தலைப்பு

வெள்ளி, 12 மே, 2023

மதம் மாறுபவர்கள் மற்றும் பிற மத நிந்தனையாளர்கள் பற்றியும்.. குறிப்பாக எம்மதமும் சம்மதம் பற்றிய தங்களின் விளக்கம்?

 

உதாரணத்திற்கு காங்கேயம், சிந்தி, ஹோல்ஸ்டீன் என்பது போலப் பல ஜாதிப் பசுக்கள் உள்ளன.. சில பசுக்கள் வெள்ளையாக உள்ளன, சில சிவப்பாக உள்ளன... வெள்ளையும் கறுப்பும் கலந்ததாகவும் சில பசுக்களைப் பார்க்கிறோம்! எந்த ஜாதி , எந்த நிறமாயினும் எப்பசுவும் தருவது ஒரே போன்ற வெள்ளைப் பால் தானே! அதே போல மதங்கள் பலவாயினும் அவற்றின் போதனையின் சாரம் ஒன்றே தான்! 


ஒரே ரோஜா பூங்கொத்தையே வெவ்வேறு குடுவைகளில் (flower vase) வைப்பது போல ஒரே தெய்வ தத்துவத்தைத் தான் வெவ்வேறு சம்பிரதாயங்களில் வைத்து வெவ்வேறு மதங்கள் தருகின்றன... மலர்களைப் பார்க்காமல் குடுவையைப் பார்ப்பதால் தான் வித்தியாசமே தெரிகிறது! அதனாலேயே விரோதம் விளைகிறது!


யோசித்துப் பார்த்தால் தெய்வ பக்தி, உயிர்க்குல அன்பு , அகம்பாவமின்மை , தியாகம் , சீலமான நடத்தை இவை தானே ஒவ்வொரு மதம் போதிப்பதும்! இதற்கு மாறாக எந்த மதமேனும் சொல்கிறதா?

ஆகவே அதன் சாரத்தை விட்டு சக்கையையே பிடித்துக் கொண்டிருப்பதால் தான் மதத்துக்கு பதில் மத'ம் (குரோதம்) பிடித்துக் கொண்டு உங்களை ஆட்டுகிறது!


அவரவர்க்கு இயல்பாய் வாய்த்த சுயமதத்தில் இல்லாத உண்மையே இல்லை! ஆதலால் எவரும் தாம் பிறந்த மதத்தை விட்டு இன்னொன்றுக்கு மாற வேண்டிய அவசியம் இல்லை! அதே போல் நீங்கள் பிற மதங்களை நிந்தனை (பழக சொல்லிக் குறை கூறுதல்)  செய்யவும் வேண்டாம்! உனக்கு உன் தாய் போல் அவரவர்க்கு அவரவர் தாய் என்று இரு! 


(ஆதாரம் : அறிவு அறுபது | பக்கம் : 213 | ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக