தலைப்பு

வெள்ளி, 19 மே, 2023

சிக்கிம் அரசு, ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் பிறந்தநாளினை வரையறுக்கப்பட்ட விடுமுறையாக அறிவித்துள்ளது!!


ஆண்டுதோறும் நவம்பர் 23 ம் நாள் சாயி பக்தர்களின் சந்தோஷ, சங்கமத் திருநாள். அன்று பர்த்தியில் குவியும் பக்தர்கள் அனைவரும் பரவச நிலையில் பாபாவின் பிறந்த திரு நாளைக் கொண்டாடி மகிழ்வர். பாபா லோக ஜெகத்குரு அல்லவா. பனி மலைகள் தாலாட்டும் குளுமையான சிக்கிம் மாநிலம் இந்த ஆண்டு முதல், தனது பக்தாஞ்சலியாக பாபாவின் பிறந்த நாளை அரசு (விருப்ப) விடுமுறையாக (Restricted Govt. holiday) அறிவித்துள்ளது.


சிக்கிம் பனிபொழியும் இமயத்தில் அமைந்த இந்திய மாநிலமாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம். தனி நாடாக விளங்கிய சிக்கிம், பாதுகாப்பு காரணங்களால் 1975ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. இந்திய மாநிலங்களில் கோவா மட்டும் தான் சிக்கிமை விட சிறிய மாநிலம். சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூட்டானும், தெற்கில் மேற்கு வங்காளம் உள்ளன. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்சங்கா சிக்கிமில் உள்ளது.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம், கடந்த 15-05-2023 சிக்கிம் அரசிடம் இருந்து ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.



"புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்தநாளான நவம்பர் 23ஆம் தேதி வரையறுக்கப்பட்ட விடுமுறை நாளாக அறிவிப்பதில் சிக்கிம் மாநில அரசு மகிழ்ச்சி அடைகிறது" 
என்று இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளை அரசு ஊழியர்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் என விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.


மாநில அரசு விடுமுறைகள் பலவித நோக்கங்களுக்கானவை. பொது விடுமுறை, அரசு விடுமுறை, மத விடுமுறை அல்லது வரையறுக்கப்பட்ட விடுமுறை (Restricted Holiday) மற்றும் பிரத்யேக காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை என பலவகைப்படும்.

வழக்கமாக சனி, ஞாயிறு அரசு விடுமுறை தினங்களாகும். அன்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும். பொது விடுமுறை என்பது, ஆங்கில புத்தாண்டு, குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை தினங்கள். மற்றும் தலைவர்கள் பிறந்த தினங்கள்.


இவைதவிர, ஒவ்வொரு மாநிலத்திற்கும் விருப்ப அடிப்படையிலான வரையறுக்கப்பட்ட விடுமுறை (Restricted holidays) தினங்கள் வழங்கப்படுகிறது. நம் தமிழகத்தை பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களாக வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், போகி, தைப்பூசம், சிவராத்திரி, சாம்பல் புதன், மாசி மகம், அம்பேத்கர் பிறந்த தினம், ஈஸ்டர், ரம்ஜான் முதல் நோன்பு, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், ஓணம், ஹிஜரி புத்தாண்டு, கார்த்திகை, குருநானக் ஜெயந்தி உள்ளிட்ட 32 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   


ஆனால் சிக்கிம் மாநிலத்தை பொருத்தவரை இதுவரை சாத் பூஜை, தொழிலாளர் தினம், டென்சிங் நோர்கே பிறந்தநாள் உள்ளிட்ட ஐந்து தினங்களை மட்டுமே வரையறைக்கப்பட்டு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , இப்போது ஆறாவதாக நம்முடைய இதயயவாசி பகவான் பாபா அவர்களின் பிறந்தநாளையும் இந்தப் பட்டியலில் இணைத்து இருக்கிறார்கள்.


🌻மண்ணிலும் விண்ணிலும் ஒளிர்ந்து உலகிற்கு நல்வழிகாட்டும் பகவான் பாபா என்னும் செங்கதிரவனின் அருள் ஒளி, பனி ஓங்கு இமயத்திலும் உணரப்படுவதில் வியப்பென்ன. பாயந்து வரும் கங்கையாம் அண்ணலின் அன்பிலே அகில உலகும் நீராடிக் களிக்கின்றது. அவருக்கு அஞ்சலி செலுத்த விழைகின்றது.

ஆதாரம்: Voice of Sikkim 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக