தலைப்பு

புதன், 10 மே, 2023

ஷிர்டியிலிருந்து ஆட்டோவில் அழைத்துப் போன பாபா - தேநீரின் அடியில் சுடச்சுட ருத்திராட்சங்கள்!!

சாயி பக்தரான இல்லறத் துறவிகளின் ஷிர்டி மற்றும் பக்தி யாத்திரையில் பஜனையோடு கூடிய பரவச சாயி லீலைகள் எவ்வாறு நிகழ்ந்தன...? அதில் உயிருக்கே போராடிய சிறுமியை சாயி பஜன் எவ்வாறு காப்பாற்றியது? சுவாரஸ்யமாக இதோ...


அது 1975 - 76'க்குள்.. ஷிர்டியில் தங்குகிறார்கள் இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் மீரா! ராமநவமிக்கு கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அப்போது மட்டும் அறை காலி இருக்காது என்று ஷிர்டி சமஸ்தானின் மேனேஜர் ஷிண்டே தெரிவிக்கிறார்! அதுவரை எங்கே தங்குவது? தங்க பணம் வேண்டும்! திங்க வைக்கும் நபர் கூட தன்னோடு தங்க வைப்பார்களா? ரோட்டில் தங்குவது இருவருக்கும் புதிதில்லை... ஷிண்டே சொன்னதை பூஜாரிக்கு சொல்கிற போது.. இது சாயி தர்பார்... நிச்சயம் நீதி கிடைக்கும்.. அம்போ என கைவிடவே மாட்டார் பாபா என்கிறார் பூஜாரி.. அவர் கையிலும் வாயிலும் கருணை எனும் பூ வாசனை! இந்த நேரம் ரிஷிகேஷ் ஹரித்வாரில் கூட இடம் கிடைக்கும்.. ஆனால் ஷிர்டியில்.. இருவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை.. அந்த நாள் - அறையை காலி செய்ய வேண்டிய நாள்! எனவே பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பேருந்து நிலையத்தில் எண்ணங்களற்று அமர்ந்த போது ஒரு ஆச்சர்யம் இருவருக்கும் காத்திருக்கிறது! 

எங்கிருந்தோ வந்த ஒரு முதியவர் "சுவாமிஜி போகிறீர்களா?" என்று கேட்கிறார்! சஞ்ஜெயும் நடந்ததைச் சொல்ல.. "நீங்கள் போக வேண்டாம்... எல்லாம் பாபா பார்த்துக் கொள்வார்! இங்கே இந்த பக்த நிவாசத்தில் ஒரு முதியோர் ஜோடியுடன் நீங்களும் தங்கிக் கொள்ளுங்கள்! அவர்கள் நல்லவர்கள்! உங்களோடு சரியாக இருப்பார்கள்! 2 நாட்களுக்குப் பிறகு அந்த அறையை உங்களுக்கு தருகிறேன்!" என்கிறார்! அறை அவர்களின் கன்னத்தில் அறை விடவில்லை! பிரச்சனை முடிந்தது! ஷிர்டியில் கீத ஆராதனை செய்வதற்கு 24 மணி நேரம் முன்பே அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும்.. ஆனால் இது எதுவுமே செய்யாத இருவருக்கும் அவர்களே முன் வந்து "சுவாமிஜி நீங்களே அகண்ட பஜனையை அரம்பித்துவிடுங்கள்!" என்று சஞ்ஜெயிடம் தெரிவித்து ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்! பிறகு 1 மணி நேர பஜனை பாடுகிறார்கள் இருவரும்...! ராம நவமி நிறைவானது!


பிறகு அங்கிருந்து குஜராத்தின் பரூசீ கிராமத்திற்கு இல்லறத் துறவிகள் வருகிறார்கள்! சத்தம் கூட சற்று கண் சார்த்தும் இரவுப் பொழுது அது! தங்க சத்திரத்தில் இடம் இருக்கிறதா? ஆட்டோவில் தங்கும் இடம் நோக்கிய தேடுதல் வேட்டை... ஒரு ஆசிரமத்திலும் ஒரு சத்திரத்திலும் கூட இடம் கிடைக்கவில்லை... சரி ரயில்வே பிளாட்ஃபாரம் என்ன இருவருக்கும் புதிதா? என்று அங்கேயே இறக்கிவிடக் கேட்க..‌ அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பணம் தர வேண்டும்.. ஒரு தொகையைச் சொல்கிறார் அவர்...சஞ்ஜெயிடம் அதற்கான பணம் குறைவாகவே இருக்க... விழி பிதுங்காமல் ... சற்றும் தாமதிக்காமல்.. பற்றே இல்லாமல், மீண்டும் வாங்குவதற்கு பணமே இல்லாமல் , தன்னிடம் இருந்த அந்த ஒரே ஒரு கைக் கடிகாரத்தை கழட்டிக் தருகிறார் சஞ்ஜெய்! அதை வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர்... "இன்னொரு இடம் இருக்கிறது.. கடைசி முயற்சி.. அங்கே அழைத்துச் செல்கிறேன்! அங்கேயும் இல்லை என்றால் என் வீட்டிற்கே அழைத்துச் செல்கிறேன் ! 3 நாட்களாவது இருங்கள்! எங்களைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களால் இறை நாமம் கேட்கும் ஒரு புண்ணியத்தை நாங்களும் பெறுகிறோம்!" என்று கூறியபடியே வண்டியை ஓட்டி ஒரு இடத்திற்கு விரைகிறார்! அது ஒரு ஷிர்டி மந்திர்! அங்கே அந்த சமயத்தில் சேஜ் ஆரத்தி நிகழ்கிறது.. அதை வைத்து இரவு மணி 10 என்பதை உணர்ந்து கொள்ளலாம்! அது ஒரு காலனி.. அதற்குள்ளே தான் அந்த பாபா கோவில்.. ஆரத்தியை தரிசிக்க இருவரும் உள்ளே செல்ல... சஞ்ஜெய் - மீராவை கண்டு கொண்ட ஒரு பெரியவர் "சுவாமிஜி .. நீங்களா? மிகவும் மகிழ்ச்சி... உங்களை ஷிர்டியில் பார்த்திருக்கிறேன்! அற்புதமாக பாடினீர்கள்! உங்கள் பெட்டி எங்கே?" என்று கேட்கிறார் ஒருவர்... அவர் பெயர் டாகோர் பாயி.. அவரே அந்த காலனி கோவிலை கட்டியவர்! "அது சரி! எப்படி உங்களுக்கு இந்த இடம் தெரியும்? யார் அழைத்து வந்தது?" என்று ஆச்சர்யத்தோடு அவர் கேட்க.. சஞ்ஜெய் நடந்ததைச் சொல்ல... "எவ்வளவு பில்?" என்று போக்குவரத்துச் செலவை அந்தப் பெரியவர் விசாரிக்க..‌ "பரவாயில்லை நாளை காலை வந்து வாங்கிக் கொள்கிறேன்!" என்று கிளம்பிவிடுகிறார் ஓட்டுநர்... ஆட்டோ கிளம்புவிடுகிறது!


பிறகு காலையிலும் அந்த ஆட்டோக்காரர் வருகிறார்... சஞ்ஜெய் எவ்வளவு தர வேண்டும் என்று கேட்கிற போது "மாலை வருகிறேன்!" என்று மீண்டும் நழுவிவிடுகிறார்! நழுவுதற்கு முன்பு அந்த ஆட்டோக்காரருடைய பெயர் முகவரி , ஆட்டோ நம்பர் எல்லாம் குறித்துக் கொள்ளப்படுகின்றன... அங்கே இருவரும் 3 நாட்கள் தங்குகிறார்கள்! அந்த ஆட்டோக்காரரை பற்றி விசாரிக்கையில் அப்படி ஒரு பெயர் - முகவரி - ஆட்டோ எண் கொண்ட நபரே இல்லை என்று ஆர்.டி.ஓ அலுவலகமே தகவல் தருகிறது ! 

"சுவர்க்கம் , நரகம், பூமி என்று நீங்கள் எங்கே சுற்றினாலும் ... என் அனுமதி இல்லாமல் உங்களுக்கு இடமே கிடைக்காது!" என்கிறார் ஷிர்டி பாபா! ஆம் பூமியில் கூட பாபா ஆணையிடாமல் இடமே கிடைக்காது! என்று அதனை ஆமோதிக்கிறார் மீரா!


அது 1976. சிம்லா - அது செப்டம்பர் மாதம்! அங்கே சியாம் சுந்தர் இல்லம்.. பக்தர் நிஜாவான் சொல்லி அங்கே இருவரும் விஜயம்! ஆனால் சிம்லா வந்தார்களே தவிர சியாம் சுந்தர் அங்கே இல்லை! ஆகவே ஒரு ஹோட்டலில் இருவரும் தங்க... பக்தர் கிருஷ்ண சந்திர ஜெயின் அறிமுகமாகிறார்! அவரோ ஜே.எஸ் சர்மாவின் முகவரி கொடுத்து அங்கே அனுப்புகிறார்! இந்த சர்மா சிம்லா சாயி சமிதி கன்வினர்! அடுத்த நாள் வியாழக்கிழமை.. சமிதி பஜன்! சனாதன தர்ம ஹாலில் பஜன் நிகழ்கிறது! "காளி பாடீ" என்ற கோவிலின் சத்திரத்தில் அந்த சர்மா இருவரையும் தங்கச் சொல்ல... இல்லறத் துறவிகளின் பஜனைக்காக அங்கே சில சாயி பக்தர்களும் வருகிறார்கள்... அப்படி அந்தச் சத்திரத்தில் வந்தவர்கள பலர் 


  ரமேஷ் சௌஹான் - எ‌‌.எஸ் சேடீ, டாக்டர் பிரகாஷ் ஜேஷ்டா, நீதா கன்னா, திரு/ திருமதி ரேணு கௌசிக், ஜி.எஸ் தீர் , ஓம்பிரகாஷ் வர்மா, கெ.எல் சூத் , தேவேந்த்ர சர்மா , பாபு ராம் சூத், டி.எஸ் ஜேஷ்டா, இன்னும் பலர்...

அங்கே வழக்கம் போல் பஜனை மற்றும் சத்சங் நிகழ்கிறது! 


"சுவாமிஜி சியாம் சுந்தர் புட்டபர்த்தி சென்றிருப்பதால் .. அதுவரை இந்த சத்தியத்தில் தங்கி இருங்கள்! உங்களுக்கு வேண்டியதை நாங்களே செய்கிறோம்!" என்கிறார் கன்வினர் சர்மா! 

சஞ்ஜெய் பாடுவதற்கு ஆர்மோனியம் கேட்கிறார்.. ஏற்பாடாகிறது.. பாடலின் ஊடே தாள மயத்திற்கு தபலா கேட்கிறார்... அருகே இசைப் பள்ளியில் தபலா ஆசிரியரை புக் செய்கிறார்கள்.. ஒரு நாள் தானே பரவாயில்லை என்று அவர் கேட்ட 500ரூ தருவதாக சம்மதிக்கிறார்கள்! பஜனை - சத்சங் கோலாகலமாக நிகழ்கிறது! அதில் தபலா வாசித்தவர் தபலா ஆசிரியர் மன்சா கான்! ஒரு ஹிந்து என்ன பெரிதாக கவ்வாலியும் கஜலும் பாடி விடுவார் என்று நினைத்த அவருக்கு ஆச்சர்யம் நிறைத்தது! அதைவிட இன்னொரு அனுபவ மகிமை தபலாக்காரருக்காக காத்திருந்தது!


பயபக்தியோடு அந்த தபலா பேராசிரியர் அடுத்த நாளும் சஞ்ஜெயின் சாயி பஜனைக்கு வருகிறார்! ஆனால் கன்வினர் "ஒருநாள் தானே புக் செய்தோம்.. 500 ரூபாயும் கொடுத்தாயிற்றே...இன்று உங்களை அழைக்கவில்லையே!" என்று குழம்பிய படி கேட்டதற்கு... "இந்த இரு படங்களில் இருப்பவர் யார்?" என்று அவர் கேட்கிற போது.. அவரின் தபலா வாசிக்கும் விரல்களோ காற்றிலேயே தபலா வாசிக்கிறது... 

"அவர் ஷிர்டி சாயி பாபா! இவர் அவரின் அடுத்த அவதாரம் சத்ய சாயி பாபா.. புட்டபர்த்தியில் வசிக்கிறார்!" என்றதும்... திகைத்தபடி "அந்த வெள்ளை தாடிக்கார சாமி.. என் கனவில் வந்து.. என் பக்தர்கள் சிம்லா வந்திருக்கிறார்கள்! நீ தான் இவர்கள் இங்கே இருக்கும் வரை தபலா வாசிக்க வேண்டும்.. நான் உனக்கு பணம் தருகிறேன்! இதோ உன் பணம்! என்று பளார் என ஓங்கி அறைந்தார்.. அது கனவு போலவே இல்லை.. பாருங்கள் என் கன்னம் நன்றாக வீங்கிப் போயிருக்கிறது!" என்று கன்னத்தை காட்டுகிறார்! அனைவரும் திகைத்து நிற்கின்றனர்! அது முதல் இல்லறத் துறவிகள் இருக்கும் வரை அந்த கன்னம் வீங்கியவரே அனைவருக்கும் காது வீங்கும் அளவிற்கு சஞ்ஜெய் பஜனைகளில் தபலா வாசிக்கிறார்! 


பக்தர் சேடீ ஒரு கோவில் கட்டுகிறார்.. அங்கே சுப்ரபாதம்- பஜனை - சத்சங் என எல்லா ஆன்மீக நிகழ்வும் அரங்கேறுகிறது! அப்போது ஒரு ஞாயிற்றுக் கிழமை... அங்கே வந்திருந்த பக்தர் தேவேந்திர சர்மா "சுவாமிஜி நீங்கள் அணிந்திருக்கும் உத்திராட்சம் ஒர்ஜினலா?" என்று கேட்க.. சஞ்ஜெய் "ஆம்!" என்று பதில் அளிக்க..."ஒன்று இருந்தால் தாருங்கள்!" என்று சர்மா கேட்க.. "தற்போது கைவசம் இல்லை.. உங்கள் அனைவருக்கும் தேநீர் தயாரித்துத் தருகிறேன்!" என சஞ்ஜெய் சுடச்சுட தேநீர் பரிமாற.. தடக் என்று ஏதோ விழுகிற சப்தம்... என்னவென்று யாருக்கும் புரியவில்லை... பிறகு தேவேந்த்ர சர்மா கோப்பை கனமாக இருப்பதாக உணர வேறொரு கிண்ணத்தில் அந்த தேநீரை ஊற்ற...இரண்டு பெரிய சிருஷ்டி ருத்ராட்சங்கள் "என்னை எடுத்துக்கொள்!" என்றவாறு அசைகின்றன...!

அனைவருக்கும் ஒரே எதிர்பாராத ஆச்சர்யம்!


ஒருமுறை சேடீ கட்டிய கோவிலில் பக்தர் நீதி கன்னா,திருமதி ஜானகி ஜேஷ்டாவும் தன் குழந்தையோடு வந்திருக்க.. இல்லறத் துறவிகளை அவசரமாக தங்கள் இல்லத்திற்கு அழைக்க.. அவர்களும் செல்ல.. அவர்களின் 5வருட குழந்தை பெயர் சங்கரி படுத்தப்படுக்கையாக கண்களையே திறக்காமல் கடந்த 3 நாட்களாக உயிருக்கே போராடுகிறாள்!

"சுவாமிஜி எப்படியாவது குழந்தையைக் காப்பாற்றுங்கள்!" என்று அவள் தாய் கதறி அழ...சஞ்ஜெய் குழந்தையை பூஜையறைக்கு எடுத்து வரச் சொல்ல.. ஒரு கோப்பை தண்ணீர் கேட்க... அதுவும் பாபா படத்தின் அருகே வைக்கப்பட..‌ சஞ்ஜெய் பஜனையை ஆரம்பிக்க... ஓரிரு நொடியில் பாபா விஜயத்திற்கான அற்புத வாசனைகள் வர ஆரம்பிக்க..‌ மூடி வைத்த நீரை சஞ்ஜெய் எடுக்கச் சொல்ல.. அது அமிர்தமாக சிருஷ்டித்து இருக்க... உடனே அந்த நீரை குழந்தை சங்கரியின் முகத்தில் தெளித்து அவளுக்கு பிரசாதமாக ஊட்டச் சொல்ல..‌ அவள் நோய் நீங்கி முற்றிலும் குணம் மட்டும் அடையவில்லை.. அவள் முகத்தில் பிரகாசமே வீச ஆரம்பிக்கிறது!


இதில் கசப்பான விநோத வேடிக்கை என்னவெனில் யாரை தேடி இல்லறத் துறவிகள் சிம்லா வந்தார்களோ... அவரோ புட்டபர்த்தியில்... ஆனால் அவர் வந்தபிறகோ எல்லாம் தலைகீழாகிப் போனது! அந்த அருமையான பக்தர்களின் இணக்கமே அப்படியே சுக்கல் நூறாய் உடைகிறது! ஈகோ பிடித்த அவரால் சஞ்ஜெய் - மீரா ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்! நகமும் சதையுமாக இருவரோடும் ஒட்டி இருந்த சாயி பக்தர்கள் , வெறும் புறம் பேசுதல் , அதை ஆராயாமல் நம்புதல் என்ற அறியாமையில் கேசமாய் உதிர்கிறார்கள்! சத்சங்கமே அசத்சங்கமாய் கலைந்து போகிறது!

"யாருக்கு யார் ஆதாரம்! அவரவருக்கு அவரே ஆதாரம்! நான் இருக்க ஏன் பயம்?" என்ற ஷிர்டி சாயி சத்சரித 45 ஆம் அத்தியாயத்தையும்...

"கடந்த காலம் கடந்துவிட்டது.. என்ன இனி நடக்க வேண்டுமோ அதுவும் நடந்தே தீரும்!" என்ற துளசிதாசர் வரிகளையும்...

"கடந்த ஜென்மத்தின் புண்ணியம் முடிந்துவிட்டால் இந்த ஜென்மத்தில் எப்படி கிடைக்கும்?" என்ற சஞ்ஜெயானந்த் சுவாமிஜியின் வரிகளையும் மேற்கோள் காட்டியும்... இறுதியாக ஒரே ஒரு பக்தர் ரமேஷ் சௌகான் மட்டுமே தங்களுக்கு அடைக்கலம் தருகிறார் என்று பகிர்ந்து சன்யாசினி மீரா சமாதானம் அடைகிறார்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 194 - 205 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


அதர்மம் செய்பவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்! தர்மம் செய்பவர்கள் பிரிந்திருக்கிறார்கள்! ஆன்மீகவாதிகளுக்குள் ஒற்றுமையே இல்லை! போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல், திமிர் என இத்தனை பேய்கள் ஒன்றாகப் பிடிக்க... இப்படியே பக்தர்கள் அங்கொன்று இங்கொன்றாக பிரிந்திருக்கிறார்கள்! அகந்தை எனும் அறியாமையால் வலுவற்று சிதறுகிறார்கள்! இதற்கு ஒரே காரணம் ஆன்ம சாதனை எனும் தியானம் இல்லாமையே! ஆக...வெறும் கை கால்களை ஆட்டி அசைத்து சேவை செய்வதால் மட்டும் பக்குவம் வந்துவிடுவதில்லை... தியானத்தோடு கூடிய சேவையே வாழ்க்கையில் பரிபக்குவமும் , திருப்தியையும் தருகிறது! அதையே இறைவன் பாபா நம்மிடமிருந்து விரும்புகிறார்! பாபா இறைவன் தான்! ஆனால் மனசாட்சியை தொட்டுப் பார்த்து பதில் சொல்வோம்! நாம் அவரின் உண்மையான பக்தர்களா? 


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக