின் இமைகளின் மேல் அமர்ந்துவிடும் பொழுது... சஞ்ஜெய் மீராவின் அறைக் கதவு பலமாகத் தட்டப்படுகிறது... அது யார்?

தூங்குகின்ற சமயத்தில்... அது மனிதர் தட்டுவதான சப்தம் இல்லை.. அசுரத்தனமான கதவு தட்டல்... மிரண்டு போகிறார்கள்.. சரி யாரென்று கதவு திறந்து பார்க்கலாம் என எழ எத்தனிக்கிறார்கள்.. என்ன அதிசயம்!! அவர்களால் எழக் கூட முடியவில்லை... ஆச்சர்யம்... உடல் கட்டிலோடு ஒட்டிக் கொள்கிறது.. உடல் அங்கங்கள் கட்டிலோடு பசை போல் இறுக்கமாகிவிடுகிறது!

இப்படியே நள்ளிரவு முழுக்க.. கிட்டத்தட்ட பிரம்ம முகூர்த்தமான  4 மணிவரை அந்த அமானுஷ்ய கதவு தட்டுதல் படாதபாடு படுத்துகிறது.. இருவராலும் கதவு திறக்க முடியவில்லை... அந்த அமானுஷ்யமும் உள்ளே நுழைய முடியவில்லை! திடீரென மீரா தனது கையை நீட்ட முயற்சித்து அருகே இருக்கும் பாபா விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள எத்தனிக்கிறார்.. அவரால் முடிகிறது... விபூதியை விரல் ஒன்றில் தாங்கி அதை நெற்றியில் இட்ட அடுத்த நொடி.. காத்திருந்தது பரவசம்...! இருவரும் எதிரே பார்க்காத பரவசம்.. ஆம் அந்த அமானுஷ்ய சப்தம் நின்றுவிடுகிறது! சஞ்ஜெயும் அதற்குள் விபூதியை நெற்றியில் இட்டுவிடுகிறார்.. பிறகு நடந்த சம்பவத்தை சுவாமிஜி முநீஷானந்தாவிடம்  

நடந்தவற்றை அதே பதட்டத்தோடு விளக்கி.. தங்களை கட்டிலில் பாபாவே எழ முடியாமல் கட்டிப் போட்ட பேரருளையும் பகிர்ந்து அவரையும் சேர்த்து  சிலிர்க்க வைக்கிறார்கள்! அப்போது பாபாவின் கருணை பற்றிய பக்தி உணர்வு  இதயம் விட்டு இதயம் பரவுகிறது! 


இந்த சம்பவம் 1971 ல்  நிகழ்கிறது! ஒருமுறை இருவரையும் ஷிர்டி பாபா ஷிர்டிக்கு நடந்தே வரச் சொல்கிறார்.. ஆனால் மூன்று கட்டளைகள் வதிக்கிறார்! 

1. பிச்சை எடுக்கக் கூடாது

2. ஹோட்டல் உணவு உண்ணக்கூடாது!

3. பணத்தை அருகே வைத்துக் கொள்ளக் கூடாது!

இந்த கட்டளைகளை பாபா சஞ்ஜெயின் தியானத்தில் இட்டது!

இது மூன்றும் இல்லறத் துறவிகளுக்கு சுலபமானதே! அவர்களிடம் பணம் இருந்தால் தானே வைத்துக் கொள்வதற்கு...! 


ஆக அவர்கள் புறப்பட்டு வருவதற்கு முன் ... அந்த சமயத்தில் மத்திய பிரதேச சிந்த்வாடாவில் ஷிர்டி சாயி தர்பார் இருக்க.. அதில் சென்று தரிசித்துவிட்டு வருகிறார்கள்! பாபாவை அங்கே நன்றாக உணர்கிறார்கள்!

அந்த ஒரு நாள் மசீது சாசா எனும் ஒரு இஸ்லாமியர் "குமார்! எங்களின் ஈத் பண்டிகை நவம்பர் 23 அன்றே வருகிறது.. எங்கள் ஹவேலி வீட்டிலேயே பஜனை வைத்துக் கொள்ளுங்கள்!" என்று சஞ்ஜெயிடம் ஒரு இஸ்லாமியர் ஆச்சர்யத்துடன்  விண்ணப்பிக்க... "அது இஸ்லாமியர் பகுதி.. அங்கே வந்து எங்களை அடி வாங்க வைக்கப் பார்க்கிறாயா?" என்று முதலில் இருவரும் மறுத்து.. பிறகு அந்த இஸ்லாமியர் வற்புறுத்த... சில சாயி பக்தர்களும் சேர்ந்து ஒப்புக் கொள்கிறார்கள்! 

அந்த நாளும் வந்தது.. பிற இஸ்லாமியர்கள் பார்வையில் படும்படி மீரா - சஞ்ஜெய் அவரின் வீட்டுக்குள் செல்கின்றனர்... இருவரையும் உள்ளே அவர் தனது பூஜையறையில் அழைத்துச் செல்ல‌.. இஸ்லாமியர் வீட்டில் பூஜையறையா? அதுவே ஆச்சர்யம்!! ஆச்சர்யத்துக்கே ஆச்சர்யமாய் அந்த இஸ்லாமியர் எல்லா மத இறை உருவங்களையும் அங்கே வைத்திருக்கிறார்! பிற மத நூல்களையும் அங்கே வைத்திருக்கிறார்.. அதுவரை இல்லறத் துறவிகள் இப்படிப்பட்ட ஒரு சர்வ தர்மத்தை கொண்டாடும் வீட்டிற்கு செல்லவே இல்லை என்று ஆச்சர்யப்படுகின்றனர்!

பஜனை நிகழ ஆரம்பிக்கிறது... அந்த பஜனை சப்தம் பிற இஸ்லாமியர் வீட்டிற்கும் கேட்கிறது.. இஸ்லாமியர் வீட்டில் பஜனையா? கொதித்தெழுகிறார்கள்... கையில் ஆயுதங்களோடு அவர் வீட்டுக்கு வெளியே முற்றுகை இடுகிறார்கள்! பஜனையும் நிறைவாகிறது... அது இரவு 10 மணி! வெளியே கூப்பாடு போடுகிறார்கள் பிற இஸ்லாமியர்கள்! அந்த இல்லறத் துறவிகளை கூண்டோடு அமுக்கிப் பிடித்துத் துவைத்தெடுக்க வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம்... என்ன ஆனது? இருவரும் மாட்டிக் கொண்டார்களா? தப்பித்தார்களா? 


அடுத்த நாள் மசீது சாசா இருவரிடமும் நடந்ததை ஆச்சர்யத்தோடு பகிர்ந்து கொள்கிறார்! 

ஆளுக்கொரு லத்தி எடுத்துக் கொண்டு மீரா சஞ்ஜெயை ஒப்படைக்கும்படி மசீது சாசாவிடம் வற்புறுத்த.. "அவர்கள் உங்கள் முன்னர் தானே சென்றார்கள்... கவனிக்கவில்லையா? அவர்கள் இப்போது அவர்களது வீட்டிற்கே சென்றிருப்பார்கள்! உங்களுக்கு ஈத் முபாரக் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டுத் தானே உங்களின் கூட்டத்தின் நடுவே சென்றார்கள்!" என்று அவர் தெரிவிக்க... மிரண்டு போகிறார்கள் பிரச்சனை செய்ய வந்த இஸ்லாமியர்கள்...

இல்லறத்துறவிகளோ முந்தைய இரவு உயிரைக் கையில் பிடித்தபடி "ஜெய் சாயிராம் ஜெய் சாயிராம்" என்று மட்டுமே சொல்லி நகர்கிறார்கள்.. ஆனால் இருவரது தோற்றத்தையுமே அந்த இஸ்லாமியர்களின் கண்களுக்கு தெரியாமல் மறைத்துவிட்டு பெரிய கலவரத்தையும் தடுத்து தனது பக்தர்களையும் தடுத்தாட்கொள்கிறார் பாபா!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 167 - 173 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


எந்தவித அசம்பாவிதங்களில் இருந்தும் இறைவன் பாபா தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களை காப்பாற்றுகிறார்! அது பேயானாலும் சரி, பேய்களை விடவும் அபாயகரமான சில மனிதர்களானாலும் சரி தனது அருட்காவலை புரிய பாபா ஒருபோதும் தவறியதே இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக