எவ்வாறு துவாபர யுகத்தில் நிகழ்ந்த ஒரு பரவச நிகழ்வு கலி யுகத்திலும் தொடர்கிறது...? எவ்வகையில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் என்பதை உணர்த்தும் "சம்பவாமி யுகே யுகே!" பதிவு சுவாரஸ்யமாக இதோ...
அது துவாபர யுகம்! ஸ்ரீ தேவகி தேவியை அண்ணன் கம்சனே அவளின் வருங்கால குழந்தைகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று அசரீரி சொன்னதைக் கேட்டு சிறையில் அடைக்கிறான்! அந்தக் கொடுஞ் சிறையில் ஒரு நாள் நள்ளிரவு எட்டாவது கர்ப்பம் தரித்திருந்த தேவகிக்கு ஒரு கனவு ஏற்படுகிறது!
"அம்மா! ஸ்ரீமன் நாராயணனே வெகு விரைவில் உனக்கு மகனாக அவதரிக்கப் போகிறார்! உலக நலனுக்காக நிகழப் போகிற அவதாரம் இது! உனக்கு இனி எந்தவித வருத்தமே வரப்போவதில்லை! நீ இனி மேல் கம்சனின் அச்சுறுத்தலுக்கு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை... ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம் பூமிக்கே வளமையை கொண்டு வந்து சேர்க்கும்! யது குலமே குதூகலப்படும்! ஆகையால் உனது கர்ப்பம் பாதுகாப்பாக அமையட்டும்!" என்று கனவில் ஸ்ரீ பிரம்ம தேவனே தோன்றி அருள் மொழி கூறி ஆசீர்வதிக்கிறார்!
அவரின் கனவு மொழிக்கிணங்க ஸ்ரீமன் நாராயணர் குழந்தையாக அவதரித்து அந்தக் கணமே தான் யார் எனும் ரகசியம் அவிழ்த்து தேவகி-வசுதேவருக்கு தன் ஒளிமய சுயரூப தரிசனம் அளித்து "இனி நீங்கள் வருந்த வேண்டிய அவசியமே இல்லை! உங்கள் துன்பங்களை நீக்க... நீங்கள் என் மேல் வைத்த பக்திக்குப் பரிசாக, நானே உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறேன்! இனி வருந்தாமல் எப்படி எல்லாம் மாற்றத்தை இந்த பூமி காணப் போகிறது என்பதை கவனித்து வாருங்கள்! ஈரேழு பதினான்கு உலகத்தில் உள்ள எவராலும் என்னை எதிர்க்கவோ, எனக்கு எந்த தீங்கையும் விளைவிக்கவோ இயலாது ! எனது இந்த அவதாரம் உங்களுக்கு முக்தி அளிக்கும்!" என்கிறார்!
தேவகி ஸ்ரீகிருஷ்ணரை அவதரிக்கச் செய்தபோது இயற்கையே குதூகலப்படுகிறது! நதிகள் பேரலைகளால் ஆர்ப்பரித்தன... மேகங்கள் மிக மெல்லிய ஓசையில் தனது மகிழ்ச்சியைப் பூமியோடு பரிமாறிக் கொண்டன... எண்திசையிலும் பேரன்பின் அதிர்வலைகள் சூழ்ந்தன... தென்றல் நறுமணம் பேசியது... பூந்தோட்டங்கள் பூங்காற்றை வீசியது... காலம் கனிந்தப்பட்ட தோட்டத்தில் காய்களும் தானாக கனிந்தன... பறவைகள் மெல்லிசையை ரீங்கரித்தன... தேவதைகள் பூமிக்குப் பூமாரி தூவினார்கள்! கந்தர்வர்கள் கானம் இசைத்து நடமாடினார்கள்... நடனம் ஆடினார்கள்! தெய்வீக தாளங்களின் லய ஓசை இதயங்களில் நிரம்பின...!
(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் - 10.107)
இதே போல் ஸ்ரீ சத்ய சாயி அவதரிக்கையில் இதே வித பரவச சம்பவங்கள் ஏற்பட்டன.. கொண்டம ராஜுவின் குருவான ஸ்ரீவெங்காவதூதர் சமாதி ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு எட்டாவது முறையாக ஸ்ரீ ஈஸ்வராம்பா கர்ப்பம் தரித்த அந்த நிறைமாத சமயத்தில் ஸ்ரீ வெங்காவதூதர் கொண்டமரின் (ஸ்ரீ ஈஸ்வராம்பா மாமனார்) கனவில் தோன்றி "கொண்டமா! கடவுள் உன் வீட்டில் அவதரிக்கப் போகிறார்! ஆகவே விழிப்புணர்வோடு இரு! மிக கவனமாக இரு!" என்கிறார்
சிறிது நாட்களுக்குப் பிறகு லக்ஷ்மம்மா (ஸ்ரீ ஈஸ்வராம்பாவின் மாமியார்) கனவில் ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் தோன்றி "எல்லாம் என்னுடைய சங்கல்பப்படி நிகழ்கிறது! எது நிகழ்ந்தாலும் பயம் கொள்ளாதே! அமைதியாக இரு!" என்கிறார்!
அந்த கர்ப்ப காலத்தில் ஸ்ரீ ஈஸ்வராம்பாவின் கணவரான பெத்த வெங்கப்ப ராஜு படுக்கை அறைக்கு பக்கத்தில் வாத்தியக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கிற அந்த சிறிய அறையில் இருந்து வித வித தாள சப்தங்கள், நூதன மெல்லிசை போன்றவை யார் வாசிக்காமலும் தானே இசை எழுப்புவதை அவரால் கேட்க முடிகிறது!
தேவதைகளா? கந்தர்வர்களா? கின்னரர்களா? யார் அப்படி இசை எழுப்புவது என்று பல நாள் ஆச்சர்யப்பட்டிருக்கிறார் பெத்த வெங்கப்பர்! இந்தப் பரவசப் பொழுதுகளைத் தொடர்ந்து பெத்த வெங்கப்பர் புக்கப்பட்டிணத்தில் உள்ள ஒரு ஜோதிடரை சந்தித்து தான் அனுபவித்த அந்த இசை அதிசயத்தைப் பற்றி விசாரித்து தெளிவு பெறப் போகிறார்.. அப்போது அந்த ஜோதிடர் கேட்ட கேள்வி "அந்த இசை எப்படிப் பட்டதாக இருந்தது?" என்று... "மனதை லயிக்கச் செய்கிறது!" என்கிறார் ஸ்ரீ பெத்த வெங்கப்பர்!
தீவிரமாக யோசனையில் ஆழ்ந்த ஜோதிடர் "யாராவது கர்ப்பிணிப் பெண் உங்கள் வீட்டில் இருக்கிறார்களா?" என்று கேட்கிறார்!
அதற்குத் தன் மனைவி (ஸ்ரீ ஈஸ்வராம்பா) கர்ப்பம் தரித்திருப்பதை அவரிடம் தெரிவிக்க...
"ஆ... நாராயணா..!தேவதைகள் அந்த இசையை எழுப்புகிறார்கள் , கர்ப்பத்தில் இருக்கும் அந்தக் குழந்தையை மகிழ்விக்கவே அது நிகழ்கிறது! ஏ... வெங்கப்பா! அந்தக் குழந்தை சாதாரண குழந்தையே அல்ல.. நீ புரிந்து கொள்!" என்கிறார் பரவசம் கொப்பளிக்க அந்த ஜோதிடர்!
எட்டாவது முறையாக ஸ்ரீ தேவகி கர்ப்பம் தரித்த போதும் , எட்டாவது முறையாக ஸ்ரீ ஈஸ்வராம்பா கர்ப்பம் தரித்திருந்த போதும் எழுந்த தெய்வீகக் கனவும், பரவச நிகழ்வும் ஒன்றாகவே திகழ்ந்து ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்யசாயி என்பதை உள்ளத்தில் உறுதி செய்கிறது !
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 16-18 | Author : Dr.J.Suman Babu)
யுகம் வேறு ஆயினும் முகம் ஒன்றே...! ஜகம் வேறு ஆயினும் அகம் ஒன்றே...! இறைவன் தனது பரிபூர்ண இறை குணத்தோடே அப்போதும் இப்போதும் அவதரித்திருக்கிறார்! பெரும்பான்மையாக வெளிப்புற சம்ஹாரத்தை துவாபர யுகத்திலும், உள்முக சம்ஹாரத்தை (அகந்தை அழிப்பு - அறியாமை அழிப்பு) கலியுகத்திலும் இறைவன் அவதரித்து நடத்தி வருகிறார்!
மலை பிரதேசத்தில் குளிரும்... பாலைப் பிரதேசத்தில் கொதிக்கும்... ஆக கம்பளியோ காட்டன் உடைகளோ சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடியே... அது போல் எந்தெந்த யுகத்தில் என்னென்ன வகை தர்மமோ அதை மீட்டெடுக்க.. என்ன வழியில் அதை மீட்டெடுக்கும் விதியோ அதன் வழியே மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக