தலைப்பு

புதன், 7 டிசம்பர், 2022

"ஏன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுந்து தியானம் செய்ய வேண்டும்?"

ஆன்மீக சாதனை வாழ்வின் தொடக்கத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்... இரவு அதிக நேரம் டி.வி போன்றவற்றை பார்ப்பதை நிறுத்தி விரைவாக படுக்கைக்குச் சென்று உறங்க வேண்டும்... ஆரோக்கிய வாழ்க்கை முறை கடைபிடிப்பலர்களுக்கு 6 மணி நேர உறக்கமே போதுமானது! பின்னிரவு 3 மணியிலிருந்து 6 மணி வரையிலான காலகட்டமே ஆன்மீக சாதனை புரிவதற்கு ஏற்றது... மிகவும் சிறந்தது! எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து தியானத்தில் அமருங்கள்...ஆற்றங்கரை, மரத்தின் அடியில் தியானிப்பது இன்னமும் சிறந்தது! 


கடினமாக யோக ஆசனங்கள் இட்டு அமராமல், சவுகரியமாக அதே சமயம் உடல் சாயாமலும் தளர்வாக அமர்ந்திருந்து தியானிக்க வேண்டும்!

முதலில் ஓங்காரம்... பிறகு ஜபம்... பிறகு இறைவனின் குணமகிமை மேல் உள்ள சிந்தனை... பிறகு தியானம்.. தியானத்தில் இருவகை இறைவனின் உருவத்தை மனக்கண் முன் வைத்து தியானிப்பது! இன்னொன்று எண்ணங்களை அப்படியே கவனித்து அல்லது சுவாசத்தை கவனித்துச் செய்யும் அரூப தியானம் (உருவமற்ற தியானம்) 


ஆரம்ப காலகட்ட தியான சாதகர்களுக்கு தியானத்தில் தியான உணர்வு தடுமாறுகிற போது ஜபம் புரியுங்கள்... மனம் ஒரு லயமாகும்... பிறகு தியானத்திடுங்கள்! ரூப தியானத்தில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் உருவத்தை மனக்கண் முன் கொண்டு வந்து அதை நேசித்தபடியே ரசிக்க வேண்டும்! 

உதாரணமாக நீங்கள் சுவாமியை (இறைவன் பாபா) ரூப தியானம் மேற்கொண்டால்.. ஒவ்வொரு அங்க அவயமாக மனக் கண்முன் நிறுத்தி அதில் ஆழ்ந்திடுங்கள்... பாதத்திலிருந்தும் பரந்த கேசம் வரை வரலாம்... பரந்த கேசத்திலிருந்தும் பாதம் வரை வரலாம்... ஒவ்வொரு அவயமாக... பரந்த கேசம்... பட்டான இதழ்.. சிரித்த முகம், மச்சம், காவி உடை, இப்படி ஒவ்வொன்றாக... அது தானாக கற்பனை நிலையிலிருந்து மனதில் உள்ளுறையும் சுவாமி ரூபமானது பாவனைச் சித்திரமாக உணர்வின் அடிஆழத்தில் அப்படியே  பதிந்துவிடும்!


நாம ஜபம் புரிந்தபடியேயும் இவ்வகையே மனதிற்குள் சித்திரம் தீட்டிக் கொள்ளலாம்! தியான உணர்வு கைகூடும் வரை ஒரே இடத்தில்.. ஒரே நேரத்தில் தியானித்திடுங்கள்... இல்லையெனில் மனம் தடுமாறும்... ஆசிரமம் , கோவில் போன்றவற்றில் எப்போதும் செய்யலாம்... சூழ்நிலை ஏதுவாக அமைவது போல் தியானித்திடுங்கள்! இதில் அதிகக் கண்டிப்பும் வேண்டாம்... விட்டுக் கொடுப்பதும் வேண்டாம்! இப்படி தினசரி தொடர்ந்து தியானித்து வந்தால் இறைவன் உங்கள் ஆன்ம சாதனையின் பக்குவத்திற்கு எது உரியதோ அதனை செய்து தருவான்!


(ஆதாரம் : அறிவு அறுபது / பக்கம் : 199 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக