தலைப்பு

வெள்ளி, 12 மே, 2023

யோகினி இந்திராதேவி | புண்ணியாத்மாக்கள்


ரஷ்யாவில் பிறந்து, போரினால் தந்தை, வீடு மற்றும் செல்வத்தை இழந்து… பிழைப்பு தேடி ஊர்கள் பல மாறி ... நாட்டியம் பயின்று.. பின் இந்தியா வந்து யோகம் பயின்று.. ஆசியா முழுக்க அலைந்து... ஐரோப்பா, அமெரிக்காவெல்லாம் அயராமல் பயணித்து... ‘Mother of Yoga’ என்ற உயரிய பட்டத்தை சம்பாதித்த பின், தான் கற்றுத் தெளிந்த தெய்வீக யோகக் கலையை "சாயி யோகா" என்று உலகே உணரும்படி உயர்த்திப் பிடித்த புண்ணியாத்மா இந்திராதேவி அம்மையார். அந்தப் புனிதவதியினுடைய வாழ்க்கைக் குறிப்பு புண்ணியாத்மாக்கள் வரிசையில் இதோ….

 
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் மீதான தங்களுடைய பக்தியை தாம் வாழும் சுற்றம், பணிபுரியும் அலுவலகம், நண்பர்கள் மற்றும் சொந்தபந்தங்களிடையே வெளிப்படையாக உறுதியுடன் எடுத்துக் கூறத்தயங்கும் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்குக் காரணம், சுவாமியினிடத்து ஸ்திரமான பக்தியின்மையே!  நாலு பருக்கை சோறு கண்ட காகம் கூட மற்ற காகங்களுக்கு குரல்கொடுத்து அறிவிக்கிறது. சில பக்தர்களோ தானும் உண்ணாமல், மற்றவர்களுக்கும் அறிவிக்காமல்... அறிந்து கொண்ட தெய்வீகத்தை உணர்ந்து அனுபவிக்காமல் வீணடிக்கின்றனர்.

ஆனால் ரஷ்யாவில் பிறந்து, போரினால் செல்வமிழந்து... பிழைப்பு தேடி ஊர்கள் பல மாறி ... நாட்டியம் பயின்று.. பின் யோகம் பயின்று.. ஆசியா முழுக்க அலைந்து... ஐரோப்பா, அமெரிக்காவெல்லாம் அயராமல் பயணித்து... தான் கற்ற தெய்வீக யோகக் கலையை "சாயி யோகா" என்று உலகிற்கே அறிவித்த புண்ணியாத்மா தான் ஸ்ரீ இந்திராதேவி அம்மையார். யோகா என்கிற புனித கலை பலருக்கும் சென்றடைய அவர் பயன்படுத்திய முறைகளும் அதன் எளிமையும் ஆயிரக்கணக்கான மக்களை சென்றடைந்தது. நல்லவை, அல்லவை, உறுதியான உண்மைகள், உறுதியற்ற தன்மைகள் என்று தனது ஆன்மீகப் பயணத்தில் அவர் சந்திக்காத சோதனைகளே இல்லை எனலாம்.


🌹பிறப்பும் வளர்ச்சியும்:

யோக கலையை மேற்கத்திய நாடுகளுக்கு முதன்முதலாக பரப்பியவரும் 'Mother of Western Yoga' என போற்றப் படுபவருமான மாதா இந்திராதேவி 1899ம் ஆண்டு மே12ம் தேதி ரஷ்யா (தற்போது லாட்வியா) தேசத்தின் ரிகா என்ற ஊரில் பிறந்தவர். சுவாமியின் பழம் பெரும் பக்தையான இவரின் இயற்பெயர்  யூஜெனி பீட்டர்சன் ஆகும். இவரது தந்தை ஸ்வீடிஷ் வங்கி இயக்குநரான திரு. வாசிலி பீட்டர்சன் ஆவார். தாயார்  அலெக்ஸாண்ட்ரா லாபுன்ஸ்காயா ஒரு ரஷ்ய பிரபு குடும்பத்தை சேர்ந்தவர். இளமையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்று 1917ல் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்று வெளியேறினார். பின்னர் சிறிது காலம் மாஸ்கோவில் நாடகப் பள்ளியில் பயின்றார். ரஷ்ய புரட்சியின் போது  இராணுவ அதிகாரியாக பணியாற்றிய இவரது தந்தை  உள்நாட்டுப் போரில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து குடும்பச் செல்வத்தை இழந்தனர்; பின்னர் 1917ல் யூஜெனியும் அவரது தாயும் லாட்வியாவிற்கு தப்பிச் சென்றனர். அங்கிருந்து 1920ல் அவர்கள் போலந்துக்கும், 1921ல் பெர்லினுக்கும் குடிபெயர்ந்தனர், அங்கு அவர் ஒரு நடனக்கலைஞரானார்.


🌹இந்தியப் பயணமும் யோகப் பயிற்சியும்:

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் புத்தகத்தையும், யோகி ராமசரகாவின் யோக புத்தகத்தையும் தனது 15வது வயதிலேயே வாசித்த இந்திராதேவிக்கு இந்தியாவின் மீதான ஈர்ப்பு தொடங்கியது. அதன் காரணமாக 1927ம் ஆண்டு இந்தியாவிற்கு பயணம் செய்தார். 

மைசூர் அரண்மனையில் உள்ள யோகசாலையில் யோகாகுரு கிருஷ்ணமாச்சார்யாவின் மாணவர்களில் முதல் வெளிநாட்டுப் பெண்மணி இந்திரா தேவியே ஆவார். B.K.S ஐயங்கார் மற்றும் பட்டாபி ஜோயிஸ் ஆகியோருடன் சேர்ந்து படித்து உலகப் புகழ்பெற்ற யோகா ஆசிரியர்களில் ஒருவரானார். அவரது  ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யாவின் விருப்பப்படி ஒரு யோகா பள்ளியைத் தொடங்கினார். பின்னர்  12 ஆண்டுகள் பம்பாயில் வசித்து வந்தார், அங்கு வெளிநாட்டு தூதர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.


🌹ஸ்ரீ சத்ய சாயிபாபா குறித்தான தகவல்:

சுவாமி குறித்த பிரசித்திபெற்ற  "Man of Miracles" புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஹோவர்ட்  மர்ஃபெட் அவர்களை இந்திராதேவி சென்னை அடையாறில் சந்திக்க நேர்கிறது.  ‘ஸ்ரீ சத்ய சாயிபாபா,  ஷிர்டி சாயியின் மறு அவதாரம். பல லட்சம் பக்தர்கள் இவரை கடவுள் அவதாரம் எனக் கொண்டாடுகிறார்கள்’ என்ற உண்மையை மர்ஃபெட் இந்திரா தேவி அவர்களிடம் விளக்கிச் சொன்னார். ஆனாலும் அம்முறை இந்திராதேவி சுவாமியைச் சந்திக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல் இந்தியாவை வீட்டு வியட்நாம் நாட்டின் செய்கோன் நகருக்குக் கிளம்பி விடுகிறார். ஆனால் அந்த முறை, செய்கோனில் சுவாமியின் பக்தர்கள்  பலரை அவர் சந்திக்க நேர்கிறது. அவர்களிடமிருந்து சுவாமி குறித்தான அவர்களின் தெய்வீக  அனுபவங்களைக் கேட்கக்கேட்க இந்திரா தேவியின் மனம், மீண்டும் இந்தியா நோக்கி திரும்பியது. சுவாமியின் தரிசனத்துக்கான ஏக்கம் அதிகரிக்கவே, இருப்பு கொள்ளாமல் இந்தியா நோக்கிப் பயன்படுகிறார்.

 

 ஜாதவ்பூர் பல்கலைக்கழகத் துணை வேந்தரான டாக்டர் ஸென்னும்... பெங்களூர் தொழிற்கல்வி நிலையத்தின் தலைவரான பானர்ஜியும் இந்திரா தேவியை அந்தப் பயணத்தின்போது சந்தித்தனர். அவர்களின் காரில் நுழைந்த இந்திரா தேவி இதுவரை நுகராத ரம்மியமான தெய்வீக வாசனை வருவதைக் குறித்து வினவுகிறார். அந்த வாசனை வெறும் பொருளில் இருந்தல்ல.. பரம் பொருளில் இருந்துவருகிறது என்பதனை குறிக்கும் விதமாக…’எந்தப் பொருளும் இல்லை இது’ என்கிறார்கள். அனால் இந்திரா தேவியோ, ‘இல்லை.. மல்லிகைப்பூப் போன்ற வாசனை வருகிறதே!’ என மீண்டும் கேட்கிறார். ‘ஆம்.. பகவான் பாபா எங்களோடு இருப்பதை உணர்த்தும் வாசனை இது!’ என்கிறார்கள். எங்கும் நிறைந்த தெய்வீகத்தின் இருப்பு அத்தகைய தூய வாசனையைப் பரப்புகிறது என இந்திராதேவிக்கு நன்கு புரிகிறது. எனவே சுவாமியை தரிசிக்கும் ஆவல் இரட்டிப்பாகிறது. ‘எனக்கும் அவரை தரிசிக்க வேண்டுமே’ என ஏக்கத்தோடு கேட்கிறார். ‘புட்டபர்த்தி சென்று பாருங்கள்.. உங்களுக்கு திரும்பிச் செல்லவே மனம் வராது’ என்கிறார் டாக்டர் ஸென்.


🌹புட்டபர்த்திப் பயணமும் பாபா தரிசனமும்:

கப்ரீலா என்ற ஸ்விட்சர்லாந்து ஆசிரியை ஒருவருடன் புட்டபர்த்திக்கு பயணமானார் இந்திராதேவி அம்மையார். அவர் பர்த்திக்கு வந்திறங்கிய போது சுவாமி, பால்கனியில் புன்னகையுடன் நின்றபடி தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியினைக் கண்ட இந்திரா தேவி 'கப்ரீலா.. பாபா என்னை அழைக்கிறார்' என்றார். கப்ரீலாவால் இந்திராதேவியின் வார்த்தையை நம்பமுடியவில்லை. ஆனால் இந்திரா தேவியோ ஆனந்தப் பெருக்கில்  கண்களில் நீருடனும் கால்கள் தளர்ந்து  தன்னை மறைத்தபடி பூமியில் சரிந்தார். கபீரிலா இந்திரா தேவியை தாங்கிப் பிடித்த சற்று நேரத்திற்கெல்லாம் இந்திரா தேவி பெயர் சொல்லி மந்திரிலிருந்து அழைப்பு வருகிறது. எத்தனை ஜென்மத்து புண்ணியமோ... எத்தனை ஜென்மத்து வேண்டுதலோ...எத்தனை ஜென்மத்து தவமோ... சுவாமியே இவர்களின் எதிரே நிற்க, இந்திராதேவி தனது இறைவனை மிக அருகில் தரிசிக்கிறார். ‘இந்தியாவிற்கு ஏன் வந்தேன்.. எனக்கு இங்கிருந்து எதுவுமே தேவையில்லை... என்று இந்தியா விட்டு திரும்பிச் சென்றவள்.. மறுபடியும் உங்களை தரிசிக்கவே வந்திருக்கிறேன்’ என்று சுவாமியிடம் ஆனந்தத்துடன் தெரிவிக்கிறார்.

 

எல்லாம் அறிந்த சுவாமி, "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" எனக் கேட்க.. இந்திரா தேவி, ‘அமெரிக்காவில் கலிஃபோர்னியாவின் எல்லையில், அது ஒரு பயிர்ப்பண்ணை. நீங்கள் அங்கே கட்டாயம் வர வேண்டும்' எனக் கைகூப்பி அழைப்பு விடுக்கிறார். அதற்கு சுவாமியோ "நான் எங்கும் இருக்கிறேன். அங்கும் இருப்பேன். எப்போதும் உங்கள் இதயத்தில் நான் இருப்பதை உணர்வீர்கள்" என்றார். மேலும் "உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்?" என சுவாமி கருணையோடு கேட்க... இந்திரா தேவியால் எதுவும் பேச முடியவில்லை... பக்தியின் உச்ச நிலையில் இருப்பவர்க்கு பாஷை பிடிபடுவதில்லை... கண்ணீரே அப்போது மொழியாகிறது! சுவாமியோ மிகுந்த கருணையுடன், "சரி.. இதை பூஜையில் வைத்துக் கொள்ளுங்கள்" என கை அசைவில் சுவாமி உருவம் பதித்த பதக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, "நீங்கள் எங்கிருந்தாலும் என்னை அழைக்கலாம்...நான் வந்து உதவி செய்வேன்... எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரி... உங்களுக்கு  என் ஆசி உண்டு" என்று கனிவுடன் கூறினார்.

 

சுவாமியை தரிசனம் செய்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தார்; பின்னர் அங்கிருந்து பெங்களூர் புறப்பட்டார். ஆனால் ஒரு பெரிய ஏக்க உணர்வு தன்னை முழுமையாக ஆட்கொண்டதை உணர்ந்தார். ‘'நீங்கள் அங்கு சென்றவுடன் அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்ப மாட்டீர்கள்' என்ற டாக்டர் சென்னின் வார்த்தைகளை  நினைவு கூர்ந்தார். 'ஆஹா!.. எத்தனை உண்மையான வார்த்தைகள். எனக்கும் புட்டபர்த்தி வாழ்க்கைக்கான அடக்க முடியாத ஏக்கம் ஏற்படுகிறதே!' என்று எண்ணினார். மீண்டும் பிரஷாந்தி நிலயத்திற்கு செல்ல வேண்டும் என்பதும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் எழுப்பும் ஓம்காரம் மற்றும் சமஸ்கிருத சுப்ரபாதத்தினை கேட்க வேண்டும் என்பது மட்டுமே அவரது எண்ணமாக இருந்தது. ஆனாலும் அவர் மேற்கொண்டிருந்த கடமைகளும் பயிற்சிகளும் அவரை மறுபடி கலிபோர்னியாவிற்கு திரும்ப வைத்தன.

 அமெரிக்காவின் பிரபல யோகாசிரியை ஸ்ரீ இந்திரா தேவி, உலகம் முழுக்க.. சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு யோகப் பயிற்சியினை வழங்கியவர்.  நமது சுவாமியுடனான அந்த அம்மையாரின் சந்திப்பை முதல் பகுதியில் கண்டோம். அதன் பின் நிகழ்ந்த சில அற்புதங்களையும் செய்திகளையும் இந்தப் பகுதியில் காண்போம்.

 

🌹அற்புதங்களை சரியாகப் புரிந்துகொண்டவர்:

 

அங்கை அசைப்பில் விபூதி வரவழைப்பது, மோதிரம் மற்றும் செயின்கள் வரவழைப்பது, நோய்தீர்ப்பது போன்ற அற்புதங்கள் சுவாமியின் மாபெரும் அற்புதங்களே அல்ல! மாறாக மனிதனுக்குள் ஏற்படும் அகமாற்றமே, சுவாமியின் உண்மையான மற்றும் மேன்மையான அற்புதமாகும்!! என்று இந்திராதேவி அம்மையார் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர்.


தன்கர்ப்பூர் (Dungarpur) எனும் குறுநிலத்தை ஆண்ட அரச பரம்பரையில் ஒரு மகாராணியார் பல்பீர் கௌரி. அவருக்கு  புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட இரத்தப் போக்கினை சுவாமியிடம் செய்த்த பிரார்ததனையே சரிசெய்தது என்ற நம்பிக்கையுடன் பர்த்திக்கு வந்தார்.  மகாராணியாரின் பேத்தியான ரத்தனுக்குத் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது. அதற்கான ஆசிகள் வேண்டி தனது பேத்தியையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார். சுவாமி ரத்தனிடம் தனது கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்றை தந்ததோடு, அங்கை அசைப்பில் கண்களைப் பறிக்கும் ஒளியுடன்  கூடிய வைரங்கள் முத்துக்கள் பதித்த சிருஷ்டி மாலை ஒன்றை ரத்தனுக்குப் பரிசளித்தார். அதன் வேலைப்பாடுகளையும் தரத்தையும் கண்டு ‘என்னாலேயே இவ்வளவு விலை உயர்ந்த பரிசை கொடுத்திருக்க முடியாது!’ என்கிறார் மகாராணி. அதற்கு சுவாமி ஏதும் சொல்லாமல் புன்னகைத்து விட்டு ஆசீர்வாதம் புரிந்து நகர்ந்து விடுகிறார்.

 

ஆனால் வரும் வழியில் அந்த மாலையில் ஒரு பெரிய முத்து நழுவி எங்கேயோ மறைந்து விடுகிறது. மகாராணியார் குழம்பிப் போய் சுவாமியிடம் அதனைக் குறித்துக் கேட்கிறார். சுவாமியோ "பரவாயில்லை.. அது இல்லாமலேயே மாலை அழகாய் இருக்கிறது" என அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார். இந்த நிகழ்வை மகாராணியிடமிருந்து கேள்விப்படும்  இந்திராதேவி அம்மையார் நிகழ்வை சட்டென புரிந்து கொள்கிறார். ‘அந்த சிருஷ்டி பிரசாதத்தை விலை உயர்ந்தது என்றீர்கள் அல்லவா?" அதனால் தான் அதில் ஒரு முத்தை சுவாமி காணாமல் போக வைத்துவிட்டார்... சுவாமியின் கருணையை விலையால் அளந்தீர்கள் ஆகவே தான் அவ்வாறு செய்திருக்கிறார்’ என்றார். பரம்பொருள் ஸ்ரீ சத்ய சாயி தருவதெல்லாம் வெறும் பொருளல்ல! பூரணத்தில் இருந்து வருவதெல்லாம் பூரணமே என்பது வேத வாக்கியம். இந்த பரம சத்தியத்தை இந்திராதேவியார் எடுத்துரைக்க.. மகாராணியார், விலையுயர்ந்த என்ற வார்த்தையை சுவாமி வழங்கிய சிருஷ்டி பிரசாதத்தோடு ஒப்பிட்டதை எண்ணி தனது தவறை உணர்கிறார்!

 

🌹கார் விபத்திலிருந்து காப்பாற்றிய கருணாமூர்த்தி :

ஒருமுறை லாஸ் ஏஞ்ஜல்ஸ்'சில் multi lane freeways என்றழைக்கப்படும் பலவழிச் சாலைகளில் இந்திரா தேவி அம்மையார் காரில் பயணிக்கும்போது எதிர்பாராத விதமாக முன்புற டயர் வெடித்தது. என்ன நிகழ்கிறதென்று  புரியுமுன்பே கார் நின்ற இடத்திலேயே பம்பர சுழற்சியாய் சுற்றுகிறது! வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என என்னும்படியான அந்த சூழ்நிலையில் கண்களை இறுக்கமாய் மூடி "சாயிராம்" என உரத்த குரலில் கத்தினார். என்ன கதியோ? என்று நடுங்கவைக்கும் அந்த சில நொடிகளின் முடிவில் இந்திராதேவி அம்மையார் இறுக்கமாய் மூடிய கண்களை மெதுவாய் திறக்கிறார். திறந்த கண்களால் பார்க்கும் அவரால் தன்னையே நம்ப முடியவில்லை.

 


எதுவுமே நிகழவில்லை! மற்ற கார்களை உராய்வது போல் மிக அருகில் கடந்து போய் ஒரு புல்வெளி மேடையில் ஏறி நின்று கொண்டிருக்கிறது. பக்கத்திலிருந்த காரிலிருந்து பலரும் என்ன ஆனதோ? ஏதானதோ? என பதறியடித்து இவரது காரின் அருகில் விரைகிறார்கள். இந்திராதேவி அம்மையாருக்கு வருகின்ற எவரின் முகங்களும் தெரியவே இல்லை. மாறாக, எல்லோருடைய தோற்றத்திலும் சுவாமியே தெரிந்து கொண்டிருக்கிறார். விபத்தான களத்தில் சுவாமி ஒரே நேரத்தில் பன்முக தரிசனங்கள் கொடுத்த வண்ணம் இருக்கிறார்! சிறு சிராய்ப்பு கூட உடலில் ஏற்பட்டிருக்கவில்லை, சிறிதான சுளுக்கு கூட இல்லை! இதனை இந்திராதேவி அம்மையார் பின்னாளில், மேடையில் பகிர்கிற போது தாரை தாரையாக கண்ணீர் வடிக்கிறார். சுவாமி எனும் கருணை மகா சமுத்திரத்திற்கு கரைகளே இல்லை என்பதை உணர்த்துகிறது மாலை மாலையாய் விழுந்த அந்த ஆனந்தத் துளிகள்.

 

 

🌹பிறந்தநாளில் கலந்து கொள்ள பிரார்த்தனை:

ஒருமுறை, தனது மாலை தியானத்திற்குப் பிறகு இந்திரா தேவி அம்மையார்... பாபாவின் படத்தைப் பார்த்து, ‘பகவானே! உங்கள் பிறந்தநாளுக்கு என்னை புட்டபர்த்திக்கு வரவழைக்க வேண்டும்!’ என்று வேண்டினார். பின்னர் ஓர்நாள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாயி மையத்திற்கு அடிக்கடி வரும் சக் வெயின் என்ற இளைஞரிடமிருந்து இந்திராதேவிக்குத்  தொலைபேசி அழைப்பு வந்தது. வார்னர் பிரதர்ஸ் மோஷன் பிக்சர் ஸ்டுடியோவிலிருந்து தான் அழைப்பதாகச் சொன்ன சக் வெய்ன், ‘சாயியின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்க அடுத்த நாளே இந்தியாவுக்குச் செல்ல முடியுமா?’ என்று கேட்டார்! மேலும் பயணத்திற்கான செலவை வார்னர் பிரதர்ஸ் ஏற்கும் என்றும் கூறினார்.

 

இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்திராதேவி அம்மையார் இந்தியாவுக்குத் தன் பயணத்தைத் தொடங்கினார். பாபாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி, சரியாக பாபா தனது பிறந்தநாள் பிரசாங்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கும்போது பர்த்தியை சென்றடைந்தார் அம்மையார். "உங்களுக்குள் பூரண அன்பு  பிறக்கும் அந்தநாள் தான் எனது நிஜமான பிறந்தநாளாக முடியும்" என்று சுவாமி பேரறிவிப்பு செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத அந்த அற்புதப் பயணம் நிறைவடைந்து இந்திராதேவி தன் நாட்டுக்குத் திரும்புவதற்கு முந்தைய நாள், பகவான் அவரை  அழைத்தார். தனது அங்கையின் அசைப்பில், லட்சுமி தேவியின் அழகான தங்கப் பதக்கத்தை உருவாக்கித் தந்தார். 'எனக்கு எதுவும் வேண்டாம் பகவானே' என்று இந்திரா தேவியார் கெஞ்சினார். "இது உனக்காக அல்ல... வீட்டின் பாதுகாப்பிற்காக - இனி நெருப்பு இல்லை!"  என்று கூறினார் சுவாமி. அந்த சமயத்தில் அந்த வார்த்தைகளின் அர்த்தம் இந்திரா தேவியாருக்குப் புரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு கலிஃபோர்னியாவில் அவர்களின் பண்ணை இருந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அவர்களின் பண்ணை அனைவரும் வியக்கும் வண்ணம் பாபாவினால் பாதுகாக்கப் பட்டிருந்தது.

இதைவிட பெரிய வியப்பு என்னவென்றால், இந்தியாவிலிருந்து திரும்பிய இந்திரா தேவியார் வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவுக்குச் சென்றார். அங்கே  தனது பயணத்தையும் ஆவணப் படத்தையும் குறித்து அங்கே ஒருவருக்கும் எதுவும் தெரியாது என்று கேள்வியுற்று ஸ்தம்பித்துப் போனார். சுவாமியின் லீலைகளை என்னவென்று வியப்பது?

 

🌹சுவாமியின் புனிதக்கருவி:

இந்திராதேவி அம்மையாரை தேடி பலரும் யோகக்கலை கற்க வருவர். மந்திர தீட்சை பெறவும் அவர்களில் சிலர் வருவதுண்டு. அவரவர்களுக்கு தகுந்தாற் போல் மந்திரம் தருவார் இந்திராதேவி அம்மையார்.  

அப்படி இந்திராதேவி அம்மையாரிடம் மந்திர தீக்ஷை பெற்ற டாக்டர் சாம் சாண்ட்  என்பவர் பின்னாளில், சுவாமியை தரிசிக்கும் நல்வாய்ப்பைப் பெறுகிறார். அந்த சந்திப்பின் போது அவர் சுவாமியிடம் ‘எனக்கென தனியாக ஒரு மந்திரத்தை இந்திராதேவி சொல்லிக் கொடுத்திருக்கிறார்’ எனத் தெரிவிக்கிறார். சுவாமியோ, "நான் தான் அவர் மூலமாக அந்த மந்திரத்தை உங்களுக்கு உபதேசித்தேன்!" என்று கூறி மெதுவாக அதே மந்திரத்தை மீண்டும் அவரின் காதுகளில் சொன்னார். இந்த நிகழ்வு இந்திரா தேவி அம்மையார் அவர்களை சுவாமி தனது புனிதக் கருவியாகப் பயன்படுத்தினர் என்பதற்கான சிறிய சான்று. புண்ணியத்தைக் குறித்தோ, பெயர் புகழ் எதிர்பார்த்தோ அல்லாமல்... தன்னலமின்றி நாம் செயலாற்றுகிற போது நம்முடைய உடலையும்  உள்ளத்தையும், சுவாமி தனது புனித கருவியாக பயன்படுத்திக் கொள்கிறார் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.


மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்


✍🏻 கவிஞர்.சாய்புஷ்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக