தலைப்பு

புதன், 24 மே, 2023

ஊட்டி கிராமத்தில் பாபா நிகழ்த்திய உள்ளம் நெகிழும் அற்புதம்!

சாயிராம்... பகவான் பாபா அவர்களால் நிகழ்த்த இயலாத அற்புதம்  ஏதாவது உண்டா? வானம் பூமியைத் தொட வேண்டுமா? அண்ட சராசரங்கள் அசையாமல் நிற்க வேண்டுமா? அவரது ஒரு சங்கல்பம் போதுமே. ஆனால் பாபாவின் அற்புதங்கள் அனைத்திலும் மேலானது மக்களின்  மனதை  மாற்றி , சக மனிதர்களுக்கு அவர்களைச் சேவையாற்ற வைப்பதுதான். சேவை மூலம் மானவனை மாதவனாக்குகிறார் நமது மனம் கவர்ந்த பாபா. இது சம்பந்தமாக, ஊட்டி  சமிதி பக்தர்கள் உள்ளத்தில் பாபா ஊட்டிவிட்ட சேவைப் பணி எத்தகையது என்பதை விவரிக்கும் ஒருஅற்புதப் பதிவை ரசித்து இன்புறுவோம்... 


சேவைதனில் திளைப்பவர்களுத்தான் தெரியும் அதன் தித்திப்பு. அதிலும் தன்னலமற்று, தன் உடல் வருத்தி பிறர் மகிழ சேவையாற்றும் சாயி சேவாதள அன்பர்களுக்கு, அந்த சேவையே ஒரு அமிர்த பானமாகும். 


ஊட்டியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய, எளிய கிராமம் மேல் காவட்டி. இந்தக் கிராமத்தை ஊட்டி ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியினர் "தத்து" எடுத்து, அதில் சாயி சேவைகளை நடத்தி பகவானின் அருளாசி பெற முடிவு எடுத்தனர். இந்த முடிவு அவர்கள் எடுத்த முடிவு அல்ல, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் சங்கல்பம் என்பதையும்,  அவர்களைக் கருவியாக்கி பாபா எப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார் என்பதையும், அவர்கள் பிறகுதான்  அறிந்தனர். அவனருளாலே அவன்தாள் வணங்கி, என்பதுபோல!!


மேல்காவட்டி, உதகமண்டலம் 

ஜனவரி 2003ஆம் அன்றுதான் மேல்காவட்டி என்கிற அந்த எழில்மிகுமலைக் கிராமத்தில், இளங்காலையில் நகர சங்கீர்த்தன இன்னிசைனையுடன், பாபாவின் சேவைப் பணியின் வித்துவிதைக்கப்பட்டது. நகர சங்கீர்த்தனம் நலம் பெற முடிவுற்றபின், ஒவ்வொரு இல்லமாக சென்று பகவானின் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதம் வழங்குதல் முடிவுறும் தருணம், சேவாதளத் தொண்டர்கள் ஒரு குறுகிய சந்துக்குள் நுழைந்தனர். அங்கு சிதிலமான ஒரு வீட்டைக் கண்டு உள்ளே நுழைந்தனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.  வறுமையும், கீழ்மையும் கோலோய்ச்சிய அந்த வீட்டில், கடும் குளிருக்கிடையில், வெற்றுத் தரையில்  கிழிந்த துணிமேல்,ஒரு மூதாட்டி படுத்திருந்தார். பதைபதைத்த தொண்டர்களிடம், உடன் வந்த கிராம வாசிகள்,  அந்த மூதாட்டி ஒரு அநாதை , சொற்ப நிலங்களே அவரின் வாழ்வாதாரம் என்றும், நீண்ட வருடங்களாக அவர் இப்படித்தான் இருக்கிறார் என்றும் கூறினர். மேலும் அவர் தமது 30வது வயதில் பக்கவாதம் தாக்கப்பட்டு, கை கால்கள் செயலியக்கம் அற்றுவிட்டதாகவும் கூறினர். 


🌹தீனருக்கு இரங்கிய இதயவாசி பாபா:

கண்டதும் கசிந்துருகிய சாயி தொண்டர்கள், அந்த மூதாட்டியை அந்நிலையிலிருந்து மீட்டு, புனர் வாழ்வளிக்க உறுதி எடுத்தனர். அப்போதே படுக்கையுடன் கூடிய ஒரு கட்டிலும், போர்த்திக்கொள்ள போர்வையும் ஏற்பாடு செய்யப்பட்டது. கந்தையில், கடுங்குளிரில் நடுங்கியபடி படுத்திருந்த அந்த அபலையை, தூக்கி கட்டிலில் படுக்கவைத்து, "நன்றே செய் இன்றே செய், இன்னே செய்" என்ற மூதுரைக்கேற்ப உதவி மகிழ்ந்தனர்.


இறைவன் உவக்க இனி என்ன செய்யவேண்டும் என்று யோசித்த அந்த சாயி அன்பர்கள், அங்கேயே ஒரு திட்டத்தைத் தீட்டி அதை நிறைவேற்றவும் முடிவெடுத்தனர். அதன்படி அந்த மூதாட்டிக்கு உறுதுணையாக அவர் வீட்டிலேயே தினமும் ஒரு சேவா தளத் தொண்டர் உடனிருந்து உதவ வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.இதற்காக ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாதம் 30 நாட்களும் சேவாதளத் தொண்டர்கள் சுழற்சி முறையில் சேவை செய்திட முடிவெடுக்கப்பட்டது. இது உணர்ச்சியால் விளைந்த கணநேர உத்வேகமல்ல, உள்ளிருந்து இயக்கும் தத்பரன் பாபாவின் சங்கல்பல்பம் ஆனதால், தொடர்ந்து இச்சேவை தொய்வின்றி நடந்து வந்தது. வெயிலிலும், மழையிலும், மோசமான பருவ நிலையிலும், தினம் 20 கி.மீ பயணம் செய்து பாபாவின் அன்பை சேவையின் மூலமாக வெளிப்படுத்திய சாயி அன்பர்களின் அயராதப் பணி, அந்த கிராம மக்களின் இதயம் தொட்டது. கிராமப் பஞ்சாயத்துக் கூட்டத்தில் சாயித் தொண்டர்களின் தன்னலமற்ற பெருஞ்சேவை பாராட்டப்பட்டது. இதுவரை பாராமுகமாக இருந்ததற்கு வெட்கப்பட்ட கிராமத்தினர், அந்த மூதாட்டியை பராமரிக்கும் பொறுப்பை தாங்களே ஏற்க முடிவு செய்தனர். முதலில் 30 நபர்கள் அம்மூதாட்டியை பராமரிக்கும் சேவையில் முன்நிற்க, பிறகு அந்த எண்ணிக்கை கூடியது. பகவான் திரு உருவப் படத்தின் முன்னே அவர்களின் பெயர் எழுதிய காகிதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைவிட பாபாவுக்கு பவித்ரமான அர்ச்சனை வேறென்ன இருக்கக்கூடும்.மற்ற நல் முயற்சிகள் தொடர்ந்தன. அவரது இல்லம் புதுப்பிக்கப்பட்டு , சமையல் அறையும் செப்பனிடப்பட்டது. இதனால் சூடான உணவை அங்கேயே தயார் செய்து, குளிருக்கு இதமாக பரிமாறப் பட்டது. மேல் காவட்டியில் சுயநல இருள் மறைந்து, சுடரொளியாய் சாயிசேவை பிரகாசிக்கத் தொடங்கியது.


🌹எழு என்றார் எழுந்தாள்... நட என்றார்  நடந்தாள்:

2004  ஆண்டு பகவானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக , நீலகிரி மாவட்டத்தில் 80 கிராமங்களில் சாயிபஜன்கள் நிகழ்த்த முடிவு செய்து , மேல்கவட்டி கிராமமும் அதில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. பகவானின் கருணைக் கடைக்கண் ஒளி பெற்ற அந்த மூதாட்டின் இல்லத்தில்தான் பஜன் நிகழ்த்தப் பட்டது. 

அனைத்து கிராமவாசிகளும் பங்கு பெற்று, ஆனந்தமாக பஜன் இசைக்க, அறைக்குள்ளே படுத்திருந்த அந்த மூதாட்டியும் அதைக் கேட்டு மெய் மறக்க.. பஜன் நடைபெற்ற நேரம்..


20 ஆண்டுகளாக அசைவற்று அறையில் படுத்திருந்த அந்த பெண்மணி கை கால்களை அசைக்க முடிந்து, யார் உதவியும் இல்லாமலே. மெல்ல எழுந்த அவர் தாம் படுத்திருந்த அறையைத் தாண்டி, பஜன் நடக்கும் பந்தலுக்கு வந்து, கரம் கூப்பி பாபாவின் படத்தை தொழுது, ஆனந்தக் கூத்தாட ... பார்த்தவர்கள் வியந்து, பேச்சடைத்து பாபாவின் பெருங்கருணையைக் கொண்டாடினர். 


கண்ணீர் மல்க அந்த பெண்மணி கூறியதாவது: நேற்று இரவு பாபா என் கனவில் வந்தார்.எனது கை மற்றும் கால்களைத் தடவிக் கொடுத்தார். என் செயலிழந்த அவயங்கள் உயிர் பெற்று இயங்கத் தொடங்கி விட்டன. 


சாயிராம்... விரல் சொடுக்கும் நேரத்தில் பாபா , அந்த பெணமணியின் பிணியை,  துயரை, நீக்கி இருக்க முடியும். ஆனால் சேவையின் முக்கியத்துவத்தை விளக்கவும், ஒற்றுமையின் உயர்வை காண்பிக்கவும், தமது பக்தர்கள் மூலம் இந்த லீலாவிநோத நாடகத்தை பாபா நடத்திக் காட்டினார்.  பாபாவின் வழிமுறைகள் விநோதமானவை, ஆனால் பலனோ அமுதமானதாகும். பாபாவைத் தொழுவோம். பாவனமடைவோம்.


ஆதாரம்: Amazing Transformation and Divine Miracle peace(Heart2Heart The e-journal of radiosai.org MAR 2006)

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு, குஞ்சிதபாதம், நங்கநல்லூர்




1 கருத்து:

  1. ஐயா எனக்கும் அருளாசி நிகழ்வு நடந்தது பகவான் அதிசயம் நிகழ்த்துவது உண்மை

    பதிலளிநீக்கு