தலைப்பு

திங்கள், 8 மே, 2023

பாபா படத்தின் முன் தேநீருக்காக பால் கேட்ட பக்தர்கள்- காலி பாட்டிலும் மால்கோஸ் பாடலும்.!

பக்தர்களின் நம்பிக்கைக்கும் பக்திக்கும் ஏற்ப இறைவன் பாபா புரிகிற/பொழிகிற லீலைகள் சர்வ சத்தியம் என்பதை தெள்ளத் தெளிவாய் உணர்த்தும் தெய்வீகப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...


அது 1972 - கான்பூர் - சாயி பக்தை சாந்தி கிருஷ்ணா இல்லம்.. அங்கே ஒரு மாத காலம் தங்கி இருந்தனர் இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் - மீரா! அவர்களின் வீட்டில் பெரும்பாலும் சஞ்ஜெய்யின் சாயி பஜன் நிகழ்ந்து கொண்டே இருக்கும்... அதில் பங்கெடுத்துக் கொள்வதற்கென்றே பல சாயி பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்! அவர்களுக்கு சஞ்ஜெய் இசைக்கும் கவ்வாலி பஜனைகள் மிகவுமே பிடிக்கும்... இரவு 10 மணி வரை பஜனைகள் நிகழும்! கூடவே அவர்களின் சத்சங்கமும் நிகழும்... அப்படிப்பட்ட ஒருநாள் பக்தர் கைலாஷ்நாத் குடிக்க சாந்தி கிருஷ்ணாவை தேநீர் கேட்கிறார்! சியாம், கிரீஷ், சந்திரா ஜோஷி, ரவிசந்தன் சஹாய் , குப்தா , சர்மா இன்னும் பல பக்தர்கள் தாங்களும் தேநீர் அருந்த வேண்டும் என்பதை ஒரு சுதியில் கேட்கிறார்கள்! ஆனால் என்ன செய்வது ?.. சாந்தி கிருஷ்ணா "பால் எல்லாம் தீர்ந்துவிட்டது!" இது அவர் பதில்... அப்போது சிறுவன் ரமாகாந்தை பாலுக்காக கடைக்கு அனுப்புகிறார்கள், பசுக்கள் அசைபோட்டுக் கொண்டே தூங்குகிற இரவு அது! வீதியே வெறிச்சோடி இருந்தது! கடையும் இல்லை பாலும் இல்லை... பால் இருந்தால் தானே தேநீர்! ஆகவே பால் இன்றி தேநீர் குடிக்கும் ஆசை பாழ் ஆனது! 


இந்த சூழ்நிலையில் பக்தர் மிஷ்ரா "நாமெல்லாம் தவறாமல் டீ குடிப்போம்! நம் சஞ்ஜெய் நம் பக்கத்தில் இருப்பதால் நமக்கு எந்த குறையும் வராது!" என்கிறார்! 

மீரா உடனே "அவர் என்ன எப்படி செய்துவிடுவார்?" என்று கேட்க...

"பாபாவால் பால் வரவழைக்க முடியுமே!" என்கிறார்! 

சஞ்ஜெய் அதை காதில் கேட்டு.. டீ டீ டீ என தீயாகிறது அவர் சிந்தனை ... உடனே சாந்தி கிருஷ்ணாவை அழைத்து "அம்மா! ஒரு காலி பாத்திரத்தைக் கொண்டு வாருங்கள்!" என்று சஞ்ஜெய் கோரிக்கை விடுக்க...

காலி பாத்திரம் வருகிறது... என்ன நடக்கும்? ஏது நடக்கும்? என்று உற்று நோக்கிய பிற பக்தர்களின் காலியான கண்கள் சஞ்ஜெய்யையே மொய்த்தன...

உடனே அந்த காலி பாத்திரத்தை பாபா படத்தின் முன் வைத்து "பாபா! இவர்கள் டீ குடிக்க வேண்டுமாம்.. பால் இல்லை... நீ தான் எப்படியாவது பால் தந்து இவர்களின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்ற வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டபடி 

மால்கோஸ் ராகத்தில் ஒரு பஜன் பாடலைப் பாடுகிறார்..

பாடுகிற போதே பாபா விஜயத்திற்கான தெய்வீக வாசனைகள் பரவ ஆரம்பிக்கின்றன... அதை அங்கிருந்த அனைவரும் நுகர்ந்து உணர்கிறார்கள்!

பிறகு பூஜையறை கதவு சாற்றி வெளியே வரவைக்கிறார் அனைவரையும் சஞ்ஜெய்! எல்லோரும் வெளியே வந்து உட்கார்ந்த பிறகு அந்த வாசனைகள் நின்றுவிடுகின்றன...! 

சாற்றிய பூஜையறை கதவை பிறகு மிஷ்ரா திறக்கிறார்! ஒரே விசித்திரம்... அந்தப் பாத்திரம் பாலால் நிரம்பி வழிந்திருந்தது..‌. அனைவருக்கும் பரவச மகிழ்ச்சி! 

உடனே சாந்தி கிருஷ்ணா தேநீர் கேட்டவர்களுக்கு அந்த சிருஷ்டிப் பாலிலேயே தேநீர் தயாரித்துத் தருகிறார்! அது வெல்லம் கலந்த தேநீர்! இது ஷிர்டி பாபாவுக்கு மிகவும் பிடித்தமான தேநீர்.. இந்த வெல்லம் கலந்த தேநீர் என்று பதிவு செய்கிறார் மீரா! 


சஞ்ஜெய்க்கும் ஒரு கோப்பையில் தேநீர் தரப்படுகிறது... பாத்திரத்தில் இன்னும் இருந்த தேநீரை ஒரு கோப்பையில் ஊற்றி சஞ்ஜெய் பாபா படத்தின் முன் மூடி வைக்கிறார்! பாபா இந்த தேநீரை குடிப்பார் என்கிறார் அவர்! "இப்போது இரவு 10.. இதே நேரத்தில் ஷிர்டியில் சேஜ் ஆரத்தி நடக்கும் என்பதால்... கொஞ்சம் பொறுத்து நாம் தேநீர் அருந்தலாம் என்கிறார் அவர்! அதற்கு அனைவரும் சம்மதித்தாலும் சிலர் அது எப்படி பாபா நாம் அவருக்கு ஊற்றி வைத்த தேநீரை அருந்துவார் என்று சந்தேகப்படுகிறார்கள்! இதில் மிஷ்ராவுக்கு தான் அதிக சந்தேகம்! சில நிமிடம் கடந்தது .. சந்தேகப்பட்ட மிஷ்ராவையே பாபாவுக்கு படைக்கப்பட்ட தேநீர் கோப்பையை திறந்து அதில் மீதமுள்ள தேநீரை அனைவருக்கும் சஞ்ஜெய் பகிரச் சொல்கிற போது.. மிஷ்ரா மூடியை திறக்கிறார்... அவருக்கு ஒரே ஆச்சர்யம்.. பாத்திரத்தில் பொங்கி வழிந்ததையும் சேர்த்து இரட்டிப்பு ஆச்சர்யம்... அவரால் அதை நம்பவே முடியவில்லை! பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்க தேநீர் ஒரு துளி கூட இல்லை..‌ எல்லாம் பாபாவே அருந்திவிட்டிருந்தார்! ஆகவே தான் சஞ்ஜெய் அதிகம் சந்தேகப்பட்ட மிஷ்ராவை மூடி திறக்க சொல்கிறார்! மிஷ்ராவோ சாஷ்டாங்கமாக அதே இடத்தில் பாபாவின் படத்தை நோக்கி விழுந்து கிடக்கிறார்! அப்போது கோப்பை மூடி மட்டுமல்ல அவரது சந்தேக மூடியும் சேர்ந்தே திறந்து போகிறது! 


வேறொரு சமயத்தில் டெஹ்ராடூன் அருகில் உள்ள உத்தரகாண்டின் டாகா பத்தர் என்ற ஊரில் அப்போது இல்லறத்துறவிகள் தங்குகின்றனர்...யமுனை டோன்சா நதிகள் சேரும் இயற்கை எழில் ஊறும் அற்புத ஊர் அது! இந்தியாவின் பெரிய பவர் ஹவுஸ் ஒன்று அங்கே இருக்கிறது! அங்கே லஷ்மி நாராயணன் என்பவர் வீட்டில் இருவரும் தங்கி இருக்கிறார்கள்! "சுவாமிஜி! பாபாவின் சிருஷ்டி அமிர்தம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்! ஆனால் அதன் ருசியை இதுவரை அனுபவித்ததே இல்லை! ஸ்ரீ சத்திய சாயி பாபா வைகுண்ட ஏகாதசிக்கு அமிர்தம் தருவாராமே! உங்களிடம் இருந்தால் கொஞ்சம் தருவீர்களா சுவாமிஜி?" என்று அன்புவந்து கேட்கிறார்! 

"என்னிடம் அப்படிப்பட்ட அமிர்தம் ஒன்றும் இல்லை! எப்போது பாபாவின் கிருபை இருக்குமோ அப்போது தான் அது கிடைக்கும்!" என்கிறார் மிக வெளிப்படையாக சஞ்ஜெய்! உள்ளதை உள்ளபடி பணிவோடு பேசிவிடுவது சஞ்ஜெயின் வழக்கம்! தன்னை அவர் பெரிய தவசியாக காட்டிக் கொண்டதே இல்லை! 

"சுவாமிஜி! நீங்கள் பாபா அமிர்தம் தருவதற்காக வேண்டிக் கொள்ளுங்கள்! நாங்களும் வேண்டிக் கொள்கிறோம்!" என்கிறார் லஷ்மி நாராயணன்! 

"பாபாவை கேட்கிறேன்! நாளை நீங்கள் சிறிய சிறிய காலி பாட்டில்களை கொண்டு வாருங்கள்! அதை பாபாவின் புகைப்படத்தின் முன் வைத்து வேண்டுகிறேன்! பாபா சங்கல்பித்தால் அமிர்தத்தை கொடுப்பார்! ஆனால் என்னால் உறுதியாக சொல்ல இயலாது! முழுக்க முழுக்க அது பாபா சங்கல்பமே!" என்கிறார்!

அடுத்த நாள் சஞ்ஜெய் சொன்னது போலவே லஷ்மி நாராயணன் கைகளாலேயே காலி பாட்டில்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்படுகின்றன... 

உடனே மால்கோஸ் ராகத்தில் சிவ பஜனை பாடுகிறார் சஞ்ஜெய்... மால்கோஸ் ராகம் தவிர வேறு எதையும் அவர் அப்போது ராக ஆராதனை புரியவில்லை! ஒருமணி நேரம் பஜனை நிகழ்கிறது! பிறகு ஆரத்தி பிறகு சத்சங்கமும் கூட... "உங்கள் பாட்டில்களை எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று சஞ்ஜெய் சொல்கிற போது! அந்த பாட்டில்களின் மூடியை திறக்கையில் ஆச்சர்யங்கள் காத்திருந்தன... பவர் ஹவுஸ் இருக்கிற ஊரில் உண்மையான பவரையே அப்போது தான் அவர்கள் தரிசிக்கிறார்கள்!

மூடிப் போட்டிருந்த எல்லா காலி பாட்டில்களும் அமிர்தத்தால் நிரம்பி இருந்தன...அரிதினும் அரிதான அமுதம் அது! 

"அனைவரும் சத்ய சாயி பாபா கி ஜெய்! சொல்லுங்கள்" என்கிறார் சஞ்ஜெய்... அப்போது அங்கே எழுந்த ஜெய கோஷம் அமிர்தத்திற்கு மேலும் இனிப்பு சேர்க்கிறது! 


ஒருமுறை பாபாவை சஞ்ஜெயும் மீராவும் நேரில் தரிசிக்கிற போது... "பாபா! நான் எப்போது பஜனை பாடினாலும்... நீங்கள் 

அந்த பஜனைக்கு வருவீர்களா?" என்று திடீர் கேள்வி கேட்கிறார்! 

"உனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறதா?" என்று பாபா புன்னகை ததும்பக் கேட்கிறார்! 

"இல்லை பாபா எனக்கு சந்தேகமில்லை! அது என் ஆசை!" என்கிறார்!

அதற்கு பாபா "குமார்! நீ எப்போதெல்லாம் பஜனை பாடுகிறாயோ அப்போதெல்லாம் சுவாமி நீ இருக்கும் இடத்திற்கு வந்துவிடுவேன்!" என்கிறார்!

"பாபா ! நீங்கள் ஏன் உங்கள் சுய ரூபத்தில் வருவதில்லை?" என்று பஜனையின் போது ஏற்படும் தன் அனுபவங்களை கேள்வியாகக் கோர்த்துக் கேட்கிறார்! 

"குமார்! பஜனையில் எனக்கு இஷ்டம் இல்லாதவர்களும் வருவார்கள்.. அவர்களுக்கு எனது நிஜ ரூபத்தை காட்டுவதில் எனக்கு இஷ்டம் இல்லை!" என்கிறார்!

அதற்கு சஞ்ஜெய் "பாபா நான் எப்போது அழைத்தாலும் நீங்கள் வர வேண்டும்!" என்று பக்தியோடு தெரிவிக்க... "குமார் ! எப்போதும் நான் உன் கூடவே இருக்கிறேன்.. உன் அருகே, உன் பின்னே , உனக்குள்ளே, உன் எதிரே என எங்கும் நிறைந்திருக்கிறேன்... நீ அழைக்கத் தேவையே இல்லை... நீ கூப்பிடுவது தான் தடை... நான் முன்னாலேயே இருப்பேன்.. சரியா? சந்தோஷமா?" என்று திடமாக உறுதியாகச் சொல்கிறார் பாபா! இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து... 

"யாராவது என்னை அன்போடு அழைத்தால் , ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவர் அருகில் இருப்பேன்!" என்று அத்தியாயம் 40'ல் ,ஷிர்டி சாயி சத்சரிதத்தில் குறிப்பிடப்பட்ட சத்திய வாசகத்தையும் பொருத்திப் பார்க்கிறார் நூலாசிரியர் மீரா! இரு பாபாவும் ஒன்றே எனும் அவதார சத்தியத்தையும் இரு சம்பவம் வழி ஒரே அனுபவம் தான் என்பதையும் நம்மால் உணர முடிகிறது!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 181 - 184 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


இறைவன் பாபாவிடம் அமிர்தம் வேண்டும் என்று கேட்பது பக்தியின் முதல் நிலை மட்டுமே.. அது மாங்காய் போல்... இதயமே அமிர்தமாய் இனிக்க எங்களுக்கு நல்ல குணம் வேண்டும் சுவாமி என்று

பாபாவிடம் கேட்பதே உயரிய பக்தி.. அதுவே மாம்பழம் போல்...! 

ஆக...! பக்தி கனியக் கனியக் பாபாவிடம் எதையும் கேட்பது மறைந்து... பற்றின்றி ஆனந்தத்தில் திளைப்பது நமக்குள் அரங்கேறுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து:

  1. பெயரில்லா14 மே, 2023 அன்று PM 8:41

    தங்கள் அன்பு மட்டுமே போதும்!! அதுவே ஐஸ்வர்யம்

    பதிலளிநீக்கு