தலைப்பு

புதன், 17 மே, 2023

தன் கைகளாலேயே பாபா நதியில் கரைத்த சஞ்ஜெயின் அஸ்தி!! 1 லட்ச ரூபாய்க்கு மீராவை விற்க நினைத்த ஒருவர்!

இப்படி ஒரு கொடுப்பினை எத்தனை பக்தர்களுக்கு கிடைத்தது?? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு நிகழ்ந்த உன்னத சம்பவம் கூடவே ஒரு சோதனை அதனை தாண்டிடும் ஆன்ம சாதனை சுவாரஸ்யமாக இதோ...


அது 1975. டிசம்பர் மாதம். லக்நவ்'விலிருந்து உத்திர பிரதேச பரேலீ'க்கு ஒரு ரயிலில் சென்று கொண்டிருக்கின்றனர் இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் - மீரா! ரயில் 'ரோஜா' என்ற நிலையத்தில் நிற்கிறது.. அங்கே குண்டூசி விழுந்தாலும் டமார் என்று சப்தம் கேட்கும் அளவிற்கு யாருமே இல்லை.. ஒரே நிசப்தம்! ரயில் தனது சக்கரங்களில் சங்கிலிகளை பூட்டியது போல் அசையாமல் நிற்கிறது! பயணிகள் எண்ணிக்கையும் ரயிலில் குறைவாகவே காட்சி அளிக்கிறது! பிளாட்ஃபாரத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு கூலித் தொழிலாளியிடம் இருவரும் விசாரிக்க... வெடிகுண்டு வீசுவது போல் ஒரு திடுக்கிடும் சம்பவத்தை அவர் வீசுகிறார்... தற்போது பயங்கர திருடனான கங்கு தேலீயை பிடிக்கும் வேட்டையில் காவல் துறை இறங்கி இருக்கிறது.. ஆங்காங்கே துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருக்கிறது.. நீங்கள் வெளியே வந்தால் உங்களையும் தோட்டாக்கள் துளைக்கலாம் என்று அந்த கூலி சொல்கிற போதே தூரத்தில் துப்பாக்கி சப்தம் கேட்க ஆரம்பிக்கிறது... பயணிகள் பாதி பேர் பயந்து ஓடிவிட்டனர்.. 


சிலர் நிலையத்தின் உள்ளே பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த கூலி விவரித்துவிட்டு சென்றுவிடுகிறார்! அடுத்த நிமிடம் என்னாகும்? ஏதாகும்? ஒன்றும் புரியாமல் பாபாவின் "ஓம் ஸ்ரீ சாயி ராம்" மந்திரத்தையே மௌனமாக உச்சரிக்கிறார்கள்! திடீரென எதிர்பாராத ஓர் சம்பவம் நிகழ.. திக் என்று இருக்கிறது இருவருக்கும்...

காவல்துறையினர் யாரும் ரயிலுக்குள் இல்லை... என்ன செய்வது என்றே இருவருக்கும் தெரியவில்லை... இருவரின் ரயில் கோச்சில் ஒரு சிலபேர் ஏறி... வேண்டுமென்றே மீரா சீட் அருகே அமர்ந்து கொண்டு மீராவை வேண்டுமென்றே இடிப்பது போன்ற தேவையற்ற சேஷ்டைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்! சஞ்ஜெய்க்கும் அப்படியே நிகழ்கிறது.. இழிவான வார்த்தைகள் சஞ்ஜெயை நோக்கி வீசப்படுகின்றன! சஞ்ஜெய் ஏதாவது சொல்லப் போக வெளி சூழ்நிலை எனும் எரிகிற நெருப்பில் உள்ளிருந்து வேறு எண்ணெய் ஊற்ற வேண்டுமா என்றவாறு அவர் குழம்புகிறார்! இந்த ரயில் இப்போதே புறப்படுமா? என்கிற உத்தேசமில்லை என்று கூலிப் பெரியவர்  சொல்லிவிட்ட பிறகு என்ன செய்வது? இவர்களை எப்படி கிளப்புவதோ? ஒவ்வொருவரும் தடிமாடு போல் முரட்டுத்தனமாய் உடல் வலுவோடு , ராட்சச மனதோடு அமர்ந்திருக்கிறார்கள்... மீரா ஜன்னலோரம் அமர... அருகே அமர்ந்த ஒரு விஷமி மீராவை மேலும் நெருங்கிக் கிள்ள... உலையில் உயிரோடு குதிக்கும் மீனாகிறது மீரா மனம்! கொஞ்சம் சகித்துக் கொள் என்றவாறு சஞ்ஜெய் சைகை செய்கிறார்! ஏதாவது இருவரும் சொன்னால் இருவருக்கும் மேலும் அதிகக் கொடுமை நடக்கலாம் என்கிற உணர்வே அதற்குக் காரணம்! 


உடனே பாபா சொல்லிய "நான் இருக்க பயமேன்?" என்கிற வார்த்தை நினைவுக்கு வர... சாயி நாம ஜபத்தை மீரா கண்மூடி ஆரம்பிக்க... திடீரென ஒரு குரல்.. ஜன்னலின் வெளியே இருந்து கேட்கிறது! அந்தக் குரல் மிகவும் தெளிவான குரல்... "உங்கள் சால்வைகளை அகற்றுங்கள்! எல்லாம் சரியாகிவிடும்!" என்கிற அந்தக் குரல்... எங்கேயோ கேட்ட குரல்! அது யாரின் குரல் என்று அவருக்குப் புரிகிறது! உடனே மீரா தனது சால்வையை சடார் என்று கழற்ற... அதில் குறிப்பாக மீரா தனது கழுத்தில் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி புகைப்படம் பொருந்திய டாக்கெட் வெளியே தெரிகிறது... அதைப் பார்த்த அந்த விஷமிகள் "அரே ! சாயிபாபா! சாயிபாபா! எழுந்திருங்கள்! இங்கிருந்து போய்விடுவோம்! இல்லை என்றால் நமக்கு சாவு நிச்சயம்!" என்று மிரண்டு போய் பதறிக் கிளம்புகிறார்கள்! அந்த விஷமிகளில் ஒருவனாகத் தான் கங்கூ தேலீயும் இருந்தான் என்பதை பிற்பாடு இருவரும் அறிகிறார்கள்! அந்த விஷமிகள் கிளம்பிய உடன் நிலையத்திற்குள் பதுங்கி இருந்த பயணிகள் ரயிலுக்குள் சேர்ந்துவிட ... "சத்யசாயி பாபா கி ஜெய்!" என்ற பொருளை உணர்த்தியடி சப்தமிட்டு ரயில் கிளம்புகிறது!


 ரகுநாத் மந்திர் - மவுன்ட் அபு, ராஜஸ்தான்

அது ஜனவரி 12 , 1986. அது மவுன்ட் அபு! ராஜஸ்தான் ரகுநாத் மந்திர் அதில் தனது பாபா சேவைக்கே அர்ப்பணித்த தனது  உடலை இறுதியாக துறக்கிறார் சுவாமிஜி சஞ்ஜெயானந்த்!


தனது சொந்த வீட்டைத் துறந்தவர், வேலையை துறந்தவர், தனது திறமையை கூட பணமாக்க நினைக்கும் மனித வியாபார மனத்தைத் துறந்தவர், தற்காலிக பொய்சுகம் ஆயினும் இல்லற அர்ப்ப சுகத்தை துறந்தவர்... சாயி பக்தர்களாலேயே கூட எத்தனையோ அவமானப்பட்டும் கோபத்தைத் துறந்தவர், தனக்காக எதையும் கேட்காமல் சுவாமிக்கு சகலத்தையும் துறந்தவர்... இப்போது உடலையும் துறக்கிறார்! ஆக மீராவின் புற வாழ்க்கை சூனியமானது! 

பிறகு அதே ஆண்டு ஜனவரி 12க்கு பிறகு... சஞ்ஜெயை  எரியூட்டிய பிறகு அந்த அஸ்தியை என்ன செய்ய வேண்டும் என்று ஜைன மதமான மீரா அறிந்திருக்கவில்லை...! திடீரென மீரா வைத்திருந்த அந்த அஸ்தி கலசம் அப்படியே மறைந்து போகிறது...! பிறகு சாயி பக்தர் ஜாடவ் அவர்கள் விளக்கியதும் அந்த அஸ்தி என்ன ஆனது என்று அவர் சொல்லிய பிறகே பரவசத்தோடு மீரா புரிந்து கொள்கிறார்! 

அது யாதெனில்:- ஒரு நாள் அந்த ஜாடவ் அவர்களுக்கு கனவு வருகிறது.. கனவில் பாபா தோன்றுகிறார்! ஒரு மரத்தடி நிழலில் இறைவன் சத்ய சாயி நிற்கு கொண்டிருக்க... சைக்கிளில் செல்லும் ஜாடவ் அவர்கள் நிறுத்தி , 


"நான் ஒரு இடத்திற்கு போக வேண்டும்... நீயும் என்னோடு வா!" என்கிறார் பாபா! ஆகவே இருவரும் நடக்கிறார்கள்! திடீரென ஒரு இடத்தில் நின்றபடி... தனது பையில் இருந்த மண் போன்றதை கைகளில் அள்ளிக் கொண்டு‌... "இனி போகலாம் வா!" என்கிறார்... பிறகு கொஞ்ச தூரத்தில் கங்கை நதிக்கரை வருகிறது... அதில் பாபா மண் போன்ற வஸ்துவை அந்த கங்கையோடு கலந்துவிட்டு...

"குமார் என்னிடம் வந்துவிட்டார்! இந்த பூமியில் அவரின் கடைசி யாத்திரை பூரணமாயிற்று... அவர் மனைவி ஜைன மதத்தினர்... இந்த முறைகள் அவருக்குத் தெரியாது! அதனால் குமார் அஸ்தியை நான் கொண்டு வந்து இந்த நதியில் கலந்துவிட்டேன்! சரி இனி சுவாமி போகிறேன்! சாயிபாபா குமார் அஸ்தியை நதியில் கலந்துவிட்டார் என்று நீ குமார் மனைவிக்கு இந்த விஷயத்தை சொல்லிவிடு!" என்று பாபா மறைந்துவிடுகிறார்! கனவும் கலைந்துவிடுகிறது! 

பிறகு சன்யாச முறைகள் படி அவருக்கு சமஸ்காரமும் செய்யப்படுகிறது! 


பிறகு மவுன்ட் அபுவிலிருந்து அபு ரோட்டிற்கு மீரா வருகிறார்! திரு/ திருமதி பரிஹார் வீட்டில் தங்குகிறார்! அவர்கள் சாயி பக்தர்கள்! பனியன் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையும் வைத்திருக்கிறார்கள்! அந்த தொழிற்சாலையின் முதலாளி திரிவேதி ஒரு நாள் மீராவை சாப்பாட்டிற்கு அழைக்க... அப்போது "மாதாஜி எங்கே இனி தங்க இருக்கிறீர்கள்?" என்று கேட்க... 

"பாபா எங்கே இருக்க வைப்பாரோ அங்கே இருப்பேன்! என்னை பாபாவே கவனித்துக் கொள்வார்!" என்று உறுதியாகப் பேசுகிறார் மீரா!

உடனே திரிவேதி அன்பான வார்த்தையில்  "மாதாஜி.. சிரோஹில் ஒரு மஹிளா ஆசிரமம் இருக்கிறது... அங்கே உங்களுக்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறேன்! அது உங்களுக்கு மிகமிக சவுகரியமாக இருக்கும் !" என்கிறார்..‌ 

அதற்கு "பரிஹார்ஜி போன்றவர்களுடைய அபிப்ராயங்களையும் கேட்டு விட்டு முடிவு செய்கிறேன்!" என்று மீரா சொல்லியதற்கு திரிவேதிக்கு கோபம் உடைக்கப்பட்ட கோலிசோடா போல் பொங்கிக் கொண்டு வருகிறது "அவர்களை ஏன் கேட்க வேண்டும்...? அவர்களுக்கு உங்கள் மேல் அதிகாரமா? சுவாமிஜியோடு (சஞ்ஜெய்) ரொம்ப காலம் இருந்திருக்கிறேன்.. ஆகவே சொல்கிறேன் என்னோடு வாருங்கள்!" என்று விடாப்பிடியாகப் பேசுகிறார்! 

சொல்லிவிட்டு ஒருவழியாக அவர் சென்றவுடன்.. நடந்ததை பரிஹார்ஜி மனைவியுடன் தெரிவிக்கிறார் மீரா... பரிஹார்ஜி அப்படி ஒரு மகிளா ஆசிரமம் இருக்கிறதா? என்று தீர விசாரிக்கிறார்... ஆனால் ஒரே ஷாக்! அப்படி ஒரு ஆசிரமமே இல்லை என்று கேள்விப்படுகிறார்! மீராவுக்கு ஒரே குழப்பம்... பாபாவிடமே  கேட்போம் என்று சஞ்ஜெய் முன்பே கற்றுக் கொடுத்த ஆழ்நிலை தியானத்தில் ஒரு அதிகாலைப் பொழுதில் மீரா அமர... பாபா மீராவோடு தியானத்தில் பேசுகிறார் 

"நீ அவனை நம்பாதே! அவன் உன்னை வேறொருவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசிவிட்டான்! இப்போதைக்கு பரிஹார் வீட்டிலேயே இரு! அதுதான் உனக்கு பாதுகாப்பு.. பிறகு எங்கு செல்ல வேண்டும் என நானே வழிகாட்டுகிறேன்!" என்கிறார் பாபா!

மீராவுக்கு தெளிவு பிறக்கிறது.. அடுத்த நாள் அந்தத் திருட்டுவேதி என்கிற திரிவேதி ஒரு டாக்ஸியில் பரிஹார் வீட்டிற்கு  முன் வந்து மீரா வரவில்லை என்பதால் ஆ ஊ என்று கத்துகிறான்! இல்லாத நடிப்பெல்லாம் காட்டுகிறான்... அந்த தொழிற்சாலையிலேயே யாருக்கும் தெரியாமல் பரிஹார் குடும்பமே மீராவை பொக்கிஷமாக பதுக்கி வைக்கிறது! அவனும் செய்வதறியாமல் கிளம்பிவிடுகிறான்! பிறகு பரிஹார்ஜி மீராவின் மாமியார் வீடான பம்பாய்க்கு அனுப்பி வைக்கிறார்! 

பிறகு பாபா வழிகாட்ட "நான் உன் தாய் தந்தை.. ஷிர்டி பாபா உன் குரு!" என்று பாபா சொல்லி ஷிர்டிக்கு அனுப்புகிறார்... அங்கே சிலகாலம் மீரா தங்க... பிறகு சிம்லா - ஷிர்டி சாயி மந்திர் -- இறுதியாக மீரா வந்து சேர்ந்த இடம் தாய்மடியான, துவாபர யுகத்தின் கோகுலமான புட்டபர்த்தி என்கிற யுகப் புண்ணிய தலம்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 233 - 240 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


பாபாவே நமக்கு பார்வையும் ... நம் பாபாவே நமக்கு பாதையும்.. அதில் பாபாவே நமது வழிகாட்டியும்... இறுதியில் பாபாவே நமது இலக்கும்! கடலிலிருந்து பிரிந்து மேகமாவது போல் நமது பிறப்பு பிறகு மேகத்திலிருந்து மீண்டும் கடலிலேயே கலப்பது போல் நமது இறப்பு! பிறப்பு இறப்பு என்பது பாபாவின் லீலை.. நம்மை அவரோடு கலந்து போகச் செய்வதே பாபாவின் தலையாய வேலை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக