கொடிய விஷம்.. அதைவிட பெரிய விஷம் கோபம் ஒரு ஸ்பூன் கலந்த சந்தேக புத்தி.. அதனால் ஏற்பட்ட அசம்பாவிதம்... நன்மை செய்ய வந்த சாயி பக்தர்களுக்கு நடந்த நயவஞ்சகம்.. உயிர் பிழைத்தார்களா? விறு விறு வென சுவாரஸ்யமாக இதோ...
அது 1974 ஆகஸ்ட் மாதம்! ஹரித்வாரில் கும்ப மேளாவில் கலந்து கொண்டு அடுத்த பயணமாக டெஹ்ராடூனில் சொக்கூ என்ற கிராமத்தில் வசிக்கும் இந்திரா பிரகாஷ் மித்தல் வீட்டில் தங்குகிறார்கள் இல்லறத்துறவிகள் சஞ்ஜெய் மீரா! மித்தல் குடும்பமே மீராவை தன் மகளாக பார்த்துக் கொள்பவர்கள்! 1969 ஹைதராபாத் ரயில் நிலையத்தில் அறிமுகமான சாயி உறவு மித்தல் குடும்பம்! மித்தலோ ஓ.என்.ஜி.சி கம்பெனியில் பெரிய ஆஃபீசராக பணியாற்றுகிறார்! அவர்கள் வீட்டில் தடபுடலாக பஜனைகள் நிகழும்... பிரதான பாடகர்களாக சஞ்ஜெய் - மீரா! அதில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்! அப்படி கலந்த கொண்டவர்களில் ஒரு குடும்பம் வங்காளிக் குடும்பம்! அவர்களின் பெயர் குறிப்பிட விரும்பாமல் மீரா வங்காளி என்பதால் தத்தா குடும்பம் என்று மட்டும் அழைக்கிறார்! அதற்கான காரணம் இந்தப் பதிவை வாசித்து முடிப்பதற்குள் உங்களுக்கே புரிந்து விடும்!
அந்த தத்தா குடும்பம் இல்லறத் துறவிகளை தங்களது வீட்டில் பஜன் புரியும்படி அழைக்கிறார்! அதற்கு முதலில் மித்தல் "உங்களால் இவர்களை சரிவர கவனிக்க முடியாது!" என்று மறுக்கிறார்! தங்களுக்கும் பாபாவின் அருள் கிடைக்க வேண்டும் என்று ஒருவழியாக மித்தலை சமாதானப்படுத்தி இல்லறத் துறவிகளை அழைத்துச் செல்கிறார் தத்தா!
அங்கே பஜனை ஏற்பாடுகள் தடபுடல்... கூட்டமும் திறள்கிறது... இரு பாபா புகைப்படங்களும் பெரிது பெரிதாக... கூடவே தத்தா அவர்களுடைய மூதாதையர் படம்... அதோடு கூட ஸ்ரீ ஆனந்த மயி மா அவர்களின் புகைப்படமும் திருமதி தத்தா வற்புறுத்தி வைக்கச் சொல்ல... எந்த மகான்களையும் மனதளவில் கூட ஒதுக்காத இறைவன் பாபாவின் பக்தரான சஞ்ஜெய் முழு மனதோடு ஸ்ரீ ஆனந்த மயி மா'வின் புகைப்படத்தையும் சேர்த்து பஜனையில் வைக்கிறார்! பஜனைக்கு முன் தத்தா வீட்டு மகன் பஜனையில் ஒரு பாடலை பாடுகிறேன் என்று கேட்க.. சஞ்ஜெயோ "பயிற்சி செய்! பிறகு பஜனையில் முன்னால் அமர்ந்து பாடு!" என்கிறார்! "என்ன பஜன்?" என்று சஞ்ஜெய் கேட்க.. அதை அவரே கற்றுத் தருகிறார்! அன்று பஜனை... அனைவரும் அமர்கின்றனர்.. சஞ்ஜெய் பஜனை ஆரம்பிக்க... அவர் கற்றுக் கொடுத்த பஜன் பாடலான "கோவிந்த ஹரே கோபால ஹரே" என்ற பாடலை முன் வரிசையில் இருந்து தத்தா மகன் பாட .. திடீரென வரிகளை மறந்து பாடுவதை அவன் நிறுத்தி விட.. ஓரிரு நொடி நிசப்தம்... அந்த வரிகளை சஞ்ஜெய்யே பாடி பிறகு பஜனை நிறைவு பெற்று ஆரத்திக்கு பின்.. மீராவிடம் சென்று தத்தா மகன் "நீங்க சொன்னது உண்மை.. சரியா பாடாட்டி முன்னாடி உட்காராதேன்னு சொன்னீங்க.. நான் வரி'ய மறந்து முழிக்கும் போது.. யாரோ ஓங்கி கன்னத்தில் அறைந்தாங்க!" என்று மிரட்சியோடு பேசுகிறான் சிறுவன்! அவன் கை வைத்து மூடிய கன்னத்தை திறந்த போது ஐந்து விரல்களும் நச் என்று பதிந்திருந்தது.. அது ஷிர்டி பாபா விட்ட அறை என்று இருவருக்கும் புரிந்தது!
வழக்கம் போல் சஞ்ஜெய் மீரா பஜனை புரியும் அந்த தத்தா ஜி வீட்டிலும் பாபாவின் அற்புதங்கள் நிகழ்கின்றன...! பஜனில் வைத்த படங்களில் எல்லாம் விபூதி.. தத்தா குடும்ப மூதாதையர் படத்திலும் விபூதி... அனைவரும் ஆச்சர்யப்பட.. ஆனால் தத்தா மனைவியின் புரிதலோ வேறு விதமாக இருக்கிறது... "எல்லா படங்களிலும் விபூதி வரவழைக்கத் தெரிந்த பாபா ஏன் எங்கள் குருவான ஆனந்த மயி மா'வின் புகைப்படத்தில் விபூதியை வரவழைக்கவில்லை ?" என்று யாருமே எதிர்பார்க்காத கேள்வி கேட்டு குண்டை தூக்கி அவர்களின் இதயத்தில் வீசி.. பிரச்சனையை ஆரம்பிக்கிறார்...!
"என்ன காரணம் தெரியவில்லை.. ஒருவேளை ஆனந்தமயி மா சமாதி அடையவில்லை என்பதாகவும் இருக்கலாம்... பாபாவுக்கே நிஜ காரணம் தெரியும்!" என்று சஞ்ஜெய் சமாதானமாக எடுத்துக் கூறியும்.. தத்தா மனைவிக்கு கோபம் குறையவே இல்லை... "உங்கள் பாபா கூடத்தான் உயிரோடு இருக்கிறார்! பிறகு ஏன் அவர் படத்திலிருந்து விபூதி வருகிறது?" என்று கோபக் குதர்க்கப் பேச்சை கட்டவிழ்க்கிறார்! வாதத்திற்கு மருந்து உண்டு - பிடிவாதத்திற்கு மருந்தே இல்லை என்பதால் மௌனமாகிறார் சஞ்ஜெய்! சஞ்ஜெய் பாபா பற்றி இசை பாடுகிறார்..அன்றிலிருந்து தினந்தோறும் அந்த தத்தா மனைவி பாபா பற்றி வசை பாடுகிறார்! இசையும் வசையும் பாபாவுக்கு புதிதல்ல என்றபடி நாட்கள் நகர்கின்றன.. ஒரு நாள் தத்தாவும் வெளி நாடு செல்ல தன்னை தயார்படுத்துகிறார்... அதை அறிந்து இல்லறத் துறவிகள் மித்தல் வீட்டிற்கே கிளம்புகிறோம் என்று அவரிடம் சொல்ல... அவர் அனுமதிக்கவில்லை... அப்படி அவர்கள் சொன்னதற்கு மிக முக்கிய காரணம் : பாபாவின் மேல் தத்தா மனைவி பொழியும் வசையே! கேட்க சகிக்கவில்லை... ஆனால் தத்தாவோ விடவில்லை... அவள் (தனது மனைவி) நன்றாகப் கவனித்துக் கொள்வாள் என்று கிளம்பிவிடுகிறார் தத்தா!
இருவருக்கும் ஒரே தர்ம சங்கடம்!
அன்றைய நாள் பஜனை நிறைவடைய... உணவு உண்பதற்கு அழைக்கிறார் தத்தா மனைவி.. "அவனும் (தத்தா மகன்) வந்து விடட்டும்!" என்று இருவரும் காத்திருக்க.. விரைந்து ஓடி வருகிற மகன் ... ஒரு குண்டு தூக்கி இருவரின் மனதிலும் வீசுகிறான்... கேட்டு அவர்கள் விலகவும் முடியவில்லை இணையவும் முடியவில்லை.. "கொஞ்சம் இருங்கள்! இதோ வந்துவிடுகிறேன்" என்று மீண்டும் எங்கோ செல்கிறான் அவன்! அதற்குள் அவர்களை அழைத்து உணவு பரிமாறுகிறாள் தத்தா மனைவி..!
ருசியில் ஏதோ வித்தியாசம் தெரிகிறது சாப்பிடும் இருவருக்கும்.. "உங்களுக்காக இதுவரை முயற்சி செய்யாத ஒன்றை வித்தியாசமாக சமைத்திருக்கிறேன்!" என்று பீடிகை போடுகிறார் தத்தா மனைவி! அவர்கள் முழுதாக சாப்பிட்டு முடிக்கும் ஒரு நொடிக்கு முன்... மூன்றாவது குண்டை மனதில் வீசி எறிகிறார் தத்தா மனைவி...
அவர் சொன்ன வார்த்தை தீமைகளின் உச்சகட்டம்! விருந்தோம்பலை விழுங்கி ஏப்பம் விடும் நயவஞ்சகம்!
"உங்கள் உணவில் விஷம் கலந்திருக்கிறேன்! உங்கள் பாபா எங்கள் ஆனந்தமயி மா' படத்தில் விபூதி தரவில்லை...சரி! உங்கள் உயிரையாவது காப்பாற்றுகிறாரா பார்க்கலாம்!" என்கிறார்! இருவருமே கடைசி கவளத்தை வாயில் வைக்கும் போது இந்த திடுக்கிடும் வார்த்தையையும் சேர்த்தே உண்கிறார்கள்!
அதற்குள் தத்தா மகன் ஓடோடி வந்து "நான் தான் உங்கள் சாப்பாட்டில் அம்மா என்னவோ கலக்கிறார்கள்! அதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன்! ஆகவே சாப்பிட வேண்டாம்! அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு கிளம்புங்கள் என்றேனே! ஏன் இப்படி செய்தீர்கள்!" என்று பதறுகிறான்!
அதற்கு பதட்டம் ஏதுமின்றி "பாபா இருக்கிறார்! எங்களுக்கு எதுவும் ஆகாது! பாபா காப்பாற்றுவார்!" என்று தத்தா மனைவியிடம் "கிளம்புகிறோம் பாபிஜி ! மிகவும் நன்றி!" என்று சொல்லிவிட்டே இல்லறத் துறவிகள் கிளம்புகிறார்கள்! தத்தா மகன் தனது தாயிடம் சொல்லாமல் அவர்களை கிளம்ப சொன்னதால் மனம் ஒப்பாமல்... பக்தி ரசத்தோடு வந்தவர்கள் இப்போது கூடுதலாக விஷத்தோடு விடை பெறுகிறார்கள்! விஷம் தன் வேவையை காட்டுகிறது..! மயக்கம் வருகிறது.. வாந்தி வருவதைப் போன்ற உணர்வு... அவர்கள் ஒரு நிலையில் இல்லை... அவர்கள் மீண்டும் மித்தல் வீட்டிற்கே வருகிறார்கள்!
நடந்ததை கேள்விப்பட்டு மித்தல் கொதித்துப் போகிறார்! மித்தலின் மனைவி சரளா நர்ஸ் என்பதால் எதுவரை விஷம் ஏறியிருந்தது என்பது தெரியாமல் விஷ முறிவு மருந்து உட்கொள்ள வைக்கிறார்! அது அவரால் ஆன சிறு முயற்சி! இல்லறத் துறவிகள் பாபாவின் விபூதியை உட்கொண்டு விட்டு மரக்கட்டையாக தூங்குகிறார்கள்!
அடுத்த நாள் இருவரும் எழுந்திருக்கையில் ஒரு பொட்டு அசதி இல்லை.. விஷத்திற்கான பக்க விளைவுகள் கூட எதுவும் ஏற்படவில்லை...! மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறார்கள்!
அன்றே மித்தல் வீட்டில் பஜனை... பக்தர்களோடு தத்தா மற்றும் அவரது குடும்பமும் மீண்டும் வருகிறது! மித்தல் கோபப்படுகிறார்!
தத்தாவோ "நடந்ததை கேள்விப்பட்டேன்!" என்று மன்னிப்பும் கேட்கிறார்! "அவர்களை உன்னால் சரிவர கவனித்துக்கொள்ள முடியாது! என்று முன்பே சொன்னேன்! நீ கேட்கவே இல்லை!" என்கிறார் மித்தல்... தத்தா முதுகுக்குப் பின் மிரட்சியோடு ஒளிந்திருந்த தத்தாவின் மனைவி திடும் என்று... "ஓ சாயி.. ஓ சாயி பாபா! ஓ சாயி ராம்! என்னை மன்னித்து விடுங்கள்!" என்று சஞ்ஜெய் கால்களில் விழுந்து கதறி அழுகிறார்! அவர்கள் முதுகி கண்ணிப் போய் வீங்கி இருக்கிறது!
பதறிய சஞ்ஜெய் அவர்களை எழுப்பி "அம்மா! என்னானது சொல்லுங்கள்!" என்று புதிராகக் கேட்கிறார்!
"நேற்று நீங்கள் சென்ற பிறகு இரவு தூங்கச் போனேன்! பின்னிரவு 3 மணி இருக்கும்.. ஷிர்டி பாபா என் முன் தோன்றினார்... நான் பயந்து ஆ என்று கத்தினேன்!" அதற்கு ஷிர்டி பாபா "நான் உன்னை இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை.. அதற்குள் ஏன் கத்துகிறாய்! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் பக்தர்களுக்கே விஷம் கொடுப்பாய்! அப்படி ஒரு இழிவான செயல் செய்து ,
நீ அந்த ஆனந்த மயி'யையும் சேர்த்தே களங்கப்படுத்திவிட்டாய்!" என்று கூறிக் கொண்டே பாபா அவர் முதுகில் சாத்து சாத்து என்று சாத்துக்கிறார்! கண் கலங்கிய தத்தாவோ "நான் வெளி நாடு செல்கிற பயணமும் இறுதி நொடியில் மாற்றலாகி.. வேறொருவர் பயணித்து விட்டார்!"என்று கூறி மீண்டும் இல்லறத் துறவிகளை தனது இல்லத்துக்கு அழைக்கிறார்.. நீ கவனித்த வரை போதும் என்கிறார் மித்தல்... மித்தல் மனைவி சரளாவிடம்... "அக்கா எங்கள் பெட்டிகள் இங்கேயே இருக்கட்டும்! நாங்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டு வந்துவிடுகிறோம்!" என்று கூறிவிட்டு "குற்றம் யார் மீதும் இல்லை! யாராலும் ஒன்றும் நடக்கவில்லை! எதுவோ நடக்க வேண்டியது நடந்துவிட்டது!" என்று மிரண்ட தத்தா குடும்பத்தை சமாதானப்படுத்துகிறார் இரக்கமே உருவான சஞ்ஜெய் சுவாமிஜி!
ஷிர்டி பாபா இப்படி அடிப்பது புதிதல்ல... அது மத்திய பிரதேச பேதூல் கிராமம் - ரயில்வே காலனி மிஷ்ராஜி வீட்டில் இல்லறத் துறவிகள் தங்கி இருந்த போது - அவரின் பக்கத்து ராணா வீட்டு வேலையாள் பெயர் பிரதாப்! ஷிர்டி பாபா பக்தன், தங்களை விட உயர்ந்த பக்தன் என்று பதிவு செய்கிறார் மீரா! இரு பாபா பற்றியும் உணர்ந்தவர் பிரதாப்.. எப்போது நினைத்தாலும் அவர் கைகளில் பாபா விபூதி/ குங்குமம் தருவார்! அப்படி ஒரு பக்தி அவருக்கு...! செல்லமாக மீரா ஷிர்டி பாபாவை புட்டா (கிழவர்) என்று அழைப்பது போலவே பிரதாப்பும் அழைக்க ஆரம்பிக்க... அப்படி எல்லாம் அழைக்காதே என்று மீரா தடுத்தும் அவர் கேட்கவில்லை!
ஒருநாள் பாலம் வழியே இருவரும் நடந்து வர... அழுது கொண்டே பிரதாப்பும் எதிர் வர...
"உனக்கு நான் என்ன கிழவனாகத் தெரிகிறேனே! சொல் அப்படி சொல்வாயா? சொல்!" என்று ஷிர்டி பாபா பிரதாப் முன் தோன்றி அடித்த அடியில் அவருக்கு தழும்பே வந்து விட்டதை நேரிலேயே கண்ட மீராவுக்கு அந்த அடியோடு இந்த அடியும் நினைவுக்கு வர... அதையும் பதிவு செய்கிறார் அவர் இரு பாபாவின் அடியையும் விழுந்து வணங்கியபடி...!
(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 185 - 193 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்)
"அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்!" எனும் பழமொழியில் இரண்டு அடி இருக்கிறது... ஒன்று வாழ்வில் நமக்கு ஏற்படும் அடிகள்! (பாடங்கள்) முக்கியமான மற்றொன்று இறைவன் பாபாவின் தாமரைத் திருவடிகள்! வாழ்வில் நாம் அடி படுகிற போதே நமக்கு பக்குவம் வருகிறது... நாம் பாபாவின் அடி விழுகிற போது தான் நமக்கு பரமானந்தமே வருகிறது! முதலில் பக்குவமே பிறகே பரமானந்தம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக