தலைப்பு

வியாழன், 11 மே, 2023

டில்லி பக்தர் வீட்டு ஷவரில் குளித்த பாபா! - அட்சயப் பாத்திரமான நாராயண சேவை உணவுப் பாத்திரம்!

எவ்வாறு இரு இல்லறத் துறவிகளின் ஆன்மீகப் பயணத்தில் எவ்வகையில் எல்லாம் அவர்கள் இறைவன் பாபாவின் மகிமையை உணர்கிறார்கள் எனும் கதம்ப சாயி அனுபவங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ‌..


அது 1978. ஹிமாச்சல் பிரதேச சிம்லாவில் கபூர் அவர்களின் வீட்டில்  மீரா- சஞ்ஜெய் வசிக்கிறார்கள்! அது ஐஸ் கட்டிகளே குளிரால் நடுங்கிப் போகும் மார்ச் மாத சிம்லா! பாபாவுக்கு பூஜை அறையில் உணவு படைப்பதற்காக வெள்ளிப் பாத்திரம் செய்து வைக்கிறார் கபூர்! குஜராத்தி உணவுகளும் பரிமாறப்படுகின்றன... அடுத்த நாள் வியாழக்கிழமை... அதே போல் வெள்ளிப் பாத்திரத்தில் உணவு வைக்கப்படுகிறது பூஜையறையில்... வெளியே குளிர்கால ஐஸ்கட்டி விழுவது சற்று அடங்குகிறது... ஐஸ் விழுவதால் கேட் எல்லாம் பூட்டு...  மதியம் 12 மணி.. அது மதியம் போலவே இல்லை... பஜனை கணேசர் பாடலிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.. சஞ்ஜெய் பாடுகிறார்! பாபா வருவதற்கான வாசனைகள் பரவுகின்றன.. அனைவரும் கை எடுத்துக் கூப்புகின்றனர்... சஞ்ஜெய் பஜனையில் ஆழ்ந்திருக்கிறார்... பிறகு பூட்டிய பூஜையறை மாலை 4 மணிக்குத் திறக்க.. ஒரே ஆச்சர்யம்... பரம ஆச்சர்யம்... பாபா புகைப்படத்தின் முன்பு படைக்கப்பட்டிருந்த உணவு வகைகளில் பருப்பு உணவு புகைப்பட பாபாவின் வாயில் இருக்கிறது... கிண்ணத்தில் பருப்பு காலி, குடிக்கும் நீர் பாதி காலி..‌ பாபாவே வந்து உணவு சாப்பிட்டது அனைவருக்கும் பரவசத்தை ஏற்படுத்துகிறது!


அது 1972. டில்லி பேராசிரியர் உமா மாதுர் வீடு‌... அங்கே இல்லறத் துறவிகள் தங்கி இருக்க...இரவு பத்துமணி.. வழக்கம் போல் தூங்குவதற்கு ஏற்கனவே கதவுகள் பூட்டப்பட்டு விட்டன... அனைவரும் தூங்க தயாராகிறார்கள்! திடீரென எங்கிருந்தோ காற்றடிக்க டபக் என்ற சப்தத்தில் பூட்டு திறக்க... என்ன பூட்டு அவிழும் சப்தம்? என்று மீரா - சஞ்ஜெய் பார்க்க...அதற்குள் பாத்ரூமில் யாரோ குளிக்கும் சப்தம்... ஷ்ஷ்ஷ் என்று ஷவரின் பொழிவு சப்தம்! ஒருவேளை மாதுர் குளிக்கிறாரோ... மாதுரை தேடுகிறார்கள் இருவரும் .. தான் இங்கேயே இருப்பதாக மாதுர் சொல்ல... அதற்குள் பாத்ரூம் ஷவர் சப்தம் நிற்கிறது... தண்ணீர் சொட்டும் சப்தம் கேட்கிறது... பிறகு மாதுர் பாத்ரூமை சோதிக்க... சஞ்ஜெயின் டவல் நனைந்திருக்க.. குளியல் அறை முழுதும் சோப் வாசனை... டொக் டொக் என்று ஷவரில் இருந்து சொட்டிய தண்ணீர் நிற்கவே இல்லை!


உத்திரபிரதேச முராதாபாத், கான்பூர், டெஹ்ராடூன் , டாக் பந்தர் இப்படி எந்த இடம் சென்றாலும் இல்லறத் துறவிகளுக்கு பாபா எந்தவகையிலும் தரிசனம் தருவது நிகழ்ந்து வண்ணமாகவே இருக்கிறது!

 

ஒருமுறை குஜராத் வல்சாட் ஜில்லா கிராமம்.. சரத் வைத்யா இல்லம்... அது 1974. ஒரு பெயர் அவர் வீட்டு வாசலின் முன் "யார் எனக்கு 40 ரூபாய் தந்து சாப்பாடு போடுகிறீர்களோ அவர்களின் துன்பங்கள் தீரும்!" என்கிறார்! 

அந்த வீட்டு எஜமானர் சரத் வைத்யா ஒரு டாக்டர்... அந்தப் பெரியவரை உள்ளே அழைத்து வந்து அவரின் 40 ரூபாய் கன்டிஷனுக்கும் ஒப்புக் கொள்கிறார்.. உணவை பூஜையறையில் படைக்கச் சொன்ன அந்தப் பெரியவரின் சொல்படி ... மாடி பூஜையறையில் அவர்களும் உணவைப் படைக்க.. சிறிது நேரத்தில் படைக்கப்பட்ட பாத்திரத்தில் விபூதி வழிந்து.. உணவு காலியாகி... மீதம் மட்டுமே இருக்கிறது.. கீழே இறங்கிடும் போது "1 மாதம் தங்கி இருந்துவிட்டு... மீரா- சஞ்ஜெய் இன்று தான் கிளம்புகிறார்களா?" என்று அந்தப் பெரியவர் மிகச் சரியாகக் கேட்கிறார்! "வேறொன்றும் இல்லை... சஞ்ஜெய் மீரா இருவரும் இங்கே இருந்தபடியே என்னை தினசரி அழைத்தார்கள்... ஆகவே தான் நான் வந்தேன்!" என்கிறார் அந்தப் பெரியவர்... அவரோடு சேர்ந்து அனைவரும் உணவு சாப்பிடுகின்றனர்... வண்டி வர.. இருவரும் கிளம்ப... அதற்குப் பின்னர் அந்தப் பெரியவர் வரவே இல்லை... அவருக்குக் கீழே டாக்டர் கொடுத்த 40 ரூபாயும் மேலே  மாடி பூஜையறைக்குச் செல்கிற போது இரு பாபா புகைப்படம் இருக்கும் இடத்தில் "வந்தது யார் என்று புரிகிறதா?" என்றவாறு காற்றில் அது அசைந்து கொண்டிருக்கிறது!


ஒருமுறை உத்திராஞ்சல் பத்ரிநாத் ஷேத்திரத்தில் இருவரும் சென்ற சமயத்தில்.. சஞ்ஜெயின் கனவில் தோன்றிய பாபா "உன் அம்மா உன்னை பார்க்க நினைக்கிறாள் ... உடனே செல்!" என்று சொல்லியதும்... இருவரும் கொங்கணிக்கு செல்கிறார்கள்! சஞ்ஜெய் குடும்பமே பாபா மேல் பக்தியான குடும்பம்.. தினசரி சுப்ரபாதம் , பூஜை , பஜனை என வீடே அமர்க்களப்படும்! இருவரும் வந்த போது யுகாதி நெருங்குகிற சமயமாகிறது! 


ஒரு நாள் ஒரு சாயி பக்தர்... "யுகாதிக்கு அகண்ட பஜனையும் நாராயண சேவையும் வைத்துக் கொள்ளலாமா?" என்று கேட்கிறார்! 140 ரூபாய் ஓய்வூதியம் பெறும் தனது தந்தையை எப்படி இதற்கு செலவு செய்யச் சொல்வது‌..? தாய் தந்தை என்றால் மிகவும் மரியாதை உள்ளவர் சஞ்ஜெய்! அவராக அமர்ந்து கொள் என்று சொல்லாமல் தந்தையின் முன் அமரக் கூட மாட்டார் சஞ்ஜெய்! அகண்ட பஜனை இருவருக்கும் புதிதல்ல...ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது விசேஷ தினங்களில் மட்டுமல்ல... மீரா- சஞ்ஜெய் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் வாரம் ஒருமுறை அகண்ட பஜன் நிகழ்த்துபவர்கள்! ஆனால் நாராயண சேவை? அதற்கு செலவாகும்! அந்த நேரம் பார்த்து சஞ்ஜெயின் தம்பி "அண்ணா! நம் வாசலில் உள்ள பலா மரத்திலிருந்து பழம் பறித்து பாபாவுக்கு படைப்போம்! பாபா ஆசீர்வதித்தப் பிறகு நாராயண சேவை செய்வோம்!" என்கிற படியால் பலாப்பழம் பறித்து பாபா படத்தின் முன்பு வைக்கப்படுகிறது! பிறகு அதைப் பிளக்கிற போது பலரின் வாயே பிளக்கிறது... பழம் பிளக்க... அற்புதம் பிறக்கிறது... பலாபழத்துக்குள்ளிருந்து விபூதி படார் என்று தெறிக்கிறது... அப்போது ஒரு பாபா லாக்கெட்டும் பழத்தில் இருந்து கீழே விழுகிறது... ஒரே பரவசம்! பலர் அந்த அற்புதங்களை தரிசிக்க சுளை சுளையாக வருகின்றனர்...


அன்று யுகாதி.. ஓம்கார சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம் அமர்க்களப்படுகிறது! பிறகு நாராயண சேவைக்கான ஏற்பாடுகள் துரிதப்படுகின்றன... அரிசிக்கு பதில் கோதுமை ரவையுடன் தயாராகிறது அல்வா... சுடச்சுட... ஆனால் 50 பேருக்கு கொடுக்கத்தான் உணவு தயாராகி இருக்கிறது! ஆயினும்  3 மணி வரை சாப்பாடு தீரவில்லை.. 4 மணிக்கே காலியாகிறது... சரி நாம் சாப்பிடலாம் என்று யோசிக்கிற போது... திடீர் என்று ஏழு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாசலில் வருகிறார்கள்... எப்படி இல்லை என்று சொல்வது...? மீதமான உணவு ஒருவருக்குக் கூட போதுமா என்பதே அதிசயம்.. ஆனால் ஏழு பேர்... ஏழு ஸ்வரங்களாக இல்லாமல் பசியால் அவரோஹணம் அவர்களின் குரலில்... உடனே சஞ்ஜெய் தனக்கு இல்லாமல் போய்விட்டதே என்ற யோசனை கூட இன்றி... பூஜையறைக்கு ஓடி.. பாபா படத்தின் முன் காலி பாத்திரத்தை வைக்கிற போது... அந்த 7 பேர் சொன்னதே காதில் மீண்டும் ரீங்கரிக்கறது! "பாபா நாங்கள் பசியோடிருக்கிறோம்! உங்கள் வீட்டில் உணவு தரப்படுகிறது என்று சொன்னார்கள்.. ஆகவே வந்தோம்!" என்ற அந்த குரல் வந்து வந்து போகிறது! "ஆகவே வந்தோம்! ஆகவே வந்தோம்!" என்பதால் எப்படி திருப்பி அனுப்ப முடியும்? என்று காலி பாத்திரத்தில் மூடி போட்டு வேண்டுகிறார்... அந்த 7 பேர் கொண்ட குடும்பத்துக் குழந்தைகளோ பூஜையறை வெளியே பசி பசி என்று அழத் தொடங்கியதும்... காலி உணவுப் பாத்திரம் அட்சய பாத்திரமாகவே மாறிப் போகிறது! அது 7 பேருக்கு கனகச்சிதமாக இருக்கிறது! இந்த பேரதிசயத்தை ஊரே பரவசப்பட்டுப் பார்க்கிறது!


வேறு ரூபத்தில் மட்டுமின்றி சஞ்ஜெய்க்கு ஒரு முறை ஷிர்டி பாபா கூட தன் ரூபத்திலேயே அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்! இது நிகழ்ந்தது சஹான்பூரில்.. டாக்டர் பத்வா வீட்டில் இருவரும் தங்கி இருந்த போது.. ஒருநாள் பாபா தோன்றி வராண்டாவில் பேசி.. பின்னர் புட்டபர்த்தி பாபா தரும் விபூதியை தருகிறார்.. இருவரும் ஒரே பாபா என்பதன் குறியீடாகவும் ஷிர்டி பாபா கொடுத்த புட்டபர்த்தி பாபா விபூதி!

அந்த நாட்களில் தான் ஈஸ்வராம்பா தினமும் வந்தது! வெட்ட வெளி பஜனை... முதலில் இருவரையும் சாயி சமிதியில் வேத் பிரகாஷ் கோஸ்வா இருவரையும்  பாட அழைக்கவில்லை.. ஆகவே பின்பாட்டே பாடுகிறார்கள் பிறகு சஞ்ஜெய்யை அவர் அழைக்க.. அப்போது ஆகாயத்தில் வெண் மேகமே குடைபிடிக்கிறது.. சாயி தர்பாரில் பிடிக்கப்பட்ட வெண்கொற்றக் குடை அது!

அப்போது மழை வரும் சூழலே இல்லை! பிறகு சஞ்ஜெய் மால்கோஸ் ராகத்தில் பாடப்பாட வெள்ளை மேகங்கள் முகம் கருத்து மழையோடு ஐஸ் கட்டிகளையே பொழிய ஆரம்பிக்க... பஜன் நிற்க... பனிக்கட்டிகளும் நிற்க... சூரியன் ஆகாயத்தில் பூமிக்கு ஆரத்தி எடுக்க... "சாயி பஜனின் மகத்துவம் எப்பேர்ப்பட்டது என்பதை உணர்த்தவே இப்படி நிகழ்ந்தது! பஜனையை எப்படி பாட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை!" என்று சாயி பஜன் மகத்துவத்தை உணர்த்துகிறார் சஞ்ஜெய்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 206 - 214 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


இறைவன் பாபா நம் கூடவே இருக்கிறார்! நம் நன்னடத்தையை வைத்தே நம் கூட இருப்பதை தொடரலாமா? வேண்டாமா? என்பதை பாபா முடிவு செய்கிறார்! நமக்கு குண மாற்றமே முக்கியம்.. அதுவே அற்புதங்களில் தலைசிறந்த அற்புதம்.. நாம் வெளி அற்புதங்களுக்காக ஏங்காமல் குண மாற்றம் எனும் உள் அற்புதங்களை நோக்கியே பயணிக்க வேண்டும்! வெளி அற்புதம் பாபாவை இறைவன் என உணர்த்துகிறது! உள் அற்புதமோ அவரின் பக்தரே நாம் என்பதை உணர்த்துகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக