தலைப்பு

புதன், 3 மே, 2023

பாங்கு மயக்கத்தில் எழுதப்பட்ட பரீட்சை : தோல்வியா? வெற்றியா? திடுக்கிடும் திருப்புமுனை!

பாங்கு எனும் போதை மயக்கத்திற்கு எவ்வாறு பக்தர்கள் ஆளாகிறார்கள்? பிறகு என்ன நேர்ந்தது? விறு விறு என சுவாரஸ்யமாக இதோ...


அது 1973, ஃபெப்ரவரி மாதம்! ஹரித்வாரில் இருந்து இல்லறத் துறவிகள் ஷிர்டி செல்கின்ற சமயத்தில்... அதற்கு இடைப்பட்ட மகாராஷ்டிரா கிராமமான நந்தூபார் கிராமத்தில் டாக்டர் சோன்டக்கே வீட்டுக்கு செல்கிறார்கள்! அவர் கிழக்கு ரயில்வேயில் எ.எம்.ஓ'வாக பணியாற்றுகிறவர்! அவரோ சஞ்ஜெயிடம் "சுவாமிஜி! சிவராத்திரி அருகே வருகிறது.. ஆகையால் அதுவரை எனது வீட்டிலேயே நீங்கள் இருவரும் தங்க வேண்டும்!" என்று கேட்டுக் கொள்கிறார்.. அதற்கு இருவரும் சம்மதிக்கிறார்கள்! 

பிறகு... சிவராத்தி வைபவ நாள் வருகிறது... சோன்டக்கே உறவினரும் வருகிறார்கள்! வீட்டை சுத்தப்படுத்தி.. பூஜையறையை நன்றாக தூய்மைப்படுத்தி.. இறைவன் பாபாவுக்கு மலர் அலங்காரம் அமைத்து.. கோலாகலமாக பஜனைக்கு முன்னேற்பாடுகள் நடக்கின்றன...! அப்போது மாலை 4. டாக்டரும் டாக்டரின் தந்தையும் எங்கேயோ வெளியே செல்ல.. டாக்டரின் மனைவி

"சுவாமிஜி! நீங்கள் ஹரித்வாரிலிருந்து வந்திருப்பதால் உங்களிடம் பாங்கு இலை இருக்கிறதா?" என்று கேட்கிறார்! அது ஒரு போதை வஸ்து! காசியில் சில அகோரி பாபாக்கள் பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்! அதன் போதை காட்டமாக இருக்கும்... ஆகையால் கேட்கப்பட்ட கேள்விக்கு சஞ்ஜெயோ "பாபி! பாங்கு மிகவும் கெடுதல் ஏற்படுத்தக் கூடியது... பாபாவும் இதற்கு பிரியப்படவே மாட்டார்! பாங்கு என்னிடம் இருக்கிறது தான்! ஆனால் அதை ஷிர்டியில் உள்ள ஹோமி பாபாவுக்கு கொடுப்பதற்காக வைத்திருப்பதால் உங்களுக்கு தர இயலாது!" என்கிறார்!

ஆனால் பாபி விடவில்லை... "இல்லை சுவாமிஜி! இன்று சிவராத்திரி அல்லவா ! அதனால் தான் கேட்கிறேன்.. இன்று சிவனுக்கு பிரசாதம் படைக்கலாமே என்பதற்காகத்தான்!" என்று சொல்லி சஞ்ஜெயை சம்மதிக்க வைக்கிறார்.. அவரும் அந்த இலையை அறைத்துப் பொடியாக்கி பாலில் முந்திரி ஏலக்காய் அக்ரூட் இவற்றோடு வேறு சில வஸ்துவோடும் அந்த பாஙகு இலைப் பொடியையும் சேர்க்கிறார்! ஒரு சிறு கிண்ணத்தில் பாபா படத்தின் முன் வைத்துவிடுகிறார்!


அப்போது மாலை 6. எல்லோருக்கும் அந்த பாங்குப் பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது! டாக்டர் மகன் சுதீரும் தயங்கியபடியே அதை அருந்துகிறான்... காரணம் அவன் மருத்துவம் படிப்பவன்.. அடுத்த நாள் முக்கியமான தேர்வு.. அதை சரிவர எழுதி 90% மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் மேற்படிப்புக்கு பூனா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் 25 ஆயிரம் நன்கொடை வழங்கி சேர வேண்டிவரும்! ஆகையால் மூளையில் ஏதாவது படித்தது மறக்குமா? என்று சஞ்ஜெயிடம் கேட்டபடி பாங்குப் பாலை கையில் வைத்திருக்கிறார்.. "சுதீர்! நீ ஒன்றும் பயப்பட வேண்டாம்! எல்லாம் ஞாபகம் வரும்!" என்று சமாதானப்படுத்துகிறார் சஞ்ஜெய்! ஆகவே ஒரு கரண்டி நிறைய சுதீர் பாங்கைக் குடித்து விடுகிறார்! 

மணி இரவு எட்டோ ஒன்பதோ இருக்கும்! பாங்கு தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.. 'பாங்கு' மனித போதையை கிளப்புவதே அதன் பாங்கு... அது நிகழ ஆரம்பிக்கிறது !  ஆனால் அவர்கள் பாபாவுக்கு 1008 நாமாவளி அரசியில் அர்ச்சனை செய்தாக வேண்டும்! இது தொடர்ந்து விடிய விடிய பஜனை.. பிறகு ஓம்கார சுப்ரபாதம் , நகர சங்கீர்த்தனம் (திருவீதி உலா பஜனை) கடைசியாக உணவுப் பிரசாதம்.. இதுவே சிவராத்திரி நிகழ்ச்சி நிரல்...

அந்த மாலை 6 மணி அளவிற்கு பாபா படத்திலிருந்து அமிர்தம் வழிய ஆரம்பித்துவிடுகிறது! கீழே வழிந்து வழிந்து பாத்திரம் நிரம்ப ஆரம்பித்துவிடுகிறது! தரிசனத்திற்கு வந்தவர்க்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது! முன்னிரவு 7 மணிக்கு ஸ்ரீ சத்ய சாயி சஹஸ்ரநாம (1008 நாமாவளிகள்) அர்ச்சனையும் ஆரம்பிக்கிறது! 1 மணி நேரம் நிகழ்த்த வேண்டிய அர்சசனையை வேக கதியில் அரை மணிநேரத்திலேயே நிறைவு செய்கிறார் சஞ்ஜெய்! பாங்கு தன் பங்கைக் காட்டுகிறது.. பாபா படம் கூட சரிவர கண்களுக்குத் தெரியவில்லை... பாபா படம் கூட இரண்டு இரண்டாகப் பிரிவது போல் போதை கண்களுக்குப் புலப்படுகிறது! ஆகவே தன்னிலை மறக்க ஆரம்பிக்கிறார்கள்! எதிரிலேயே அமர்ந்து கொண்டு பாபா படம்  எங்கே என்று பாபி கேட்டது போல் அனைவர் நிலையும்! பாபி தன் அறைக்கு சென்று உறங்க... மீரா பூஜை அறை மூலையில் படுத்துறங்க...டாக்டர் , அவரின் தந்தை , பட்னாகர் மனைவி பாகின் ஆகியோர் அந்த நேரத்தில் இல்லாததால் அவர்கள் மட்டும் பாங்கிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர்! வெளியே சென்றிருந்த டாக்டருக்கு நடந்த எந்தவித அசம்பாவிதமும் தெரியாது! சஞ்ஜெய் அரை மயக்கத்தில்... பட்னாகர் மனைவியிடம் "பாபி ஒரு ஸ்ட்ராங் டீ போட்டு கொண்டு வாருங்கள் !" என்கிறார்! சஞ்ஜெய் டீ குடித்தபடி நடந்த விஷயத்தை வந்து சேரும் டாக்டரிடம் சொல்ல... டாக்டரோ அந்தத் தேநீர் கொதிப்பை விட அதிகமாகக் கொதிக்கிறார்.. "ஸ்ரீ சத்ய சாயி பாபா இருக்கிற வீட்டில் யார் சொல்லி அப்படி செய்தீர்கள்!" என்று டாக்டர் ஊசி போல் நறுக் நறுக் என்று டாக்டர் பேசுகிறார்.. பிறகு புளி கரைத்தத் தண்ணீரை ஒவ்வொருவர் வாயிலும் ஊற்றி வாந்தி எடுக்க வைக்கிறார்.. ஓரளவுக்கு தெளிவு ஏற்படுகிறது.. சஞ்ஜெய் பூஜையறையில் வந்து படுக்க.. அன்று நடக்க வேண்டிய பஜனை நடந்தேறவில்லை.. காரணம் சஞ்ஜெய் - மீரா மட்டுமே பஜனைப் பாடகர்கள்! இருவரும் அரை மயக்கத்தில்... பிறகு நள்ளிரவு வேறொரு பஜனை கோஷ்டி வந்து பாட...பஜனை 2 மணி வரை நடக்கிறது.. அதை படுத்தபடியே கேட்கின்றனர் சஞ்ஜெயும் - மீராவும்! பிறகு மெதுவாக எழுந்து பாபா படத்தின் முன் "இனி நாங்கள் ஒருபோதும் இந்த பாங்கை பயன்படுத்தமாட்டோம் சுவாமி.. தயவு செய்து எங்களுக்கு பாட சக்தி கொடுங்கள்!" என்று வேண்டிய உடனே கொஞ்சம் தெம்பு வருகிறது.. அவர்கள் பஜனையும் பாடுகிறார்கள்! 


ஆனால் டாக்டரின் பயம் எல்லாம் அடுத்த நாளே மிக முக்கியமான பரீட்சை வைத்திருந்த தன் மகன் மேல் மட்டுமே.. ஆகையால் மகனை விசாரிக்கிறார்! அவன் கண்கள் சிவந்திருந்தன... இரவு முழுக்க எதையும் படிக்காமல் போதை மயக்கத்தில் தூங்கிவிடுகிறான்! ஸ்டதெஸ்கோப் பிடிக்க வேண்டிய அவனுக்கு கிலி பிடிக்கிறது! தனது தாயிடம் முறையிடுகிறான்... "பாபா இருக்கிறார் கவலைப்படாதே... நீ சுவாமிஜியிடம் இதைப் பற்றி சொல்!" என்று அனுப்புகிறார்!


"சுதீர் ஒன்றும் பயப்படாதே!நீ ஒரு வெள்ளைக் காகிதமும் , பேனாவும் கொண்டு வா!" என்று சஞ்ஜெய் கேட்டு.. அதை வாங்கி பாபாவின் படம் முன் வைத்து "மேரீ அரஜ சீனோ பகவான்!"ஆவோ சாயி பகவான்!" எனும் பாடல்களைப் பாடுகிறார்! பிறகு பூஜை அறையை பூட்டிவிடுகிறார்! அதற்குள் சுதீர் பயந்தபடி இந்த தேர்வில் தோல்வி அடைந்தால் தந்தை வீட்டை விட்டே துரத்திவிடுவார் என்று பயம் மேல் பயம்... மீராவை தேர்வு நடக்கும் இடம் வரை சுதீர் அழைக்கிறான்... "பயப்படாதே! பாபா எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவிட மாட்டார்!" என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் சஞ்ஜெய்! சற்று நேரத்திற்கெல்லாம் பூஜை அறையிலிருந்து வாசனை வர ஆரம்பிக்கிறது... அது பாபாவின் வாசனை.. அறையைத் திறக்கிறார்கள்... பாபா படத்திலிருந்து பால் வழிய அது அந்த வெள்ளைக் காகிதத்தை நனைக்க... அதை எடுத்துப் பிரிக்கிறார் சஞ்ஜெய்! "With Blessings Sri Sathya SaiBaba - Maha Shivaratri - 1973" (ஆசீர்வாதத்துடன் ஸ்ரீ சத்ய சாயி பாபா - மஹா சிவராத்திரி 1973) என்று எழுதியிருக்கிறது!

"பாபா ஆசீர்வதித்துவிட்டார் இனி பயப்பட ஒன்றுமே இல்லை!" என்று சஞ்ஜெய் ஆணித்தரமாக உறுதிப்படுத்த.. சுதீரும் பாபாவின் மேல் பாரத்தை போட்டுவிட்டு தனியாகவே தேர்வெழுத கிளம்பிவிடுகிறான்! எழுதிவிட்டு திரும்பி வந்து "சுவாமிஜி! நான் ஒன்றுமே சரிவர எழுதவில்லை... மயக்கத்தில் தெரிந்ததை கொஞ்சம் எழுதினேன்... பிறகு தெரியாத பல கேள்விகளுக்கு "ஓம் ஸ்ரீ சாயிராம்!" மட்டுமே எழுதினேன்! இனி நீ தான் காப்பாற்ற வேண்டும்!" என்று சொல்கிறான் அச்சம் அதுவரை அவிழாத சுதீர்! இரண்டொரு நாளில் இல்லறத்துறவிகள் ஷிர்டி ஷேத்திரத்திற்கு கிளம்பிவிட...

வேறொரு சந்தர்ப்பத்தில் டாக்டர் வீட்டிற்கு வருகிற போது...அந்தத் தேர்வில் பூனா போர்ட் மெடிக்கல் காலேஜிலும் இந்த மகராஷ்டிராவிலேயுமே சுதீர் முதல் மதிப்பெண் எடுத்ததும் கேள்விப்படுகின்றனர்... பிற்காலத்தில் பெரிய மருத்துவராகி பூனாவில் கடிகீ என்கிற ஊரில் பெரிய மருத்துவமனையை திறக்கிறார்... அந்த மருத்துவமனைக்கு வேறு யாருடைய பெயரும் அல்ல... ஸ்ரீ சஞ்ஜெய் சுவாமிஜி பெயரையே சூட்டுகிறார் டாக்டர் சுதீர்... 

"சஞ்ஜீவினி ஹாஸ்பிடல்!"


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 156 - 159 | ஆசிரியர் : சன்யாசினி சஞ்ஜெயானந்த்) 


 இதுவரை பாங்கை இல்லறத் துறவிகள் பயன்படுத்தியதே இல்லை.. அதுவே முதன்முறை... விளைவு தெரியாமல் நிகழ்ந்த சம்பவம் அது.. ஆகவே இறைவன் பாபா மன்னித்துக் காப்பாற்றுகிறார்! தெரியாமல் செய்யும் தவறை தெய்வம் மன்னிக்கிறது.. தெரிந்தே செய்யும் தவறுக்கு தீய கர்மாவே தண்டிக்கிறது.. தன்னையே நோகடித்தல் என்பது தெரியாமல் செய்கிற தவறு.. பிறரை நோகடித்தல் தெரிந்தே செய்கிற தவறு! ஆகவே தியானநிலை தரும் ஆன்ம விழிப்புணர்வோடு கூடிய பேரன்பே நமது தவறுகளை துவைத்தெடுக்கும் வெள்ளாவி!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக