தலைப்பு

செவ்வாய், 2 மே, 2023

ரிஷிகேஷ் காட்டில் மாட்டிக் கொண்ட பக்தருக்கு வழிகாட்ட சூலத்தோடு தோன்றிய ஷிர்டி பாபா!!

ரிஷிகேஷ் வாசத்தின் போது தனது பக்தருக்கு எவ்வகையில் எல்லாம் பாபா அருள்பாலித்தார், காப்பாற்றினார், உணவை பெருக்கினார் எனும் ஒட்டுமொத்த அதிசய சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


அது 1972. மே மாதம். ரிஷிகேஷில் தங்கி இருக்கின்றனர் இல்லறத் துறவிகள் மீராவும் சஞ்ஜெயும்!

அவர்கள் தங்கி இருக்கிற ஆசிரமத்தின் பெயர் "வேத நிகேதன் தாம்".. அது சுவாமிஜி முனீஷ்வரானந்தா நிர்வகித்து வரும் ஆசிரமம்! அங்கே இருவரும் தங்கிய படி காலை மாலை பஜனை முதல் சிறிய பெரிய ஆசிரம சேவைகளை செய்து வருகின்றனர்! சுவாமிஜி முனீஷ்வரானந்தாவே மீனா என்கிற பூர்வீகப் பெயரை மீரா என்று மாற்றியது! மீராவின் ஸ்ரீ சத்யசாயி கிருஷ்ண பக்திக்கு தகுந்த பெயரே அது! 


ஒரு நாள் சுவாமிஜி இருவரையும் அழைத்து "சஞ்ஜெய் ராஜா ! நாளை குரு நாராயணானந்தா ஜி தனது 500 சீடர்களோடு வருகிறார்.. அவர்களுக்கு உணவு சமைத்து பரிமாற வேண்டும்.. மீரா நீயும் உதவு.. சில பெண்மணிகள் உனக்கு இதில் உதவுவார்கள்!" என்கிறார்...! "உங்கள் ஆசியோடு ஆகட்டும்!" என்கிறார் சஞ்ஜெய்! 

அது வெய்யில் காலம்.. மழை மேகமின்றி வெறும் அப்பிய வெய்யிலில் முகம் வெளுத்த பிழை மேகமாய் வானில் வெண்மேகம் மிதக்கிறது...! வானத்திலிருந்து சூட்டுத் தணல் குதிக்கிறது! அந்த நாள் மாலை "எத்தனை நபருக்கு உணவு தயாரிக்க வேண்டும்!" என்று மீரா கேட்க... "சீடர்கள்,  பக்தர்களோடு சேர்த்து 2000 பேர் வருவார்கள்! இப்போதே ஆரம்பித்து விடு!" என்று சுவாமிஜி சொல்லிவிட.. சமையல் வேலை தயாராகிறது... சட்டென மின்சாரம் வேறு சென்றுவிடுகிறது‌! உப்பா? சீனியா? வெளிச்சம் இருந்தால் தானே கண்ணுக்கு தெரியும்! சாம்பாரில் கரைய வேண்டிய புளி மீராவின் வயிற்றில் கரைகிறது!  இந்த இக்கட்டான இருள் சூழலில் அல்வா வேறு செய்ய வேண்டும்.. ஆனால் ரவை குறைவாகவே இருக்கிறது... 2000 பேருக்கல்ல 200 பேருக்குக் கூட வராது! உடனே சுவாமிஜியிடம் சூழ்நிலையை விளக்க... "சஞ்ஜெய் ராஜா! நீங்கள் பாபாவின் பக்தர் ஆயிற்றே! நீங்கள் அவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்! வேறு வழி எனக்கு தோன்றவில்லை!" என்று சொல்லி கையைப் பிசைந்தபடி அவர் நகர்கிறார்! 


சஞ்ஜெய்யோ "பாபா நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்! வேறு வழியில்லை...!" என்று வேண்டிய அடுத்த நொடி படாரென பிரார்த்தனைக்கு பலனாய் மின்சாரம் வந்துவிடுகிறது! ஆனால் அந்த ஆசிரமம் மட்டுமே மின்சாரத்தால் ஒளிர்கிறது! சுற்றி உள்ள ரிஷிகேஷ் பகுதிகளில் அந்த சமயம் இருளே நீள்கிறது... இதனை கவனித்து சுவாமிஜியிடம் தெரிவித்த போதும் கூட "சாயி பாபா தயவால் நம் ஆசிரமத்திற்கு மட்டுமே லைட் இருக்கிறது!" என அவரும் ஆமோதிக்கிறார்! பிறகு சுறுசுறுப்பாக வேலையும் தொடர... இருக்கிற ரவையை வைத்து அல்வாவும் தயாராக...  அதிகாலை 5 மணி வரை சமையல்... பிறகு குருமார்கள் உபசரிப்பு - விழா - பூஜை- பஜனை என 2000 பேர் கலந்து கொள்ள.. பிறகு சாப்பாடு வேளை... பாபாவிடம் வேண்டி அல்வாவும் பரிமாறப்பட... அனைவருக்கும் போக இரண்டு நாள் வரை அது குறையாமல் வளர்ந்ததை எண்ணி ஆசிரமமே பாபாவின் மகிமையை எண்ணி வியப்பின் முகட்டிற்கேப் போனது!

அது 1974 ஆம் ஆண்டு... அதே ரிஷிகேஷ் .. அதே வேத நிகேதன் தாம் ஆசிரமம்.. சுவாமிஜி சஞ்ஜெயை லென்ஸ் டவுனுக்கு அழைத்துச் செல்கிறார்! மீரா அந்த ரிஷிகேஷில் சஞ்ஜெயை விட்டு தனியாக இருக்க அஞ்சுகிறார்.. அவரை சமாதானப்படுத்தியபடி சஞ்ஜெய் கிளம்ப... மாலை வருவேன் என்று சொல்லி அவர் சென்றது நள்ளிரவு 12 மணி ஆகிவிட...அப்போது தான் உயிரே வருகிறது மீராவுக்கு... ஏன் தாமதம் என்ற கேள்விக்கு.. நாளை பாபா இங்கே வரப்போகிறார்... மீதமுள்ள விஷயத்தை நாளை கூறுகிறேன் என்று உறங்கப் போகிறார் சஞ்ஜெய்!


அதிகாலை மீராவின் பாபா வரவுக்காக ஏங்கிய படி விடிகிறது வானம்... எப்போது வருவார்? எப்படி வருவார்? எந்த ரூபத்தில் வருவார்? கேள்விகள் ஆயிரம் மீராவை வட்டமிட... கோடிப் பட்டாம்பூச்சிகள் ரெக்கையே  இன்றி மீரா மனதில் ஊற...அது மதியம் ஆகப் போகிறது.. மீரா - சஞ்ஜெய் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிவன் படத்திலிருந்து விபூதி வர ஆரம்பிக்கிறது... எங்கேயும் இதுவரை நுகராத ஒரு தெய்வீக வாசனை... அகில் போல் ஜவ்வாது போல் குங்குலியம் போல்... வார்த்தையால் வர்ணிக்க முடியாத அந்த வாசனை பரவ...யோசனையில் வாசனை நிரம்பியபடி... பாபா வரவை உணர்கிறார்கள் இருவரும்.. பிறகு நேற்றைய நிகழ்வை ஆச்சர்யத்தோடு விவரிக்கிறார் சஞ்ஜெய்!


சுவாமிஜியுடன் சென்ற சஞ்ஜெய்.. பிறகு அவரை ஒரு இடத்தில் விட்டுவிட்டு தனியாக ஆசிரமம் நோக்கி நகர... இரவு 7 மணிக்கு ஆரம்பித்த நடை 10 மணி ஆகியும் நீண்டு கொண்டிருக்க.. கங்கைக் கரையில் தோணி இருக்கிறது ஆள் இல்லை! படகில் செல்வதே தூரக் குறைவு! நடந்தால் மிகவும் சுற்று! வேறு வழியின்றி நடக்கிறார் சஞ்ஜெய்! வழி மாறிவிடுகிறார்! ஒரே பனிப்புகை சூழ்ந்திருக்கிறது! 

எங்கிருந்தோ உடனே கைக் கோலின் சப்தமும் கொலுசு சப்தமும் கேட்க.. தூரத்திலிருந்து மிக உயரமாய் ஒரு உருவம் நகர்ந்து வர.... அருகே அருகே வருகிற போது அவர் தன் கைகளில் சூலம் வைத்திருப்பது சஞ்ஜெய் கண்களுக்குத் தெரிகிறது...

"என்ன மகனே பயந்துவிட்டாயா?" என்று கேட்கிறார் அவர்! ஆம் என்று சஞ்ஜெய் தெரிவிக்க...

"என்னோடு வா! உனக்கு வழிகாட்டவே வந்திருக்கிறேன்!" என்று அவர் பின்னால் நடக்கச் சொல்கிறார்! "நீ தான் பாடுவாயே! பஜனைப் பாடல் பாடிக் கொண்டே வா! தூரம் தெரியாது!" என்று அந்த சூலம் ஏந்தியவர் தெரிவிக்க.. சஞ்ஜெயும் வியந்தபடி பாடிக் கொண்டே பின்தொடர்கிறார்!  இடம் அருகே தென்படவும்... நான் நாளை வருகிறேன்.. அதோ வெளிச்சம் தெரிகிறதே! நீ உன் இருப்பிடம் செல்! நீ செல்லும் வரை உன்னையே பார்த்துக் கொண்டே இருப்பேன்! பிறகு நான் செல்கிறேன்!" என்கிறார் அவர்! சஞ்ஜெயும் முன்செல்ல... முதலில் யார் அந்த சன்யாசி? என்ற யோசித்த அவர்.. "வழிகாட்டவே வந்திருக்கிறேன்!" என்று அவர் சொல்லிய வார்த்தை மனதில் ரீங்கரிக்க..  பாபாவே என்று உணர்ந்து கொள்கிறார் சஞ்ஜெய்!

"நாளை நான் வருகிறேன்!" என்று கூறியபடியே வாசனையோடு உள் நுழைந்து "பக்தர்களுக்காக நான் எங்கேயும் ஓடி வருவேன்!" என்பதை நிரூபிக்கிறார் பாபா!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 149 - 155 | ஆசிரியர் : சன்யாசினி சஞ்ஜெயானந்த்) 


இரு பாபாவும் ஒன்றே! என்பதை நேரடியாக அனுபவித்தவர் சஞ்ஜெய் சுவாமிஜி என்பதால் அவருக்கு ஷிர்டி பாபா அருள்புரிந்தாலும் புட்டபர்த்தி பாபா அருள் புரிந்தாலும் ஒரே வித பரவசத்தோடே இரண்டையும் ஒரே இதயத்தில் ஏற்கிறவர்! 

பெருமாளை வழிபடுகிற ஹரி பக்தர்கள் ஸ்ரீராமர் அருளினாலும் ஸ்ரீகிருஷ்ணர் அருளினாலும் ஒரேவிதமாகவே உணர்வர்..அது போலவே அதே அவதாரத் தொடர்ச்சியான பாபாவை உண்மையாக உணர்ந்து வழிபடுகிறவர்களும் அவ்வாறே இன்றளவும் உணர்கின்றனர்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக