தலைப்பு

வியாழன், 25 மே, 2023

பாபா தமது 20வது வயதில் அண்ணன் சேஷமராஜுவுக்கு எழுதிய தெய்வீகக் கடிதம்!

தமையனாருக்கோ ஒரே கவலை. யார் யாரோ வருகிறார்கள். இளைய சத்யா இவ்வுலகைப் புரிந்து கொள்ளாமல் அனைவரையும் நம்பி அன்புடன் அவர்களை அரவணைக்கிறானே! உலகம் பொல்லாதது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி ஒரு கடிதம் எழுதுகிறார். பதில் பாய்ந்து வருகிறது. சாதாரண பதில் அல்ல அது. ஒரு யுக சாசனம். அதில் பாபா தமது தெய்வீகத்தை  தமையனுக்கு மட்டுமல்ல, தம் பக்தர்கள் அனைவருக்கும் சேர்த்து வெளிப்படுத்துகிறார்.. 


25 மே 1947 /தமது 20வது வயதில் பாபா எழுதிய தெய்வீகக் கடிதம் - தமிழாக்கம்:


"எனதன்பே. உனது அன்பும், பக்தியும் ததும்பும் கடிதம் கண்டேன். அதில்  சந்தேகங்களும், கவலைகளும் விரவி இருப்பதைக் கண்டேன். இவ்வுலகில் ஞானிகள், யோகிகள், துறவியர், முனிவர்கள் போன்ற உயர்ந்தோர்களின் உள்ளத்தை யாரும் அகழ்ந்து பார்க்க இயலாது!


இவ்உலகம், பல குணாதிசயங்களும், வேறுபட்ட மனநிலைகளையும் கொண்டுள்ள மனிதர்களால் நிரம்பி உள்ளது. மனிதர்கள்  தங்கள் பார்வை வழியே தான் உலகை உற்று நோக்குகிறார்கள். ஆனால் நாம் நமது உய்த்துணரும் சக்தியாலும், நேர் பாதையாலும், திட சங்கல்பத்தினாலுமே வாழ்வை நடத்தவேண்டும். பழுத்தமரம் தான் கல்லடி படும். அவதூறுகளும், ஏளனங்களும் உலகத்தின் வழி. அவை இல்லாமலிருந்தால்தான் ஆச்சர்யம். 


இவ்வகை மாந்தர்களை நாம் தூஷிக்கலாகாது. அவர்களிடம் அனுதாபமே கொள்ளவேண்டும். அவர்கள் பொறுமையற்றவர்கள். பேராசை, கோபம், தற்பெருமை போன்ற குணங்கள் கண்களை மறைக்க ஏதோதோ அவதூறுகளை பரப்பு கின்றனர். அது அவர்களின் அறியாமையின் விளைவே ஆகும். ஆகவே அதுபற்றி நாம் எந்தவித முக்கியத்துவமும் தரக்கூடாது என்பதனை நீ உணர்ந்து கொள். சத்தியத்தை யாராலும் மறைக்க இயலாது. பொய்மை, வாய்மையை என்றும் வெல்லாது. பொய்மை, வாய்மையை மறைப்பதாகத் தோன்றினாலும், இறுதியில் ஸ்தாபிதமாக நிலைப்பது என்றும் வாய்மையே!


பெருமையுறும் போது மகிழ்வதும் , சிறுமை கண்டு துவளுதலும் பெரியோர் குணமன்று. அவர்களின் நற்குணங்களை எந்த கிரந்தமும் வரை அறுக்கவில்லை. அவர்கள் தாம் செல்லும் பாதையை அறிவர். அவர்களின் ஞானம் அவர்களை வழி நடத்துகிறது. சுயச் சார்பும், பிறர்க்கு உதவுவதுமே அத்தகையோரின் சால்பு. மேலும் பக்தர்களின் நலன் காத்து, அவர்களது நற்செய்கைகளின் பலனை அளிப்பதும் இதில் அடங்கும்.இச் செய்கையில் நான் ஈடுபட்டுள்ளபோது, உனக்கு ஏன் வீண் குழப்பமும் மனக் கவலையும்? போற்றலும் தூற்றலும் மனித உருவைத்தான் தொடமுடியுமே தவிர, ஆத்மாவை அல்ல. மனிதகுல மாண்பதனைக் காத்து, நிலையான ஆனந்தம் அளிப்பதே எனது கடமையாகும். சன் மார்க்கத்திலிருந்து விலகியவர்கள் அனைவரையும் நன்மார்க்கத்தில் மீட்டுக் கொண்டு வருவதே என் சங்கல்பம்.தீனர்களின் துயர் போக்கி அவர்களின் குறைகளைக் களைவதே என் பணி. என்னைத் தொழுபவர்களை மீட்பதே என் மகிழ்ச்சி. மகிழ்விலும், துன்பத்திலும் சமமான மனத்துடன் என்னை வழிபடுவோர்களை எந்நாளும் நான் கைவிடேன்.


புண்யாத்மாக்ளின் வாழ்க்கையைப் பற்றி சிலர் வதந்திகளையும், தவறான செய்திகளையும் பரப்பி இருக்கலாம். ஆனால் மஹாத்மாக்கள் அனேகர் உள்ளனர். சூரியனை நோக்கி குலைக்கும் நாய்களைக் கண்டதில்லையோ? நேர்மைதான் எப்போதும் நிலைக்கும். என் சங்கல்பத்தை ஒருபோதும் கைவிடேன். பெருமையோ, சிறுமையோ , பாராட்டோ அல்லது தூஷணையோ அனைத்தும் எனக்கு ஒன்றுதான்! புற உலக புரிதலுக்காகத்தான் நான் இந்த விளக்கம் அளிக்கிறேன்.


எனக்கென்று ஒரு தனி இடம் இல்லை. எப்பெயர் சூட்டினாலும் அது என்னதே. எனக்கு நான்/பிறர் என்ற பேதமில்லை. எப்பெயரால் அழைத்தாலும் அப்பொழுதே அங்கு தோன்றுவேன். யார் அழைத்தாலும் தடையின்றி செல்வேன்.இதுவே , இது வரை நான் யாரிடமும் சொல்லாத, என் முதன்மையான பிரதிக்ஞை. நான் இந்த உலக நியதிகளுக்கு அப்பாற் பட்டவன்.என் செயலும் இயக்கமும் மனிதகுல மேம்பாட்டுக்கானவை! யாராலும், எத்தனை நீண்ட காலமாக பலவிதமாக முயன்றாலும் என் கீர்த்தி தனை அளவிட இயலாது. எனது மகிமையின் விஸ்தாரத்தை வரும் காலங்களில் நீயே கண்டு உணரலாம். பக்தர்களுக்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும் அவசியமான நற் குணங்களாகும்.

கடித்திற்கு பதில் எழுதாவிட்டால் உன் மனம் துன்புறும் என்பதால் இந்த மடல் எழுதுகிறேன். இல்லையென்றால் நான் இது பற்றி நினைப்பதோ,கவலைப் படுவதோ இல்லை.


    இப்படிக்கு;

உந்தன் பாபா

ஞாயிறு/ மே 25/ 1947


ஆதாரம்:

தமிழாக்கம்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர்


சாயிராம்... இந்த பொக்கிஷ கடித்தை அனைத்து சாயி பக்தர்களும் , நகல் எடுத்து, லாமினேட் செய்து பாதுகாத்து அவ்வப்போது படித்து பயன் பெற வேண்டுகிறோம்!


1947 - சேஷம ராஜு மற்றும் அவரது துணைவியாருடன் ஸ்ரீ சத்ய சாய் பாபா





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக