தலைப்பு

புதன், 7 டிசம்பர், 2022

அணுவிலும் சிறியவர் அண்டத்திலும் பெரியவர் ஸ்ரீ சத்யசாயீஷ்வரர்!


இறைவன் பாபா அன்றாடம் அவரவர் வாழ்வில் நிகழ்த்தி வரும் பேரற்புதம் ஒன்றல்ல இரண்டல்ல...‌பாபா வழங்கிடும் பிறந்தநாள் லட்டுவில் ஆங்காங்கே தோய்ந்த முந்திரியாய் குறிப்பிட்ட சில சுவாரஸ்ய அனுபவங்களில் ஓரிரண்டு இதோ...

நேபாளியை சேர்ந்த ஒரு பெண்மணி... நேபாளி அம்மா என்றே நூலாசிரியர் அவரை அழைக்கிறார்... 30 வருடங்களாக பாபா மேலான விடாப்பிடியான பக்தி! பாபாவே அவர் மேலான பக்தியை நமக்குள் விதைக்கிறார்... ஆனால் அது வளர்ந்து விருட்சமாவதற்கும்... வதங்கிப் போவதற்கும் அவரவர் பூர்வ கர்ம பயன்களும் காரணமாக அமைகின்றன...


அந்த நேபாளி அம்மா தனது இல்லத்தில் மிகச் சிறிய பொம்மை சோஃபாவே (sofa) பாபா அமரும் நாற்காலியாக பாவனை செய்து வைத்திருந்தார்... ஆனால் சமிதி மற்றும் சில இல்லங்களில் சாயி பஜன் நிகழ்கிற போது இறைவன் பாபாவுக்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டிருக்கும் பெரிய நாற்காலிகள், சோஃபாக்களை பார்த்து தன் வீட்டில் மட்டும் பொம்மை சோஃபா மட்டும் வைத்திருக்கிறோமே என கவலைப்படுகிறார்...


பக்தர் இதயம் கவலைப்பட்டால் இறைவன் பாபா அதனை தாங்குவாரா? பாபா தான் பக்த இதயவாசி ஆயிற்றே! ஓடோடி அன்று இரவே அந்த பக்தையின் கனவில் வருகிறார்... 

பாபா வந்து... அந்த பொம்மை சோஃபாவில் அமர்ந்து கொள்கிறார்... "இதோ பார்... அமர்ந்து விட்டேன்... யார் உன்னிடம் சொன்னது? இது வெறும் பொம்மை சோஃபா... இதில் நான் அமர முடியாது என்று? இங்கே வா... வந்து பாத நமஸ்காரம் எடுத்துக் கொள்!" என்று கூறி தன்னை சுறுக்கிக் கொண்டு அந்த சின்னஞ்சிறிய பொம்மை சோஃபாவில் அமர்ந்து கொள்கிறார் பாபா! "குடிக்கத் தண்ணீர் கொடு!" எனவும் அந்த நேபாளி அம்மாவை கேட்கிறார்!

அந்த பக்தை ஆனந்தத்தில் இதய விரிவு பெறுகிறார்! இறைவன் பாபாவுக்கு நாம் எதைப் படைக்கிறோம் என்பதை அவர் பார்ப்பதே இல்லை... பக்திப் பூர்வ உணர்வோடு படைக்கிறோமா? அதுவே அவருக்கு முக்கியம்... இல்லை எனில் கண்ணப்பன் நாயன்மாராக உயர்ந்திருக்க வாய்ப்பே இல்லை! பாபாவுக்கு கோடிக்கோடியாக செலவு செய்வதை விட ஒரு சொட்டுக் கண்ணீர்த் துளி அவரை ஆனந்தப்படுத்திவிடும்!


1985 நவம்பரில் இறைவன் பாபாவின் 60 ஆவது அவதார ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு... நூலாசிரியர் பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில் லட்டு பிடிக்கும் சேவைக்குச் செல்கிறார்... அன்று செய்தித்தாளில் சென்னையில் வெள்ளம் என்ற செய்தி கேட்டு அதிர்கிறார்... நூலாசிரியர் கடல் சார்ந்த பகுதியைச் சார்ந்தவர்... ஆகவே பாபாவை வேண்டுகிறார்... அதற்கு பதில் அளிக்க அன்று இரவே நூலாசிரியர் கனவில் செல்கிறார்.. ஒரு காட்சி விரிகிறது... அதில் இறைவன் பாபா தனது காரை கடலில் இருந்தபடியே ஓட்டிக் கொண்டு நூலாசிரியர் வீட்டு வாசலில் நிறுத்தி.. வீட்டிற்குள் நுழைகிறார்... அந்த கணமே சென்னை வெள்ளம் மற்றும் அவரின் வீட்டைக் குறித்த கவலை தண்ணீரில் அடித்துச் செல்லும் காலணியாய் இறைவன் பாபாவின் கருணையில் அடித்தச்செல்லப்படுகிறது அவரது கவலைகளும்...

அக்டோபர் 1 முதல் 10 வரை சேவா டியூட்டி... அதில் பங்கேற்கும் சக சேவாதள அம்மையார்.. தான் பாபாவுக்கு தினமும் பூஜையறையில் காபி சமர்ப்பிப்பதாகவும்... அதில் ஒருநாள் கனவில் வந்த பாபா "இன்று காபியில் சர்க்கரை போதவில்லை.. இன்னும் கொஞ்சம் போடு!" எனச் சொன்னபோது அவர் அடைந்த ஆனந்தம் அமுதம் விடவும் இதயத்தில் இனிக்கிறது! 

திருமதி உஷா என்கிற இன்னொரு சேவாதள பெண்மணி தனது அனுபவத்தை நூலாசிரியரோடு பகிர்கிறார்... இறைவன் பாபாவின் 75 ஆவது அவதார ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சம் லட்டு தயார் செய்து லாரியில் அனுப்பி வைக்கின்றனர்...  அது 12 மணி நேரம் பயணிக்கிறது... அதிலும் சீரே இல்லாத சாலைகள்... குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம் என்று சரணகோஷம் எழுப்ப வேண்டிய சாலைகள்! நியாயமாக அத்தனை லட்டுக்களும் பூந்திப் பொடிகளாக உருமாறி இருக்க வேண்டும்... ஆனால் அதுதான் இல்லை... சமர்ப்பிக்கப் போவது யாருக்கு ..‌? சாட்சாத் அந்த பரிபூர்ண பரப்பிரம்மத்திற்கு...! ஆக எப்படி உதிரும்...? ஒரு லட்டுவில் கூட தமிழ்நாட்டு தெருச் சாலைகள் போல் சிறு விரிசல் கூட விழவில்லை... எந்த ஒரு பூந்தியும் லட்டுவை விட்டு தப்பிக்கவில்லை... செய்கூலி சேதாரமின்றி அந்த சேவா லட்டுக்கள் இறைவன் பாபா அனைவருக்கும் வழங்க இனிக்க இனிக்க பிரசாந்தி நிலையத்திற்கு வந்து சேர்கின்றன‌...


(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 28 - 30 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


இறைவன் பாபா வழங்குகிற காவல் என்பது வெறும் மனித இனத்திற்கோ அல்லது சகல ஜீவராசிகளுக்கு மட்டுமில்லை... அந்த லட்ச லட்டுகளுக்கும் கூடவே என்பதை உணர முடிகிறது! ஒரே ஒரு துளசி இலையை கிள்ளி வைத்தால் போதுமானது... பாபா தனது இதயத்தை நம்மிடத்தில் அள்ளி வைக்கிறார்! பாபா நம் வெளியே என்ன பேசுகிறோம்? எப்படி தோற்றம் அளிக்கிறோம் என்பதை பார்ப்பதே இல்லை! நம் உள்ளே நாம் என்னவாக இருக்கிறோம் என்பதையே பார்க்கிறார்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக