தலைப்பு

வெள்ளி, 2 ஜூன், 2023

🇲🇾 மலேசியா சாயி கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்!

தினசரி சாயி அருளமுதமாய் ஒலிக்கிற வசீகரக் குரல்... தெய்வீக ஓவியம் மற்றும் நூதன காணொளி சேவை ஆற்றுகிற சோர்வறியா விரல், ஸ்ரீ சத்ய சாயி யுகத் தூண், பாலவிகாஸ் மற்றும் இதர பள்ளி பிள்ளைகளுக்கு ஆன்மீக நெறி காட்டும் வியப்பு மிகு இதயம்... பணிவில் பண்பில் பிள்ளை மனத்தில் சுவாமியின் பிள்ளையான மலேஷியா வாழ் சாயி கிருஷ்ணன் அவர்களது மெய் சிலிர்க்க வைக்கும் சாயி அனுபவங்கள் இதோ...








என் பெயர் சாயி கிருஷ்ணன். மலேசியாவில், ஈப்போ நகரில் வசிக்கிறேன். எனக்கு இந்தப் பதிவைச் செய்யத் தோன்றியது. சாயி தூண்டுகிறார் என்பதே என் அனுபவம். இது ஒரு சாதாரண அனுபவம் என்றாலும், எனக்கு “சாயி “ கடவுள்தான் என்பதை அனுபவப்பூர்வமாக  அவரே காட்டிள்ளார் என்று கருதுகிறேன். இதோ அந்த அனுபவங்கள்... 


1976ம் ஆண்டு பினாங்கில் உள்ள ஆசிரியர் கல்லூரியில் படிக்கும்போது, “கடவுள் யார்?“ என்ற கேள்வி என்னை ஆக்கிரமித்தது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை! பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று பயந்தேன்.


ஜூன் மாதம் 1976. வயது 22. ஒரு நாள் பினாங்கு வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் அருகில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது, “கோவிந்த ஹரே, கோபால ஹரே” என்ற பாடல் ஓர் இனிமையான குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடல் என்னை ஈர்த்து, கோவிலில் அமர வைத்தது. அது ஓர் ஒலிநாடாவின்வழி வருவதையும் , சிலர் பின்பாட்டு பாடுவதையும் கண்டேன். சிறிது நேரம் கேட்டுவிட்டு நான் தங்கும் இடத்திற்குச் செல்ல பேருந்தில் ஏறிச் சென்றேன். ஆனால் அந்தப் பாடல்கள் என் மூளையில் பதிந்து, தொடர்ந்து விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தன. எப்படி முயன்றாலும் அப்பாடல்களை என் மனத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை! அந்தக் குரல் சத்திய சாயியின் குரல் என்பதைப் பிறகுதான் அறிந்தேன். அக்கோவிலில் Afro முடியுடன் இருந்த ஒருவர், இயேசு, புத்தர், வினாயகர் என வரிசையாக சாமி படங்கள் இருந்தன. ஶ்ரீ கிருஷ்ணர் அழகாக கோவில் மூலஸ்தானத்தில்  வீற்றிருந்தாலும் மற்ற தெய்வங்களை வரிசையாக  வைத்து  வணங்கிக் கொண்டிருந்தார்கள். 

மறுநாள், பினாங்கில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றுவர எண்ணம் தோன்றியது. என்ன ஆச்சரியம், முதல் நாள் பார்த்த அந்த ஆப்ஃரோ உருவம்கொண்ட ஒருவரின் படத்துடன் ஒரு புத்தகம் தென்பட்டது! “இந்த உருவத்தைத் தானே நேற்று கோவிலில் பார்த்தோம்” என்று வியந்து அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். 


அவர் பெயர் சாய்பாபா என்று படித்தேன். Man of Miracles என்ற அந்தப் புத்தகத்தை படிக்க எண்ணம் தோன்றவே உடனே பேருந்தில் ஏறி என் அறைக்கு வந்துவிட்டேன். அப்போது மாலை மணி 6.00 இருக்கும். படுக்கையில் படுத்த வண்ணம் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். நான்கு அல்லது ஐந்து பக்கங்கங்கள் படித்தவுடன், “சத்திய சாய் பாபா கடவுள்” என்ற எண்ணம் 100% எனக்குள் எழுந்தது. எழுந்து அமர்ந்தேன். கண்ணீர் மாலை மாலையாகக் கொட்டியது! அந்த உணர்வு, இனம்புரியாத ஓர் அபூர்வ உணர்வு.


அந்த நேரத்தில் நான் கனவு காணவில்லை என்று உறுதியாக எனக்குத் தெரிந்தது! உடனே , “உண்மையாகவே, நீங்கள் கடவுளா? அப்படியென்றால் இப்போது அதை எனக்கு நிரூபியுங்கள்” என்று அவரிடம் தைரியமாகக் கேட்டேன்.

 என்ன ஆச்சரியம் ! என் அறையின் மேல் ஒரு கண்ணைக் கூசவைக்கும் பெரிய ஒளிப்பந்து தொன்றியது. அதிலிருந்து அழகான வெள்ளி நிறத்தில், பெரியதும் சிறியதுமாக நட்சத்திரங்கள் என் தலையின் மேல் விழுந்து “தாக்கின”. அந்த இனிய “தாக்குதல்” சில வினாடிகளா நிமிடங்களா என்று கூறமுடியவில்லை. 

அக்கணமே அவர் கடவுள் என்ற எண்ணம் என் ஆன்வில் அழியாமல் பதிந்துவிட்டது. என் பயமெல்லாம் பறந்தோடிவிட்டது! தெளிவு பிறந்தது! 


 







சாயிராம்.. முன்பு நம் இதய தெய்வம் ஸ்வாமி கொடுத்த முதல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். அதன்பிறகு நடந்தவற்றைக் காலம் கனியும்போது கூறுகிறேன். அதற்கு முன்பாக, 1976-ல் நடந்த ஓர் அற்புத நிகழ்ச்சியைக் கூற விளைகிறேன்.


கங்கா தீர்த்தமும் தேனும்:

ஒரு நாள் பினாங்கு ஶ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் பஜனையில் அமர்ந்திருந்தபோது ஓர் அற்புதம் நடந்தது. நான் முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஏதோ ஒரு முக்கியமான பெருநாள் என்று நினைக்கிறேன். ஞாபத்தில் இல்லை. ஆனால் அன்று நடந்த அற்புதம் இன்னும் பசுமையாக என் மனத்தில் இருக்கிறது.


எங்களுக்கு முன்னால் விநாயகர், பாபா, ஏசுநாதர், புத்தர், சிவன் போன்ற பல தெய்வத் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தன... பஜனைப் பாடல்களை மிகவும் பக்திப் பெருக்கோடு பாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று எங்கள் முன்னால் இருந்த படங்களிலிருந்து (கண்ணாடியின் மேல்) புள்ளி புள்ளியாக நீர்த் துளிகள் தோன்றி, சரம் சரமாக வழிந்தோடின. அந்த அற்புதத்தைப் கண்ணுற்றபோது என் உடல் முழுதும் மின்சாரம் பாய்வது போன்று ஒரு சக்தி பாய்வதை உணர்ந்தேன்!

என்னால் அந்தச் சக்தியினைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதேவேளையில் என் பக்கத்தில் இருந்த ஒருவரின் கைகளை இறுக்கமாக உடும்புப்பிடி போல் பிடித்துக்கொண்டேன். எனக்கு ஏற்பட்ட அந்த நிலை, அழுகையாக வரப்போவதை அறிந்து அவ்விடத்தைவிட்டு கோயிலின் பின்புறம் ஓடிச் சென்று ஓவென்று அழுது தீர்த்தேன். பகவான் பாபாவின் பேராற்றலை எண்ணி வியந்தேன்! மறுபடியும் பஜனையில் வந்து அமர்ந்தபோது படங்களில் அந்த புனித கங்கை நீரைக் காணவில்லை. அது மறைந்துவிட்டது.


பாபா ஒரு மாயாஜால வித்தை செய்பவர் அல்ல என்று எனக்கு நன்றாகத் தெளிவு பிறந்தது. காரணம், அடியேனின் அனுபவம் நம் சமய நூல்களில் கூறப்படும் தெய்வீக உணர்வுகளை ஒத்து இருப்பதை உணர்ந்தேன். எல்லாம் ஸ்வாமியின் அளவற்ற அருளின் வெளிப்பாடு! அவர் வழங்கும் பிச்சை. இது வெறும் தேக்கிவைத்த உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல என்பதையும் அறிந்தேன். பகவான் இந்தியாவில் இருக்கும்போது, அற்புதமோ என் கண் முன்னால் நடக்கும்போது அது மாயாஜாலம் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர் எங்கும் இருப்பவர் என்றும் உணர்ந்தேன்.

பஜனை முடிந்ததும், எல்லோரும் அதைப்பற்றி வியந்து பேசிக்கொண்டிருந்தோம். என் கண்களுக்கு, ஓரிரு துளிகள் பாபாவின் படத்தின்மீது இருப்பது தெரிந்தது. அதை எடுத்து நாவில் சுவைத்து பார்த்தேன். தேனாய் இனித்தது!

நாயேன் என்ன புண்ணியம் செய்தோனோ என்று தோன்றியது.

தெய்வம், கை முளைத்து, கால் முளைத்து மனித ரூபத்தில் வந்திருக்கிறது என்று ஆழமான நம்பிக்கைத் தோன்றியது.

 







ஸ்வாமியின் கருணையால், என்மனைவியும் நானும் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு வார சனிக்கிழமைகளில் சத்திய சாயி மனித மேம்பாட்டு வகுப்புகளைத் தமிழில் நடத்தி வருகிறோம். எங்கள் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலோர், வசதி குறைந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததால் அவர்களுக்கு நாங்கள் ஏதாவது உணவு பொட்டலங்களை வழங்குவது வழக்கமாகி, கடந்த 25 வருடங்களாக அதைச் செய்து வருகிறோம்.

 சிலவேளைகளில் பெற்றோர்களும் உணவு வழங்குவது உண்டு. மலேசியாவில் பல இடங்களில் பால விகாஸ் வகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் நடக்கும். ஆனால் நாங்கள் நடத்தும் வகுப்பு தமிழில் நடத்தப்படுவதால் திருமுறைகள், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், தமிழ்பஜனைகள் என தமிழ்மொழிச் சார்ந்த அங்கங்கள் இருக்கும். பல்வேறு காரணங்களால் வகுப்புகள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, ஸ்வாமியின் கருணையால் இன்று அழகான ஒரு பெரிய குளிர்சாதன வசதியோடும், மற்ற எல்லா வசதிகளும் நிறைந்த ‘சாய் இல்லத்தில்’ நடைபெறுகிறது. அதுவே பெரிய அற்புதம். அதைப் பிறகு பகிர்ந்து கொள்வேன்.


2005-ம் ஆண்டு பால விகாஸ் வகுப்புகள், குனோங் ராப்பாட் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றன. அந்த ஆண்டில் நடந்த ஓர் அற்புதத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒருநாள், ஒரு சகோதரி, “நான் மாணவர்களுக்கு இந்த வாரம் உணவு வழங்க விரும்புகிறேன்” என்றார். 60 மீஹூன் (noodles) பொட்டலங்களை வகுப்புக்கு எடுத்து வரும்படி கூறினேன். வகுப்பில் மொத்தம் 100 மாணவர்களுக்குமேல் இருந்தாலும், அது ஜூலை மாதம் என்பதால், அறையாண்டுத் தேர்வு நடைபெறும் காரணத்தால் ஏறக்குறைய 60 மாணவர்களுக்கும் குறைவாகத்தான் வகுப்புக்கு வருவது வழக்கம்.


அந்த வாரம் மொத்தம் 71 மாணவர்கள் வந்துவிட்டனர். வகுப்பு மாலை 5.00 மணிமுதல் 6.30 வரை நடைபெறும். எங்கோ உணவு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அந்தச் சகோதரி வந்தார். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிந்தார். உணவு போதாது என்று என்னிடம் கூறினார். அவரின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உருண்டோடியதைக் கண்டேன். அதற்குக் காரணம் அங்கு பல ஏழைக் குழந்தைகள் இருந்ததே. எனக்காக கேசரி செய்து கொண்டு வந்திருப்பதாக அவர் கூறினார். அன்றைய தினம் நான் மட்டும்தான் ஆசிரியர். “கவலைப்படவேண்டாம். அந்தக் கேசரியைக்கொண்டு சமாளிப்போம்“ என்றேன்.


உணவு மந்திரம் ஓதியபின், மாணவர்கள் உணவுக்காக வரிசையில் நின்றனர். அவர்களுக்கு, அந்தச் சகோதரியும் அவரின் இரு மகள்களும் உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனர். இன்னும் 35 மாணவர்கள் உணவு பெறாத நிலையில், பெட்டியில் மீதம் ஐந்து அல்லது ஆறு பொட்டலங்கள்தான் இருந்தன. எங்கோ தவறு நடந்துவிட்டது என்று அறிந்தேன். ஏனென்றால் அந்தப் பெட்டியில் 60 பொட்டலங்கள் இருந்திருக்க வாய்ப்பேயில்லை. என் மனம் பதைத்தது. சில மாணவர்கள் உணவுக்காகத்தான் வகுப்புக்கு வருகிறார்கள் என்பதை அறிவேன். அந்த நேரத்தில் மேலும் உணவை எற்பாடு செய்வது முடியாத ஒன்று. அவர்களுக்கு உணவு வழங்க முடியாது போய்விடுமே என்று எண்ணி முடிப்பதற்குள், ஓர் அதீத சக்தியின் வெளிப்பாட்டை உணர்ந்தேன்! வகுப்பறையிலும், என்னுள்ளும், அந்தப் பொட்டலங்கள் உள்ள இடத்திலும் மின்சாரம் பாய்வதைப் போன்ற ஒரு சக்தியை அடியேன் உணர்ந்தேன்.


என்ன ஆச்சரியம்! உணவுப் பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மேலும் பொட்டலங்கள் டப்டப்பென்று ஒவ்வொரு பொட்டலமாக அதிகரிப்பதைக் கண்டேன். ஆம் என் கண்களால் கண்டேன். “உணவு அதிகரிக்கிறது! உணவு அதிகரிக்கிறது!” என்று ஆச்சரியத்தில் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினேன்! என் அருகில் இருந்த அந்தச் சகோதரி உணவு அதிகரிப்பதைக் கண்டதும் கதறி அழுதுகொண்டே வெளியில் எங்கோ ஓடிவிட்டார். சில நிமிடங்கள் அந்த அறையில் உள்ள மாணவர்களும் நானும் சிலை போல நின்றுவிடடோம்! பிறகு அந்தச் சகோதரி மறுபடியும் வந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் உணவுப் பொட்டலங்களை வழங்கினோம். எல்லோருக்கும் உணவு பொட்டலம் கிடைத்தது. என்ன ஆச்சரியம் என்றால் ஒரு பொட்டலம்கூட மீதம் இல்லை!! உணவு பெறாதவரும் இல்லை!!

உணவு வழங்கிய பெண்மணி சத்தமிட்டுக்கொண்டு வெளியே ஓடியதற்குக் காரணம் அவர் பகவான் பாபாவின் திருவுருவத்தை சுவற்றில் தெளிவாகக் கண்டதால்தான் என்று பிறகு அறிந்தேன். அவர் அப்போது சாயி பக்தர் அல்ல என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


ஸ்வாமி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்ற ஆழமான பதிவு என் சித்தத்தில் ஏற்பட்டது. கருணைக் கடல் நம் ஸ்வாமி. குழந்தைகள் உணவு கிடைக்காமல் வீட்டுக்குப் போகக்கூடாது என்பது நம் அன்பு தெய்வத்தின் சித்தம்!!!

குழந்தைகள் நன்னெறியுடன் வாழவேண்டும் என்பதுதானே அவரின் முதன்மை போதனை!!!. ……..அதனால்எங்கள் பால விகாஸில் பிரசன்னமாகியிருப்பாரோ?

அற்புதங்கள் தொடர்ந்து மணக்கும்... 


3 கருத்துகள்:

  1. Swami does this kind of miracles today too. For Him this kind of multiplying is natural. Swami blessed you to serve the fellow human beings. You are Hanuman of Swami in your area Sai Krishna Munusami. Vaazhga Vaazhga

    பதிலளிநீக்கு
  2. ஓம் ஸ்ரீ சாயிராம்....🙏👍👌

    பதிலளிநீக்கு