தலைப்பு

செவ்வாய், 16 மே, 2023

காசியிலிருந்து ஷிர்டிக்கு ஓர் பாத யாத்திரை - அடர்ந்த காட்டுப் பயணம், இரு பாபாவையும் காட்டிய பயணம்!

நீண்ட நெடிய பாத யாத்திரை பயணத்தில் இல்லறத் துறவிகள் சந்தித்த அமானுஷ்யமான காட்டுவழிப் பயணங்களில் நாமும் அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் எழுத்து உணர்வோடு சுவாரஸ்யமாக இதோ...


மூன்று கட்டளையோடு சஞ்ஜெய் தியானத்தில் ஷிர்டி பாபா ஷிர்டிக்கு வரச் சொல்லியதில் காசியிலிருந்து புறப்படுகிறார்கள் இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் மீரா! 

செல்கிற வழியில் செந்தூர்த்தி என்கிற கிராமம்... மீராவின் சிறு வயதுத் தோழி திருமதி கமல் மார்வாடி இருக்கிறார்... அவர்களை பார்த்துவிட்டு வரலாம் என்று சொன்ன மீராவோடு சஞ்ஜெயும் செல்கிறார்! அப்போது இரவு 8-9 மணி இருக்கும்... சிறிய லாந்தர் விளக்கின் வெளிச்சம் மட்டுமே... உறவினர் ராம்சிங் கமலிடம் அழைத்துச் செல்கிறார்‌... ஆனால் மீரா கமலின் கோலத்தைப் பார்த்து அதிர்ந்தே போகிறார்... திருமதி கமலுக்கு உடல்நலம் சரியில்லை.. படுத்தப்படுக்கையாக இருக்கிறார்! இருவரும் ஆரத்தழுவுகிறார்கள்... தன் கணவர் சஞ்ஜெயை அறிமுகம் செய்து வைக்கிறார் மீரா! பாத யாத்திரை விபரமும் சொல்கிறார்! கமலின் மாமியாரோ தன் மகனின் வறுமை நிலையையும் தெரிவித்து மருமகளின் நோயினால் ஏற்படும் மருத்துவ செலவைக் கூட சரிகட்ட பணம் இல்லை என்ற துக்கத்தையும் கொப்பளிக்கிறார்! சஞ்ஜெய் மிகவும் இரக்கப்பட்டு கமலின் கையில் ஷிர்டி பாபா புட்டபர்த்தி பாபா படம் கொடுத்து... "பாபா உங்கள் நோயை தீர்ப்பார்! இவர்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்! மறுபடியும் நாங்கள் எப்போது வருகிறோமோ அது முக்கியமில்லை! நீங்கள் இரு பாபாக்களை எப்போதும் மறக்க வேண்டாம்! "ஓம் ஸ்ரீ சாயிராம்" என்ற மந்திர ஜபிப்பதையும் நிறுத்த வேண்டாம்!" என்று பாபா விபூதியை தண்ணீரில் கலந்து குடிக்க வைக்கிறார்.. பாபா விபூதியை பொட்டலமாக மடித்துத் தருகிறார்! சாதாரண தைரியம் அல்ல மிகுந்த தைரியத்தையே ஊட்டுகிறார்கள் மீராவும் சஞ்ஜெயும்! 

    

8 வருடங்களுக்குப் பிறகு...அதே கிராமத்திற்கு செல்லும் மீரா சஞ்ஜெயை பார்த்ததும் யாரோ திடும் திடும் என ஓடிவருகிறார்... யாரோ? ஏன் இத்தனை வேகம்? மீரா குழம்ப... அருகே வருகிற போது அது கமல் என்று தெரிய... நடக்கவே முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த திருமதி கமல் மீராவை பார்த்து ஆரத்தழுவி... தனது குழந்தைகளை இது உன் சித்தப்பா சின்னம்மா என வணங்கச் சொல்கிறார்! "இவர்கள் தான் உனக்கும் எனக்கும் வாழ்க்கையையே கொடுத்தவர்கள்!" என்று தன் குழந்தைகளிடம் கமல் தெரிவித்து தனது நன்றியை ஈர விழிகளால் காட்டுகிறார்! 

அதற்கு சஞ்ஜெய் "உங்கள் நம்பிக்கை உங்களை காப்பாற்றியது!" என்கிறார்!

அதற்கு கமல் "நீங்கள் என்ன சொன்னீர்களோ அதையே செய்தேன்! டாக்டர்கள் தந்த மருந்து மாத்திரைகளை கூட நிறுத்தி பாபா விபூதியை மட்டுமே உட்கொண்டேன்! சாயிராம் என்ற ஜபத்தை நிறுத்தவே இல்லை!  1 மாதத்தில் பூரணமாக குணமாகிவிட்டேன்!" என்று மனம் திறந்தபடி .. தனது குழந்தையிடம் "சாயிராம்!" என்று சொல் என்கிற போது குழந்தையும் "சாயிராம்" என்று சொல்ல சூழலே தெய்வீகமாகிறது!


யாத்திரைக்குள் வருவோம்! அந்த காசியிலிருந்து ஷிர்டி யாத்திரையை நோயாளியான மீராவின் பால்ய தோழி கமலுக்கு பாபா விபூதி மற்றும் பாபா மந்திரம் கொடுத்துவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்புகிறார்கள்! 

'பசோரா சாலீஸ் காமி'யிலிருந்து நடந்து ஹீராபூர் வருகிறார்கள்! அந்த இரவு அங்கேயே தங்குதல்! அப்போது மாபெரும் மகான் ஜனார்த்தன சுவாமி பற்றி தெரிய வருகிறது! அவரே சந்த் ஏக்நாத்தின் குரு! ஒருமுறை அபிஷேகத்திற்காக கங்கை தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு சென்ற பொழுது வழியே தாகமாக இருந்த கழுதைக்கு அந்த கங்கை நீரை விட்ட புனிதரே இந்த சந்த் ஏக்நாத்!

ஆக அவரது குருவான ஜனார்த்தன் சுவாமி சமாதி ஆகி 600 வருடங்கள் ஆகியும் ஹீராப்பூர் வனப்பகுதியில் உள்ள பெரிய மகாதேவர் கோவிலில் அன்றைய தினம் வந்து பிரசாதம் தருவார் என்று கேள்விப்பட்டதும்... இல்லறத் துறவிகள் இருவரும் அவரை தரிசிக்க , அவரிடம் இருந்து பிரசாத ஆசி பெற நடந்து செல்ல திட்டமிடுகிறார்கள்! 

ஆனால் அந்த கிராமப் பகுதியினர் அவர்களை தடுக்கிறார்கள்! வன மிருகங்கள் நடமாட்டம் அதிகம்.. உள்ளே புகுந்து கூட பலமுறை ஆநிறைகளை கவர்ந்து சென்றிருக்கிறது என்று அச்சுறுத்துகிறார்கள்! ஆனால் இருவரும் அவர்கள் பேச்சைக் கேட்கவே இல்லை.. "நீங்கள் வழியை சொல்லுங்கள்! நாங்கள் நடந்தே அங்கு செல்கிறோம்!" என்று பிடிவாதம் பிடிக்க...

வேறு வழியின்றி அவர்களும் உத்தேசமாக வழி சொல்ல... மீரா சஞ்ஜெய் அந்த அடர் காட்டுக்குள் அடி எடுத்து வைக்கிறார்கள்! அது மாலை 4. பறவைகளின் சப்தங்கள்... விலங்குகளின் அசைவுகள்... பூச்சிகளின் க்ரீச் சத்தம்... நான்கு காதுகளில் கேட்டாலும் அதை இருவரும் பொருட்படுத்தாமல் சாயிராம் என்ற மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டே முன்னேறுகிறார்கள்! அவர்களுக்கு பயமே இல்லை! பாபா அவர்களோடு கூடவே இருப்பதை அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள்!

திடீரென்று இரு துறவிகள் அவர்கள் எதிரே நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்...

வழியே தெரியாமல் எதற்காக இந்த அவசரப் பயணம் என்றும் இங்கே விலங்குகள் அதிகம் ஏதாவது செய்துவிடும், நாளை கோவிலுக்குச் செல்லுங்கள் என்றும் அந்தத் துறவிகள் அறிவுறுத்த... "இன்று ஜனார்த்தனன் சுவாமியை தரிசிக்க வேண்டும்! இன்று மட்டுமே வருவாராம்! ஆகையால் தான்...மேலும் எங்கள் தாய் தந்தையான குருநாதர்கள் எங்கள் கூடவே இருக்கிற போது எங்களுக்கு எந்த பயமோ கவலையோ இல்லை!" என்று அவர்களிடம் இருவரும் அழுத்தம் திருத்தமாக கூற... "ஓ அவ்வளவு நம்பிக்கையா? உங்கள் குரு மீது?" என்று அவர்கள் கேட்க.. "ஆம் எங்களது குருநாதர்கள் எங்களுக்கு தாயும் தந்தையுமான ஷிர்டி சாயி சத்ய சாயி! அவர்களே எங்களை கவனித்துக் கொள்வார்கள்!" என்று மீண்டும் இருவரும் தெளிவுபடுத்த..

"நல்லது! நாங்கள் கோவிலிலிருந்து தான் வருகிறோம்! நாங்கள் முன்வந்த பாதச் சுவடுகளைப் பின்பற்றினால் எளிதாக கோவிலை அடையலாம்!" என்று அவர்கள் கூற...

இருவரும் மேற்கொண்டு அவர்களை வணங்கிவிட்டு நடக்க.. சஞ்ஜெய்க்கு ஒரு சந்தேகம் "இவர்கள் நம் பாபாவோ!" என்று திரும்பிப் பார்க்கிறார்! இருவரும் அப்படியே மறைந்து போய்விடுகிறார்கள்! வந்த இரு துறவிகளும் யார்? என்பதை இல்லறத் துறவிகள் உணர்ந்து கொள்கிறார்கள்!


"சாயிநாத் மகராஜ் கி ஜெய்!" என்று வழி நெடுக உச்சரித்துக் கொண்டே நடக்கிறார்கள்... கடினமான வழிகளைக் கடக்கிறார்கள்! மேலும் மேலும் பயங்கரமான காட்டுப் பாதை அவர்களை அமானுஷ்யத்தோடு வரவேற்கிறது.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஈ காக்கா இல்லை... மூச்சை அழுத்தமாக விட்டால் கூட அந்த சத்தம் எதிரொலிக்கிற நிசப்தப் பாதை அது... "சாயிராம் சாயிராம்!" என்று மட்டுமே உச்சரித்து முன்னேறுகிறார்கள்! தூரத்தில் பெரிய மைதானம் போல ஒரு தோற்றம்... அதனூடே பெரிய பள்ளத்தாக்கு... நீர் ஓடுகிறது... அந்தப் பாயும் நீர் இருவரின் தாகத்தையும் "வா வா!" என்று அழைக்க.. அவர்களும் சற்று தாக சாந்தி அடைந்து.. பைகள் வைத்திருந்த இடத்திற்கு வருகிற போது.. காட்டில் ஒரே பாதையாக இருந்தது திடீரென்று 7 பாதையாக பிரிந்திருக்கிறது! எதில் பயணிப்பது? ஒன்றும் புரியவில்லை! மரத்தில் ஏறி ஏதாவது கிராமம் கண்ணில் தென்படுகிறதா? என்று சஞ்ஜெய் பார்க்க... ஒரே புதர் காடுகள்.. அது புதர் காடுகளாக இல்லை புதிர் காடுகளாக குழப்புகிறது...இருட்டோ மங்கிய வெளிச்சப் பொழுதை முழுதாக ஆக்கிரமிக்க விரட்டுகிறது... பாபாவை நினைத்து கண்களை மூடிக் கொண்டே ஒரு வழியில் இருவரும் அடி எடுத்து வைக்க... அதிலேயே மேற்கொண்டு பயணிக்கிறார்கள்! பாபா பஜனையை பாடிக் கொண்டே செல்ல.. திடீரென்று ஒரு ஓசை.. அது என்ன ஓசை...? மணியோசை போல் இருக்கிறது... பெரிய கோவில் வந்துவிட்டதா? அது மணியோசை தான் ஆனால் கோவில் தென்படவே இல்லையே! தூரத்தில் பார்த்தால் பத்து பதினைந்து பசுக்கள் தங்கள் கழுத்து மணிகளை ஆட்டிக் கொண்டிருக்க... அப்படியே பசுக்கள் முன் செல்ல பசுபதியை தரிசிக்க வேண்டி இருவரும் பசுக்களின் பின் செல்ல.. அது ஒரு கிராமம் ! அதன் உள்ளே செல்வதற்குள் பசுக்கள் மாயமாக மறைந்துவிடுகின்றன...! ஆச்சர்யப்பட்டே அந்த கிராமத்திற்குள் நுழைகிறார்கள்! அங்கே கிராமத்தினர் இருவரையும் விசாரிக்க.. ஜூனா பாநீ கிராமத்திலிருந்து வருவதாகவும், தங்களது பயண நோக்கத்தையும் இல்லறத் துறவிகள் தெரிவிக்க... விலங்குகள் தொந்தரவு மற்றும் கிராமத்தினர் எப்போதாவது தான் அந்தக் கோவிலுக்குள்ளே செல்வர் எனும் அரிய தகவலையும் தெரிவிக்க... தூரத்திலே கோவில் விளக்கு பிரகாசிக்கிறது... இருவரும் வந்து சேர்ந்த கிராமத்தின் பெயரோ குஜர்தரீ!


இருவருக்கும் அன்றே கோவிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை.. கிராமத்தினர் நாளைக்கே செல்லுங்கள்.. இன்று கிராமத்தினர் யாரும் அங்கே செல்லவில்லை.. ஆகையால் தங்கள் கூட ஒருவரை அனுப்புகிறேன் என்கின்றனர்... இருட்டியும் விடுகிறது..‌ஜனார்த்தனன் சுவாமி தரிசனமும் கிடைக்கவில்லை.. அவர் தோன்றி வழங்கிடும் அருட்பிரசாதமும் இல்லை... கண்ணில் காட்டுப் பாதையே தெரியாத அளவுக்கு ஒரே கும் இருட்டு.. ஆகவே கம் என வேறு வழியின்றி கிராமத்தினரின் ஒரு குடிலில் தங்கி இருந்த இல்லறத் துறவிகளுக்கு ஆச்சர்யம் காத்திருக்கிறது.. 

தடார் என்று அந்தக் குடிலின் கதவு தட்டப்படுகிறது... 

இந்த நேரத்தில் யார்? என்று குழம்பிய படி கதவு திறக்க...

அப்பொழுது இரவு 8 மணி... சுமார் 4 மணிநேரம் காட்டில் நடந்து வந்த இருவருக்கும் களைப்பும் பசியும்... வாசலில் வரவேற்புத் தோரணமாய் ஆச்சர்ய அதிசயங்கள்... 

'பாடில் பாடில்' என்ற அழைப்பு... குடிலின் உரிமையாளர் பெயராக இருக்கலாம்.. யார் என அவர் விசாரிக்க.. "உங்கள் வீட்டுக்குள்ளே ஷிர்டி பாத யாத்ரீகர்கள் வந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஜனார்த்தனன் சுவாமி பிரசாதம் கொடுத்திருப்பினார்!" என்று ஒருவர் தருவதில்..‌குடிலுக்குள் பிரசாதம் பெற்ற இருவரும் ஆச்சர்யப்படுகிறார்கள்! ஒரு டின் டப்பா அது! புளியோதரை- பூரிகள்- (காய்)கறிகள்- இனிப்புகள்... அதுவும்  இருவருக்கல்ல... 5 பேர் சாப்பிடும் அளவுக்கு... இருவரின் புண்ணியத்தால் அதை உண்ணும் பேறு கிடைத்ததாக குடில்வாசிகள் உணர்ந்தார்..‌ அடுத்த நாள் ஆவலோடு விடிந்தது.. இருவரும் கிராமத்து ஒருவர் துணையோடு நடந்து கோவிலை அடைந்து.. நேற்றைய சம்பவம் விளக்க.. மேலும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமே இருவருக்கும் காத்திருந்தது! 


தாங்கள் யாருமே அந்த கிராமத்திற்கு வரவில்லை... ஆனாலும் அந்த டின் டப்பா கோவிலுடையதே என்றும்... ஜனார்த்தனன் சுவாமி நேற்று எங்கள் முன் தோன்றவில்லை என்றும்... உங்களுக்கு எப்படி பிரசாதம் கிடைத்தது என்பதே அறியமுடியவில்லை என்று கோவில் அதிகாரி நன்கு தீர விசாரித்துவிட்டு தெரிவித்த வண்ணமாய் ஆச்சர்யப்படுகிறார்!

மீண்டும் அந்தக் காட்டை விட்டு இருவரும் புறப்பட்டு நடக்கும் வழியில் ஒரு பெரியவர் மூட்டையை சுமக்க முடியாமல் சுமக்க..‌. தான் வழிகாட்டி உதவுகிறேன் என்று சஞ்ஜெய் கூற... சிரித்துக் கொண்டே "எனக்கு பூமியில் தெரியாத வழி ஏதும் உண்டா? உன் சுமைகளையே உன்னால் சுமக்க முடியாமல் என்னையே அவ்வப்போது அழைத்துக் கொண்டிருக்கிறாய் ! இதில் நீ வேறு என் சுமைகளை சுமப்பாயா...? போ போ! உன் வழியைப் பார்த்து!" என்று அவர் சொன்னவுடன்... சஞ்ஜெய்க்கு வந்தது யார்? சொன்னது யார்? என்று புரிந்துவிடுகிறது!

பிறகு ஷிர்டி விஜயமும்...  அனுமன் கோவில் தரிசனமும்.. கோவில் வெளியே அந்த இரவில் மீதமான ரொட்டிகளை இருவரும் ஒரு துணியில் சுருட்டி வைக்க.. அது அடுத்த நாள் தலையணை போல் இறுகி தலைக்கு கீழே வைத்தும் துணி மட்டும் இருக்க ரொட்டிகள் மறைந்துவிடுகின்றன..

இதுவரை அடுத்த நாளைக்கு உணவு சேர்த்து வைக்காத இல்லறத் துறவிகளின் அதே நிலை மீறல் இன்றி.. வழக்கத்திற்கு மாறானது என்பதால் பாபா செய்த லீலை என்று இருவரும் புரிந்து கொள்கின்றனர்...

பிறகு 'கோபர் காம்' செல்ல... அது ரயில் நிலையம்... அங்கே ஒரு நண்பர் கரும்புக் கட்டிகள் தின்பதற்குத் தர... "ரொட்டிகள் ஏதேனும் பசிக்கு கிடைக்குமா?" மீரா வெறித்துப் பார்க்க... "கவலைப்படாதே பாபா கொடுப்பார்!" என்று சஞ்ஜெய்  ரயில் நிலையம் சுற்றி வர... 15 நிமிடங்களில் சஞ்ஜெய் வந்துவிடுகிறார் .. என்ன நடந்தது? என்று மீரா கேட்க...

பிளாட்ஃபாரத்தில் நடக்கிற போது இருட்டில் ஒரு ஃபக்கீர் தென்பட... உடனே சஞ்ஜெய் அவரை வணங்க...

"குமார்! உன் குர்தாவின் மடியை நீட்டு!" என்று அந்தப் பெரியவர் கைகளிலிருந்து பொள பொள என்று சில்லறைகள் விழ... "நான் பிச்சை எடுக்கலாம்.. ஆனால் நீ பிச்சை எடுக்கக் கூடாது! இனி உங்கள் பாத யாத்திரை முடிந்தது! இந்தப் பணத்தால் சாப்பிடுங்கள்! ஊர் ஊருக்கு சென்று பஜனைகள் செய்யுங்கள்! சத்ய ,தர்ம, சாந்தி

பிரேமையை எல்லோருக்கும் கற்றுக் கொடுங்கள்! போ! உங்கள் மனித ஜீவிதம் பலிக்கும் படி செய்து கொள்ளுங்கள்!" என்கிறார்! அதை மீராவிடம் சொல்கையில் அவளின் கைகளில் சஞ்ஜெய் தந்த நாணயம் மீராவின் கண்ணீர்ப் பட்டு நனைந்து கொண்டிருந்தது!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 219 - 230 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்)


இறைவன் பாபா நம் கூடவே இருக்கிறார் என்பதை உணர்த்தும் அனுபவப் பதிவு இது! கர்மா நம்மை கஷ்டப்படுத்தினாலும் ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்... இந்த அளவுக்காவது நாம் வாழ்ந்து வருவது பாபா நமக்கு இட்ட பிச்சையே! பிறர் வாழ்வோடு நம் வாழ்வை ஒப்புமைப்படுத்தாமல்.. பாபா அவரவர்க்கு அளித்த வாழ்வை அவருக்கே அர்ப்பணிப்போம்! சஞ்ஜெய் சுவாமிகளை பிச்சை எடுக்க விடாமல் பாபா தானே யாசித்து அளித்த நாணயத்தை என்னவென்று அழைப்பது! 'நாணயம்' இறைவனிடம் இருக்கிறது.. ஆனால் மனிதனிடம்?


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக