தலைப்பு

வியாழன், 18 மே, 2023

சமாதிக்குப் பிறகு சித்ராவதி நதியில் தோன்றிய பாபா - 1986 முதல் 2011 வரை சன்யாசினி மீரா

தனது துறவறக் கணவனை இழந்து புட்டபர்த்தியில் இறைவன் பாபாவின் நிழலில் தங்கிய மீரா எத்தனை சோதனைகளுக்கு ஆளாகிறார்...‌அத்தனை சோதனைகளிலும் பாபா அவரை எவ்வாறு வெற்றி காண வைக்கிறார் எனும் ஆச்சர்ய சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


"இந்த சத்யசாயி பாபா உனக்கு ஜென்ம ஜென்மமாக தாய் தந்தை , நீ என்ன சொல்ல வேண்டுமானாலும் எனக்கு மட்டும் சொல்! மற்ற யாரிடமும் நீ சொல்ல வேண்டியதில்லை!"

இது தான் பாபா சன்யாசினி மீரா அவர்களுக்கு முதல் தரிசனத்திலேயே நேரடியாகச் சொன்ன செய்தி! 


1969 ஆரம்ப காலகட்டத்தில் இல்லறத் துறவிகளின் முதல் தரிசனம்! அப்போதுள்ள சீதோஷ்ண நிலை மீராவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை! 

"பாபா என்னால் இங்கே இருக்க முடியவில்லை! என்னை வேறெங்காவது அனுப்பி வை!" என்று பாபாவிடம்  வேண்டிக் கொள்கிறார் மீரா.. அதே இரவு கனவில் பாபா தோன்றி "ஒன்றும் பரவாயில்லை... எல்லாம் சரியாகிவிடும்!" என்று சமாதானப்படுத்துகிறார் பாபா! வொயிட் ஃபீல்டில் கூட சில சங்கடங்கள் வந்திருக்கிறது.. வராண்டா வராண்டாவாக மாறி படுத்துக் கொள்வது... ஒரு பெண்ணாக இருந்து கொண்டு குளிப்பது ஆசிரமத்தில், உறக்கம் வெளியே, சாப்பிடுவது வேறு எங்கேயோ என பல தர்ம சங்கடங்களை ஆரம்பத்தில் மீரா அனுபவித்திருக்கிறார்! இப்படி 2 வருடங்கள் கடந்து போகிறது! 

1988'ல் நேபாளி பெண் ரமாவோடு பாபா "மீராவிடம் சொல்! அவள் குரு ஷிர்டி பாபா! அவருடைய கிரந்தமான  ஸ்ரீ சாயி சத்சரிதத்தை 108 முறை பாராயணம் செய்யச் சொல்! அதனால் அவளுக்கு எல்லாம் கிடைக்கும்! வியாழக் கிழமை ஆரம்பித்து வியாழக் கிழமை முடித்து பாபாவுக்கு 11 ரூ தட்சணை கொடுக்கச் சொல்!" என்கிறார்!

ஆனால் 11 ரூபாய்க்கு மீரா எங்கே போவது? 1 ரூபாய் கேன்டீன் டோக்கனுக்கே வழியில்லை! ஆயினும் சத்சரித பாராயணத்தை ஆரம்பிக்கிறார்! பாராயணம் முடிய மீராவுக்கு நாத்தானி என்ற பக்தையோடு அறிமுகமாகிறது...

அப்படியே மேலும் சில பெண்மணிகள்...

சரளா கோஸ்லா, சாயி சிரோட்கர், சுகதேவ் கவுர், மஹேந்த்ர கவுர், ப்ரேம் அகர்வால், சரோஜ் பங்கனியா , கிருஷ்ணா கிப்பன் போன்றவர்கள் சாயி பக்த உறவாகிறார்கள் மீராவுக்கு... இவர்களில் நிர்மலா சேட்டி என்பவரே தற்போது வரை சன்யாசினி மீராவை கண்ணும் கருத்துமாய் கவனித்து வருகிறார்! 


இந்த சாயி உறவுகளால் மீராவுக்கு சாப்பாட்டு பிரச்சனை, உடை பிரச்சனை தீர்ந்தாலும் எங்கே தங்குவது? மீராவின் பௌதீகத் தாய் தந்தை வீடோ பெரிய மாளிகை... இங்கே ஒரு வீட்டின் மாடிப் படிக்கட்டு அடியில் அமர்வு... ஒரு சவுகரியமும்  இல்லை! அப்போது மீரா சட்டர்ஜி என்கிற பெங்காலிப் பெண் உதவுகிறார்! 

"மனம் ஒத்துப் போனால் எங்கே இருந்தாலும் சரியாகவே இருக்கும்!" என்கிற கபீரின் ஞான மொழிகளே அப்போது மீராவுக்கு நினைவு வருகின்றன... வசதியற்று எங்கே தங்கிய போதும் பாபா தரிசனம், பாபாவுடன் உரையாடல் , பாத நமஸ்காரம் என பாபா மீராவை மிக அன்போடு பார்த்துக் கொள்வார்!

ஆனாலும் யார் யாரோ மீராவை பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள், முகத்தின் முன்னும் முதுகின் பின்னும்.. அதை விவரிக்க ஆரம்பித்தால் நிறைவு அத்தியாயமே தொடக்க அத்தியாயமாக மாறிப் போய்விடும்! 

இதில் மீராவை சூனியக்காரி என்றும் மந்திர வித்தை தெரிந்த மாயக்காரி என்றும் பூத பிசாசுகளின் மந்திர கட்டுகள் தெரிந்து பழகுகிற வேஷதாரி என்றும் நாக்கில் நரம்பில்லாமலும், தலைக்குள் மூளையில்லாமல் பரவிய தீ வதந்தியை விட கொடூரமாக இருந்திருக்கிறது.. இப்படிப் பேசிப் பேசி பலர் மீராவோடு பேசுவதை நிறுத்தி விடுகிறார்கள், தீண்டாமைக் கொடுமை போல் ஒதுங்கிப் போகிறார்கள்! இதில் பக்தர்கள் என்ற போர்வையில் இருந்தவர்களே அநேகம்! இதில் சேவாதளர்கள் என்ற போர்வையில் டோக்கன் கிடைத்து மீரா தரிசன முன்வரிசையில்  அமர்ந்தாலும் கூட பின்வரிசையில் அமர்த்திவிடுவார்கள்! பலமுறை எந்தவித காரணமுமே இன்றி கணேஷ் கேட் வாசலிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறார் மீரா! ஒன்றிரண்டு சம்பவம் அல்ல... சேவை என்கிற பெயரில் நடந்த ஓராயிரம் அகந்தைச் செயலை "ஓம் ஸ்ரீ சாயி ராம்!" என்ற மந்திர ஜபத்தால் தாண்டுகிறார் பொறுமையின் சிகர மீரா !* மீராவை பார்த்து சிலபேர் காவி உடை அணிய .. அவர்கள் செய்த தப்புக்கெல்லாம் சன்யாசினி மீரா தண்டனை அனுபவித்திருக்கிறார்.. பிறகே பாபா சன்யாசினி மீராவை தவிர யாரும் காவி உடை உடுத்தக் கூடாது என்ற கட்டளையையே பிறப்பித்திருக்கிறார்! சாதுக்களே சகித்துக் கொள்ள முடியாத ஈவு இரக்கமற்ற எதிர்முனை தாக்குதலை ஆன்மீக முகமூடி அணிந்தவர்களால் மீரா அனுபவித்திருக்கிறார்!

ஏதோ ஒரு அயல்தேசத்து பெண்மணி ஏதோ சொல்ல... அதற்கும் மீராவே பலிகடா!

"உன்னை குல்வந்த் ஹாலிலிருந்தே அனுப்பினால் தான் இங்கு சாந்தி நிலவும்!" என்ற வீண் பழி வார்த்தைகளை எல்லாம் பொறுமையாக சகித்துக் கொண்டிருக்கிறார் மீரா! அப்படி சொன்னவர்கள் செய்தவர்களின் பெயர்கள் தெரிந்தும் ஒருவரின் பெயர் கூட மீரா தன் புத்தகத்தில் குறிப்பிடவில்லை... தனக்கு உதவி செய்தவர்களின் பெயர்களை மட்டுமே நன்றியோடு குறிப்பிடுகிறார்! அதுதான் சாயி தர்மம்! 

பல சொற் சித்ரவதைகள், அடக்கு முறை தர்பார்களை மேலும் விவரிக்க முயல்கையில் அடியேன் இதயம் கனப்பதால் அதனை கடந்து போகிறேன்! 


எல்லாக் கட்டுகளை நீக்கிய சன்யாச வாழ்விலும் ஆசிரமத்தில் நிகழ்ந்த பல இக்கட்டிலும் மீராவுக்கு ஒரே ஒரு ஆறுதல் இறைவன் பாபாவே! பாபாவிடமே மீராவை பற்றி  யார் என்ன வீண்பழி சுமத்தினாலும் அவர் கண்டுகொண்டதே இல்லை! பல புற சிக்கலில் இருந்து மீராவை விடுவித்திருக்கிறார்! ஒரு செக்யூரிட்டியையே அவரது மோசமான நடத்தையால் பாபா மந்திரில் இருந்து மாற்றி மீராவுக்கு பாபா ஆறுதல் அளித்திருக்கிறார்! 


"எப்படிப்பட்ட நிலை வந்தாலும் சாயிபாபாவை மறக்க வேண்டாம்! உன் வருங்காலம் மிகவும் பவித்ரமானது! பரிசுத்தமானது! உன் உடலைப் பெற்ற தாய் தந்தையிடம் நீ இப்போதைக்குச் செல்ல வேண்டாம்! அங்கே போவதற்கு முன் உன்னை கௌரவமாக நானே அனுப்புகிறேன்!" என்று பாபா 1969'ல் பேசியதை மீரா மறக்கவே இல்லை! 

தன் மேல் மட்டுமல்ல பாபாவின் மேல் சிலர் வீணாக வீசம் பழிசொற்களைக் கேட்ட‌ மாத்திரத்திலேயே மனம் வலித்து "ஓம் ஸ்ரீ சாயி ராம்" மந்திரத்தை உச்சரிப்பார் மீரா!

அப்படி ஒரு சமயம்.. மனம் வலித்து மீரா தரிசனத்தில் அமர‌.. பாபா மீராவை ஒரு பார்வை பார்க்க... அதன் அருட்பொருளை உடனே உணர்ந்து கொள்கிறார்!

"அட பைத்தியக்காரி! யார் பாபாவை என்ன நினைத்தால் என்ன? உனக்கு அவரே தந்தை! நீ அவர் குழந்தை! தன் குழந்தையை ஒருபோதும் அவர் கைவிடமாட்டார்!" என்ற சத்திய மொழியை பாபாவின் விழிகள் பேசுகின்றன...

பாபா தனக்கு நிறைய நேர்காணல் தரவில்லை என்ற வருத்தமே இல்லை மீராவுக்கு! யாருக்கு பாபா எத்தனை நேர்காணல் தருகிறார் என்பது பெரிய விஷயமே இல்லை.. அப்படிப் பெற்றவர்கள் அகமாற்றம் அடைகிறார்களா? என்பதே முக்கியம்! அது நிகழாமல் வெறும் தரிசனம், சம்பாஷனம், பாத நமஸ்காரம் , நேர்காணலால் எந்தவித நன்மையும் இல்லை எனும் பெருஞ்சத்தியத்தை பெருமாட்டி மீரா வலியுறுத்துகிறார்!


இறைவன் பாபா மகாசமாதி என்கிற லீலா நாடகத்தை நிகழ்த்துவதற்கு முன்னமே... ஓரிரு அறிகுறிகளை பாபா இயற்கை வழி காட்டியதை மீரா சுட்டி காட்டுகிறார்! 

அது 19/3/2011 ஆகாய நிலா பூமிக்கு 30 கி.மீ அருகே வந்திருந்த சமயம்.. மீரா பார்க்கிற போது ... "இன்று பௌர்ணமி கூட இல்லை...யாரை கூட்டிப் போக இத்தனை அருகே அது வந்திருக்கிறது?" என்று மீரா கேட்க.. அது யார் என்பதை அந்த ஆண்டே மீரா புரிந்து கொள்கிறார்! அந்த நிலா அருகே வந்தபிறகு அதே ஆண்டு  28 மார்ச் பாபா மருத்துவமனைக்குச் செல்கிறார்! பிறகு நிலா கடலில் மிதப்பது போல் பாபா தனது பொது தரிசனம் நிறுத்தி இதய தரிசனம் ஆரம்பிக்க அது ஒரு காரணமாகிறது! 

கடைசி பொது தரிசனத்தில் பாபா கை கூப்பி வணங்குகிறார்... பக்த துகாராமும் தன்னை நிந்தனை செய்தவர்,வந்தனை செய்தவர் அனைவரையும் பார்த்து கைகூப்பி வணங்கியே அந்த புஷ்பக விமானத்தில் செல்வதை மீரா சுட்டி காட்டுகிறார்! இறைவனின் செய்கையும் பக்தனின் செய்கையும் ஒன்றாகவே இருக்கிறது என்பதை மீரா உணர்த்துகிறார்! 


24/4/2011'க்கு பிறகு இரண்டாம் நாள்.. அன்று வியாழக்கிழமை மீராவின் கனவில் பாபா தோன்றுகிறார்! "பாபு (தந்தையே)! நீ ஏன் சென்றுவிட்டாய்? எங்கே போனாய்?" என்று மீரா கேட்கிறார்! 

அதற்கு பாபா "எனக்காக ஒரு வேலை செய்வாயா?" என்று கேட்க! "ஹா பாபா! ஆணையிடுங்கள் " என்கிறார் மீரா!

"எனக்கு போஜனம் வேண்டும்! நாளை வெள்ளிக் கிழமை ராகுகாலம் சென்றபிறகு... சித்ராவதி நதிக்கு கொண்டு வா!" என்கிறார் கனவில் பாபா!

"சரி பாபா! வேறு யாரையாவது அழைத்துக் கொண்டு வரலாமா?"என்று மீரா கேட்க.. "உன் அண்ணி இந்திரா பட்டேலை அழைத்து வா!" என்கிறார்! 

பாபாவின் ஆரத்தி மணி ஒலி தூக்கத்தை கலைக்க.. கனவும் கலைகிறது..

இந்திராபட்டேலும் மீராவும் சேர்ந்து சமைத்து  பாபாவுக்கு எல்லாவிதமான உணவை ஒரு பிளாஸ்டிக் டப் உள்ளே வைத்து எடுத்துச் சென்று.. சித்ராவதி நதியில் விடுகிறார்கள்... அது நதி ஓட்டத்திற்குப் போகாமல் எதிர் திசையில் நின்றுவிடுகிறது... அங்கே துணி துவைக்கிற தொழிலாளியின் குடும்பம் இருக்க.. அவர்கள் என்னவென்று விசாரிக்க...  பாபாவுக்கு போஜனம் என்று மீரா சொன்னதும்.. சால சந்தோஷம் என்கிறார் அந்தத் தொழிலாளியின் மனைவி! "டப்பை எவ்வளவு தள்ளியும் முன் சல்லவில்லையே!" என்று மீரா கலங்கிய போது "அம்மா.. நீங்கள் நதியில் விட்டுவிட்டு பிரம்மார்ப்பணம் சொல்ல கண்களை மூடிய போது பாபா நதியிலிருந்து இடுப்பு வரை தெரியும்படி இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்தார்! ஆகவே அது எதிர்திசையில் செல்லாமல் .. எந்த பக்கம் பாபா தோன்றினாரோ அந்த பக்கமே நதி அலையையும் மீறி அந்த உணவு டப் எதிர்த்து நிற்கிறது! ஆக நாம் திரும்பலாம் !" என்கிறார் மீராவின் அண்ணி இந்திரா பட்டேல்! பிறகு ஸ்ரீ சாயி சத்சரிதத்தில் ஒரு அத்தியாயம் படித்து சித்ராவதி நதி நோக்கி ஆரத்தி எடுத்து கிளம்புகிறார்கள்! 


"நீ பிரசாந்தியில் இருக்கும் போது எனக்கு மறக்காமல் போஜனம் (உணவு) கொடு!" என்று பாபா மேலும் கனவில் சொல்ல..உதவிக்கு சிவானி என்றொரு பெண்ணை அழைத்து அதே போல் நதியில் விட.. அதே போல் அது நிதியை எதிர்த்து நிற்க... பிறகு சத்சரிதம் வாசித்து ஆரத்தி எடுத்து கிளம்புகிறார் மீரா...  இது ஏகாதசி, அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை , வியாழன்- திங்கள் என தொடர்ந்து நடைபெறுகிறது! பிறகு அந்த ஆண்டு குரு பூர்ணிமாவோடு பாபாவுக்கு மீராவின்  உணவு வழங்குதல் நிறைவடைகிறது! 


பாபா மகாசமாதி அடைந்துவிட்டார் என்று அவரை வழிபாடு செய்யாதவர்கள் கூட மீராவிடம் தனது துக்கத்தை பதிவு செய்திருக்கிறார்கள்! அவதாரம் அவர் ஒருவரே... பூமிக்கு இனி என்னவெல்லாம் நேரப் போகிறதோ‌...‌ பஞ்ச பூதங்களிலும் பாபா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்...அவரது மகாசமாதிக்குப் பிறகு பஞ்ச பூதங்கள் தங்கள் இஷ்டத்திற்கு நடக்கிறதோ?! என்றே தோன்றுகிறது... இல்லை எனில் கேதார்நாத் பிரளயம்- நேபாள பூகம்பம் - ஸ்ரீ நகர் ஜல பிரளயம் - உத்தர்காண்ட் பிரளயம் - சென்னை சுனாமி - தற்போது கொரோனா என இயற்கை தறிக்கெட்டு போய்க் கொண்டிருப்பதை சாயி பக்தர் அல்லாதவர் மீராவிடம் பதிவு செய்ததே ஆச்சர்யமாகப் பார்க்கப்பட வேண்டியது!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி - பக்கம் : 231-232, 241 -251 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


இறைவன் பாபாவின் மகா சமாதி என்பது அவர் நடத்திய லீலைகளில் பெரிய லீலா நாடகமே! பொது தரிசனத்தை நிறுத்தினாரே தவிர பாபா தற்போதும் உடல் அளவில் கூட நம்மிடையே தான் இருக்கிறார்!

சுயநலமில்லாமல் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டவர்கள் எத்தனைப் பேர்? மீராவே விஞ்சி நிற்கிறார்! அதே போல் ஸ்ரீவிட்டலனை - துகாராம் போன்ற ஒருசில பக்தர்களே விஞ்சி நிற்கிறார்கள்! அதே போல் ஸ்ரீஷிர்டி சாயி - ஸ்ரீசத்ய சாயி என இரு அவதாரங்களையும் சற்றே பற்றே இல்லாமல் வழிபட்டவர்களிலும் ஒருசில பேர்களே விஞ்சி நிற்பர்! அதில் உலக சாயி பக்தர்களால் உச்சரிக்கப்பட வேண்டிய உன்னதமான பெயர் சஞ்ஜெய் - மீரா!

"ந பூதோ ந பவிஷ்யதி" வெறும் புத்தகம் அல்ல.. அது தர்மத்தின் இதயம்! அந்த இதயத்தை உள்வாங்கி எழுதுகையில் எனது இதயத்திலேயே தாய் தந்தையாய் இருவரையும்  சுமந்து சுமந்து எழுதக் கூடிய அரிய அருட் சம்பவத்தை சுவாமியே சங்கல்பித்தார்! 

       பொருளும் இன்பமும் இன்றி அறத்தை மட்டுமே வலியுறுத்திய அரிய இரண்டடி திருக்குறளே சஞ்ஜெயும் - மீராவும்... இந்த இருவரையும் கண்டவர்கள் / இருவரின் பஜனையை கேட்டவர்கள்/ பழகியவர்கள்/ சேவை செய்தவர்கள் - செய்பவர்கள் யாவரும் புண்ணியவான்களே!


பவித்ர பக்தர்கள் மீரா - சஞ்ஜெய் நமக்கு மிகப் பெரிய பாடம்.. எப்படி வாழ வேண்டும்! எப்படி பாபாவை எதிர்பார்ப்பின்றி வழிபட வேண்டும்! எப்படி பிறர் நலனுக்காக பாடுபட வேண்டும் ! எப்படி அகந்தையின்றி அதிகாரத் திமிர் இன்றி சேவையாற்ற வேண்டும்! அதற்கு சஞ்ஜெய் - மீரா மிகப் பெரிய உதாரணம்!

இவர்கள் வாழ்விலிருந்து நமக்கு தூய சன்யாசிகளை/ மகான்களை வழிபடும் பக்குவம் வரவில்லை என்றாலும் கூட அவர்களை அவமரியாதை செய்யாமலாவது இருக்க இன்னும் நம் இதயம் விரிய வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்!

அதே கோபமா? அதே திமிரா? அதே அதிகார தோரணையா? வீட்டிலேயே ஓய்வெடுப்போம்! அதே பழைய அழுகிப் போன குணங்களோடு சேவை செய்கிறேன் பேர்வழி என்று வீதியில் வந்தால் அது நம்மால் பாபாவுக்கும் ஆன்மீகத்திற்குமே இழுக்கு! முதலில் அக மாற்றம் பிறகே சமூக மாற்றம்! நம் அக மாற்றம் இன்றி சமூக மாற்றம் நிகழாது!

தியானம் வரவில்லையா பேசாமல் தூங்குவோம்! "எதையும் யோசிக்காமல், தேவையின்றி அவதூறு பேசாமல் இறைவன் பாபாவிடம் எல்லாவற்றையும் ஒப்படைப்பதே நமக்கான முதல் ஆன்மீக நிலை!" அப்படித் தான் நமக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் இல்லறத் துறவிகள் மீராவும் சஞ்ஜெயும்!


சுபமஸ்து!

ஜெய் சாயிராம்!

பவித்ர பக்தர்கள் சஞ்ஜெய் - மீரா நாமம் வாழி!!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: